Thursday, February 11, 2021

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 6-ஆம் வாரம்- ( ஆண்டு- B)- 14-02-2021- ஞாயிற்றுக்கிழமை

                  விவிலிய விதைகள்  

பொதுக்காலம் 6-ஆம் வாரம்

(ஆண்டு- B)

14-02-2021

ஞாயிற்றுக்கிழமை

 தொழுநோய் தொடரும் நோய்




         அது ஒரு அழகிய நாடு. அங்கு ஒவ்வொரு நாளும் ஒரு மனிதனை மட்டுமே எல்லோரும் இவன் ஒரு துரதிர்ஷ்டசாலி, இவனுடைய முகத்தில் நாம் முழித்தால் நமக்கு தீங்கு வந்து சேரும் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இதனால் அவன் மிகவும் வருத்தமடைந்தான். இந்தச் செய்தி அந்த நாட்டினுடைய அரசருக்கு எட்டியது. எப்படி ஒரு மனிதனை மட்டுமே நாம் தொடர்ந்து துரதிர்ஷ்டசாலி என்று கூறி விட முடியும், அவனை அழைத்து வாருங்கள் என்றார். பின் அவனிடம் நீ இன்று இந்த அரண்மனையில் தங்கிக்கொள், உனக்கு தேவையான யாவற்றையும் நான் கொடுக்கிறேன். நாளைய தினம் காலையில் நான் உன் முகத்தில் முழிக்கிறேன் என்று கூறினார். அடுத்த நாள் காலையில் அவன் முகத்தில் அரசர் சென்று முழித்தார். தன்னுடைய நாளை அவனைப் பார்த்து தொடங்கினார். அதன் பிறகு, அவர் தோட்டத்திற்கு சென்ற பொழுது வழியில் கல் இருந்தது தெரியாமல்  இடித்து, காலில் அடிபட்டு விட்டது. உடனே அரசர் உண்மையாகவே அந்த மனிதன் துரதிர்ஷ்டசாலி தான் என்று கூறினார்மதிய உணவிற்காக வந்த பொழுது அவருக்காக வைத்த உணவில் பல்லி ஒன்று விழுந்தது என்று பணியாள் கூறஉடனடியாக அரசர் கோபத்தோடு அந்த மனிதன்  துரதிர்ஷ்டசாலி, இவன் முகத்தில் யாரும் முழிக்கக் கூடாது, இவன் இருப்பது நல்லதே கிடையாது என்று அவனுக்கு மரணதண்டனை விதித்தான். இதை கேள்விப்பட்ட அந்த மனிதன் அரசரை சந்திக்க வந்தான். அப்பொழுது அரசரிடம், ஏன் எனக்கு மரண தண்டனை கொடுத்தீர்கள் என்று கேட்டான். அதற்கு அரசர் உன்னுடைய முகத்தில் முழித்ததால் எனக்கு இவ்வாறு நடந்தது என்று கூறினாராம். சற்று யோசித்த அந்த மனிதர் சிறிது நேரத்தில், அரசே நான் கூட இன்று உங்கள் முகத்தில் தான் முழித்தேன், எனக்கு மரண தண்டனை கிடைத்துவிட்டது, அப்படியென்றால் நீங்களும் துரதிர்ஷ்டசாலி தானே என்று கூறினாராம். அப்பொழுது தான் அரசர் தன் அறியாமையை உணர்ந்தார். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற நிகழ்வுகளை வைத்து அடுத்தவரை  துரதிர்ஷ்டசாலி, தாழ்ந்தவன், ஒன்றுக்கும் உதவாதவன் மற்றும் அறியாதவன் என்று கூறக்கூடாது.

     இறையேசுவில் அன்பார்ந்தவர்களே, நாமும் பல வேளைகளில் நம்மோடு, நம் மத்தியிலே வாழ்கின்ற பல மனிதர்களை மூடநம்பிக்கையால் இழிவாக தரம் குறைத்து மதிப்பிடுகின்றோம்நம்முடைய வாழ்க்கையில் நடக்கின்ற தேவையில்லாத சில நிகழ்வுகளின் அடித்தளத்தில் பல மனிதர்களை மிகவும் கீழ்த்தரமாக, தரம் குறைவாக மற்றும் அடிமையைப் போல நடத்துகின்றோம். பணம், பொருள், பொருளாதாரம், பதவி, புகழ் மற்றும் அலுவல் என இவை அனைத்தும் இல்லாத சூழலில் பலரை நாம் மதிக்க தவறி விடுகின்றோம். அவர்களை அடிமைகளாக  மற்றும் நோயாளிகளாக கருதி கொண்டிருக்கின்றோம். இத்தகையோரை மதிப்பவர்களாக, ஏற்றுக் கொள்பவர்களாக, விரும்புபவர்களாக நாம் மாற  இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு தொழு நோயாளரை  குணப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம். தொழுநோயைப் பற்றியும் மற்றும் தொழுநோயாளிகள்  நடத்தப்பட்ட சூழ்நிலையை பற்றியும் பழைய ஏற்பாட்டில் லேவியர் புத்தகத்தின் 13 மற்றும் 14வது அதிகாரம் நமக்கு விபரமாக எடுத்துரைக்கின்றது.

