முதல் வாசகம்: திப 15: 1-2, 22-29
இரண்டாம் வாசகம்: 21: 10-14, 22-23
நற்செய்தி: யோவான் 14: 23-29இவ்வுலக வாழ்வும் இயேசு தரும் அமைதியும்
சீடன் ஒருவர் சாலையோரோமாக நடந்து கொண்டிருக்கின்ற பொழுது ஒரு பைத்தியக்காரனை சந்திக்கின்றார், அவனை அழைத்து சென்று குருவிடம் காட்டுகின்றார். குரு அவனுக்கு தேவையான உணவு மற்றும் உடைகளை கொடுப்பதற்கு சீடர்களிடம் கூறுகின்றார். மேலும், சிறிது நேரத்தில் அவன் சத்தமிடுவான் என்றும், கல்லெடுத்து எல்லோரையும் அடிக்க துவங்குவான் என்றும், ஆனால் நீங்கள் யாரும் எதையும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் கூறிவிட்டுச் சென்றார். குரு கூறியவாறே சிறிது நேரத்தில் அந்த பைத்தியக்காரன் சத்தமிட்டு மற்றும் கல்லெடுத்து எல்லோரையும் அடிக்க ஆரம்பித்தான், சீடர்கள் அமைதியாக இருந்தார்கள், சிறிது நேரத்தில் அந்த பைத்தியக்காரன் அமைதியாகி விட்டான். இது ஒவ்வொரு முறையும் நிகழ்ந்தது சீடர்களும் அமைதி காத்தார்கள், இவ்வாறாக மாதங்கள் கழிந்தது ஏறக்குறைய ஓராண்டு கழிந்த பின் அந்த பைத்தியக்காரன் குருவிடம் சென்று எனக்கும் தியானம் செய்ய கற்று கொடுங்கள் என்று கேட்டானாம். அமைதி காப்பதும் ஒருவிதமான வைத்திய முறை தான், இது இன்றளவும் திபெத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. நம்மிடையே வெறுப்பையும் மற்றும் கோபத்தையும் காட்டுகிறவர்களுக்கு நாம் அமைதியை கொடுப்போம், அதற்கு நாம் அமைதியில் வாழ்வோம். இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியை அளிக்கும் பாஸ்கா காலத்தில் நாம் ஒவ்வொருவரும் உயிர்த்த ஆண்டவர் தருகின்ற அன்பின் பரிசாம் அமைதியை தமதாக்கி, அதை பிறரும் பெற்று வாழ முயற்சி செய்ய அழைப்பு பெறுகின்றோம். நமது வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் மருந்து இது. இன்று உலக நாடுகள், நமது சமுதாயம், குடும்பங்கள் மற்றும் நமது உள்ளங்கள் அமைதியில் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்க அழைப்பு பெறுகின்றோம்.
1. நம்மிடையே குடிகொள்ளுதல் (யோவான் 14:23)
2. தூய ஆவியை அனுப்புதல் (யோவான் 14:26)
3. அமைதியை அளித்தல் (யோவான் 14:27)
4. திரும்பி வருவதல் (யோவான் 14:28)
இந்த நான்கு வாக்குறுதிகளில் இன்றைக்கு நம்முடைய சிந்தனைக்கு அமைதியை பற்றி தியானிப்போம். மகிழ்ச்சி பொங்கும் பாஸ்கா காலத்தில் திருஅவையின் திருவழிபாட்டு வாசகங்களில் நாம் அதிகம் தியானிக்கும் இறைவார்த்தை பகுதிகள் உயிர்த்த ஆண்டவரின் காட்சிகள். திருவிவிலியத்தின் அடித்தளத்தில் உயிர்த்த ஆண்டவரின் பத்து காட்சிகள் தரப்பட்டிருக்கிறது.
1 . இயேசு மகதலா மரியாவுக்குத் காட்சி அளித்தல் (யோவான் 20 :11 -18)
2. இயேசு எம்மாவு வழியில் இரண்டு சீடருக்கு காட்சியளித்தல் (லூக்கா 24: 13-35)
3. சீமோனுக்கு காட்சியளித்தல் (லூக்கா 24: 34)
4 . 11-சீடர்களுக்கு காட்சி அளித்தல் (யோவான் 20: 19 -23)
5. தோமா மற்றும் சீடர்களுக்கு காட்சி அளித்தல்( யோவான் 20: 24- 29 )
6. சீடர்கள் ஏழு பேருக்கு காட்சியளித்தல்(யோவான் 21: 1- 14 )
7. கேபாவுக்கும் பன்னிருவருக்கும் காட்சி அளித்தல். (1 கொரிந்தியர் 15: 5)
8. 500க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகளுக்கு காட்சி அளித்தல் (1 கொரிந்தியர் 15: 6)
9. யாக்கோபுக்கும் திருத்தூதர்கள் அனைவருக்கும் காட்சி அளித்தல் (1 கொரிந்தியர் 15: 7)
10. விண்ணேற்றத்துக்கு முன்பு சீடர்களுக்கு காட்சி அளித்தல் (லூக்கா 24: 50-53)
திருவிவிலியம் சொல்லும் இந்த பத்து உயிர்த்த ஆண்டவரின் காட்சிகளில் ஐந்து காட்சிகள் இயேசு பேசிய வார்த்தைகளோடு நேர் கூற்றிலும், மற்ற ஐந்து காட்சிகள் இயேசு பேசிய வார்த்தைகள் அல்லாது அவர் காட்சி அளித்ததாக அயர் கூற்றிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உயிர்ப்புக்கு பிறகு அவர் சீடர்களை சந்திக்கும் இந்த நிகழ்வுகளில் எல்லாம் அவர்களிடம் 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக' என்று கூறுகின்றார். உயிர்த்த ஆண்டவரின் முதல் செய்தி "அமைதி". இயேசு உயிர்ப்புக்கு பிறகு தன் சீடர்களுக்கு தோன்றி சொன்ன முதல் வார்த்தை "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" (யோவான் 20: 19 &26). இயேசு ஒவ்வொரு முறையும் சீடர்களுக்கு காட்சி தந்த போது அவர்கள் குழப்பத்தில், கலக்கத்தில், துக்கத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு இயேசுவின் அமைதி தேவைப்பட்டது. இயேசுவின் பிறப்பு, பணிவாழ்வு, இறப்பு மற்றும் உயிர்ப்பு என அனைத்திலும் இயேசு அமைதியை தருபவராக இருக்கின்றார், இவர் அமைதியின் சின்னம் என்பதை அவரது வாழ்வே நமக்கு எடுத்து காட்டுகின்றது. ஒவ்வொரு முறையும் தன்னுடைய இறப்பை முன்னறிவிக்கின்ற போது இயேசு தனது சீடர்களிடம் "நான் உங்களோடு சிறிது காலமே இருப்பேன்' என்று கூறுகின்றார். ஆனால், இன்றைய நற்செய்தி பகுதியில் "நான் மீண்டும் வருவேன் மற்றும் உங்களுக்காக அமைதியை விட்டு செல்கிறேன்" என்கிறார். அதிலும் அவர் தரும் அமைதி இவ்வுலக அமைதியை போன்றது அல்லாது, என்றும் நிலைத்திருக்கும் அமைதி என்கிறார்.
