Friday, September 30, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 27-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 02 -10-2022- ஞாயிற்றுக்கிழமை

 


கடுகளவு நம்பிக்கை கடலளவு மாற்றம்


ஸ்டாலின் என்ற இளைஞன் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தான். நம்பிக்கை இல்லாத அவன் மனதில் விரக்தி குடியிருந்தது. அவனுக்கு போஸ்கோ என்றொரு நல்ல நண்பன் இருந்தான். அவனும் வேலை தேடிக் கொண்டிருந்தான். ஒருநாள் பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. சாலையோரப் பூங்காவில் நிழலுக்காக நண்பர்கள் இருவரும் ஒதுங்கினர். ஒரு பட்ட மரம் காய்ந்து போன நிலையில் நின்று கொண்டிருந்தது. ஒரு இலை கூட இல்லை. அதைக் கண்டதும் ஸ்டாலினுக்கு வருத்தம்! மரமே! நீயும் என்னைப் போலவே இருக்கிறாயே!என்னாலும் உன்னாலும் யாருக்கும் பயனில்லை என்று சொல்லி தடவிக் கொடுத்தான். போஸ்கோ அவனிடம், ஏண்டா! இப்படி புலம்ப ஆரம்பிச்சுட்ட! கோடை மழை வந்து விட்டால், இந்த மரம் துளிர் விட ஆரம்பிச்சுடும்! என்றான். சற்று நேரம் கழித்து அவர்கள் வீடு சென்று விட்டனர். நண்பன் சொன்ன அந்த வார்த்தைகள் மட்டும், ஸ்டாலினின் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. நண்பன் சொன்னது போலவே, ஒரிரு நாளில் கோடை மழையும் பெய்தது. பூமி குளிர்ந்ததால் ஆங்காங்கே புல்முளைத்தது. பூங்காவில் இருக்கும் பட்ட மரத்தைப் பார்க்கும் ஆவல் ஸ்டாலினுக்கு வந்தது. அவன் அங்கு சென்று பார்த்த போது, நண்பன் சொன்னது போலவே, பட்டமரத்தில் ஆங்காங்கே இளந்தளிர்கள் முளைத்திருந்தது. ஸ்டாலினின் மனதிற்குள்ளும் நம்பிக்கை துளிர் விட்டது. மரம் தந்த சிறு நம்பிக்கையோடு வேலையை தேட ஆரம்பித்தான். பொதுக்காலம் 27-ஆம் ஞாயிற்றுக்கிழமையின் இன்றைய இறைவார்த்தை வழிபாடு கடுகளவு நம்பிக்கை கொண்டு கடலளவு சக்தியை நம் வாழ்வில் உணர அழைப்பு தருகிறது.

சிறு நம்பிக்கை இருந்தால் மட்டுமே நம் வாழ்வில் அற்புதங்களையும் அதிசயங்களையும் காண முடியும் என்ற ஆழமான சிந்தனையை இன்றைய நற்செய்தி சுட்டிக்காட்டுகின்றது. திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்திமரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்” என்றார். இன்றைக்கு நமது வாழ்வில் நாம் கொள்கின்ற சிறு சிறு நம்பிக்கை தான் நம்மை வாழ்வில் ஒரு உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். இயேசு தன்னுடைய சீடர்களுக்கு எடுத்துரைக்கின்ற கடுகளவு நம்பிக்கை இன்றைக்கு நமது வாழ்க்கைக்கும் தேவைப்படுகிறது. கடுகளவு நம்பிக்கை என்றால் என்ன? விவிலியத்தில் பல்வேறு பகுதிகளின் பின்னணியில் கடுகளவு நம்பிக்கையின் குணங்களை சிந்திப்போம்.

தியாக நம்பிக்கை:

பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமை இறைவன் தன்னுடைய ஒரே மகனான ஈசாக்கை பலியிட கேட்ட போது அவர் தன் மகனை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்தார். ( தொ. நூல் 21:2-3) ஆக ஆபிரகாம் இறைவன் மீது கொண்ட நம்பிக்கை தியாக நம்பிக்கை அவருக்காக தன்னுடைய ஒரே மக்களை தியாகம் செய்ய தயாராக இருந்த நம்பிக்கை. நமது வாழ்விலும் நம்பிக்கையின் பொருட்டு எதையும் இழக்க மற்றும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

விடாமுயற்சியோடு நம்பிக்கை:

இயேசுவைத் தேடி வந்த கானானியப் பெண் அவரை நோக்கி "ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" என தன் மகளை குணப்படுத்த தொடர்ந்து கேட்கின்ற பொழுது, இயேசு முதலில் அமைதியாகவும், பின்பு தான் இஸ்ராயேல் குலத்தாருள் காணாமல் போன ஆடுகளாய் இருப்போரிடமே அனுப்பப்பட்டேன். என்றும், அதன் பின்பு பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுவது முறையல்ல என்றும் சொல்கிறார். ஆனால் அப்பெண் "மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்கள் தின்னுமே" என ஆழமான விசுவாசத்தை வெளிப்படுத்தி இயேசுவின் புதுமையை கண்டுணர்ந்தார். (மத்தேயு 15:21-28) நமது நம்பிக்கையில் விடா முயற்சி என்னும் குணம் இருக்க வேண்டும். கானானிய பெண்ணைப் போல நமது இலக்குகளை அடைவதற்காக தொடர்ந்து நம்பிக்கையோடு முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். கடுகளவு நம்பிக்கை என்பது வெறும் சந்தோஷமான சூழலில் மட்டுமல்லாது கஷ்டமான மற்றும் எத்தகைய சூழலிலும் இருத்தல் வேண்டும்.

முழுமையான நம்பிக்கை:

12 ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் அவதிப்பட்ட பெண் இயேசுவின் ஆடையின் விளிம்பை தொட்டால் போதும் என்ற கடுகளவு நம்பிக்கை கொண்டு கடலளவு குணமாக்கும் சக்தியை பெற்று புது வாழ்வை தொடங்கினார். (மத்தேயு 9:20-22) ஆக, நமது நம்பிக்கை வெறும் உடலளவில் அல்லது பேச்சளவில் மட்டும் அல்லாது நமது உள்ளத்தளவில் இருத்தல் வேண்டும். உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்ற நம்பிக்கை என்றும் நிலைத்திருக்கின்ற ஒன்றாகும். நாம் கொள்கின்ற நம்பிக்கை சிறிதளவு இருந்தாலும் அது 100% முழுமையாக இருத்தல் வேண்டும்.

ஆழமான நம்பிக்கை:

இயேசு கப்பர்நாகுமுக்கு சென்றபோது நேற்று தலைவர் ஒருவர் தன்னுடைய மகன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்து கொண்டிருக்கிறான். அப்போது இயேசு, "நான் வந்து அவனை குணமாக்குவேன்" என்று கூற நூற்றுவர் தலைவன் "ஐயா! நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்." என தனது ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தி இயேசுவின் புதுமையை கண்டு கொள்கிறார்.(மத்தேயு 8:5-13) கடுகளவு நம்பிக்கையின் மிக முக்கியமான குணம் ஆழமான நம்பிக்கையாகும்.

இறைவாக்கினர் அபகூக்கு முதல் வாசகத்தில் இறைவனின் வாக்குறுதிகளை குறித்து நம்மிடம் பேசுகிறார். இந்த வாக்குறுதிகளுக்கு உரியவர்களாக நாம் தகுதி பெற வேண்டுமெனின் நம்மிடம் கடுகளவாவது நம்பிக்கை இருத்தல் வேண்டும் என்கிறது இன்றைய இறைவார்த்தை. கடுகளவு நம்பிக்கை இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதே ஆண்டவர் நமக்கு கற்றுத் தரும் பாடம்.

நாம் நமது வாழ்வில் எதை சாதிக்க நினைத்தாலும் அதன் மீது முழுமையான, ஆழமான, தியாகம் நிறைந்த மற்றும் விடா முயற்சியோடு கூடிய நம்பிக்கையை வைப்போம். அது நமது வாழ்வின் இலட்சியங்களில் நமக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். இவ்வுலகில் யார் யார் மீதோ நாம் வைக்கின்ற நம்பிக்கையை முதலில் நம்முடைய கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளின் மீது வைப்போம். கடுகளவு நம்பிக்கை என்பது நம்முடைய இலட்சியங்களை அடைவதற்கு மட்டுமல்லாது நம்முடைய உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கும் அடித்தளம். சிறு சிறு செயல்களில் நமது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் மீது கடுகளவு நம்பிக்கையையாவது வைப்போம். அது அழகான கடலளவு கொண்ட உறவுகளை நம் வாழ்க்கைக்கு தரும். நிலமொன்றை துளைத்துக்கொண்டு முளைக்கும் சிறு துளிரை போல நமது நம்பிக்கை நமக்கு புதுவாழ்வு தரும் என்று நாம் நம்ப வேண்டும்.

அன்புடன்:-

Frகுழந்தை யேசு ராஜன் CMF