பொதுக்காலம் 7-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
முதல் வாசகம்: 1 சாமுவேல் 26: 2, 7-9, 12-13, 22-23
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 15: 45-49
நற்செய்தி: லூக்கா 6: 27-38
பகைவரை அன்பு செய்வது சாத்தியமா?
1981-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் தேதி வத்திக்கான் நகர் புனித பேதுரு சதுக்கத்தில், அன்றைய திருத்தந்தையும், இன்றைய திருஅவையின் புனிதருமான இரண்டாம் ஜான்பால் அவர்கள் மக்களை சந்திக்க வந்தபோது, மெகமத் அலி அகா என்பவரால் சுடப்பட்டு காயமுற்றார். அவர் உடலிலிருந்து பீறிட்டு வெளியான இரத்தமும், அவரில் ஏற்பட்ட வலியும் அவரை சாவின் விளிம்புக்கு தள்ளிச் சென்றது. திருத்தந்தையை கொல்ல நினைத்த மெகமத் அலி அகாவுக்கு இத்தாலி நாட்டின் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உடனடியாக வழங்கி தீர்ப்பளித்தது. மருத்துவ சிகிச்சையின் உதவியால் மீண்டும் உயிர் பெற்று நலமாகி வந்த திருத்தந்தை, சிறைச்சாலை சென்று, மெகமத் அலி அகாவை சந்தித்து, அவரை மன்னித்து, அரசுக்கு அவனை விடுவிக்க பரிந்துரை கடிதமும் எழுதினார். தன்னைக் கொல்ல நினைத்த தனது பகைவரையும் மன்னித்து அன்பு செய்த அன்றைய திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கினார். இன்று இந்த புனிதரை போல நாமும் நமது வாழ்க்கையில் நமது பகைவரையும் அன்பு செய்து வாழ அழைக்க பெறுகின்றோம். இன்றைய காலகட்டத்தில் நமக்கு தீங்கீழைக்கும் நமது பகைவரை மன்னிப்பது சாத்தியமா? வாருங்கள் விடையளிக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
பழைய ஏற்பாட்டில் பகைவரிடம் அன்பு
பழைய ஏற்பாட்டில் அடுத்திருப்பவரிடம் அன்பு’ மற்றும் ‘பகைவரிடம் வெறுப்பு’ என்னும் நிலைப்பாடு இருந்தது (லேவி 19: 18). ஆனால், விண்ணகத் தந்தை தன்னை வெறுத்து, பாவத்தால் பிரிந்த இஸ்ராயேல் மக்களை ஒவ்வொரு முறையும் அன்பு செய்தார். தன் அன்பை பல்வேறு விதத்தில், பலர் வழியாக தொடர்ந்து காட்டினார். இன்றைய முதல் வாசகத்தில் தாவீது அபிசாயிடமும், இறைவனிடமும் தன்னை எதிரியாக நினைத்த சவுலை கொல்லவில்லை என எடுத்துரைக்கின்றார், இது அவரது அன்பை காட்டுகிறது. நாம் பகைவர்களிடம் அன்பு கூறுகின்ற பொழுது நம் விண்ணகத் தந்தையைப் போன்று நாமும் நிறைவுள்ளவர்களாக இருப்போம். இதைத்தான் இன்றைய நற்செய்தியும் "உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" என்று பகைவரை அன்பு செய்வதை சாத்தியமாக்குகிறது.
இயேசுவின் வாழ்வில் பகைவரிடம் அன்பு
வெறுப்போருக்கு நன்மை, சபிப்போருக்கு ஆசி, இகழ்ந்து பேசுவோருக்காக இறைவேண்டல், ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தை காட்டுதல், மேலுடையை எடுப்பவருக்கு அங்கியையும் எடுத்து கொள்ள செய்தல் மற்றும் எடுக்கும் பொருளை மீண்டும் கேட்காதிருத்தல் என நமது அன்றாட வாழ்வில் கொஞ்சம் கூட சாத்தியமே இல்லாதவற்றை கூறுகிறது இன்றைய நற்செய்தி வாசகம் என்று நாம் நினைத்தாலும், இவையனைத்தும் தனது வாழ்வில் வாழ்ந்து காட்டியவரின் வார்த்தைகள் என்பதை நாம் மறந்து விட கூடாது. அதுவே பகைவரை அன்பு செய்வதை சாத்தியமாக்கி விடுகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து வார்த்தையிலும், போதனையிலும் மட்டுமல்ல வாழ்க்கையிலும் தன் அன்பை வெளிப்படுத்தினார். இயேசு தம்மை சுற்றியிருந்த திரளான மக்களிடம், ‘நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்’ என்றார். (மத்தேயு 5:23 - 24) இயேசு தனக்கு துரோகம் செய்தவரிடம் அன்பை காட்டினார்: தம் பன்னிரு சீடர்களில் ஒருவரான யூதாசு ஆண்டவர் இயேசுவிடம் வந்து, ‘ரபி வாழ்க’ என்று சொல்லி அவரை முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்த பொழுது, அவர் யூதாசிடம், ‘தோழா, எதற்காக வந்தாய்?’ என்று அதே மாறாத பாசப்பிணைப்புடனே அழைக்கின்றார். (மத்தேயு 26:50) அவரை கைது செய்ய வந்தவரிடமும் அன்பை வெளிப்படுத்தினார்: யூத சமய குருக்களும், மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் ஆண்டவர் இயேசுவைக் கைது செய்ய வந்த பொழுது, அவரோடு இருந்த பேதுரு தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக்காதைத் துண்டித்தார். அப்பொழுது ஆண்டவர் அவர்களைப் பார்த்து, ‘விடுங்கள் போதும்’ என்று கூறி அந்த பணியாளரின் காதைத்தொட்டு நலமாக்கினார். ஆண்டவர் இயேசுவைப் பிடித்து அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள். அவரைப் பழித் துரைத்தார்கள், காரி உமிழ்ந்தார்கள், சாட்டையால் அடித்தார்கள், முள் முடி சூட்டினார்கள். இறுதியாக சிலுவையிலே அறைந்தார்கள். அப்போது இயேசு, ‘தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை’ என்றார். தனக்கு தீங்கீழைக்கும் பகைவரையும் மன்னிக்கும் அன்பு நம் இயேசுவின் அன்பு. இதை நமது வாழ்விலும் கடைப்பிடித்து வாழ இன்றைய நற்செய்தியில் "உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக " என்கிறார்.
திருஅவையில் பகைவரிடம் அன்பு
திருஅவையிலும் இறை மைந்தன் இயேசுவைப் பின்பற்றி எண்ணற்றோர் தனக்கு தீங்கு இழைத்தோரை மன்னித்து அவர்கள் மீது அன்பு காட்டியதை நாம் அறிவோம். 1890 ஆம் ஆண்டு இத்தாலியில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் மரிய கொரற்றி. இவரது பதினோராவது வயதில் இவர் வீட்டு அருகிலிருந்த அலெக்ஸாண்டரோ என்பவன் இவள் மீது ஆசை கொண்டு தவறாக நடக்க முயன்ற போது, மரிய கொரற்றி அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதையறிந்து கத்தியால் 14 முறை குத்திக் கொன்றான். அவள் இறக்கும் தருவாயிலும் தன்னை குத்திக்கொன்ற அலெக்சாண்டரை மன்னித்ததும், பின்பு அவன் சிறையிலிருந்த போது அவன் முன் தோன்றி லில்லி மலர்களை கொடுத்ததும் பகைவரை அன்பு செய்வதன் மாபெரும் எடுத்துக்காட்டாக அமைகிறது. 1954-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் கொச்சியில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து துறவற சபையில் அருட்சகோதரியாக வார்த்தைப்பாடு அளித்து வட இந்தியாவில் தனது இறைப்பணியை ஆற்றி வந்தவர் அருட்சகோதரி ராணி மரியா. 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி வட இந்தியாவில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த அருட்சகோதரியை இழுத்து கத்தியால் குத்தி சமுந்தர் சிங் அவரை கொன்றார். இச்சகோதரியின் மனநிலையை அறிந்து, அவர் விருப்பத்திற்கேற்ப அவருடைய குடும்பத்தாரும், சபையைச் சார்ந்த சகோதரிகளும் அவரை மன்னித்து பகைவர் மீது அன்பு செலுத்திய இந்நிகழ்வு நாம் ஒவ்வொருவரும் நன்றாக அறிந்ததே. அதன் பிறகு திருஅவையானது அருட்சகோதரி ராணி மரியாவுக்கு முத்திப்பேறு பட்டம் வழங்கி தூய நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், புனித மரியா கொரற்றி, அன்னை தெரேசா மற்றும் அருட்சகோதரி ராணி மரியா என இன்னும் எண்ணற்றோர் திருஅவையில் பகைவரை அன்பு செய்வதை சாத்தியமாக்கி சென்றிருக்கிறார்கள்.
சமுதாயத்தில் பகைவரிடம் அன்பு
1999-ம் ஆண்டு சனவரி மாதம் ஒரிஸாவில் தன் கணவர் கிரகாம் ஸ்டெயின்ஸையும், பிலிப் மற்றும் திமொத்தி என்ற தன் இரு மகன்களையும் உயிரோடு எரித்துக் கொன்ற தாரா சிங்கின் மரண தண்டனையை இரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்ட கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ் பற்றிய செய்திகளை நாம் அறிவோம். மன்னிப்பில் மட்டுமே நம்பிக்கை வளரும் என்று பகைவரையும் அன்பு செய்து வாழ்ந்த கிளாடிஸ் சொன்னதும் நமக்கு நினைவிருக்கலாம். நம் வாழ்வில் எதிரிகளையும் மற்றும் எதிர்ப்புகளையும் எவ்வாறு எதிர்கொள்வது, எப்படி நமக்குச் சாதகமாக்கிக்கொள்வது என்பதற்கான யுக்தியை இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்கிறார். எதிரியை, அல்லது பகைவனைப் பகைவனாகக் காணமுற்பட்டால், அந்த பகைக்குள் நாமே மூழ்க நேரிடும். இயேசு சொல்வதுபோல பகைவனையும் அன்பு செய்யவும் அவனுக்காகச் செபிக்கவும் பழகிக்கொண்டால், பகையை வெல்ல முடியும். பகைவனை வென்ற மகிழ்வில் வாழலாம். 'உனது பட்டரையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன். ஏனென்றால் என்னை எதிரியாக, நீ நினைக்கிறாயே தவிற, உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை' என்னும் பெரிய மனிதரின் வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிய வார்த்தைகள். இதை நாமும் நமது வார்த்தையாக்கி வாழ்வோம். மன்னிப்பதால், மறு கன்னத்தைக் காட்டுவதால் வளரும் நம்பிக்கையை நாமும் வளர்த்துக் கொள்ள முயல்வோம். நாம் மறு கன்னத்தைக் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களை மனம் மாற்றும் கனிவும், துணிவும் நமக்கு வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.
இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
அன்புடன்
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில்/ஆடியோவில் காண...