முதல் வாசகம்: சபை உரையாளர் 1:2, 2:21-23
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 3:1-5, 9-11
நற்செய்தி: லூக்கா 12:13-21
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 3:1-5, 9-11
நற்செய்தி: லூக்கா 12:13-21
நமது பற்று எங்கே?
(பற்றற்ற, பகிரும் & பரலோக வாழ்வு)
அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவன் ஆசை, அதற்காக மிகவும் முயற்சித்து ஒரு சிறிய கடையை ஆரம்பித்தான். தனது நேரம் முழுவதும் அந்தக் கடையிலிருந்து பணம் சம்பாதிப்பதற்காகவே செலவழித்தான். ஒரு நாள் திடீரென்று அவனுக்கு உடல்நிலை சரியில்லை, அவனைச் சுற்றி குடும்பமே இருந்தது. கண்விழித்து மிகவும் கஷ்டப்பட்டு பொறுமையாக வாயை திறந்து, என்னுடைய மனைவி எங்கே? என்று கேட்டான், அவனது மனைவியோ இதோ இங்கே இருக்கிறேன் என்றாள். உடனடியாக என்னுடைய பிள்ளைகள் எங்கே? என்று கேட்டான், இதோ இங்கு இருக்கிறோம் அப்பா என்றார்கள். என்னுடைய தம்பி எங்கே? என்று கேட்டான், இதோ இங்கே இருக்கிறேன் அண்ணா, கவலைப்படாதீர்கள் எல்லோரும் உம்மை சுற்றி தான் இருக்கிறோம் என்று கூறினான். அதற்கு அவனோ அப்படியென்றால் கடையில் யாரும் இல்லையா! இன்றைக்கு வியாபாரம் நடக்காதா! பணம் கிடைக்காதா! என்று கேட்டானாம். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும், பணம் பத்தும் செய்யும், பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, பணம் குலமாகும் பசி கறியாகும் என எண்ணற்ற பழமொழிகள் பணத்தின் மீது இவ்வுலகிற்கு இருக்கும் ஆசையை எடுத்துரைக்கிறது. "செல்வம் எப்போதும் நிலைத்திராது; சொத்து தலைமுறை தலைமுறையாக நீடித்திருப்பதில்லை" (நீதிமொழிகள் 27:24) என்னும் இறைவார்த்தைக்கேற்ப பணம் தான் எல்லாமென்று இன்று மனித வாழ்வு பயணித்துக் கொண்டிருக்கிறது. நிலையற்ற பணத்தின் மீது ஆசை கொள்ளாமல் நிலையான இறைவனில் இணைந்திருக்க இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு அழைப்புத் தருகிறது.
1. பற்றற்ற வாழ்வு
2. பகிரும் வாழ்வு
3. பரலோக வாழ்வு
என இத்தகைய மூன்று விதமான அழைப்புகளுக்கு ஏற்றவாறு நமது கிறிஸ்தவ வாழ்வை அமைத்து கொள்ள அழைப்பு பெறுகின்றோம்.
