Wednesday, March 1, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 2-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A) - 05-03-2023 - ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
தவக்காலத்தின் 2-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(05 மார்ச் 2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: தொநூ 12: 1-4a
இரண்டாம் வாசகம்:  2 திமொ 1: 8b-10
நற்செய்தி: மத் 17: 1-9

மாற்றம் பெற்று வாழ...

மகாத்மா காந்தியின் மகனான மணிலாள் காந்தி தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பன் நகர் அருகேயிருந்த ஒரு கிராமத்தில் தன் குடும்பத்தோடு தங்கியிருந்தார். ஒரு நாள் அவர் தன் மகன் அருண் காந்தியோடு டர்பன் நகருக்கு ஒரு கருத்தரங்கிற்காக காரில் சென்றார். செல்லும் வழியில் கார் பழுதானது, எனவே மணிலாள் காந்தி தன் மகன் அருன் காந்தியிடம் காரை சரிபார்த்து கருத்தரங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு வர சொன்னார். பல நாட்களாக அருன் காந்திக்கு திரையரங்கு சென்று திரைப்படம் பார்க்க வேண்டுமென்று ஆசை, ஆனால் அதற்கு தன் தந்தை அனுமதிக்கமாட்டார் என உணர்ந்த அவர், காரை பழுது பார்க்க கொடுத்த இடத்தின் அருகேயிருந்த திரையரங்கிற்கு சென்று திரைப்படம் பார்த்துவிட்டு வந்தார் ஆனால் அதற்குள் நேரமாகிவிட்டது. அவசர அவசரமாக காரை எடுத்துக்கொண்டு கருத்தரங்கு நடைபெற்ற இடத்திற்கு சென்றார். அங்கு அவருடைய தந்தை மணிலாள் காந்தி அவருக்காக காத்திருந்தார். அவர் கேட்பதற்கு முன்பே அருண் காந்தி தன் தந்தையிடம் 'காரில் பெரிய பிரச்சனை இருந்ததால் சரி செய்ய இவ்வளவு நேரமாகி விட்டது' என்று கூறினார். உடனே அவருடைய தந்தை, 'சரி நான் இன்று வீட்டிற்கு நடந்தே வருகிறேன், நீ கார் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்' என்று கூறினார். உடனே அருண் காந்தியோ, 'ஏன் நடந்து வருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு அவரது தந்தை 'நான் இன்னும் என்னுடைய மகனை நேர்மையோடு இருக்கவும் மற்றும் உண்மையைப் பேசவும் கற்றுக் கொடுக்கவில்லை எனவே எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொள்கிறேன்' என்று கூறினார். மேலும் 'கருத்தரங்கு முடிந்தவுடன் அதாவது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே, நான் கார் பழுது பார்க்குமிடத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது கார் தயாராகி விட்டது என்றார்கள்' என்று சொன்னார். அன்று மணிலாள் காந்தி தனக்கு கொடுத்துக் கொண்ட தண்டனை அருண் காந்திக்கு புது மாற்றத்தை கொடுத்தது, வாழ்நாள் முழுவதும் நேர்மையோடும் வாழ வகுத்தது. இதைப் போலத்தான் இறைமகன் இயேசு நாம் ஒவ்வொருவரும் பாவத்திலிருந்து மனமாற்றம் பெறுவதற்கு தன்னில் சிலுவை என்னும் பெரும் துன்பத்தை ஏற்றுக்கொண்டார்.

