Friday, March 19, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 5-ஆம் வாரம்- ( ஆண்டு- B)- 21-03-2021- ஞாயிற்றுக்கிழமை

 

விவிலிய விதைகள்  

தவக்காலம் 5-ஆம் வாரம் ( ஆண்டு- B)

21-03-2021

ஞாயிற்றுக்கிழமை


அர்ப்பணம் (மடிதல்) தரும் மாற்றம்


                   "Unexpected Universe"  என்னும் புத்தகத்தில் "Star Thrower" என்னும் கதை ஒன்று உண்டு. இந்த கதையில் ஒருவர்  கடற்கரையில் கிடந்த அனைத்து நட்சத்திர மீன்களையும் எடுத்து கடலுக்குள் ஒன்று ஒன்றாக வீசி கொண்டிருந்தார். அதை பார்த்த அவ்வழியே வந்த மற்றொருவருக்கு ஒரே ஆச்சரியம். ஏன் இந்த மனிதன் கரையிலே கிடக்கின்ற இந்த நட்சத்திர மீன்களை உள்ளே எரிந்து கொண்டிருக்கின்றார் என்று யோசித்து, அவரிடம் சென்று கேட்டார்.  அதற்கு அந்த மனிதர் கடல் உள்வாங்கிக் கொண்டே இருக்கின்றது. இந்த நட்சத்திர மீன்கள் எல்லாம் கரையிலே இப்படி பல மணி நேரங்கள் இருந்தால் இறந்துவிடும், அதற்காக நான் இவற்றை கடலுக்குள்  எரிந்துஇவைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றேன், இவைகளுக்கு வாழ்வு கொடுக்க முயற்சி செய்கிறேன் என்றாராம். அதற்கு அந்த  மனிதர் அவரை பார்த்து சிரித்து, இந்த கடற்கரை பல நூறு மைல்கள் நீளம் உடையது. இந்த கடற்கரையில் எண்ணற்ற மீன்கள் கரை ஒதுங்கி இருக்கின்றது. இவை அனைத்தையும் எப்படி உன்னால் கடலில் தூக்கி போட முடியும்எப்படி உன்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் ஒரு நட்சத்திர மீனை தன்னுடைய கையில் எடுத்து, அதை கடலுக்குள் தூக்கி எறிந்து விட்டு, இந்த ஒரு மீனின் வாழ்க்கையில் நான் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டேன், இதற்காக தான் என்னை முழுவதுமாக  அர்ப்பணித்தேன் என்று கூறினாராம்.

                              இறை இயேசுவில் இனியவர்களே, இன்றைய தவக்காலத்தின் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையின்  இறைவார்த்தை வழிபாடு, நம் ஒவ்வொருவரையும்  புது மாற்றத்திற்காக நம்மையே முழுவதுமாக அர்ப்பணிக்க அழைப்பு தருகிறது.  நாம் நம்மை அர்ப்பணிக்க  இயேசு கிறிஸ்துவே, நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றார். அவர் தன்னை அர்ப்பணித்தார், இழந்தார் மற்றும் இறந்தார் என்பதை காட்ட  இரண்டு அடையாளங்கள் நம்முன் வைக்கப்படுகின்றது.

1. திருச்சிலுவை
2.
நற்கருணை

                             இவை இரண்டும் நமக்கு இழத்தலுக்கான அடையாளங்களாக இருக்கின்றது. இவ்வடையாளங்களை பின்பற்றி, நாம் நம் வாழ்வில் வருகின்ற அனைத்து இழப்புகளையும், துன்பங்களையும் மாற்றத்திற்கான பாதையாக ஏற்றுக் கொள்வோம்.

