முதல் வாசகம்: திப 14: 21b-27
இரண்டாம் வாசகம்: 21: 1-5
நற்செய்தி: யோவான் 13: 31-33a, 34-35இயேசு தந்த ID Card...
இன்றைக்கு பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்லும் இளைஞர்கள் மற்றும் அலுவலகங்கள் செல்வோர் என குழந்தை முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருப்பது அடையாள அட்டை என்னும் ID Card. இது ஒருவர் யார்? அவர் எந்த பள்ளியை, கல்லூரியை, அலுவலகத்தை சார்ந்தவர் மற்றும் என்ன செய்கிறார்? என்பதை சுட்டிக் காட்டுகின்ற ஒரு அடையாளமாக இருக்கிறது. மனிதன் ஒரு நிறுவனத்தை சார்ந்தவன் என்பதற்கு இந்த அடையாளம் இன்று இன்றியமையாததாகவும் மாறிவிட்டது. அனைத்திற்கும் அடையாள அட்டையை தந்து கொண்டிருக்கின்ற மற்றும் அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்ற அடையாள சமுதாயத்தில் கிறிஸ்துவின் சீடத்துவ வாழ்விற்கும் ஒரு அடையாள அட்டை உண்டு என்பதை நினைவுபடுத்துகின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” (யோவான் 13:35) என்னும் இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தைகள் அவரது இறப்பு மற்றும் உயிர்ப்புக்கு முன்னரே அவருடைய சீடர்களாக நாம் வாழ்வதற்கு அவர் அன்பென்னும் ஒரு அடையாள அட்டையை நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியிருக்கின்றார் என்பதையும், இந்த அடையாளத்தால் நாம் இறைவனை அன்பு செய்வது மட்டுமல்லாது, நம்முடன் இருக்கின்ற சகோதர சகோதரிகளையும் அன்பு செய்து இயேசுவின் சீடர்கள் என்னும் அடையாளத்தில் நிலைத்திருக்க அழைப்பு பெறுகின்றோம். யோவான் எழுதிய நற்செய்தி இரண்டு பகுதிகளை கொண்டிருக்கின்றது. 1 முதல் 12 வரை உள்ள அதிகாரங்கள் முதல் பகுதியாகவும், 13 முதல் 21 வரை உள்ள அதிகாரங்கள் இரண்டாவது பகுதியாகவும் தரப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் இயேசுவின் புதுமைகள் அரும் அடையாளங்கள் என்ற பெயரில் தரப்பட்டிருக்கிறது, இயேசு ஒவ்வொரு அடையாளத்தையும் செய்து இறையாட்சியை அறிவிப்பதை பார்க்கின்றோம். எடுத்துக்காட்டாக ஆறாவது அதிகாரத்தில் இயேசு நற்கருணையை பற்றி எடுத்துரைப்பதற்கு முன்பாக ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் அடையாளம் நிகழ்வதை பார்க்கின்றோம். இவ்வாறாக முதல் 12 அதிகாரத்தில் இயேசுவின் அடையாளங்களை கொடுத்த நற்செய்தியாளர் மீதமுள்ள அதிகாரங்களில் இயேசு நமக்கு நிரந்தரமாக தரவிருக்கின்ற அன்பின் அடையாளத்தை பற்றியும், இந்த அடையாளம் அவரது இறப்பு மற்றும் உயிர்ப்பினால் நிகழவிருக்கின்றது என்பதையும் எடுத்துரைக்கின்றார்,
இதைத்தான் இன்றைய நற்செய்தியும் நமக்கு எடுத்தியம்புகிறது. இறைமகன் இயேசு கிறிஸ்து அன்பு என்னும் புதிய கட்டளையை தருகின்றார். இதில் அப்படியென்ன புதியது இருக்கின்றது என சிந்திக்கும் பொழுது பழைய ஏற்பாட்டில் "உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" (லேவியர் 19:18) என்னும் கட்டளையை, புதியதாக "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" (யோவான் 13:34) என்கின்றார். பழைய ஏற்பாட்டில் அன்பிற்கான அளவுகோலாக "உன் மீது அன்பு கூர்வது போல..." என நம்மையே கொடுக்கப்பட்டிருந்தது. புதிய ஏற்பாட்டில் அன்பின் அளவு கோலாய் "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல..." என இயேசு தன்னையே தருகிறார். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் சாதித்தவர்களை தான் பின்பற்ற விரும்புகின்றோம், இயேசு அன்பில் சாதித்தவர்.