நீடித்து நிற்கும் அமைதி:-
இயேசு இன்றைய நற்செய்தியில் "நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்". (யோவான் 14:2) என்கிறார். இன்றைக்கு நமது சமுதாயத்தில் நாம் பெறுகின்ற அமைதி சிறிது காலமே நம்மோடு இருக்கின்றது. அதன் பிறகு நமக்கு துன்பமும், கவலைகளும் வந்து கொண்டே இருக்கின்றது. நமது வாழ்க்கையில் அமைதி நிரந்தரமாக இருப்பதில்லை, ஆனால் இறைமகன் இயேசு தருகின்ற அமைதி என்றும் நம்மோடு நிலைத்து நிற்கும் அமைதி. எனவே நாம் நமது வாழ்வின் தாக்கங்கள், கவலைகள் மற்றும் கஷ்டங்களை நினைத்து ஒருபோதும் கவலை கொள்ள வேண்டாம் என்கிறார். அவர் தருகின்ற அந்த நீடித்த அமைதியை பெற்றுக் கொள்ள முயலுவோம். இயேசுவின் பிறப்பின் போது, விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது. (லூக்கா 2:13,14) என மண்ணகத்தில் இறைவனின் அமைதி அன்றே முன்னறிவிக்கப்பட்டது. இயேசு தனது சீடர்களோடு படகில் பயணித்த பொழுது புயற்காற்று வீசி கடல் கொந்தளித்த போது, “இரையாதே, அமைதியாயிரு” என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. (மாற்கு 4:39) மற்றும் பன்னிரண்டு ஆண்டுகளாக ரத்தப் போக்கினால் அவதியுற்ற பெண் இயேசுவினுடைய ஆடையை தொட்டதும் குணமாகினார். உடனே தன்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை அறிந்து அதைப்பற்றி கேட்கின்ற பொழுது அதை ஏற்றுக் கொள்கின்றார். அப்போது இயேசு அவரிடம், “மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ”(லூக்கா 8:48) என்றார். இவ்வாறு தனது பணி வாழ்வின் மூலமாக இம்மண்ணுலகில் அமைதியை விதைத்த இயேசு, தனது இறப்புக்கு பிறகும் உங்களுக்கு அமைதியை விட்டு செல்கின்றேன், இந்த அமைதி என்றுமே உங்களிடம் நிலைத்து நிற்கும் என்று கூறுகின்றார். இன்றைய முதல் வாசகத்தில் பிற இனத்தவர்கள் கட்டாயம் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமா என்பதை வைத்து பிரச்சினை எழுந்தபோது பவுலும், பர்னபாவும் பல தவறான போதனைகளுக்கு மத்தியில் அல்லல் பட்டனர். அதே சமயம் எருசலேம் சங்கத்தார் சமரச வழியின் மூலம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. பெரும் கருத்து வேறுபாடு மற்றும் நெடுநேர விவாதத்திற்குப் பின்பு நீதியான, சரியான முடிவை எடுத்து அமைதியை நிலைநாட்டுவதை பார்க்கின்றோம்.
அமைதியில் வாழ உடனிருக்கும் தூய ஆவி
இயேசு தான் விட்டு செல்கின்ற அமைதியில் நாம் என்றும் நிலைத்திருக்க துணையாளராம் தூய ஆவியை அனுப்புகின்றார். இன்றைக்கும் நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களிலும் தூய ஆவியின் அருளை பெற்று வாழ நம்மை முழுமையாக தயாரிக்க வேண்டும். நாம் பங்கெடுக்கின்ற ஒவ்வொரு திருவருட்சாதனங்களிலும் தூய ஆவி நிறைந்திருக்கின்றார். அவரில் நமது வாழ்வை வைப்போம், அமைதியில் திளைப்போம்.
நம் வாழ்வும் அமைதியும்
வாழ்க்கையின் அர்த்தமே மனஅமைதி தான். மனஅமைதியுடன் செய்யும் எந்த காரியமும் வெற்றி பெறும். அமைதியில்லா மனமிருந்தால் எந்த ஒரு செயலையும் நாம் திறம்பட செய்ய முடியாது. பொறுத்தார் பூமியாள்வார் என்பார்கள், இன்று குடும்பங்கள் இடையே பல சண்டை சச்சரவிற்குக் காரணம் பொறுமையின்மை தான். சில நேரங்களில் அமைதியாக இருப்பதே பல பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட தீர்வாகும். சிலர் அவசரப்படுவார்கள், பலருக்கு எதிலுமே பொறுமை இருக்காது.. ஆனால் அமைதி காத்துப் பாருங்கள்.. அதை விட மகிழ்ச்சி, நிம்மதி வேறு இருக்காது. யுனெஸ்கோவில் முகவுரை வாசகமானது “மனித உள்ளங்களில்தான் போர் தோன்றுவதானால் மனித உள்ளங்களில்தான் அமைதிக்கான அரண்கள் அமைக்கப்பெற வேண்டும்” என்கிறது. தனிமனித அமைதி ஏற்பட்டாலே சமூக அமைதியும், உலக அமைதியும் எளிதாகும்.
பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இரண்டு நாட்டு அரசர்கள் ஒரு முறை ஒன்றாக சந்தித்து மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருக்கின்றார்கள். பேசிக் கொண்டிருக்கின்ற பொழுது அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது. இதுவே அவர்களுக்கிடையே பிரிவு ஏற்பட காரணமானது. இருவரும் பேசாமலிருந்தார்கள், நாளடைவில் ஒருவர் மற்றவரிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தார்கள், யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை அவர்கள் தத்தம் கருத்துகளில் உறுதியாக இருந்தார்கள். இவர்களுக்கிடையே இருந்த இந்தப் பிளவு இரு நாடுகளுக்கிடையே பிளவாக மாறி, அதுவே இரு நாட்டிற்குமிடையே போர் எழக் கூடிய சூழ்நிலையை உருவாக்கியது. இதனை அறிந்த இரண்டு நாட்டு அரசர்களுடனிருந்த அமைச்சர்கள் இருவர் ஒருவரை ஒருவர் சந்தித்து இது பற்றி யோசித்தார்கள். பின்பு அவர்கள் இரு நாட்டு அரசர்களையும் ஒரு மரத்தின் அடியில் அழைத்து வந்தார்கள், அந்த மரத்தில் ஒரு அழகிய வாள் ஆனது தொங்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த வந்த அரசர், ஆஹா! என்ன அழகு, அதிலும் அதன் மேல் இருக்கின்ற பச்சை நிற கற்கள் மிக அழகாக இருக்கிறது என்று கூறினார். உடனே மறு பக்கத்திலிருந்த மற்றொரு அரசர், வாள் அழகு தான் ஆனால், அதிலிருப்பது பச்சை நிற கற்கள் அல்ல, சிவப்பு நிற கற்கள் என்றார். அவர்களுக்கிடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது, உடனே இரண்டு அமைச்சர்களும் அரசர்களே சற்று அமைதியாக இருங்கள், தாங்கள் இருவரும் கூறுவது சரிதான். இந்த வாளின் ஒரு பக்கத்தில் பச்சை நிற கற்களும் மற்றொரு பக்கத்தில் சிவப்பு நிற கற்களும் இருக்கின்றது. இப்படி தான் வாழ்க்கையிலும் நமது கண்ணோட்டங்களின் அடிப்படையில் நமது கருத்துகள் சரியாக தான் இருக்கின்றது. அதேபோல் மற்றவரின் கருத்துகளும் சரியாக தான் இருக்கும், இதை அமைதி என்னும் கருவி கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்கள். அப்போதுதான் அரசர்களுக்கு தங்களுடைய நிலை முழுமையாக புரிந்தது, அன்று முதல் அவர்கள் மீண்டும் நண்பர்களாகினர், இரு நாடுகளுக்கிடையே ஏற்படவிருந்த போர் நிறுத்தப்பட்டது, அங்கு அமைதி பிறந்தது. இன்றைக்கு நமது குடும்பங்களிலும் கணவன்-மனைவி, பெற்றோர்கள்-பிள்ளை, சகோதர சகோதரிகள் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டார் என பல வேளைகளில் சிறிய சிறிய கருத்து வேறுபாடுகள் அமைதியற்ற சூழலை நம்முடைய குடும்பங்களிலும் மற்றும் சமுதாயத்திலும் உருவாக்கி விடுகின்றது. நன்றாக யோசித்து, அமைதி என்னும் பொறுமையோடு அவரவர் கருத்துக்களை ஏற்று வாழ்வோம். அப்பொழுது நம் உள்ளத்திலும், இல்லத்திலும், சமுதாயத்திலும் மற்றும் நாட்டிலும் அமைதி பிறக்கும். எனவே, உயிர்த்த இயேசுவின் அமைதியில் குடிகொள்வோம். தூய பிரான்சிஸ் அசீசியார் ஜெபித்தது போல், அன்னை தெரசா ஜெபித்தது போல் "இறைவா என்னை உமது அமைதியின் கருவியாக்கும்" என உயிர்த்த ஆண்டவர் தரும் முதல் செய்தியாம் அமைதியை நம் வாழ்விலும் பெற்றுக் கொள்வோம்.
சிறப்பாக இலங்கை மற்றும் உக்ரைன் நாடுகளில் மீண்டுமாக அமைதி நிலவ இன்றைய நாளிலே செபிப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
அன்புடன்:-
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...
புத்தம் புதிய காணிக்கைப் பாடல்
(கேட்டு மகிழுங்கள்)
https://youtu.be/NKp1EXTZLWw