Saturday, August 6, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 19-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 07 -08-2021- ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 18: 6-9
இரண்டாம் வாசகம்:
எபிரேயர்  11: 1-2, 8-19
நற்செய்தி: லூக்கா 12:32-48

பேறுபெற்றவர்களாக வாழ...
(தயாரிப்பு - காத்திருப்பு - விழிப்பு)

அகில உலக 44-வது சதுரங்க போட்டியானது நமது இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டினுடைய தலைநகரமான சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிவோம். இதற்காக ஏறக்குறைய 180 நாடுகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கெடுப்பதற்கு வந்திருக்கின்றார்கள். இவர்களில் பலர் கொடுத்த தொலைக்காட்சிப் பேட்டிகளில் இதற்காக தாங்கள் ஆவலோடு காத்திருந்ததாகவும், தங்களை முழுமையாக தயாரித்திருப்பதாகவும் கூறினர். அதே போல இங்கிலாந்து நாட்டில் பர்மிங்கம் நகரிலே நடந்து கொண்டிருக்கின்ற காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்ற இந்திய விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், இந்த விளையாட்டுப் போட்டிக்காக தாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்ததாகவும், அதற்காக தங்களை முழுமையாக தயாரித்திருப்பதாகவும் கூறினார்கள். ஒரு விளையாட்டு வீரர் தான் பங்கேற்க இருக்கின்ற போட்டிக்காக தன்னையே முழுமையாக தயாரிக்க வேண்டும், அந்த போட்டி நேரத்திற்காக காத்திருக்க வேண்டும் மற்றும் போட்டியில் பங்கெடுக்கின்ற பொழுது விழிப்போடு இருக்க வேண்டும், அப்பொழுது தான் அவன் அதிலே வெற்றி காண முடியும். இது ஒரு விளையாட்டு வீரருக்கு மட்டுமல்லாது நம் ஒவ்வொருவருக்குமே பொருந்தும். வாழ்வின் எல்லா நிலைகளிலும் நாம் நினைக்கின்ற செயல்பாடுகளில் வெற்றி காண தயாரிப்பும், காத்திருப்பும் மற்றும் விழிப்பும் அவசியமாகிறது என்பதை தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம்முன் வைக்கும் மையச்சிந்தனையாக இருக்கின்றது.

1. தயாரிப்பு
2. காத்திருப்பு
3. விழிப்பு

என்னும் மூன்று பூக்களோடு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் இரண்டாம் வருகைக்காகவும், அவர் நமக்கு தரும் இறையாட்சிக்காகவும் வாழ அழைக்கப்படுகின்றோம். இன்றைய நற்செய்தியில் இயேசு பொறுப்புள்ள மற்றும் பொறுப்பற்ற பணியாளர்களின் உவமையை எடுத்துரைக்கிறார். இதில் பொறுப்புள்ள பணியாளர் விழிப்போடு காத்திருந்ததையும், தலைவரின் வருகைக்காக தயாரித்திருந்ததையும் பார்க்கின்றோம். அத்தகையோர் தலைவரின் நம்பிக்கைக்குரிய (லூக் 12:42)மற்றும் பேறுபெற்ற பணியாளர் (லூக் 12:43) ஆகிறார். பொறுப்பற்ற பணியாளர் தன்னுடைய சக ஆண் மற்றும் பெண் பணியாளர்களை அடிக்கவும், நன்றாக உண்டு, குடித்து, மயக்கமுற்று, விழிப்பின்றி மற்றும் தகுந்த தயாரிப்புமின்றி இருந்ததால் தண்டனைக்கு உள்ளாகிறான். இறைவனை நம் இல்லத்திலும், உள்ளத்திலும் மற்றும் வாழ்விலும் ஏற்க நாம் தயாராக இருக்கின்றோமா? என்பதை சிந்தித்துப் பார்ப்போம். தகுந்த தயாரிப்பும், காத்திருப்பும் மற்றும் விழிப்பும் கொண்ட பணியாளர்களாக நாம் வாழ்ந்தால் இறைவனை நம்முடைய வாழ்விலும் மற்றும் உள்ளத்திலும் ஏற்று அவரில் நாம் பேறுபெற்றவர்களாக வாழ்வோம்.

1. தயாரிப்பு

இன்றைய நற்செய்தியில் ஆயுத்தமாய் இருங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார் என்று கூறப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாது திருடன் எப்போது வேண்டுமானாலும் வருவான் ஆயுத்தமாய் இருங்கள் அதாவது தயாராக இருங்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆக தயாரிப்பு மனிதனின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. பழைய ஏற்பாட்டிலே எகிப்திலிருந்து இஸ்ராயேல் மக்கள் கடந்து வருவதற்கு முன்பு பாஸ்கா கொண்டாடுவதற்காக தங்களையே தயாரித்தார்கள். பாலைவனத்தில் இறைவன் இஸ்ராயேல் மக்களோடு பேச மோசே அவர்களை தயார் செய்தார். புதிய ஏற்பாட்டிலே திருமுழுக்கு யோவான் ஆண்டவருடைய வருகைக்காக மக்களை தயாரித்தார் மற்றும் மரியாவும், சூசையும் இயேசுவின் பிறப்புக்காக தங்களையும் மற்றும் பெத்லகேமில் இடத்தையும் தயார் செய்தார்கள். ஒரு விவசாயி விவசாயம் செய்வதற்காக நிலத்தை முழுவதுமாக தயார் செய்வதை பார்க்கின்றோம். இன்றைக்கு நாம் இறைவனில் பேறுபெற்றவர்களாக வாழவும், அதற்காக நம்மைத் தயாரிக்கவும் திருஅவை திருவருட்சாதனங்களையும், பல்வேறு பக்தி முயற்சிகளையும் தந்திருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளும் நற்கருணையின் வடிவில் ஆண்டவரை ஏற்றுக் கொள்ள மற்றும் இறைவார்த்தையை வாசித்து தியானிக்க திருப்பலி என்னும் திருவருட்சாதனம் தரப்பட்டிருக்கின்றது. இவையனைத்தும் இறைவனில் நாம் வாழ, பேறுபெற்றவர்களாக, அவர் தந்த கருவிகளாகும். எனவே நாம் நம்மை முழுவதுமாக தயாரிப்போம்‌.

