Friday, June 23, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலத்தின் 12-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A)- 25-06-2023- ஞாயிற்றுக்கிழமை

 

🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 12-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(25 ஜூன்  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: எரேமியா 20: 10-13
இரண்டாம் வாசகம்: உரோமையர் 5: 12-15
நற்செய்தி: மத்தேயு 10: 26-33

இறை அச்சம்

            மரத்தடியில் முனிவர் ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே நோய் கிருமியொன்று பறந்து சென்று கொண்டிருந்தது. இந்த முனிவர் அதை தடுத்து நிறுத்தி, "நீ யார்? எங்கே செல்கிறாய்?" எனக் கேட்டார். அதற்கு அந்த நோய்க்கிருமியோ, "நான்தான் கொரோனா பக்கத்தூரில் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. நான் அங்கு சென்று மக்களை கொல்ல போகிறேன்" என்று கூறியது. அதற்கு அந்த முனிவரோ மக்களை இப்படி கொல்வது பெரும் பாவம் என்றும், அவர்களை கொல்லாமல் இப்படியே திரும்பி சென்று விடு என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு கொரோனாவோ, "இது ஒரு பாவம் என்றால் ஏன் கடவுள் என்னை இந்த மண்ணுலகில் உருவாவதற்கு வழி வகுக்க வேண்டும்?" என்று கேட்டது. முனிவருக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை, அவர்களுடைய உரையாடலின் நிறைவாக வெறும் நூறு பேருக்கு மட்டுமே கொரோனா தந்து சாவடிப்பது என்ற உடன்பாட்டுக்கு வந்தார்கள். சில நாட்களில் கொரோனா நோயால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தார்கள் என்ற செய்தி முனிவருக்கு கிடைத்தது. உடனே முனிவர் கொரோனாவை சந்தித்து, "வெறும் நூறு பேரை மட்டுமே கொல்வதற்கு நாம் பேசியிருந்தோம் ஆனால் இன்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள்" என்று கேட்டார். கொரோனாவோ, "நான் கொரோனா தந்து சாகடித்தது வெறும் நூறு பேரை மட்டும்தான், மற்றவர்கள் எல்லாம் அந்த பயத்தாலே இறந்தவர்கள்" என்று கூறியதாம். இன்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா மனிதர்களிடத்திலும் பயம் இருக்கின்றது. நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வாழ்வின் ஏதோ ஒரு சூழ்நிலையில் நம்மை இந்த பயம் ஆட்கொள்கிறது. எல்லா மனிதர்களிடத்திலும் பொதுவான உணர்வாக இருக்கின்ற இந்த பயம் பல வேலைகளில் நம் வாழ்வை தீர்மானிக்கின்ற ஒன்றாக அமைந்து விடுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் பயம் என்னும் அச்சத்தை எப்படி கையாள போகின்றோம்? இந்த அச்சம் நமக்கு தேவையா? எதற்கு நாம் அச்சம் கொள்ள வேண்டும்? என்னும் கேள்விகளுக்கு விடையாக இன்றைய இறைவார்த்தை நம்முன் வைக்கப்படுகின்றது.

அஞ்ச வேண்டாம்:-
          இன்றைய முதல் வாசகத்தில் இறைவனின் செய்தியை கேட்ட ஏரேமியா அதனை அரசனிடம் எடுத்துரைக்கின்றார். அரசனும் அந்த செய்திக்கு செவிமடுப்பதற்கு பதிலாக ஏரேமியாவை தேசத்துரோகி எனக் கூறி துன்புறுத்த ஆரம்பித்தார். அவருடைய நண்பர்கள் கூட அவருக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் இறைவாக்கினர் ஏரேமியா இந்த துன்பங்களை கண்டு ஒருபோதும் அஞ்சாமல் இறைவன் என்னாலும் என்னோடு இருக்கின்றார் என நம்பிக்கையோடு இருந்தார். இன்றைய நற்செய்தியிலும் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு அச்சமின்றி உலகெங்கும் சென்று நற்செய்தியை பறைசாற்ற அழைப்பு தருகிறார். "ஆன்மாவைக் கொல்ல இயலாமல் உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்" (மத் 10:28) அதாவது அழிந்து போகும் மற்றும் உடலை கொல்லும் உலகின் மாயைகளுக்கு அஞ்ச வேண்டாம் என்கிறார். தொடக்க கிறிஸ்தவர்கள் பலவிதமான துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்கள் ஒரு நாளும் மற்றும் ஒருபோதும் அஞ்சவில்லை. இறைவனுடைய துணையை அவர்கள் எந்நாளும் உணர்ந்தார்கள், அவரில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார்கள். "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத் 28:20) என்ற இயேசுவின் வார்த்தையின் அடித்தளத்தில், நம்மை படைத்து காத்து வழிநடத்தி நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்ட நம் இறைவன் நம்மோடு இருக்கும்போது நாம் எதற்கும் அஞ்சாமல் அவர் மீது நம்பிக்கை கொண்டு வாழ அழைப்பு பெறுகின்றோம்.

அஞ்சுங்கள்:-
          உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம் என்று கூறும் இயேசு ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள் என்கின்றார். இது இறை அச்சத்தை நோக்கி நம்மை அழைத்து செல்கிறது. விவிலியத்தில் யாக்கோபின் பிள்ளைகள் அவர்களுடைய சகோதரனான யோசேப்புக்கு அஞ்சினர். (தொநூ 43:18) மோசே பார்வோனுக்கு அஞ்சி எகிப்திலிருந்து தப்பித்து ஓடினார். (விப 2: 14) சவுலும் இஸ்ராயேலரும் கோலியாத்துக்கு அஞ்சினர். (1சாமு 17:11 ) இவை அனைத்தும் மனிதன் தன் வாழ்வில் உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சுகின்ற நிலையாகும். ஆனால் இத்தகைய நிலை மாறி தூய ஆவியின் கொடைகளில் ஒன்றான இறை அச்சம் என்னும் தெய்வ பயம் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் தேவை என்கிறது இன்றைய நற்செய்தி வாசம். இரண்டு விதமான இறை அச்சம் உண்டு, இது நம்முடைய நோக்கங்கள் மற்றும் வாழ்வின் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.

1. அடிமைத்தனமான பயம் (Survile Fear)
            இது தான் செய்த தவறுக்கு கடவுள் தண்டிப்பார் என்னும் பயம். தண்டனைக்கு பயந்து இறைவனை நோக்கி வரும் இத்தகைய நிலை அடிமைத்தனமான பயம் ஆகும். தான் செய்த தவறுக்கு தன்னுடைய முதலாளியிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் எனக்கு பெரும் தண்டனை கிடைக்கும் அல்லது நான் என்னுடைய வேலையை இழக்க நேரிடும் என்பதற்காக ஒரு தொழிலாளியிடம் ஏற்படுகின்ற பயம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

2. அன்பு உறவுக்கான பயம் (Filial Fear)
        இந்த நிலையில் ஒருவர் செய்த தவறுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறார். இது இறைவன் கொடுக்கும் தண்டனைக்கு பயந்து அல்ல மாறாக அவருக்கும் இறைவனுக்குமுள்ள உறவு பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஆகும். இது ஒரு குழந்தை தான் செய்த தவறுக்கு தன்னுடைய பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கும் நிலையாகும். பெற்றோர் தன்னை தண்டிப்பார் என்பதற்காகவோ அல்லது அவர்களுக்கு அடிமையாக இருப்பதற்காகவோ அல்லாது, மாறாக இந்த குழந்தை பெற்றோரை அன்பு செய்வதாலும் தன்னுடைய பெற்றோரை இழந்து விடாமல் இருப்பதற்காகவும் ஆகும்.

        ஆக திரு அவையிலே நமக்கு கற்பிக்கின்ற இறை அச்சம் இறைவன் நாம் செய்த தவறுக்கு தருகின்ற தண்டனைக்கு பயந்து நாம் கொள்கின்ற அச்சம் அல்ல மாறாக என்னை படைத்த, வழி நடத்திக் கொண்டிருக்கின்ற மற்றும் அன்பு செய்கின்ற இறைவனை நான் ஒருபோதும் மறவாமல் அன்பு செய்வேன் என்னுடைய அன்புக்கு என்னுடைய பாவங்கள் மற்றும் செயல்பாடுகளும் ஒருநாளும் தடையாக இருக்காது என்பதற்காக ஆகும். எனவேதான் இன்றைய நற்செய்தியில் இயேசு உலகைச் சார்ந்தவர்களுக்கும் மற்றும் உலகை சார்ந்தவைகளுக்கும் அஞ்சாது, ஆன்மாவை கொல்ல வல்லவருக்கே அஞ்சுங்கள் என்கின்றார்.

பாவமும் அச்சமும்:-
            பாவம் நம்முடைய ஆன்மாவை கொல்கிறது. பாவம் இறையன்பு மற்றும் இறையுறவிலிருந்து நம்மை பிரிக்கிறது. இன்றைய இரண்டாம் வாசகம் மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்து மனிதனை சாவு என்னும் பயத்தில் தள்ளியது என்கிறது எனவே பாவநிலையை விட்டு அகலுவோம். தோபித்து 4:21 -ல் நாம் கடவுளுக்கு அஞ்சிப் பாவம் செய்யாமல் இருந்தால், கடவுள்முன் மிகப்பெரிய செல்வனாக வாழ்வோம் என கூறப்பட்டுள்ளது. மேலும் "ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்" என்கிறது நீமொழிகள் 1:7. பாவம் உண்மையையும் நீதியையும் பின் தள்ளுகிறது. எனவே வாழ்வில் வரும் துன்ப துயரங்களைக் கண்டு பயப்படாது, பாவத்திற்கும் பாவம் செய்வதற்கு மட்டுமே பயப்பட அழைப்பு பெறுகிறோம். இறையச்சம் நேர்மையான மற்றும் மகிழ்ச்சியான இதயத்திலிருந்து புறப்படுகின்றது. எனவேதான் இறையச்சம் இறைப்பற்றையும், இறை உறவையும் அன்பையும் மற்றும் நம்பிக்கையும் நம்மில் வளர்க்கிறது. எனவே இன்றைக்கு நாம் கொள்கின்ற இறை அச்சம் எப்பேற்பட்டதாக இருக்கின்றது? நாம் ஒருபோதும் பாவம் என்னும் குழியில் விழாமல் இருப்பதற்கு இறையச்சம் நமக்கு ஊன்று கோலாக இருக்கின்றது என்பதை நாம் உணர்கின்றோமா? பாவம் என்னை இறையன்பில் இருந்து பிரித்தெடுக்கின்றது என்பதை உணர்ந்திருக்கின்றோமா? சிந்திப்போம், இறை அச்சம் என்னும் தெய்வ பயத்தில் வளர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.