இன்றைய முதல் வாசகத்தில் "வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்." (சபை உரையாளர் 1:2) ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே (சபை உரையாளர் 2:21). ஆக நாம் ஆசைப்பட்டு சேர்க்கின்ற பணமும் மற்றும் சொத்தும் நம்முடன் இறுதிவரை வருவதில்லை, எனவே நிலையற்றவையின் மீது பற்று கொண்டு வாழ்வது பயனற்றதாகும். அள்ள அள்ள குறையாதது அட்சய பாத்திரம் என்று சொல்வார்கள், அதுபோல போட போட நிரம்பாதது தான் பேராசை. இதுதான் நம்மை பணம், பொருள், பதவி மற்றும் பட்டம் என அனைத்தின் பின்னும் ஓட தூண்டுகிறது , நம் மன நிம்மதியை சீர்குலைத்து, உறவுகளை அழிக்க செய்கிறது. எனவே பணம் மற்றும் பொருட்களின் மீது பற்றற்ற வாழ்வை வாழ்வோம். ஊதாரி மைந்தன் உவமையில் இளைய மகன் தந்தையை நோக்கி, "அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்" (லூக்கா 15:12) என்று கேட்டது சொத்தின் மீது அவன் கொண்ட பற்றினை காட்டுகிறது. ஆனால் அப்பற்று அவனுக்கு இறுதி வரை கைகொடுக்கவில்லை. இதைத் தான் "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?" (மத்தேயு 16:26) என்கிறார் இறைமகன் இயேசு. எனவே “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (லூக்கா 12:15) என்னும் இன்றைய நற்செய்திக்கு ஏற்ப, இவ்வுலகின் பணம், பொருள் மற்றும் சொத்துக்கள் மீது பற்றற்ற ஒரு வாழ்வை வாழ்வோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லுகின்ற உவமையில் வரும் செல்வனின் நிலம் நன்றாய் விளைந்தது. ஆனால் அவன் அந்த விளைச்சல்,
1. இறைவனது கொடை 2. பிறரது உழைப்பின் பலன்3. பகிரப்பட வேண்டிய பரிசு
என்பவற்றை அறவே மறந்து விடுகிறான். உண்டு, குடித்து மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறான். இவ்வுலகில் நாம் பெறுகின்ற அனைத்தும் இறைவன் நமக்குத் தருகின்ற அன்பு கொடை. அதை நாம் பிறரோடு பகிர்ந்து வாழ முயல வேண்டும். இயேசுவை பின்பற்ற விரும்பிய இளைஞரிடம், “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று கூறினார் (மாற்கு 10:21). இயேசுவை பின்பற்றும் கிறிஸ்தவ வாழ்வை வாழ, நமது வாழ்வு பிறரோடு பகிரப்பட வேண்டியதாக அமைய வேண்டும். இயேசு இவ்வுலக மீட்பிற்காக தன்னையே அப்ப வடிவில் பகிர்ந்தளித்தார். நாமும் இறைவன் நமக்கு தந்திருக்கின்ற திறமைகளை, அறிவை மற்றும் திறன்களை பிறரோடு பகிர்ந்து வாழ்வோம். "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு 25:40). ஆக, பிறரோடு நாம் பகிர்ந்து கொள்ளுகின்ற ஒவ்வொன்றும் நாம் இறைவனுக்கு செய்வதாக அமைகிறது. இந்த "உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது" (1 திமொத்தேயு 6:7) எனவே நமது வாழ்வை அன்பு செயல்களால் அர்த்தமுள்ளதாக்குவோம்.
3. பரலோக வாழ்வு
இன்றைய இரண்டாம் வாசகம் "இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்" (கொலோசையர் 3:2) என்கிறது. அப்படியெனில் இந்த உலகத்தில் நாம் சேர்த்து வைக்கின்ற பணமும் மற்றும் சொத்துகளும் இவ்வுலகை சார்ந்தவை. இவை மேலுலக வாழ்விற்கு ஒருநாளும் பயன்படுவதில்லை. எனவே, இவ்வுலகை சார்ந்தவை பற்றி எண்ணாமல் மேலுலக வாழ்வாம் பரலோக வாழ்வை பற்றி எண்ணுவோம். அதாவது இறைவன் தரும் இறையாட்சியில் நுழைவதற்கு நம்மை தயாரிப்போம். "மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை" (மத்தேயு 6:19,20). இந்த மண்ணுலக செல்வம் அனைத்தும் ஒரு நாள் அழிந்து போகும். ஆனால் விண்ணுலக வாழ்வு என்பது இறைவன் தரும் நிலையான வாழ்வு. எனவே தூய பவுல் அடிகளார் கூறுவதுபோல "உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்" (பிலிப்பியர் 3:8). எனவே இவ்வுலகின் பணத்தையும் மற்றும் பொருளையும் குப்பையென கருதி நிலையான செல்வமாம் இயேசுவை நமதாக்கி விண்ணுலக வாழ்வை பெற்றுக் கொள்வோம்.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. (331)
என நிலையற்றவைகளாக இருக்கும் இவ்வுலக பொருட்களை நிலையானவை என நம்புகின்ற நமது அறியாமையை பற்றி திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார். "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத்தேயு 6:24) என்பதை அறிந்து செல்வத்தின் மீது பற்று கொள்ளாது, அதை பிறரோடு பகிர்ந்து இறைவன் மீது பற்று கொண்டு வாழ்வோம்.
அன்புடன்:-
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)