1. உடல் நோய்

    தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் உடலளவில் அதிகமான வேதனைப்படுகிறார். நம் உடலின் சருமத்தை பாதிக்கும் நோய் இதுதொழுநோய் உடல் அளவில் அதிகமான வலியை ஏற்படுத்துவதாக இருக்கின்ற உடல் நோய்.

2. சமய நோய்

    இயேசு வாழ்ந்த காலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னுடைய சமயத்தால் இவர் பாவம் செய்தவர், இவர் சுத்தம் இல்லாதவர்  துய்மையற்றவர் என்று மக்களால் ஒடுக்கப்படுகின்ற ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் குருவிடம் காட்டி தன்னை சோதித்தறிய வேண்டும் என கூறப்பட்டிருப்பதுசமயத்தாலே ஒதுக்கப்படுவது ஆகும். இங்கு தொழுநோய் ஒரு சமய நோயாக கருதப்பட்டது.

3. சமூக நோய்

          தொழுநோய் ஒரு சமூக நோயாகும்சமூகத்திலே வேறு ஒரு நபரை தொட்டால் அவரும் அசுத்தமாகி விடுவார், அவருக்கும் நோய் வந்துவிடும் என்ற ஒரு எண்ணம் இருக்க இது சமூக நோயாகவே கருதப்படுகிறது. சமுதாயத்தில் இத்தகைய நோய் உடையவரை வெறுக்கின்ற ஒரு சூழல், ஊருக்கு ஒதுக்கு புறமாக தங்க வேண்டிய ஒரு சூழல் இருப்பதையும் பார்க்கின்றோம்.

4. உள்ள நோய்

       சமுதாயத்தாலும், சமயத்தாலும் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதர் தனது உள்ளத்தால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருப்பார். மனதாலே நிறைய காயங்கள் நிறைந்தவராக தன் அன்றாட உணவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல்ஒவ்வொரு நாளும் உணவிற்காக பிச்சை எடுக்க  கூடிய ஒரு சூழலுக்கும் தள்ளப்படுகிறார். ஆக தொழுநோய் ஒரு உள்ள நோய். ஒவ்வொரு தொழுநோயாளரையும் அன்றைய யூத சமுதாயம் உடல், சமய, சமூக, மற்றும் உள்ள நோயால் பாதிக்கப்பட்டவராகவே கருதியது.

தொழுநோய் தொடரும் நோய்

          அன்று மட்டுமல்லாது இன்றும் தொழுநோய் ஒரு தொடரும் நோயாகவே இருக்கின்றதுநம்முடைய சமுதாயத்தில் அதிகமான தொழுநோயாளிகள் இல்லாவிட்டாலும், பலரை நாம் தொழுநோய் உள்ளவர்களாகவே கருதுகின்றோம். நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் குறிப்பாக நம்முடைய இல்லங்களில் இருக்கின்ற முதிர்ந்த நமது பெற்றோர்கள், நமது சமுதாயத்திலுள்ள ஆதரவற்றவர்கள்பிச்சைக்காரர்கள், ஏழைகள்நம்முடைய வீடுகளில் உள்ள குடிகார கணவன்கள், மனைவிமார்கள், குழந்தைகள், நமக்கு தீங்கிழைத்தவர்கள் மற்றும் திறமையற்றவர்கள் எனப் பல்வேறு சூழலில் நாம் இவர்கள் அனைவரையும் ஒதுக்குகின்ற பொழுது நாம் இவர்களையே தொழு நோயாளிகள் போலத்தான் நடத்தி கொண்டிருக்கின்றோம். ஆக தொழுநோய் இன்றும் ஒரு தொடர் நோயாகவே இருக்கின்றது.


நான் விரும்புகிறேன்
 

       ஒரு மனிதன் தன்னுடைய சமூகத்தால், சமயத்தால் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு, உடலளவில், உள்ளத்தளவில் நோயால் அவதியுற்று, கொண்டிருந்தவரை இறைமகன் இயேசு கிறிஸ்து "நான் விரும்புகிறேன்" என்று கரத்தால் தொட்டு ஏற்றுக் கொள்கின்றார்அன்று இயேசு அவரை குணமடைய செய்ததை போல, இன்று நம் மத்தியில்  தொழுநோய் இல்லாவிட்டாலும்   தொழுநோயாளர் போல பலரால் நடத்தப்படுகின்ற பலரை "விரும்புகிறேன்" என்று  நாமும் ஏற்றுக் கொள்ள அழைக்கப்படுகின்றோம்.   "நான் கிறிஸ்துவை போல் நடப்பது போன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள் என்னும் பவுல் அடிகளாரின் இன்றைய இரண்டாம் வாசக வார்த்தைகளுக்கு ஏற்ப நாமும் இயேசுவைப் பின்பற்றி 'விரும்புகிறேன்' என்று ஒதுக்கப்பட்ட அனைவரையும் ஏற்றுக் கொள்வோம். தொழுநோய் என்னும் தொடர் நோய் நம் சமுதாயத்தை விட்டு விலகட்டும், புதுவாழ்வு பிறக்கட்டும். இறைவன் நம் ஒவ்வொருவரையும் நிறைவாய் ஆசீர்வதிப்பார்.

                                               

 அருட்பணி. குழந்தை யேசு ராஜன் CMF

                                                            கும்பகோணம்