Thursday, October 27, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 31-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 30 -10-2022- ஞாயிற்றுக்கிழமை


 🌱விவிலிய விதைகள்🌱

பொதுக்காலம் 31-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(30 அக்டோபர் 2022, ஞாயிறு)

முதல் வாசகம்: சாஞா 11: 22- 12: 2
இரண்டாம் வாசகம்: 2 தெச 1: 11- 2: 2
நற்செய்தி: லூக் 19: 1-10

தடைகளை தாண்டிய தேடல்

ஒரு கிராமத்தின் அருகே மிகப்பெரிய மலை ஒன்று இருந்ததாம். காடுகள் சூழ்ந்திருந்த இந்த மலையில் ஒரு கிராமவாசி ஏற வேண்டிய சூழலிருந்தது. இந்த மலையில் பகலில் ஏறுவது மிகவும் கடினமானது. எனவே அவர் இரவில் இந்த மலையின் உச்சியில் ஏறிவிட வேண்டும் என்று கையில் விளக்கோடு புறப்படுகிறார். மலையடிவாரத்தில் நின்ற அவர் என்னுடைய விளக்கு வெறும் பத்தடி தூரம் தான் வெளிச்சத்தை தருகிறது, இதை வைத்து நான் எப்படி பல கிலோமீட்டர் தூரம் மலையை ஏற முடியும் என்று யோசிக்க தொடங்கினார். அப்போது அவ்வழியாக அவரைப் போல மலை ஏறுவதற்கு வயதான ஒருவர் வருகிறார். நம்மை விட இவரிடம் மிகச் சிறிய தூரம் வெளிச்சத்தை தருகின்ற விளக்கே இருக்கிறது என நினைத்த அவர் வயதானவரிடம், என்னுடைய விளக்கே அதிக தூரம் வெளிச்சத்தை தரவில்லை. உங்களுடைய இந்த சிறிய விளக்கை வைத்து எப்படி மலை ஏறுவீர்கள் என்று கேட்கிறார். வயதானவரோ சிரித்துக் கொண்டே உன்னிடமிருக்கின்ற வெளிச்சத்தை வைத்து நீ முதலில் பத்தடி தூரம் செல், பின்பு இன்னும் பத்தடி தூரத்திற்கு வெளிச்சம் தெரியும். இவ்வாறாக நீ எத்தனை கிலோமீட்டர் வேண்டுமானாலும் செல்லலாம் என்று கூறினார். நமது வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான பயணத்தில் எண்ணற்ற தடைகளிருக்கும், இதை கண்டு நம்முடைய இலக்குகளை அடைவது கடினம் என நினைத்தால் வாழ்வில் வெற்றியும் மாற்றமும் ஒரு போதும் கிடைக்காது. தடைகளை கண்டு அஞ்சாமல், ஒவ்வொன்றாக மன உறுதியோடு எதிர் கொள்கின்ற போது நமது இலக்குகளை தெளிவாக அடைய இயலும்.

            இறை இயேசுவில் இனியவர்களே, நமது கிறிஸ்தவ வாழ்விலும் மனமாற்றம் பெற்று புது வாழ்வு பெற இயேசுவைத் தேடிச் செல்ல வேண்டும். அத்தேடலில் வரும் எண்ணற்ற தடைகளை எதிர்கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் மனமாற்றம் பெற்று கிறிஸ்துவில் வாழ முடியும். இன்றைய நற்செய்தியில் சக்கேயு மனமாற்றம் பெற்று புது வாழ்வு பெற விரும்புகிறார். அதற்காக இறைமைந்தன் இயேசுவை தேடுகிறார். இந்த தேடலில் பலவிதமான தடைகளை சந்திக்கிறார். அவற்றை உடைத்தெரிந்து கிறிஸ்துவில் மனமாற்றம் பெற்று புது வாழ்வு பெறுகிறார். இன்று நாமும் நமது கிறிஸ்தவ வாழ்வில் மன மாற்றம் பெற சந்திக்கும் சவால்களை தகர்த்தெறிந்து புது வாழ்வு பெற பொதுக்காலத்தின் 31-வது ஞாயிற்றுக்கிழமையின் இறைவார்த்தை வழிபாடு அழைப்பு தருகிறது.