1. சிலுவை என்னும் அடையாளம்:-

                                               அர்ப்பணம் தான் புது மாற்றத்தைத் தரும் என்கின்றது இன்றைய நற்செய்தி. "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால் தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (யோவான். 12:24) என்னும் இயேசுவின் வார்த்தைகள் அவர் சிலுவையில் மடிந்து, தன் இறப்பால், இம்மண்ணுலகில் மக்களுக்கு புது வாழ்வைத் தந்ததை எடுத்துரைக்கின்றது. இதே வார்த்தைகள், நாம் நம்மை இழந்து, நம்மையே மடிய வைத்து, புது வாழ்வு பெற, பிறரையும் புது வாழ்வு பெற வைக்க அழைப்பு தருகின்றது. விதை மடிந்தால் தான் புது செடி உருவெடுக்கும், அதுபோல இயேசுவினுடைய  சிலுவை அர்ப்பணத்தின் புது அடையாளமாக இருக்கின்றது.  அவர் பாடுகள் மற்றும் இறப்பு, உயிர்ப்பு என்னும் புது வாழ்வை தந்து கொண்டிருக்கின்றது. அவர் தன்னைத் தானே தியாகம் செய்து, உருகி, தன்னை இழந்து, அர்ப்பணித்து மற்றவருக்கு மீட்பு எனும் புது வாழ்வைத் தந்தார் என்பதை சிலுவை நமக்கு வெளிப்படுத்துகின்றது.

2. நற்கருணை என்னும் அடையாளம்:-

                ஒவ்வொரு நாளும் திருப்பலியின் போது ஒரு மாற்றம் ஏற்படுகின்றது. நாம் காணிக்கையாக அர்ப்பணிக்கும் கோதுமை அப்பம் மற்றும் திராட்சை இரசம், இயேசுவின் உடலாக மற்றும் இரத்தமாக மாற்றப்படுகின்றது.  இயேசுவின் இந்த அர்ப்பணம் புது வாழ்வை தந்த மற்றும் தருகின்ற அர்ப்பணம்.  இயேசு தன்னை இழந்து அர்ப்பணமாக்கிய நற்கருணையே இதற்கு மாபெரும் அடையாளம்.  இவ்வடையாளத்தை பயன்படுத்தி நம்மை முழுவதுமாக அர்ப்பணிப்போம். நமது வாழ்வின் இழப்பு, மடிதல் மற்றும் அர்ப்பணம் என அனைத்தும் நமக்கு புது வாழ்வை தந்து, நம்மில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

நமது இழப்புகள் தரும் மாற்றம்:-
   

                      நம்முடைய பெற்றோர்கள் நமது நலனுக்காக பல தியாகங்கள் என்னும் இழப்புகளை  மற்றும் துன்பங்களை சந்தித்து நம்மை புது வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்கள். நாமும் நமது வாழ்க்கையில் நம்மை முழுவதுமாக அர்ப்பணிக்கும் போது நம்மில் புதுவாழ்வு உருவாகிறது, மாற்றம் ஏற்படுகின்றது. நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலிருந்தும் புது நிலைக்கு அடியெடுத்து வைக்கின்ற போதும், நாம் பலவற்றை இழக்கின்றோம். ஆனால், பலவற்றை புதியதாக பெறுகின்றோம், அங்கு நம்மில் மாற்றம் ஏற்படுகின்றது. நமது அன்றாட வாழ்வில்நமது தேவையில்லாத செயல்கள், எண்ணங்கள், பேச்சுகள்,   சோம்பேறித்தனம், பொறாமை மற்றும் கோபம் என இவையனைத்தும் நம்மிடமிருந்து மடிய வேண்டும். அப்போது நம்மில் புதுவாழ்வும் மாற்றமும் ஏற்படும். அதைத்தான் இறைவார்த்தையின் வழியாய் இறைவன் எதிர்பார்க்கின்றார். அதற்காய்  நாம் வாழ்வின் அனைத்து துன்பங்களையும், கஷ்டங்களையும், வேதனைகளையும் மற்றும் இழப்புகளையும் புது வாழ்வுக்கான படிகளாக எண்ணுவோம். இன்னும் நம்மிடையே இருக்கின்ற தேவையில்லாத எண்ணங்கள், பேச்சுகள் மற்றும் செயல்பாடுகளையும் நாம் அர்ப்பணிப்போம். இறையருளை இறைஞ்சுவோம். வாழ்வில் மாற்றத்தை காண்போம்புதுவாழ்வு பெறுவோம், இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

                               அருட்பணி. குழந்தை யேசு ராஜன் CMF
                                                                  கும்பகோணம்