நாம் பயணிக்கும் இந்த தவக்காலம் இருளிலிருந்து ஒளிக்கு மாறவும், பழையதிலிருந்து புதுமைக்கு மாறவும், நிழலிலிருந்து நிஜத்திற்கு மாறவும் மற்றும் பொய்மையிலிருந்து உண்மைக்கு மாறவும் அழைப்பு தருகிறது. ஆக தவக்காலம் என்னும் மாற்றத்தின் காலம் நமக்கு தரும் அழைப்பையேற்று நாமும் நம் வாழ்வை மாற்றுவோம். இன்றைக்கு நாம் அடியெடுத்து வைத்திருக்கின்ற தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தை வழிபாடும் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரையும் மாற்றம் பெற்று வாழ அழைப்பு தருகிறது. முதல் வாசகம் இறைவன் ஆபிரகாமை அழைத்ததையும் மற்றும் அவருக்கு கொடுத்த வாக்குறுதியையும் எடுத்துரைக்கிறது. ஆபிரகாம் நாடு மற்றும் வீடு இவைகளை விட்டுவிட்டு அறியாத புதியதொரு இடத்திற்கு செல்ல அதாவது புதுவாழ்வு என்னும் மாற்றத்தை பெற அழைக்கப்பட்டார். நற்செய்தி வாசகம் இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை எடுத்துரைக்கிறது. இவ்விரண்டு நிகழ்விலும் இன்றைய மாற்றம்தான் நாளைய வாழ்வாக மாறும் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இயேசுவின் உருமாற்றம் நம் வாழ்வு மாற்றம் பெறுவதற்கு அழைப்பு தருகிறது. இயேசுவின் உருமாற்றம் இரண்டு உண்மைகளை புரிந்து கொள்ளவும் அதனால் நம் வாழ்வு மாற்றம் பெற்றிடவும் அழைப்பு தருகிறது.

1. இறைச்சாயலை அறிந்து கொள்ள...

இறைவனின் மகிமையை மற்றும் மாட்சியை இயேசுவின் உருமாற்றம் வெளிக்கொணர்ந்தது. இயேசுவோடு உடன் வாழ்ந்த சீடர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் அவர் ஜெபிப்பதையும், அற்புதங்கள் செய்வதையும் மற்றும் பல்வேறு இடங்களில் நற்செய்தியை அறிவிப்பதையும் பார்த்தவர்கள், ஆனால் முதல் முறையாக அவருடைய இறைச்சாயலை வெளிப்படுத்தும் உருமாற்றத்தை அதாவது மகிமையை கண்டுணறுகிறார்கள். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமும் "அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின." (மத்தேயு 17:2). என வாசிக்கின்றோம். சீடர்கள் இயேசுவிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” இது வெறும் மக்களின் கூற்று மட்டுமல்லாது சீடர்களிடமும் அவ்வபோது எழுந்த சந்தேகங்களாகும். இவையனைத்து கேள்விகளுக்கும் பதில் தான் இயேசுவின் உருமாற்றம், இயேசு அவர்கள் நினைப்பது போல திருமுழுக்கு யோவானோ, எலியாவோ அல்லது இறைவாக்கினர்களுள் ஒருவரோ அல்ல மாறாக அவர் இறைமகன். இறைச்சாயலை கொண்டு மனித உருவில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதை அவர்களுக்கு இது உணர்த்தியது, அதனால்தான் இறைச்சட்டங்களின் அடையாளமாக மோசேயும், இறைவாக்கினர்களின் அடையாளமாக எலியாவும் இயேசுவின் உருமாற்றத்தில் தோன்றிய போது அச்சீடர்கள் முகங்குப்புற கீழே விழுந்து, இயேசு ஒரு சாதாரண மனிதர் அல்ல மாறாக இறைமகன் என்பதை உணர்ந்தார்கள். இயேசுவின் உருமாற்றம் சீடர்களை மட்டுமல்ல அது நம் ஒவ்வொருவரையும் இறைவன் தந்த இயேசுவை, நம் உள்ளங்களிலும் வாழ்விலும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? மற்றும் அதை உணர்ந்திருக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்க அழைப்பு தருகிறது. சீடர்கள் இயேசுவின் உருமாற்றத்தில் அவரை கண்டு கொண்டது போல இன்றைக்கு நாமும் திருவருட்சாதனங்களிலும் குறிப்பாக நற்கருணையிலும் தன்னையே உருமாற்றி வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இயேசுவை உணர மற்றும் வாழ்வாக்க அதனால் மாற்றம் பெற அழைப்பு பெறுகின்றோம். "உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன." (மத்தேயு 13:16,17) என்னும் இறைவார்த்தைக்கு ஏற்ப இறைவனை நம்முடைய வாழ்வில் கண்டுகொண்டு அவரில் பேறுபெற்றவர்களாக வாழ நாமும் மனமாற்றம் பெறுவோம்.

2. இறைப்பணியை அறிந்து கொள்ள...

"மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்." (லூக்கா 9:30,31) என லூக்கா நற்செய்தியாளர் எடுத்துரைக்கும் இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் எருசலேமில் நிறைவேறவிருந்த இறப்பைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருப்பது அவரின் பணி வாழ்வை அதாவது மீட்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மனித உருவெடுத்ததை மற்றும் தன்னுயிர் அளிப்பதை சீடர்கள் அறிந்து கொள்ளவும், அவர் விட்டுச் செல்கின்ற இறையாட்சியின் விழுமியங்களை அதாவது பணி வாழ்வை தொடர்ந்தாற்ற அழைப்பு தருகிறது. பழைய ஏற்பாட்டில் விடுதலைக்காய் இஸ்ராயேல் மக்கள் தொடர்ந்த பாலைவன பயணத்தைப் போல இறைமகன் இயேசுவும் நம் ஒவ்வொருவருக்கும் மீட்பு தருவதற்காக சிலுவையின் வழியாய் கல்வாரி மலை நோக்கி தன் பணிவாழ்வில் பயணிக்கிறார். இது அவரது உயிர்ப்பின் வழியாக நம் ஒவ்வொருவருக்கும் நிறை வாழ்வு என்னும் இறையாட்சியை தரும். இயேசுவின் உருமாற்றத்தை அதாவது அவரது மாட்சியை பார்த்த பேதுரு நாம் இங்கேயே இருப்பது நல்லது என்று எடுத்துரைப்பது அவர் கண்ட அந்த மாட்சிமையிலும் மகிழ்ச்சியிலுமே திளைத்திருக்க ஆசை கொள்கிறார் என்பதை எடுத்துரைக்கிறது. ஆனால் இறைமைந்தன் இயேசு நாம் எப்போதும் இம்மகிழ்ச்சியிலே திளைத்திருக்க முடியாது. இம்மகிழ்ச்சியில் மட்டுமல்லாது வாழ்வில் துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சொகுசு நிலையிலிருந்து வாழ்வின் கஷ்டங்களையும், துன்பங்களையும் மற்றும் சிலுவைகளையும் சுமக்கின்ற மாற்றம் பெறுவதற்கு இயேசு தன் உருமாற்றத்தின் வழியாக அழைப்பு தருகிறார். எனவேதான் தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்." (மத்தேயு 16:24) மற்றும் "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச்சொல்கிறேன்." (யோவான் 12:24) என்கிறார். இயேசுவின் உருமாற்றம் சீடர்கள் அவருடைய இறப்பை மற்றும் பணி வாழ்வை அறிய வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாது, அவர் சுமந்த சிலுவையை சுமந்து பணி வாழ்வை தொடர வேண்டும் என்பதற்காக ஆகும், இன்றைக்கு அதே அழைப்பு நம் ஒவ்வொருவருக்கும் தரப்படுகிறது.

மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது. முன்னேற்றம் வேண்டுமெனில், மாற்றம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். மாற்றங்கள் நம்மை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கின்றன. நமக்கு புதிய தேடல்கள், புதிய வாய்ப்புகளை அறிமுகம் செய்து வைக்கின்றன. இறைமைந்தன் இயேசுவை கண்டுணர்ந்து, வாழ்வின் சிலுவைகளை ஏற்று அவர் பணியை தொடர்ந்தாற்றுகின்ற கிறிஸ்தவர்களாக வாழ மனமாற்றம் பெறுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.