🌱விவிலிய விதைகள்🌱
பொதுக் காலம் 17-ஆம் வாரம்
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
ஞாயிற்றுக்கிழமை
நற்செய்தி:- யோவான் 6: 1-15
நம்பிக்கை தந்த பகிர்வு
பதினாறாம் நூற்றாண்டில், அன்னை மரியாள் குழந்தை இயேசுவை கரத்தில் ஏந்தி, எஜமானின் வீட்டிற்கு பால் எடுத்துச் செல்லும் வழியில், ஒர் குளத்தருகே இருந்த ஆலமரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த, ஒரு இந்து சிறுவனுக்கு தோன்றி தனது மகனுக்காக பால் கேட்டார், சிறுவன் அத்தாயின் குழந்தைக்காக பாலை கொடுத்தான். பிறகு எஜமானின் வீட்டிற்கு வந்ததும், தனது தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டு, பால் குறைந்ததற்கான காரணத்தையும் கூறினான். பாலை இவன் திருடியிருப்பானோ, என கோபமுற்ற எஜமான் பால் பானையை பார்த்த போது பால் பொங்கி பெருகியது. ஒரு தாயின் குழந்தைக்கு சிறிது பாலை பகிர்ந்தளித்தது பலரும் பால் அருந்துகின்ற அளவில் பலுகிப் பெருகியது என்பது வேளாங்கண்ணி மாதாவின் காட்சி என்பது நம் ஒவ்வொருவருக்கும் நன்றாகவே தெரியும்.
அன்று ஒரு சிறுவனின் பகிர்வு எவ்வாறு பாலில் மட்டும் அல்லாது, அன்னையின் மீது உண்டான பக்தியிலும் பலுகிப் பெருகியதோ, அதே போல இன்றைய நற்செய்தியிலும் ஒரு சிறுவனின் பகிர்வு அப்பத்திலும் மற்றும் மீனிலும் மட்டுமல்லாது, இயேசு என்னும் மனிதரிடத்திலும் பலுகி உலகம் முழுவதும் கிறிஸ்தவமாக பெருகி இருப்பதைப் பார்க்கின்றோம். இவை அனைத்திற்கும் அடிப்படையாக இங்கு நாம் பார்ப்பது நம்பிக்கை. பகிர்வுக்கும் அது பலுகிப் பெருகுவதற்கும் அடிப்படையாக நம்பிக்கையே அமைகின்றது. இது வெறும் அன்னையின் காட்சியிலும், இயேசுவின் புதுமையிலும் மட்டுமல்லாது, நம்முடைய வாழ்க்கையிலும் நம்பிக்கை பல பகிர்வுகளை உண்டாக்கும் என அழைப்பு விடுக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் இந்த பகிர்வு, அன்று இறைவன் பாலைவனத்தில் இஸ்ராயேல் மக்களுக்கு மன்னா உணவை பகிர்ந்ததையும், அவர் இறுதி இராவுணவின் போது சீடர்களுக்கு அப்பத்தைப் பிட்டு பகிர போவதையும் முன் அடையாளமாக வெளிப்படுத்துவதாக அமைகின்றது. இன்றைய நற்செய்தியில் மூன்று விதமான மனிதர்களையும், அவர்கள் வெளிப்படுத்தும் மூன்று விதமான நம்பிக்கையையும், அதன் காரணத்தையும் நாம் பார்க்கின்றோம்.
