Friday, July 17, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 19-07-2020 - பொதுக்காலம் 16ஆம் வாரம் ( ஆண்டு- A)

பொதுக்காலம் 16ஆம் வாரம்

( ஆண்டு- A)

19-07-2020

ஞாயிற்றுக்கிழமை

 

 


எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாய் ?

 

 

       அவன் பெயர் தமிழ்ச்செல்வன். கால்பந்து என்றால் அவனுக்கு மிகவும் விருப்பம்.   எப்படியாவது ஒரு பெரிய கால்பந்து வீரராக மாற வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. ஆனால், அதற்கு முறையாக பயிற்சி தர அவனுக்கு யாருமில்லை. இதை அறிந்த, அவனுடைய வீட்டிற்கு வந்த, அவனுடைய மாமா  உன்னை மிகப் பெரிய கால்பந்து வீரராக மாற்றி காட்டுவேன் என்று அவனுக்கு வாக்கு கொடுத்து, அவனை ஒரு மிகப் பெரிய கால்பந்து பயிற்சியாளரிடம் பயிற்சிக்கு சேர்த்துவிட்டார். இவர் இரண்டு மாதங்கள் கழித்து  தமிழ்ச்செல்வனை சந்தித்த போது, எப்படி உன்னுடைய கால்பந்து பயிற்சி சென்று கொண்டிருக்கின்றது என்று கேட்டார். அதற்கு அவனோ, மிகவும் சோகமாக மோசம் என்று கூறினான். உடனே இவருக்கு ஒரு ஆச்சரியம், நான் உன்னை ஒரு மிகப் பெரிய கால்பந்து பயிற்சியாளரிடம் சேர்த்துவிட்டேன். ஏன் என்ன ஆயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்  நாங்கள் விளையாடுகின்ற பொழுதும், பயிற்சி எடுக்கின்ற பொழுதும், மைதானத்தை சுற்றி ஒலிபெருக்கியின் வழியாக இவர் பாடல்களை  போடுகின்றார். இது கால்பந்து பயிற்சியா? அல்லது நடனப்பயிற்சியா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. என்னுடைய ஆசை எல்லாம் போய்விட்டது என்று கூறினான். உடனே  அவனுடைய மாமா கால்பந்து பயிற்சியாளரை சந்தித்து   இதைப் பற்றி வினவ, கால்பந்து பயிற்சியாளர்  இதுதான்  மைதான உளவியல்(Ground Psychology) என்று கூறினாராம்.

      வீரர்கள் கால்பந்தை விளையாடுகின்ற போது, கால்பந்து மைதானத்தை சுற்றி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதே வேளையில் கால்பந்து மைதானத்தின் ஒரு ஓரத்தில் பயிற்சியாளரான நானும் சத்தம் போட்டுக் கொண்டே இருப்பேன். விளையாடுகின்ற விளையாட்டு வீரர்கள் ரசிகர்களுடைய சத்தத்தைக் கேட்டால் அவர்கள் வெற்றி அடைய மாட்டார்கள். அதேவேளையில் மூலையிலே தனியாக சத்தமிட்டுக் கொண்டு இருக்கின்ற என்னுடைய சத்தத்தை  கேட்கின்ற பொழுது மட்டுமே அவர்கள் வெற்றிக்கொள்ள முடியும், இதுதான் மைதான உளவியல் என்று கூறுவார்கள். எந்த ஒரு சத்தத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்படுதல்.

     நம்முடைய வாழ்க்கையிலும் நாம் பயணிக்கின்ற பொழுது பலவிதமான சத்தங்களை நாம் கேட்கின்றோம். நம்மை உற்சாகப்படுத்துகின்ற சத்தங்கள், நம்மை புகழ்கின்ற சத்தங்கள், நம்மை வாழ்க்கையில் முன்னேற விடாமல் ஒதுக்கும்  சத்தங்கள் என பல சத்தங்களை நாம் கேட்கின்றோம். ஆனால் எத்தகைய ஒரு சத்தத்திற்கு  நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க இன்றைய இறைவார்த்தை வழிபாடு அழைப்பு தருகிறது. நம்முடைய வாழ்க்கை எல்லாம் கலந்த ஒரு கலவையாக இருக்கிறது. அதில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சிந்தித்து பார்க்க அழைப்பு பெறுகிறோம்.