2. காத்திருப்பு

இன்றைய முதல் வாசகத்தில் நீதிமான்களின் மீட்பையும், பகைவர்களின் அழிவையும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. காத்திருப்போரை ஆண்டவர் கண்ணோக்குகின்றார். (திருப்பாடல் 33:18). பழைய ஏற்பாட்டிலே இஸ்ராயேல் மற்றும் யூத மக்கள், மெசியா வருவார் என்று பல நூற்றாண்டுகளாக காத்திருந்தனர். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வருகைக்காக சக்கேயு காத்திருந்ததை பார்க்கின்றோம். அனைத்திற்கும் ஒரு காலம் உண்டு, எதுவும் எப்போதும் உடனே நடைபெறுவதில்லை என்பதை உணர்ந்து காத்திருக்க வேண்டும். குரங்கு ஒன்று தான் சாப்பிட்ட மாம்பழத்தின் விதையை நிலத்தில் ஊன்றி அதற்கு நீர் ஊற்றி வளர்த்ததாம். ஒவ்வொரு நாளும் அதற்கு நீர் ஊற்றிய பின்பு, அதை மண்ணிலிருந்து தோண்டி விதையை எடுத்து வளர்ந்திருக்கிறதா என பார்க்குமாம். இது காத்திருக்க மனமில்லாததன் அறிகுறியாக இருக்கின்றது. பல வேளைகளில் நாமும் இப்படி தான் இருக்கின்றோம், அனைத்தும் அவசரமாக கிடைக்க வேண்டும் என எண்ணுகிறோம். நாம் ஜெபித்த உடனே எனக்கு இறைவன் தந்து விட வேண்டும் என நினைக்கின்றோம். நான் தேர்வு எழுதிய உடன் அதிக மதிப்பெண் கிடைத்துவிட வேண்டும் என நினைக்கின்றோம். இன்றைக்கு நான் காத்திருக்கின்றேன் என்றால் பிறரை மதித்து அவர்களை ஏற்றுக் கொள்கின்றேன் என்று அர்த்தம். இறைவனில் நாம் பேறுபெற்றவர்களாக வாழ, எவ்வாறு பணியாளர் தலைவனுக்காக காத்திருந்தாரோ, அதே போல இறைவன் நம்மில் செயல்பட, இறைவன் நமது உள்ளத்தில், இல்லத்தில் மற்றும் வாழ்க்கையில் வர நாம் அவருக்காக காத்திருப்போம். நமது அன்றாட வாழ்விலும் நினைத்த காரியங்கள் எதுவும் உடனடியாக நடந்து விடுவதில்லை, மாறாக நாம் அதற்காக காத்திருக்க வேண்டும் அப்பொழுது தான் நாம் அதில் வெற்றி காண முடியும்.

3. விழிப்பு

இன்றைய நற்செய்தியில் தலைவன் வருகின்ற பொழுது விழித்திருந்து, கதவைத் திறக்கும் பணியாளனே பேறு பெற்றவன் ஆகிறான். அதே போல தலைவன் இரண்டாம் மற்றும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அதற்காக காத்திருக்கின்ற பணியாளனே பேறுபெற்றவன். இறைவன் எப்பொழுது வேண்டுமானாலும், யார் வாழ்வில் வேண்டுமானாலும் மாற்றங்களை செய்யலாம். ஆகையால் நாம் விழிப்போடு இருக்க வேண்டும், நற்செய்தியில் பத்து கன்னியர் உவமையில் விளக்குகளோடு இருந்த முன்மதிவுடைய கன்னியர்களை போல நாமும் விழித்திருக்க வேண்டும். விழித்திருந்து ஆண்டவருக்காக காத்திருக்க வேண்டும். மகன் எப்போதும் தன்னுடைய சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுப்பதையறிந்த தந்தை, அன்றிரவு பணத்தை தன் மகனின் சட்டை பையில் வைத்தாராம். தந்தையின் சட்டைப் பையில் தேடிப் பார்த்துவிட்டு பணம் இல்லை என்று வருத்தத்தோடு உறங்கி விட்டனாம் மகன். தந்தையை போல விழிப்போடு இருத்தல் நமது கிறிஸ்தவ வாழ்வுக்கும் தேவைப்படுகிறது.

எனவே தயாரிப்பு, காத்திருப்பு மற்றும் விழித்திருப்பு என்னும் பண்புகளை தமதாக்கி நம்பிக்கைக்குரிய பணியாளனை போல நம் தலைவராம் இயேசுவில் பேறுபெற்றவர்களாவோம்.

அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF



காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)




காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...(ஆங்கிலம்)