Thursday, March 31, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 5-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) -----03-04-2022 - ஞாயிற்றுக்கிழமை


 முதல் வாசகம்: எசாயா 43: 16-21

இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 3: 8-14

நற்செய்தி:  யோவான் 8: 1-11

இயேசு தந்த கண்ணாடி
(உன்னை பார்க்க பிறரை அல்ல…)

ஒருமுறை அம்மா தன்னுடைய குழந்தையிடம் சென்று அந்த குழந்தையின் கைகளிலிருந்த இரண்டு ஆப்பிள் பழங்களை கண்டு, "அம்மாவுக்கு ஒன்று கொடு செல்லம்" என்று கேட்கிறாள். உடனே அந்த குழந்தை மிக வேகமாக இரண்டு ஆப்பிள் பழங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக தன்னுடைய வாயில் கடித்து விட்டது. இதைக்கண்ட அந்த அம்மாவுக்கு ஒரே வருத்தம் நமது குழந்தையே இவ்வளவு சுயநலமாக இருக்கிறதா! என்று எண்ணினாள். அடுத்த நொடியே அந்த குழந்தை "அம்மா இந்த ஆப்பிள் பழத்தை சாப்பிடுங்கள், இதுதான் சுவையாக இருக்கிறது" என்று ஆப்பிளை கொடுத்ததாம். அப்பொழுது தான் அந்த தாய்க்கு புரிந்தது, தனக்கு மிக இனிப்பான ஆப்பிளை தருவதற்காகவே குழந்தை இரண்டு ஆப்பிளையும் கடித்து சுவைத்திருக்கிறது. ஒரு நொடியில் என்னுடைய குழந்தையை தவறாக புரிந்து விட்டேனே! என்று உணர்ந்து கொண்டாள். இன்றைக்கு மனித வாழ்க்கையும் இப்படி தான், எப்பொழுதும் பிறரை பார்ப்பது, பிறருடைய தவறை சுட்டிக்காட்டுவது மற்றும் பிறரை தவறாக புரிந்து கொள்வது என்று எப்பொழுதும் அடுத்தவரை நோக்கியே நமது கண்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நம்மை பார்க்க நமது கண்கள் மறந்து விடுகிறது.

உன்னைப்பார்:-
  கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, இந்நாளில் இறைமகன் இயேசு கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் கண்ணாடி ஒன்றை தருகின்றார். இந்த கண்ணாடி நம்முடைய முகத்தையும் மற்றும் அழகையும் பார்ப்பதற்காக அல்ல, மாறாக அகத்தை பார்ப்பதற்காக. அதாவது நம் தவறுகளை மற்றும் பாவங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்காக. ஆம், இயேசு தருகின்ற இந்த கண்ணாடியின் வழியாக நாம் பிறரது தவறுகளை சுட்டிக்காட்டாமல், நமது தவறுகளை பற்றி தெரிந்து அதிலிருந்து மீண்டு வர அழைப்பு தருகிறார். நம்முன் விடுதலை நாயகனாக காட்சி தருகிறார், இது தான் இன்றைய நற்செய்தி காட்டும் வழி. இன்றைய நற்செய்திப் பகுதியில் மறைநூல் அறிஞர்களும் மற்றும் பரிசேயர்களும் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் ஒருவரை இறைமகன் இயேசு கிறிஸ்து முன்பாக கொண்டு வருகிறார்கள். யூத முறைப்படி விபச்சாரம் என்பது மரண தண்டனைக்குரிய மிகப்பெரிய தவறு மற்றும் பாவமாக கருதப்பட்டது (லேவியர் 20:10, இணைச்சட்டம் 22:13-24).
யூத சட்டப்படி பரிசேயரும், மறைநூல் அறிஞரும் கூறியது சரி தான், விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். ஆனால் இங்கு இயேசு சட்டங்களையும், அவர்களின் சூழ்ச்சிகளையும் மற்றும் கேள்விகளையும் தாண்டி, அவர்களிடம் கண்ணாடி ஒன்றை தருகிறார். அப்படியென்றால் மறைநூல் அறிஞர்களிடமும் மற்றும் பரிசேயர்களிடமும் அப்பெண் செய்த பாவத்தை அதாவது விபச்சாரத்தை சுட்டி காட்டுவதற்கு முன்பு நீங்கள் செய்த பாவத்தை முதலில் உணருங்கள் என்று குறிப்பிடுகிறார். பிறரை, பிறரது பாவங்களை சுட்டிக் காட்டுவதற்கு முன்பு, நாம் நம்மை நமது பாவங்களை கண்டறிந்து அதிலிருந்து மீண்டு வருபவர்களாக மாற வேண்டும் என்னும் ஒரு அழைப்பை இறை மைந்தன் நமக்கும் தருகிறார்.