பயிர்களும் களைகளும்:

        இன்றைய நற்செய்தியில் பயிர்களும் களைகளும் சேர்ந்து ஒரு நிலத்தில் விளைந்து இருப்பதைப் பார்க்கின்றோம். பகைவருடைய வேலையாக இருந்தாலும், களைகளும், பயிர்களும் உள்ள இடத்தில் பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற விவசாயியை இங்கு நாம் பார்க்கின்றோம்உடனடியாக களைகளை எடுத்து விடலாமா? என்ற கேள்விக்கு, இப்போது களைகளை எடுத்தால் கைகளோடு சேர்த்து கோதுமையைப் அழிக்க நேரிடும், ஆகவே அதை விட்டு விடுங்கள் என்று பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கிறோம். பின் இறுதியாக களைகளை பறித்து எடுத்து அதனை எரிக்கவும், கோதுமை அறுவடை செய்ததை களஞ்சியத்திற்கு எடுத்து செல்வோம் என மீண்டுமாக கோதுமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நாம் பார்க்கின்றோம்.

பயிர்கள் என்ற நற்குணங்களும்-களைகள் என்ற தீய குணங்களும்:

        பயிர்களும் களைகளும் இணைந்து கலவையாக இருக்கின்ற நம்முடைய வாழ்க்கையிலே நாம் பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றவர்களாக இருக்கின்றோமா? அல்லது களைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றவராக இருக்கின்றோமா? பயிர்கள் என்ற நற்குணங்களும், களைகள் என்ற தீய குணங்களும் உண்டு. நம்முடைய வாழ்க்கையிலே  நன்மையும் உண்டு தீமையும் உண்டு, மகிழ்ச்சியும் உண்டு  துக்கமும் உண்டு. எதற்கு என்னுடைய வாழ்க்கையில் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்நேர்மறை எண்ணங்களும் உண்டு, எதிர்மறையான எண்ணங்களும் உண்டு, நற்செயல்களும் உண்டு, தீய செயல்களும்    உண்டு. எதற்கு நான் என் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்கிறேன்?

 இறைச்சித்தமா? சுயச்சித்தமா?

        விவிலியத்தின் தொடக்கத்தில் இறைவன் மனிதனை படைத்தபோது ஆதாமும் ஏவாளும் இறைச் சித்தமாக தோட்டத்தின் பல மரங்கள், பல பழங்கள் இருந்தாலும் சுய சித்தமான நடுவில் இருந்த மரத்தின் கனியை உண்டார்கள். இது அவர்களுடைய ஆசை, இறை சித்தத்தை மறந்து, சுய சித்ததிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இஸ்ரயேல் மக்கள் இறைவன் தங்களை அழைத்து இருக்கின்றார். இறைவன் தங்களை காத்து வழிநடத்தி வந்து, கொண்டிருக்கின்றார் என்பதை மறந்து மோயீசன் மலை ஏறி இறைவனை காண சென்றவுடன் இறை சித்தத்தை மறந்து, சுய சித்தத்தில்  தங்களுடைய நகைகளைப் இட்டு பொற்கன்றை செய்வதை பார்க்கின்றோம் இறைவனை மறந்து சுய ஆசைப்பட்டார்கள்.

           தாவீது அரசன் இறைவனை மறந்து, தன்னுடைய சுய ஆசைக்காக பிறர் மனைவிமீது ஆசை கொண்டான். இங்கு இறைசித்ததை மறந்து, சுயசித்தம் வெளிப்படுவதை பார்க்கின்றோம். பரிசேயர்களும் சட்டங்கள் என்ற சுய நலத்துக்காக, சுய சித்தத்தோடு வாழ்ந்தார்கள். அங்கு இவர்கள் இறைவனின் சித்தத்தை முழுவதுமாக மறந்தார்கள். இயேசுவோடு இருந்து வாழ்ந்த யூதாஸ்இஸ்காரியோத்து வெறும் முப்பது வெள்ளிக்காசு என்னும் ஆசைக்காக சுய சித்தத்தோடு  நடந்ததை பார்க்கின்றோம்.

