Friday, January 6, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா - (ஆண்டு- A)- 08-01-2023- ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(08 சனவரி 2023, ஞாயிறு)

முதல் வாசகம்: எசாயா 60: 1-6
இரண்டாம் வாசகம்:  எபேசியர் 3: 2-3a, 5-6
நற்செய்தி: மத்தேயு 2: 1-12

சந்திப்பு தந்த புது வாழ்வு

இன்றைக்கு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழாவை தாயாம் திருஅவையானது கொண்டாடி மகிழ்கின்றது. இது ஒரு பழமையான விழா. கிரேக்க மற்றும் உரோமானிய கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான ஒரு விழா. பேரரசரின் பிறப்பையோ, பதவியேற்பு விழாவையோ அல்லது நகரத்திற்கு அவரின் வருகையையோ சுட்டிக் காட்டுவதற்கு திருக்காட்சி என்னும் பெயர் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உரோமையர்களின் மதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆறாம் தேதி சூரிய கடவுளின் விழாவை மிகவும் ஆடம்பரமாக கொண்டாடி வந்திருக்கின்றனர், அதே நாளில் தான் ஏயோன் என்னும் கன்னியிடம் பிறந்த கடவுளின் பிறந்த நாளையும் அவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். கிறிஸ்தவ மதம் உரோமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முழுமையடைந்த போது, அதே ஜனவரி ஆறாம் தேதி ஆண்டவரின் திருக்காட்சி திருவிழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் இந்த ஜனவரி ஆறாம் தேதிக்கு பிறகு வருகின்ற ஞாயிற்றுக்கிழமையில் இவ்விழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். நம் திரு அவையின் பாரம்பரியம் கஸ்பார், மெல்கியோர் மற்றும் பல்தசார் இவர்களது பெயர்கள் என்பதை குறிப்பிடுகிறது. இன்றைய நற்செய்தி மூன்று ஞானிகள் இயேசுவை சந்தித்தபோது நிகழ்ந்த அவர்களின் எட்டு செயல்பாடுகளை எடுத்துரைக்கிறது.

1. தேடினார்கள் (2:1): இது கிழக்கிலிருந்து ஞானிகள் இயேசுவை தேடி எருசலேமுக்கு வந்தது.
2. விசாரித்தார்கள் (2:2): இயேசு எங்கு பிறந்திருக்கிறார் என்று தெரியாமல் ஏரோதிடம் யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழ கண்டோம் என விசாரித்தது.
3. பின்பற்றினார்கள் (2:9): மீண்டும் கண்ட விண்மீனை பின் தொடர்ந்து சென்றது.
4. மகிழ்ந்தார்கள் (2:10): இயேசு பிறந்திருக்கின்ற இடத்தில் விண்மீன் நின்றதும் பெருமகிழ்ச்சி கொண்டது.
5. கண்டார்கள் (2:11a): வீட்டிற்குள் சென்று குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதை கண்டது.
6. வணங்கினார்கள் (2:11b): இயேசுவை கண்ட ஞானிகள் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கியது.
7. கொடுத்தார்கள் (2:11c): ஞானிகள் தங்கள் பேழைகளைத் திறந்து பொன், சாம்பிராணி மற்றும் வெள்ளைப்போளம் என காணிக்கைகளை கொடுத்தது.
8. திரும்பினார்கள் (2:12): ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாக நாடு திரும்பியது.

ஞானிகள் இயேசுவை சந்தித்த இந்த எட்டு செயல்பாடுகள் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மூன்று மாற்றங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இன்றைக்கு நாம் நமது வாழ்க்கையில் இயேசுவை கண்டு கொள்ளுகின்ற பொழுது இம்மாற்றங்கள் நம் வாழ்விலும் நிகழும்.

1. மகிழ்வு

ஞானிகள் "அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்." (மத்தேயு 2:10) இது இயேசுவை சந்திப்பதற்கு முன்பே அதாவது அவர் இருக்குமிடத்தை அடைந்தவுடனே கிடைத்த மகிழ்ச்சியாகும். மனித வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது. ஆதிகாலம் தொட்டு மனிதர்கள் தேடி அலைவது ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையைத்தான். வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டறிய ஏதோதோ வழிகளில் முயற்சிக்கின்றனர். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய வாழ்வில் இறைபிரசன்னத்திற்குள் நுழைந்தாலே மகிழ்ச்சியை பெறலாம்.

2. அர்ப்பணிப்பு

"வீட்டிற்குள் ஞானிகள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்." (மத்தேயு 2:11) இங்கு ஞானிகளின் இரண்டு விதமான அர்ப்பணிப்பை நாம் பார்க்கின்றோம். முதலில் ஞானிகள் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையின் முன்பு தங்களை முழுவதுமாக அர்ப்பணித்தார்கள். அறிவிலும் மற்றும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய இவர்கள் ஒரு சிறு குழந்தையின் முன்பு வணங்குவது இவர்கள் சுயநலத்தை விட்டு தாழ்ச்சியோடு பிறந்திருக்கின்ற மெசியா முன்பு முழுவதுமாக தங்களை அர்ப்பணிப்பதை காட்டுகிறது. இரண்டாவதாக இவர்கள் தங்களை அர்ப்பணித்து தங்களிடையே இருந்தவற்றையும் காணிக்கைகளாக அர்ப்பணிக்கிறார்கள். பொன் அரசதன்மையையும், தூபம் தெய்வத்தன்மையையும் மற்றும் வெள்ளைப்போளம் மனிதத்தன்மைமையும் குறிக்கிறது என்கிறார் புனித பெர்னார்டு. இது தன்னையும் தன்னிடையே இருப்பதையும் இறைவனுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்னும் அழைப்பை நமக்கும் தருகிறது. அன்று ஆபேல் தன்னை காணிக்கையாக கொடுக்கவில்லை மாறாக கொழுத்த தலையீறுகளைக் காணிக்கையாக கொடுத்தான். ஆபிரகாம் கூட தன் மகனை தான் காணிக்கையாக அர்ப்பணித்தார். ஆனால் ஞானிகள் அன்னை மரியாள் தன்னை முழுவதுமாக ஆண்டவரின் திட்டத்திற்காக அர்ப்பணித்தது போல தங்களது நிலை மறந்து முழுவதுமாக மீட்பரின் முன்பு காணிக்கையாக அர்ப்பணிக்கிறார்கள். நம் வாழ்விலும் இறைவனை சந்திக்கின்ற போது இறை பிரசன்னம் நம்முள் அர்ப்பண உணர்வை உருவாக்கும். இன்று நமக்காக பிறந்திருக்கிறவர் நம்முடைய பொருட்களை காணிக்கையாக அர்ப்பணிப்பதை காட்டிலும் நம்மை அவர் முன்பாக அர்ப்பணிக்க விரும்புகிறார்.

3. புதுபாதை (புதுவாழ்வு)

"ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் ஞானிகள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்." (மத்தேயு 2:12) இங்கு வேறு வழி என்பது அவர்களுக்கான புது வழி. இது ஞானிகளுக்கு புதுவாழ்வுமாகும், இத்தகையை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் ஞானிகள் இயேசுவை சந்தித்தது நிச்சயம் அவர்களுக்கு புது வழியை மட்டுமல்லாது புது வாழ்வையும் தந்திருக்கும். மகிழ்ச்சியையும், அர்ப்பண உணர்வையும் ஏற்படுத்திய இந்த சந்திப்பு புது வாழ்வை அவர்களுக்கு உருவாக்கி தந்திருக்கும். இன்றைக்கு ஒவ்வொரு நாளும் ஆண்டவரை நாம் ஆலயத்திலும், இறைவார்த்தையிலும், மற்றும் நற்கருணையிலும் சந்திக்கின்ற பொழுது நம்முடைய வாழ்க்கையிலும் புதிய மாற்றத்தையும் வாழ்வையும் நாம் உணர்வோம். எவ்வாறு ஆண்டவர் இயேசுவை சந்தித்த பிறகு ஞானிகளின் பாதை மாறியதோ, அதேபோல இறைவனை நம்முடைய வாழ்க்கையில் கண்டுணர்ந்த பிறகு நமது கஷ்டமான கவலைக்குள்ளான மற்றும் இடர்பாடுகளுக்குள்ளான பாதை மாறி புதுவாழ்வின் பாதை பிறக்கும்.

இஸ்ராயேல் மக்கள் தங்களது இருளான பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து புது ஒளியென்னும் விடுதலையின் பாதையை கிறிஸ்து என்னும் மெசியா வழியாக பெறுவார்கள் என்பதையே இன்றைய முதல் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் பிறப்பு ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது என்பது இப்புதிய பாதை யூதருக்கு மட்டுமல்லாது எல்லோருக்குமானது என்பதை சுட்டிக் காட்டும் அடையாளமாக இருக்கிறது. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகமும் எடுத்துரைக்கிறது. எல்லோருக்குமான மற்றும் நம்முடைய வாழ்வை மாற்றும் அந்த புதிய பாதை இயேசுவில் இருக்கிறது, அவரை கண்டுகொள்வோம், புது வாழ்வை பெறுவோம். இறைவன் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை