🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலம் 27-ஆம் வாரம்
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
ஞாயிற்றுக்கிழமை
நற்செய்தி: - மாற்கு 10: 2-16
...இணைந்திருப்போம்...
மூங்கில் மரங்கள் நம் அணைவருக்குமே தெரிந்தது தான். சந்தையிலிருந்து நாம் ஒற்றை மூங்கில் கன்றை வாங்கி வைத்தாலும் அது வளரும் போது தனியாக வளர்வதில்லை மாறாக கூட்டமாக தான் வளர்கிறது. மூங்கில் மரங்களை உடைத்து பார்க்கும் போது அதனுள் ஒன்றும் காணப்படுவதில்லை, வெறும் வெற்றிடம் தான் இருக்கும், இப்படிபட்ட மரங்கள் எப்படி உயரமாக வளர்கிறது என்று ஆராய்ந்து பார்க்கும் போது இம்மரங்கள் வளரும் போது கூட்டமாக வளர்வதோடு மட்டுமல்லாது, வளரும் போது தனது கிளைகளை ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்து கொள்வதே காரணமாக அமைகிறது. இங்கு கிளைகளின் பிணைப்பு தான் அவைகளை உயரமாக வளர வைக்கின்றது. இது வெறும் மரங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் தான் நமது வாழ்வில் பிணைப்பும் இணைப்பும் தான் பலனும் வாழ்வும் கொடுக்கும் என்னும் மையச்சிந்தனையை நம் முன் வைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. இணைப்பு தான் வாழ்வு கொடுக்கும் என்பதற்கு இயேசு இன்றைய நற்செய்தியில் இரண்டு உருவகங்ளை பயன்படுத்துகின்றார்.
1. கணவன் மனைவி உருவகம்
2. சிறிய குழந்தைகள் உருவகம்
1. கணவன் மனைவி உருவகம்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமணம் என்னும் திருவருட்சாதனத்தின் வழியாய் இணைக்கப்பெற்ற கணவனும் மனைவியும் இணைந்திருக்க வேண்டும் என்பதை இறைமகன் இயேசு முக்கியத்துவம் கொடுக்கிறார். பரிசேயர்கள் இயேசுவிடம் “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” (மாற்கு. 10:2) என மோசேயின் கட்டளையை சுட்டிக்காட்டி கூறிய போது, இயேசு அவர்களிடம் “கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” (மாற்கு. 10:9) என்கிறார். இயேசு வாழ்ந்த சமுதாயத்தின் சூழல் வித்தியாசமாகவே இருந்திருக்கிறது. பெண்கள் ஒரு மனிதராகவே கருதப்படா ஒரு நிலை, அவர்களை ஒரு பொருளாகவே பார்த்தனர். அச்சமுதாயத்தில் ஒரு பெண் தன் கணவரை விலக்கி வைக்க தொழுநோய் என்னும் ஒரு காரணத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் ஒரு ஆண் எத்தகைய காரணத்திற்கு வேண்டுமானாலும் பெண்ணை விலக்கி வைக்க முடியும். இத்தகைய பின்னனியில் அவர்கள் இயேசுவிடம் கேள்வி கேட்கும் போது இயேசு பிரிந்திருப்பது இறைவனுக்கு ஏற்றது அல்ல மாறாக இணைந்திருப்பதும் பிணைந்திருப்பதும் தான் ஆண்டவருக்கு ஏற்றதோரு வாழ்க்கை என்கிறார். பழைய ஏற்பாட்டில் குறிப்பாக இறைவாக்கினர்களின் புத்தகங்களில் கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் உண்டான உறவு கணவன் மனைவி உறவாக சித்தரிக்கப்படுவதை நாம் வாசிக்கின்றோம்.(ஏசாயா.54:5). புதிய ஏற்பாட்டில் பவுல் அடிகளார் தன்னுடைய திருமடல்களில் இறைவனுக்கும் திருஅவைக்கும் உண்டான உறவு கணவன் மனைவி உறவாக சித்தரிக்கின்றார். (2கொரி.11:2) இவை அனைத்திலும் நாம் புரிந்துகொள்வது இறைவனும் திரு அவையும் என்றும் இணைந்திருக்க வேண்டும் என்பதே ஆகும்.
2. சிறிய குழந்தைகள் உருவகம்
இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது." என்று கூறுவதன் வழியாக இறைவனும் சிறு பிள்ளைகளும் இணைந்திருக்க வேண்டும், பிரிந்திருக்க கூடாது என்னும் கருத்தை உருவகமாக பயன்படுத்துவதை பார்க்கின்றோம். குழந்தைகள் இயேசுவை சந்திக்க சிலர் தடையாக மற்றும் அவர்களை பிரித்து வைக்கின்ற பொழுது அங்கு இயேசு மீண்டும் குழந்தைகளை அழைத்து இணைந்திருத்தலை வலியுறுத்துகின்றார். இயேசுவினுடைய பணி வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இயேசு பிரிவினையை விரும்பாது இணைந்திருத்தலை எடுத்துரைக்கின்றார். "நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது."(யோவான் 15:4) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நாம் இறைவனுடனும் ஒருவர் மற்றவருடனும் ஒற்றுமையாக இணைந்திருக்க அழைக்கப்படுகின்றோம்.
இன்று நம்முடைய சமுதாயத்தில் குடும்பங்களின் நிலை எப்படி இருக்கின்றது. ஒன்று சேர்ந்து இன்பத்திலும் துன்பத்திலும் நாங்கள் ஒன்றிணைந்து இருப்போம் என்று வாக்களித்த திருமண தம்பதிகள், ஆண்டுகள் சில கழிந்தவுடனே ஒருவரை ஒருவர் இகழ்ந்து பிரிய கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இறைவன் விரும்புவது பிரிவு அல்ல மாறாக, இணைந்திருப்பதையே இறைவன் விரும்புகின்றார். அதனால் தான் திருஅவையில் கூட விவாகரத்து கொடுக்கப்படலாகாது என்கிறார்கள். ஆக, நாம் நமது குடும்பங்களில் ஒருவர் மற்றவரோடு அன்பு உறவில் இணைந்து இருப்போம். குறிப்பாக, கணவர் மனைவியுடனும், மனைவி கணவருடனும் இணைந்து அன்பு உறவில் வாழ வேண்டும். இவர்கள் பிள்ளைகளோடு இணைந்திருக்க வேண்டும். நாம் அணைவரும் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும். இறையாசீர் பெற வேண்டும்.
ஆடியோவாக கேட்க.......
https://youtu.be/kEo8B-NgbYk
அன்புடன்
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF