பொதுக்காலம் 27ஆம் வாரம்
(ஆண்டு- A)
04-10-2020
ஞாயிற்றுக்கிழமை
ஆசைக்கு எல்லையுண்டு
அது ஒரு கோடை காலம், காலில் செருப்பில்லாமல், கையில் குடையில்லாமல் சோர்வாக நீண்ட நேரம் ஒருவன் பயணித்துக் கொண்டிருக்கின்றான். திடீரென்று அவன் அருகே குதிரையில் கையில் குடை வைத்து, காலில் செருப்பு அணிந்து மற்றொருவன் அதே பாதையில் பயணிப்பதை காண்கின்றான். சற்றே யோசித்தவனாய் நடந்து சென்றவன் குதிரையில் சென்றவனைப் பார்த்து, ஐயா நானும் வெகுதூரம் செல்ல வேண்டும், வெயிலோ அதிகம், அதனால் உங்களுடைய செருப்பை எனக்கு கொடுத்தால் நலமாயிருக்கும், தாங்கள் குதிரையில் தானே பயணிக்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கு குதிரையில் சென்றவன் சரிதானே, என்று தன்னுடைய செருப்பை அவனுக்குக் கொடுத்தான். அதை அதைப் பெற்றுக் கொண்ட அவன், தன்னுடைய காலில் அந்த செருப்பை அணிந்து, மீண்டுமாக குதிரையில் சென்றவரைப் பார்த்து, ஐயா தாங்கள் குதிரையில் தானே செல்கிறீர்கள் தங்களுக்கு வெப்பம் அதிகம் தெரியாது. நான் நடந்து பல தூரம் செல்ல வேண்டியது இருக்கிறது அதனால் உங்களுடைய குடையை எனக்கு தருவீர்களா என்று கேட்டான். அதற்கு குதிரையில் சென்றவன் இதுவும் சரிதானே என்று தன்னுடைய குடையை அவனிடம் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்டு சிறிது நேரம் யோசித்தவன், மீண்டுமாக அந்த குதிரையில் சென்றவனை பார்த்து, ஐயா உங்களுடைய குதிரையையும் எனக்கு தந்து விடுங்களேன் என்று கேட்டான். உடனே குதிரையில் இருந்தவன் தன்னுடைய கையிலிருந்த சவுக்கை எடுத்து அவனுக்கு சவுக்கடியை கொடுத்தான். அப்பொழுது அடி வாங்கியவன் சிரித்துக் கொண்டே இருந்தானாம். அதற்கு நான் உனக்கு சவுக்கடி கொடுக்கின்ற பொழுது, நீ சிரித்து கொண்டிருக்கிறாயே ஏன் என்று கேட்டான். அதற்கு அவனோ, ஐயா இதை நான் கேட்காமல் இருந்தால் என்னுடைய வாழ்நாள் முழுவதும் இதைக் கேட்கவில்லையே என்ற பேராசையில் நான் வாழ்ந்திருப்பேன். இப்பொழுது என்னுடைய ஆசைக்கு ஒரு எல்லை உண்டு என்பதை நான் உணர்ந்து கொண்டேன், இது எனக்குப் போதும் என்று கூறினானாம்.
ஆம் அன்பிற்குரியவர்களே, இன்றைய இறைவார்த்தையானது நம்முடைய ஆசைகளுக்கு எல்லையுண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள அழைப்பு தருகின்றது. ஆசை மனித உயிரின் எழுச்சி. ஆசையை எவராலும் விட முடியாது. மனிதனுடைய பிறப்பு முதல் இறப்பு வரை எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆசை தான் மனிதவாழ்வின் எரிபொருள். ஆசையை நாம் விட்டு விட்டால் நம் உயிரே போகும். ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. இவ்வாறு மனித வாழ்வின் எரிபொருளாக, அங்கமாக, அடித்தளமாக இருக்கின்ற ஆசை எப்படி மனிதனுக்கு துன்பத்தைக் கொடுக்கும் என்று சிந்திக்கின்ற போது, நம் ஆசைக்கு ஒரு எல்லையுண்டு என்பதை உணர்கின்றோம். ஆசையின் எல்லையை நாம் கடக்கின்ற போது, நாம் நம்முடைய வாழ்வின் துன்பங்களில் விழுந்து விடுகிறோம். ஆசையின் எல்லைகளை நாம் அறிந்து கொண்டு, அதற்கேற்றவாறு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் இன்றைய நற்செய்தி அழைப்பு தருகின்றது.
இன்றைய நற்செய்தியில், குத்தகை எடுத்த தொழிலாளர்கள் ஆசை கொள்வதைப் பார்க்கின்றோம். அவர்கள் ஆசை, ஆசையாக அல்லாது பேராசையாக மாறியிருக்கின்றது, எல்லை கடந்த ஆசையாக மாறி இருக்கின்றது. அதன் வெளிப்பாடாக, இந்த திராட்சைத் தோட்டம் தங்களுக்கு கிடைக்கும் என்ற ஆசையில் வந்த பணியாளர்களை நையப்புடைத்து, கல்லெறிந்து, கொலை செய்வதையும், உரிமையாளரின் மகனை கொன்று போடுவதையும் பார்க்கின்றோம்.
வாய்ப்புகளை இழத்தல்:
ஆசைபடுகின்ற போது அல்லது நம்முடைய ஆசை எல்லை கடக்கின்ற போது, நாம் பல வாய்ப்புகளை இழக்கின்றோம். தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு ஒரு வேலை கிடைத்து இருக்கிறது. அதன் மூலமாக தங்களுடைய வாழ்வாதாரம் அமைக்கப்படுகிறது, அதை வைத்து நாம் மகிழ்வோடு இருப்போம் என்பதை முற்றிலும் மறந்தார்கள். ஆசை அவர்களின் வாழ்விற்கு கிடைத்த வாய்ப்புகளை முற்றிலும் மறைத்தது. நம்முடைய வாழ்க்கையிலும், நாம் பேராசைபடுகின்ற போது நாம் நம்முடைய வாழ்க்கையில் பல வாய்ப்புகளை இழந்து விடுகின்றோம்.
இருப்பவற்றை மறத்தல்
நாம் ஆசை கொள்கின்ற போது நம்மிடையே இருக்கின்ற கடவுள் அளித்த கொடைகளை, திறமைகளை, வாய்ப்புகளை மறந்து விடுகின்றோம். நற்செய்தியில் திராட்சை தோட்ட உரிமையாளர், ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, அதில் பிழிவு குழி வெட்டி, காவல் மாடமும் கட்டி எல்லாவிதமான வசதிகளையும் ஏற்பாடு செய்து குத்தகைக்கு கொடுக்கிறார். அவர்கள் கொண்ட ஆசை தங்களுக்கு இத்தனை வசதிகள் இருக்கின்றது என்பதை மறக்க வைக்கின்றது. நம்முடைய வாழ்க்கையில் நாம் கொள்ளும் ஆசைகள் நம்மிடையே இருப்பதை மறக்க வைக்கின்றது.
அழிவை நோக்கி செல்லுதல்
நாம் ஒவ்வொரு முறையும் பேராசை கொள்கின்ற போது நம்மை அறியாமலேயே நாம் வாழ்வின் துன்ப கிணற்றில் விழுந்து அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் தோட்டத் தொழிலாளர்கள் பேராசையில் ஒவ்வொரு செயலையும் செய்யும் போது அவர்களை அறியாமலே அவர்கள் அழிவின் பாதைக்கு சென்று கொண்டிருந்தார்கள். "இறுதியாக தோட்ட உரிமையாளர் வந்து அவரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்" என்னும் வார்த்தைகள் நாம் ஒவ்வொரு முறையும் ஆசை கொள்கின்ற போது அழிவின் பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.
திருவிவிலியத்தில் பலரும் எல்லை கடந்த ஆசையினால் பட்ட துன்பங்களையும் அழிவுகளையும் நாம் பார்க்கின்றோம். முதல் பெற்றோரான ஆதாமும், ஏவாளும் கடவுளைப் போல் மாற வேண்டும் எனும் ஆசையில் விலக்கப்பட்ட கனியை சாப்பிட்டு அதனால் கடவுளுடைய சாபத்திற்கு உள்ளானதை நாம் காண்கின்றோம். விண்ணைத் தொட வேண்டும், கடவுளை காணவேண்டும் என்ற ஆசையால் பாபேல் கோபுரம் சரிந்து விழுந்து அனைவரும், மொழிவாரியாக பிரிந்ததை நாம் காண்கின்றோம். பதவி ஆசையால் இந்த எகிப்து தேசம் எங்கும் எகிப்தியர்கள் கையில் தான் இருக்க வேண்டும் என்னும் ஆசையால் எகிப்திய ஆண் குழந்தைகள் பலர் கொல்லப்பட்டதை நாம் பார்க்கின்றோம். பெண்ணாசை நிமித்தமாக தாவீது உரியாவை கொன்றதையும் நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். இயேசுவைப் பின்பற்ற விரும்பிய இளைஞன் பொருள் ஆசையின் காரணமாக தான் பின்பற்ற விரும்பிய இயேசுவை விட்டு விலகி சென்றதை பார்க்கின்றோம். பணத்தாசை நிமித்தமாக தன்னுடைய குருவான இயேசுவையே முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த யூதாஸ் காரியத்தையும் நாம் காண்கின்றோம். இவையெல்லாம் மண்ணாசை, பதவியாசை, பெண்ணாசை மற்றும் பொருளாசையால் எழுந்த துன்பங்கள் எல்லை கடந்த ஆசையின் விளைவுகள் என்பதை உணர்த்துகிறது.
"ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்னும் புத்தரின் வார்த்தைக்கு ஏற்ப "ஆசை படப் பட ஆகி வரும் துன்பங்கள், ஆசை விட விட பெருகிவரும் ஆனந்தம்" என்னும் திருமூலரின் கூற்றுக்கு ஏற்ப நாம் நம்முடைய வாழ்க்கையில்
ஆசைகளால் எல்லை கடக்கின்ற போது, வாழ்வில் என்றும் துன்பம் நீடிக்கும், அதேநேரம் விட்டு விலகி வாழும் போது வாழ்க்கையில் ஆனந்தம் பெருகும். இந்த உலகம் ஆசைகளால் நிறைந்தது. ஆசை மனிதனுக்குத் தேவை ஆனால் அதே ஆசை ஒருபோதும் எல்லையை கடக்க கூடாது. வாழ்க்கையில் நம்முடைய தேவைகளை மட்டும் நாம் பூர்த்தி செய்கின்ற போது, அது ஆசையாகவே இருக்கும். நம்முடைய விருப்பங்களையும் பூர்த்தி செய்ய நினைக்கின்ற போது தான் அது பேராசையாக மாறுகின்றது. தண்ணீரிலே இருக்கின்ற தாமரை தண்ணீரை தன்னிலே சேர்க்காததை போல, நாம் ஆசைகள் மத்தியில் வாழ்ந்தாலும், ஆசை நம் வாழ்வை ஒரு போதும் பாதிக்கக்கூடாது. ஆசையில் வாழ்ந்தாலும், பேராசை நம்மை தொடாதவாறு வாழ இறையருளை வேண்டி ஜெபிப்போம்.இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம். |