பழைய ஏற்பாட்டில் இயற்கையில் அடையாளத்தை வெளிப்படுத்திய இறைவன், பின்பு இஸ்ராயேல் மக்களின் மீது தனது அன்பை அடையாளமாய் வெளிப்படுத்த இறைவாக்கினர்களையும், நீதித்தலைவர்களையும் மற்றும் அரசர்களையும் அனுப்பி, புதிய ஏற்பாட்டில் தன் அன்பின் மிகுதியால் "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" (மத்தேயு 3:17) என தன் அன்பின் மகனையே இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தார். அன்பாய் மண்ணுலகில் மனிதனாக உருவெடுத்து, அன்பை விதைத்து, அன்பை வாழ்ந்து காட்டி மற்றும் தனது அன்பின் மிகுதியால் தன்னுயிரையும் தந்து மீண்டும் அன்பையே நமக்கு அடையாளமாக விட்டுச் சென்ற இயேசு அன்பென்னும் அடையாள அட்டையை அணிந்து கொண்டு அன்பின் சமுகத்தை உருவாக்க அழைப்பு தருகிறார். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் "புதிய எருசலேம்" என்னும் அன்பின் அடையாளமும், முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் அன்பினால் கட்டியெழுப்பிய தொடக்க "திருஅவை" என்னும் அடையாளமும் அன்பு சமுதாயத்தின் எடுத்துக்காட்டாக நமக்கு தரப்பட்டிருக்கிறது. "நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ (மத்தேயு 25: 42-43) என இயேசு கொடுத்த அடையாளத்தை பயன்படுத்தி நம் சகோதர சகோதரிகளை அன்பு செய்து வாழாமலிருந்த தருணங்களுக்கு ஒரு நாள் பதில் கொடுக்க வேண்டும். இந்த மனித சமுதாயம் என்று அன்பின் சமுதாயமாக மாறுகிறதோ, அன்று வேதனைகள் குறையும், ஆறுதல் கிடைக்கும், நம்பிக்கை பிறக்கும் மற்றும் புதுவாழ்வு மலரும்.
நம் எல்லோருக்கும் தேளை காப்பாற்றிய குருவின் கதை நன்றாகவே தெரியும். ஆற்றங்கரைக்கு சென்ற குரு ஆற்றின் ஓரத்திலே தண்ணீரில் தத்தளித்த தேளை கண்டு அதை காப்பாற்ற தூக்குகிறார். அதை தூக்கும் பொழுது தேளானது குருவின் கையில் கொட்டியது, வலியால் அவர் அதை தூக்கிப் போடுகிறார், அது மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கிறது. சிறிது நேரம் கழித்து அதை காப்பாற்ற குரு தேளை பிடித்து தூக்குகிறார், அது குருவின் கையில் மீண்டும் கொட்டியது. இதைப் பார்த்த அவருடைய சீடர்கள் குருவே தேள் தான் உங்களை கொட்டுகிறதே, ஏன் நீங்கள் அதை காப்பாற்றுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு குரு கொட்டுவது தேளின் குணம், காப்பாற்றுவது எனது குணம் என்று கூறினார். யார் எப்படியிருந்தாலும் கிறிஸ்தவர்களின் அதாவது கிறிஸ்தவ சீடர்களின் குணம் அன்பு செய்வதாகும். இன்றைக்கும் திருஅவையில் திருவருட்சாதனங்கள், திருப்பலி, ஜெபமாலை மற்றும் திருவழிபாடுகள் என அனைத்தின் வழியாகவும் இறைவன் நமக்குத் தந்திருக்கும் அன்பென்னும் அடையாள அட்டையை நாம் உணர்ந்து அதை நம் சகோதர சகோதரிகளிடத்தில் வெளிப்படுத்த, உண்மை கிறிஸ்தவ மற்றும் சீடத்துவ வாழ்வை வாழ வழிகள் உண்டு. இதை நாம் அன்றாட வாழ்க்கையில் முறையாக பயன்படுத்தி, நிலையாய் செயல்படுத்தி, வளமாய் வாழ முயற்சிப்போம்.
அன்புடன்:-
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...
புத்தம் புதிய காணிக்கைப் பாடல்
(கேட்டு மகிழுங்கள்)
https://youtu.be/NKp1EXTZLWw