உன் பாவங்களை அறிந்து கொள்:
நம்மை அறிந்து கொள்வதே கடவுளை அறிந்து கொள்வதற்கான திறவுகோல். நம்மை அறிந்து கொண்டால் கடவுளை, அவர் நம்மிடமிருந்து எதிர் பார்ப்பவற்றை அறிந்து கொள்ள முடியும். அதுவே நம் பாவங்களை உணர செய்யும் மற்றும் புது வாழ்வுக்கு வழிவகை செய்யும். புத்திசாலியாக இருக்க உன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் சாக்ரட்டீஸ். நம்மை அறிந்து கொள்வது நம்மை தெளிவாக்கும், தெளிவான வாழ்வு புத்திசாலித்தனத்தின் அடையாளம். மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் மத்தியில் இயேசுவின் வார்த்தையும் அவருடைய செயலும் அவர்கள் அவர்களின் தவறை பார்க்க அழைப்பு தருகிறது. அத்தகைய ஒரு சூழலிலும் அமைதியாக இயேசு தரையில் குனிந்து, தன் ஒரு விரலால் எழுதிக்கொண்டிருக்கும் செயலும் (யோவான் 8:6) மற்றும் "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் கல் எறியட்டும்" (யோவான் 8:7) எனும் வார்த்தையும் அவர்களுக்கு இயேசு தருகின்ற கண்ணாடி. அதாவது, பிறரது குற்றங்களை பார்க்காமல் உங்களது குற்றங்களை பாருங்கள் என இயேசு தரும் அழைப்பு. "உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?" (மத்தேயு 7:1). என்னும் இயேசுவின் வார்த்தைகளும் இங்கு செயல் வடிவம் பெறுகிறது. இறுதியாக இயேசு அப்பெண்ணிடம் "இனி பாவம் செய்யாதே" (யோவான் 8:11) என்று கூறுகின்ற வார்த்தைகள் அந்தப் பெண்ணிடம் கூட உன்னை, உன் நிலையை மற்றும் உனது பாவங்களை பார்த்து, அதிலிருந்து மீண்டு மகிழ்வான ஒரு வாழ்வை வாழ அழைப்பு தருவதாக அமைகின்றது.
இவ்வாறாக இயேசு அந்த பெண்ணிற்கு உடல் தண்டனையிலிருந்து மற்றும் உள்ளத்து பாவத்திலிருந்து விடுதலை தருகிறார். அன்று ஆதாம்-ஏவாள் பாவம் செய்தபோது கூட இறைவன் முன்பாக, பெண் தான் கொடுத்தாள் மற்றும் பாம்பு தான் என்னை வஞ்சித்தது என்று பிறரை தான் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். ஆதனால் தான் அவர்களின் பாவங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. இன்று நாம் "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்" (மத்தேயு 7:1) என்னும் இயேசுவின் வார்த்தைகளுக்கு வாழ்வு கொடுக்க அழைப்பு பெறுகின்றோம்.

மனந்திரும்பி இயேசுவிடம் செல்:-
பொதுவாக யானையை பற்றி சொல்லக் கூடிய ஒன்று. யானை எப்பொழுது நீர் குடிப்பதற்காக குளத்தை நோக்கி சென்றாலும், குளத்தின் நீரானது தெளிந்து மிக தூய்மையாக முகம் தெரிகின்ற அளவுக்கு இருந்தாலும், யானை அந்நீரை கலக்கி விட்டு தான் தண்ணீரை குடிக்குமாம். ஏன்? அது சுத்தமான நீரை அருந்தாமல் அதை கலக்கி விட்டு குடிக்கின்றது என்று சிந்திக்கின்ற பொழுது, யானை சுத்தமான நீரில் அதனது முகத்தை பார்க்கின்ற பொழுது நம்மை விட நமக்கு போட்டியாக மற்றும் நம்மை கொல்வதற்காக ஒரு மிருகம் வந்து விட்டது என எண்ணி நீரை கலக்கி விடுகிறதாம். இன்றைக்கு மனித வாழ்க்கையும் இப்படித்தான் கண்ணாடியிலே நாம் நம்மை அதாவது நமது பாவங்களை பார்க்கின்ற பொழுது, அதை மறைப்பதற்காக, நீரை கலக்கி விடுவது போல பிறருடைய பாவங்களை சுட்டிக்காட்டி, தீர்ப்பிடுகின்றோம். இந்நிலையிலிருந்து நாம் மாறி, நமது பாவங்களையும் ஏற்று மனம் மாறுவோம். சிறிய வயதிலிருந்தே தம்பிக்கு மட்டும் இரண்டு தோசை, அடுத்த வீட்டு பையன் மட்டும் முதல் மதிப்பெண், அக்காவுக்கு மட்டும் புது துணி என எப்பொழுதும் மற்றவரை பார்த்து பார்த்து பழகிப் போய் விட்டோம். அதனால் தான் என்னவோ தெரியவில்லை தவறு செய்தால் கூட அவன் தான் செய்தான் மற்றும் அவள் தான் செய்தாள் என்று பிறரை சுட்டிக் காட்ட முயலுகின்றோம், ஆனால் நம்மை நாம் ஒருநாளும் பார்ப்பதே இல்லை. பிறரைப் பார்த்து மற்றும் அவர்களுக்காக வாழ்ந்து, நமக்காக வாழ வேண்டும் என்பதை மறந்து விடுகின்றோம். அதனால் தான் நாம் செய்கின்ற தவறு கூட, மற்றவரும் செய்திருந்தால் அது நமக்கு பெரிய தவறாக தெரிவதே இல்லை.
இங்கு எல்லோரும் தானே தவறு செய்கிறார்கள் என்று மற்றவரை தான் நாம் பார்க்கிறோமே தவிர, நம்மை ஒருபோதும் பார்ப்பதில்லை. இன்று இயேசுவின் வழியில் நம்மை மற்றும் நமது பாவங்களை பார்ப்போம். அதிலிருந்து புதுவாழ்வு வாழ இயேசுவிடம் செல்லுவோம். அவர் தரும் மன்னிப்பை பெறுவோம். "உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்" (பிலிப்பியர் 3:8) என்னும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் நம் நிலையை உணர்ந்து, பாவத்தை விட்டு விலகி புதுவாழ்வு வாழ இந்த தவக்காலத்தில் முயற்சி செய்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

 

 காணொளியில்/ஆடியோவில்  காண...

https://youtu.be/MMjmoELMMPg