1. உடல் தடை
இயேசுவை பார்க்க வேண்டும் என்னும் சக்கேயுவின் தேடலுக்கு முதல் தடையாக அமைந்தது அவருடைய குட்டையான உருவம் தான். அவருடைய உருவத்திற்கு சோதனையாக மக்கள் கூட்டம் இருந்ததால் அவரால் இயேசுவை பார்க்க முடியவில்லை. இங்கு மக்கள் கூட்டம் இல்லாமல் இருந்திருந்தால் அவருக்கு அவரது குட்டையான உருவம் ஒரு பிரச்சனையாகவே இருந்திருக்காது அல்லது அவர் மிக உயரமாக இருந்திருந்தால் மக்கள் கூட்டம் அவருக்கு ஒரு பிரச்சனையாகவே இருந்திருக்காது. ஆனால் இங்கு சக்கேயுவுக்கு தன்னுடைய உயரம் மிகப்பெரிய தடையாக அமைகிறது. ஆனால் அவர் தன் தேடலை நிறுத்தவில்லை, மாறாக அத்தடையை முறியடிக்க மரத்தின் மீது ஏறுகிறார், இயேசுவை பார்க்கிறார். இன்று நமது வாழ்விலும் உடல் தடை பெரும் தடையாக இருக்கிறது. நான் குட்டையானவன், உயரமானவன், மெலிந்தவன், குண்டானவன், கருத்தவன் மற்றும் வெளுத்தவன் என நமது உடல் அமைப்புகளை தடைகளாக எண்ணி நமது திறமைகளை உணராமல் இருக்கின்றோம். வாய்ப்புகளை பயன்படுத்தாமல் இருக்கின்றோம். நான் எப்படி பீடம் ஏறி வாசகம் வாசிக்க முடியும்? நான் எப்படி ஆலய நிகழ்வுகளில் பங்கேற்க முடியும்? பக்த சபைகளிலும் மறைக்கல்வியிலும் பங்கேற்க முடியும்? என தடைகளைக் கண்டு அஞ்சி வாழ்கின்றோம். இறைவன் அருகே செல்லாமல் இருக்கின்றோம். சக்கேயுவைப் போல நம் உருவ அமைப்புகளை தடைகளாக எண்ணாது, தொடர்ந்து முயலுவோம்.

2. உள்ளத்து தடை
                சக்கேயு ஒரு வரி வசூலிப்பவர், இஸ்ராயலில் மிகவும் மக்களால் வெறுக்கப்பட்டவர். சக்கேயு என்னும் பெயருக்கு தூயவன் மற்றும் நேர்மையாளன் என்னும் அழகிய அர்த்தங்கள் இருந்தாலும், வரி வசூலிப்பவரான சக்கேயுவை மக்கள் திருடனாகவும், ஏமாற்றுபவனாகவும் மற்றும் துரோகியாகவும் தான் பார்த்தார்கள். இதனால் சக்கேயு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கக்கூடும், இருப்பினும் இத்தகைய உள்ளத்து தடைகளை முறியடித்து அவர் இயேசுவை காண முயலுகிறார். இன்று நமது வாழ்விலும் உடல் பிரச்சினைகளை காட்டிலும் உள்ளத்து பிரச்சனைகள் தான் பெரும் தடைகளாக இருக்கிறது. சக்கேயு தனது உள்ளத்து தடைகளை மனமாற்றத்திற்கான படிக்கட்டுக்களாக மாற்றி பாவ மன்னிப்பு அடைய இயேசுவை தேடுகிறார். நமது வாழ்விலும் பல்வேறு சூழல்களால் பாரமாக கிடைக்கின்ற நமது மனங்களை இறைவனின் அர்ப்பணித்து தடைகளை தகர்த்தெறிவோம், கிறிஸ்துவில் இணைவோம்.