      விவிலியத்தில் பலரும் சுய சித்தத்திற்கு உட்படாமல் இறைசித்தத்திற்கு பணிந்து நடந்ததை நாம் பார்க்கிறோம். நோவா  இறை சித்தத்திற்கு பணிந்து பெட்டகத்தை செய்வதை பார்க்கின்றோம். ஆபிரகாம் இறைவனுடைய அழைப்பைக் கேட்டு இறைவன் காட்டிய வழியில் ஏன் தன்னுடைய ஒரே மகனான ஈசாக்கை பலி கொடுக்கிற அளவுக்கு, தன்னலம் பாராமல் இறை சித்தத்திற்கு பணிந்ததை பார்க்கின்றோம். மோயீசன் தன்னுடைய தள்ளாத, முடியாத காலத்திலும் இறைவனுக்குப் பணிந்து இறை சித்ததோடு வாழ்ந்ததை பார்க்கின்றோம். அன்னை மரியாள் "இதோ ஆண்டவருடைய அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்" என்று தன்னை முழுவதுமாக  இறைவனுக்குப் பணிந்து  இறை சித்தத்திற்கு உட்படுத்தியதை பார்க்கின்றோம். இறுதியாக, இறைமகன் இயேசு கிறிஸ்துவே தன்னுடைய தந்தையின் விருப்பத்திற்கேற்ப இந்த மண்ணுலகிற்கு வந்து, தன்னை முழுவதுமாக கல்வாரியில் அர்ப்பணிப்பதை நாம் பார்த்தோம். இது இவர் தன்னை முழுவதுமாக இறைசித்ததிற்கு, இறை விருப்பத்திற்க்கு அர்ப்பணித்ததன் அடையாளமாக இருக்கின்றது.

         பயிர் என்னும் நற்குணங்கள் நம்மில், நம்முடைய வாழ்க்கையில்   அறிந்தும் அறியாமலும் இயல்பாகவே இருக்கின்றது. நம்மிடம் இருக்கின்ற அன்பு செய்தல், உதவுதல், பாசம், நட்பு, பரிவு என்னும் பல நற்குணங்கள் பயிரை போல நம்மில் இருக்கின்றது. அதேவேளையில் களையை போல, நாம் அறிந்தோ அறியாமலோ, நம்மில் சில தீய குணங்களும் இருக்கின்றது. பொறாமை, பிறரை இகழ்ந்து பேசுதல் என எண்ணற்ற தீய குணங்களும் நம்மில் களையாக மண்டிக் கிடக்கிறதுநமது வாழ்க்கையில் பயிர் என்னும் நற்குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா அல்லது களைகளாக நம்மிலே வளர்ந்து வருகின்ற தீய குணங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோமா?. நற்செய்தியில்  பார்க்கின்ற விவசாயியை போல, நற்குணங்களுக்கு மத்தியில் இருக்கின்ற தீயகுணங்களை விட்டுவிட்டு பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு போதும் நம்முடைய தீய குணங்கள் நற்குணங்களான  பயிர்களை, கெடுக்காத அளவிற்கு நாம் முறையாக செயல்பட நமக்கு அழைப்பு தருகின்றது

 கடுகளவு முக்கியத்துவம்: 

        நமது வாழ்க்கையில் இறை சித்தமும் சுய சித்தமும், நற்குணங்களும் தீய குணங்களும் நன்மையும் தீமையும், மகிழ்ச்சியும் துக்கமும் என எல்லாம் கலந்து கிடந்தாலும், எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம்? எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சிந்திப்போம். கடுகளவு முக்கியத்துவம் நாம் கொடுத்தால்கூட பயிர் என்னும் நற்குணங்கள் நம்மில் மலரும். சிறிதளவு புளிப்பு மாவு மூன்று மரக்கால் முழுவதும் இருந்த மாவை புளிப்பேற செய்திருக்கிறது. சிறிய  கடுகு விதை, பெரிய பறவைகள் வந்து தங்கும் அளவுக்கு, பெரிய மரமாக வளர்ந்து இருக்கிறது. நமது வாழ்க்கையில் நாம் கொடுக்கின்ற சிறிதளவு முக்கியத்துவம், நம்முடைய பயிர் என்னும் நற்குணங்களை இறை சித்தத்தில்  மென்மேலும் வளர செய்யும்

      ஆண்டவரே உம்மை தவிர வேறு கடவுள் இல்லை என்று இன்றைய முதல் வாசகமும், உம் தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நம்மோடு துணை நிற்கின்றார் என இன்றைய இரண்டாம் வாசகமும் இறை துணை எப்போதும் நம்மோடு இருக்கின்றது என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறது.

        இறைத்துணையோடு  நாம் நமது வாழ்க்கையில் பயிர் என்னும் நற்குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகஅதிலும் அவைளுக்கு கடுகளவு முக்கியத்துவமாக கொடுப்பவர்களாக மாற இறையருளை வேண்டி மன்றாடுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.













Fr. குழந்தை யேசு ராஜன் CMF

 கும்பகோணம்.