Friday, December 18, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் -திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு- (ஆண்டு- B)- 20-12-2020- ஞாயிற்றுக்கிழமை

 

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு
(
ஆண்டு- B)

20-12-2020

ஞாயிற்றுக்கிழமை


வார்த்தை கொடுத்த பிறப்பு





                         சில நாட்களுக்கு முன்பு நான் பார்த்த குறும்படம் அது. பார்வையற்ற மனிதர் ஒருவர் பிச்சைக்காரராக ரோட்டின் ஓரத்திலே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றார். பல மனிதர்கள் அப்பகுதியில் செல்வதும், போவதுமாக இருக்கிறார்கள். பிச்சைக்காரரின் அருகிலே ஒரு பலகையானது வைக்கப்பட்டிருக்கின்றது, அதில் "I am Blind, Please help me"  என எழுதப்பட்டிருக்கிறது. பலரும் அந்த பலகையையும், அவரையும் பார்க்கின்றார்கள்செல்கின்றார்கள், ஆனால் சிலர் மட்டுமே அவருக்கு பிச்சை போடுகின்றார்கள். பெண் ஒருவரும் அந்த பிச்சைகாரரை  பார்க்கின்றார், அவருடைய தட்டிலே விழுந்த அந்த சில சில்லறை காசுகளையும் பார்க்கின்றார். உடனடியாக அந்தப் பெண்ணானவள் அந்த பலகையை எடுத்து, அதில் இருந்த  எழுத்துக்களை அழித்து விட்டு, மீண்டுமாக வேறு சில எழுத்துக்களை எழுதுகின்றார், எழுதி முடித்துவிட்டு அந்த பலகையை அதே இடத்தில் வைத்து விட்டு சென்று விடுகின்றார். அவள் வைத்த சில மணி நேரங்களிலேயே பலர் அதைப்  பார்த்ததும், பார்வையற்ற மனிதனுக்கு பிச்சை போடுகின்றார்கள் அதுவரைக்கும் சிலர் மட்டுமே பிச்சை போட்ட நிலை மாறி, பலர் பிச்சை இடுவது, அந்த மனிதருக்கு உணர முடிந்தது. அந்தப் பெண் அந்த பலகையில் எதையோ எழுதியதால் தான் இந்த மாற்றம் நிகழ்கின்றது என்று அவன் உணர்ந்து கொண்டான், மாலையில் மீண்டுமாக அந்த பெண் அப்பக்கம் வருவதை உணர்ந்த அவர் பெண்ணிடம் என்ன எழுதினாய் என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண் அதில் நீங்கள் எழுதியதை தான் நானும் வேறு வார்த்தைகளில் "It's a beautiful day and I can't see it" எழுதினேன் என்று கூறினார்.
 
           ஆம் அன்பார்ந்தவர்களே,  "The Power of Words"  என்னும் இந்த ஆங்கில குறும்படமானது வார்த்தையின்  மகத்துவத்தை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. இந்த குறும்படத்தில், இரு வெவ்வேறான வார்த்தைகளில் ஒரே அர்த்தத்தை பார்க்கின்றோம், ஆனால் அதன் மதிப்பு மாறுபடுகிறது.
இதுதான் வார்த்தைக்கான சக்தியாக இருக்கின்றது. இன்றைய இறைவார்த்தை பகுதியும்  வார்த்தையின் சக்தியை நமக்கு வெளிப்படுத்துகின்றது. ஒரு தாயின் வார்த்தை ஒரு பிறப்பை, மானிட குலத்துக்கு மீட்பை உருவாக்கியிருக்கின்றது. மேலும், தெய்வத்தையே மானிட உருவில், மனித குலத்தில் பிறப்பெடுக்க செய்திருக்கின்றதுஇந்நாளிலேநான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்”  (லூக்கா 1:38) என்னும் மரியாவின் இவ்வார்த்தையில் வார்த்தையின் சக்தியை உணர்ந்து, இறைவார்த்தையையும், மனித வார்த்தையையும் நம்முடைய வாழ்க்கையில் உணர்ந்து பேச மற்றும் வாழ  இன்றைய இறைவார்த்தை வழிபாடு அழைப்பு தருகிறது.


1.
அருள் நிறைந்தவளாய் மாற்றிய வார்த்தை

அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” (லூக்கா. 1:28) எனும் வானதூதரின் வார்த்தைகள் அன்னைமரியா அருள் நிறைந்தவராக இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டதை  சுட்டிக்காட்டுகின்றது, எனினும் இந்த வார்த்தையானது முழுமை பெறுவது அன்னையின் 'ஆம்' என்ற அந்த வார்த்தையில் தான் இருக்கிறது.
இறைவன் அன்னையை அருள் நிறைந்தவராக தேர்ந்தேடுத்தாலும் தான் இறைவனின் தாயாக மாறுவதற்கு தயாராக இருக்கின்றேன் என்னும் அன்னையின் வார்த்தையில்   அது முழுமை பெறுகின்றது. அன்னையின் வார்த்தை அவரை அருள் நிறைந்தவளாக  மாற்றியது.

2.
அப்பணத்தை வெளிப்படுத்திய வார்த்தை

                    “நான் ஆண்டவரின் அடிமை"(லூக்கா. 1:38a) எனும் இந்த வார்த்தை அன்னையின் அர்ப்பணிப்பை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இது வெறும் அர்ப்பணிப்பை மட்டுமல்லாதுஅன்னை இறைவன் தருகின்ற இறை அழைப்பை ஏற்றுக் கொண்டதையும், இறைவனுக்காக மற்றும் இறை திட்டத்திற்காக தான் தயார் நிலையில் இருப்பதையும் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. "நான் ஆண்டவரின் அடிமை" என்பது தன்னையே முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக இருக்கிறது.

3. 
கீழ்ப்படிதலை வெளிப்படுத்திய வார்த்தை

                "உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்”(லூக்கா. 1:38b) எனும்  வார்த்தை அன்னையின்  கீழ்ப்படிதலை நமக்கு வெளிப்படுத்துகின்றது. இது வெறும் கீழ்ப்படிதலை மட்டுமல்லாது அன்னையின்  மகிழ்ச்சியான நிலை, சுதந்திரமான நிலை மற்றும் எல்லாம் இறைவனே என்று தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ளும் நிலையை நமக்கு எடுத்தியம்புகின்றது. அன்னையின் இந்த வார்த்தை அவரது கீழ்ப்படிதலை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

4.
கிறிஸ்து பிறப்புக்கான வார்த்தை

                  தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது" (லூக்கா. 1:35) எனும் இந்த வார்த்தைக்கு வடிவம் கொடுத்தவர் அன்னை மரியாள். அன்னை மரியாவின் வார்த்தை கிறிஸ்து பிறப்பை உறுதி செய்ததுஇந்த வார்த்தை கிறிஸ்து இந்த மண்ணுலகில் பிறக்கப் போகிறார் என்பதையும், மரியாள் மீட்புத் திட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார் என்பதையும் உறுதி செய்கின்றது. ஆக, அன்னையின் வார்த்தை கிறிஸ்து பிறப்பை நமக்கு தந்த வார்த்தை.

                இவ்வாறு இறைவார்த்தையின்படி வாழ இன்றைய இரண்டாம் வாசகத்தில்  உரோமையருக்கு  அழைப்பு  தரப்படுகின்றது. அதே போல் நாமும்  இறைவார்த்தையை வாழ்வாக்குபவர்களாக வாழ, நாம் ஒவ்வொருவரும் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவருடைய வார்த்தை
நாத்தானுக்கும், இன்றைய நற்செய்தியில் இறைவார்த்தை அன்னை மரியாவுக்கும், கொடுக்கப்படுகின்றது. இவர்கள் இறைவார்த்தையை வாழ்வாக்கியது போலநாமும் வார்த்தையை வாழ்வாக்குவோம்.

                   "The Secret of Water" என்னும் தன்னுடைய புத்தகத்தில் Masaru Emoto என்பவர் தண்ணீரை வைத்து ஒரு ஆய்வை மேற்கொள்கின்றார். மூன்று குடுவையில் தண்ணீரை எடுத்துக் கொள்கின்றார்மூன்றிலும் அரிசியை போடுகின்றார். இதில் முதல் குடுவையிலுள்ள தண்ணீரையும், அரிசியையும் பார்த்து தினமும் அவர்  நேர்மறையான வார்த்தைகளை பேசுகின்றார். இரண்டாவது குடுவையில் இருக்கின்ற அந்த தண்ணீரையும், அரிசியையும் பார்த்து எதிர்மறையான வார்த்தைகளை பேசுகின்றார். மூன்றாவது குடுவையிலுள்ள தண்ணீரை அவர் கண்டு கொள்ளவே இல்லை.சில நாட்களுக்குப் பிறகு முதல் குடுவையில் இருந்த  அரிசி அளவில் பெரிதாகி நல்ல நறுமணம் வீசியது. இரண்டாவது குடுவையில் இருந்த அரிசி எந்த விதமான வளர்ச்சியும் இன்றி, எந்த ஒரு மனமும் இல்லாது  அப்படியே இருந்ததுமூன்றாவது குடுவையில் இருந்த அரிசி  அணைத்தும் கருப்பு நிறத்தில் மாறி துர்நாற்றம் அடிக்க துவங்கியது. இது  வார்த்தையின் சக்தியை வெளிப்படுத்துகின்றன. மீண்டும் ஒரு சிறுமியை அழைத்து அதே குடுவைகளில் இருக்கின்ற  தண்ணீரை பார்த்துநன்றி... நன்றி... நன்றி... என்ற வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் சொல்ல அழைப்பு விடுத்தார். சில நாட்களுக்குப் பிறகு  கண்டு கொள்ளாத குடுவையில் இருந்த அரிசியும், எதிர்மறையான வார்த்தைகளை பேசி வளர்ச்சியற்ற  அரிசியும், முதல் குடுவையிலிருந்த அரிசியை போல சிறிது சிறிதாக மாறத்தொடங்கியதுஇதைத் தான் அவர் வார்த்தைக்கு உண்டான சக்தி என்று கூறுகின்றார். நீரிலே மற்றும் காற்றின் ஈரப்பதத்தில் வார்த்தையை உணர்கின்ற சக்தி இருக்கின்றது என்கின்றார். வார்த்தை ஒருவரை அழிக்கவும் செய்யும், ஆக்கவும் செய்யும். வார்த்தை ஒரு மனிதரை உருவாக்கும், வார்த்தை தான் வாழ்க்கையை வடிவமைக்கின்றன.
அன்று உலகை படைத்தது இறைவனின் ஒரு வார்த்தை, இயேசுவை இவ்வுலகிற்கு தந்தது மரியாவின் ஒரு வார்த்தை, மானிடகுலத்துக்கு மீட்பு அளித்தது இயேசுவின் ஒரு வார்த்தை, பல உயிர்களை பறித்தது ஹிட்லரின்  ஒரு வார்த்தை , "இளைஞர்களே கனவு காணுங்கள்" என்று  பல இளைஞர்களை உருவாகியதுஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ஒரு வார்த்தைவார்த்தைகள் பலரை பல விதங்களில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.


"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"


                  என்ற குறளில் வள்ளுவர் நமது வார்த்தைகள் மற்றவரை எப்படி காயப்படுத்துகின்றது என்பதை  வெளிப்படுத்துகின்றார்நம் உள்ளார்ந்த எண்ணங்கள், ஒரு சில வார்த்தைகளால் புரிந்து கொள்ளப்படுகின்றது என்கிறார் உளவியலின் தந்தை  சிக்மண்ட் பிராய்டு. நம்முடைய வீட்டிலேயே பிள்ளைகளை  பேசாதீங்க மற்றும் போகாதீங்க என்று சொல்லுகின்ற போதுபிள்ளைகள் பேசும் மற்றும் போகும் ஏனென்றால் இவை அனைத்தும்  ஆழ் மனதிற்குள் பதிவு செய்யப்படுகின்றது. அதற்கு மாற்றாக  அமைதியாக இருங்கள் மற்றும் ஒரு இடத்தில் உட்காருங்கள்  என்று நேர்மறையான வார்த்தைகளை பேசுகின்ற பொழுது, பிள்ளைகளின் ஆழ்மனதிற்குள் அது  ஆணித்தரமாக பதியும். ஆம் வார்த்தை என்பது ஒரு மிகப்பெரிய ஆயுதம். இன்று நான் பேசும் என்னுடைய வார்த்தைகள் எப்படி இருக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு அறுபதாயிரம் எண்ணங்கள் உருவாக்கின்றது, இந்த அறுபதாயிரம் எண்ணங்களும் வார்த்தையாகத் தான் வெளிப்படுகின்றது. நம் வார்த்தை அடுத்தவரை காயப்படுத்தலாம்கோபப்படுத்தலாம், அடுத்தவரை மகிழ்ச்சியாக்கலாம்என்னுடைய வார்த்தைகள் எப்படி இருக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

      நான் பேசும் வார்த்தைகள் எப்போதும் நேர்மறையான வார்த்தைகளாக இருக்க வேண்டும். நம்முடைய வார்த்தைகள் எப்பொழுதும் நேர்மறையான வார்த்தைகளாக இருப்பதற்கு, நம்மை முழுவதுமாக தியானத்திலும், மன அமைதியிலும் உட்படுத்த வேண்டும். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய  பிறப்பு திருவிழாவிற்காக நம்மை நாமே தயாரிக்கின்ற இந்த வேளையிலே நாம் நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம்வார்த்தையான இறைவனை நாம் நம்முடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வதற்கும், பிறக்கவிருக்கும் இயேசு பாலகனை நம்முடைய வாழ்க்கையிலே, நம்முடைய இல்லங்களிலே மற்றும் உள்ளங்களிலே ஏற்றுக் கொள்வதற்கு நாம் எத்தகைய ஒரு முயற்சியை எடுத்துக் கொண்டு இருக்கின்றோம்நான் பேசக் கூடிய வார்த்தைகள் எப்படி இருக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். இறையருளை வேண்டுவோம்.  இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.