3. சமுதாய தடை
                    வரி தண்டுபவர்களைப் பற்றி இந்த சமுதாயம் பார்க்கின்ற விதமும் குறிப்பாக பேசுகின்ற பேச்சுகளும் சக்கேயுவுக்கு ஒரு சமுதாய தடையாகவே இருந்தது. இன்றைய நற்செய்தியில் கூட இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” (லூக்கா 19:5) என்று கூறியவுடன் அங்கிருந்த மக்கள், “பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தை (லூக்கா 19:7) வாசிக்கின்றோம். இயேசுவை காணும் தேடலில் இது மாபெரும் சமுதாயத் தடையாக இருக்கிறது. ஆனால் சக்கேயு சமுதாயத்தின் ஏளன பேச்சுகளை முறியடித்து இயேசுவை தன் வாழ்வில் கண்டு கொண்டார், புது வாழ்வு அடைந்தார். இன்றைக்கு நம்மை பார்த்தும் ஏராளமான பேச்சுகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. நான் இதை எடுத்து இவ்வாறு செய்தால் அடுத்தவர்கள் என்ன சொல்லுவார்களோ என எண்ணி நாம் நமது வாழ்வில் சீரழித்துக் கொண்டிருக்கிறோம். "போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும்" என ஏளனப் பேச்சுகள் என்னும் உள்ளத்து தடைகளை துரத்தியடித்து வாழ்வில் வெற்றிக்கான தொடர்ந்து சக்கேயுவை போல முயற்சிப்போம்.

4. அரசியல் தடை
எரிகோ நகரம் மூலிகைகளும் மற்றும் திரவியமும் நிறைந்து கிடக்கும் இடம். இங்குள்ள ரோஜா மலர்கள் புகழ் பெற்றவை, எனவே இந்நகரில் வரி வசூல் சிறப்பு வாய்ந்ததாகவும், அதிகமாகவும் இருந்தது. சக்கேயுவும் வரிவசூலிப்பவராக மற்றும் "வரிதண்டுவோருக்குத் தலைவராக" (லூக்கா 19:2) அரச பொறுப்பில் இருந்தார். உயர் பதவியிலிருக்கும் இவர் அரச பதவி என்னும் பெரும் தடையை தகர்த்தெறிந்து இயேசுவை சந்திக்க முயலுகிறார். நான் ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்கின்றேன். எப்படி திருப்பலியில் பங்கேற்க முடியும்? ஜெபிக்க முடியும்? இறைவார்த்தையை வாசிக்க முடியும்? என நமது அன்றாட வேலைகளை காரணங்களாக மற்றும் தடைகளாக மாற்றி இறைவனில் இணைய மறந்தும், மறுத்தும் கொண்டிருக்கின்றோம். இந்நிலையை மாற்றி இயேசுவில் இணைவோம், மனமாற்றம் பெறுவோம்.

5. செல்வத் தடை
     “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” (மத்தேயு 19:21) என்னும் இறை வார்த்தைக்கேற்ப, தன் வீட்டிற்கு வந்த இயேசு தன் உள்ளத்தில் வர, அவரில் நான் நிலைத்து நிற்க செல்வம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என எண்ணி “ஆண்டவரே, என் உடமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று கூறினார் (லூக்கா 19:8). இன்றைக்கு நமது வாழ்விலும் இறைவனைக் காட்டிலும் செல்வம் தான் பெரிது என எண்ணி அதற்காக முயற்சிக்கின்றோம். ஆனால் இறைவனை அடைவதற்கு செல்வங்களே நமக்கு பெரும் தடைக்கல்லாக இருக்கின்றது என்பதை மறந்து விடுகின்றோம்.
"நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” (லூக்கா 5:32) என்னும் வாக்கிற்கு ஏற்ப நாமும் வாழ்வின் தடைகளை தகர்த்தெறிந்து இயேசுவிலே இணைந்து, மனமாற்றம் பெற்று புது வாழ்வு பெறுவோம்.


அன்புடன்:-

Frகுழந்தை யேசு ராஜன் CMF