1. பிலிப்பின் நம்பிக்கை: (அவநம்பிக்கை)
2. அந்திரேயாவின் நம்பிக்கை: (சந்தேகம்)
3. இயேசுவின் நம்பிக்கை: (பகிர்வு)
1. பிலிப்பின் நம்பிக்கை: (அவநம்பிக்கை)
பெருந்திரளான மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று இயேசு விரும்பியபோது இவர்களுக்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? என்று பிலிப்பிடம் இயேசு கேட்கின்றார். பிலிப்பு மறுமொழியாக "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்று இயேசுவிடம் மறுமொழி கூறுவது அவருடைய அவநம்பிக்கையை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. பெத்சாய்தா ஊரைச் சார்ந்தவர் பிலிப்பு. இயேசு பெத்சாய்தாவிலும் தன்னுடைய புதுமைகளை செய்திருக்கின்றார், பிலிப்பு இயேசுவுடன் இருந்து எல்லா புதுமைகளையும் கண்டுணர்ந்த பின்பும் இயேசு மீது நம்பிக்கையற்று இருப்பதை இது நமக்கு காட்டுகிறது. இருநூறு தெனாரியம் என்று பிலிப்பு கூறுவது அவரது நம்பிக்கை பணம் மற்றும் பொருளின் மீது மட்டுமே உள்ளதே தவிர தன்னுடைய குருவான இயேசுவின் மீது இல்லை என்பதை நமக்கு காட்டுகிறது. பிலிப்பு காணக்கூடிய பணத்தையும் பொருளையும் மட்டுமே பார்த்தாரே தவிர காண இயலா இறையருளையும் இறைசக்தியையும் பார்க்கவில்லை. அதனால் தான் இயேசுவின் கேள்விக்கு அவர் நம்பிக்கையற்ற பதிலை தருகிறார். நம்பிக்கையற்ற தன்மை இறைவனையும் பார்க்காது, இறைவனுடைய அருளையும் பார்க்காது, பிலிப்பின் கண் முன்னே எண்ணற்ற நோயாளிகளை குணப்படுத்திய பிறகும், காற்றையும் கடலையும் கடிந்து கொண்டு சீடர்களின் அச்சத்தை நீக்கிய பிறகும், இயேசுவின் மீது நம்பிக்கையின்றி பதில் கூறுவது பிலிப்பின் அவநம்பிக்கையாகும்.
2. அந்திரேயாவின் நம்பிக்கை: (சந்தேகம்)
இயேசுவின் கேள்விக்கு சீமோன் பேதுருவின் சகோதரரான அந்திரேயா, இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்? என கூறுவது அவருடைய சந்தேகம் நிறைந்த நம்பிக்கையை காட்டுகிறது. அந்திரேயா இயேசுவின் மனநிலையை புரிந்து கொள்கின்றார். அதனால் தான் மக்கள் கூட்டத்தில் ஏதாவது இருக்கின்றதா என்பதை தேடி, ஒரே ஒரு சிறுவனிடம் மட்டுமே இருக்கின்றது என்பதை கண்டறிந்து இயேசுவிடம் கூறுகின்றார். அதே வேளையில் இயேசுவை முழுமையாக நம்பாத ஒரு நிலையைப் பார்க்கின்றோம். சந்தேக அல்லது கேள்வி கேட்கும் இத்தகைய நம்பிக்கை நாளடைவில் இறைநம்பிக்கையாக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. இத்தகைய நம்பிக்கை உடையோர் தங்களிடம் இருக்கின்ற சிறு ரொட்டி துண்டையும் இறைவன் முன் முழுமையாக காணிக்கையாகுபவர்களாக இருப்பார்கள்.
3. இயேசுவின் நம்பிக்கை: (பகிர்வு)
இயேசு தன் சீடர்களை சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டிருந்தாலும், இங்கு தன் தந்தையாகிய கடவுளின் மீது அவர் கொண்டிருக்கும் இறைநம்பிக்கை வெளிகாட்டப்படுகிறது. இயேசுவின் நம்பிக்கை பொருளையும், பணத்தையும் பார்க்கவில்லை. யாரிடம்? எது இருக்கிறது? என்று கண்டுபிடித்து அது சாத்தியமா? என்று கேள்வி கேட்கவில்லை. மாறாக இயேசுவின் நம்பிக்கை பகிர்வை உண்டாக்கியது. இயேசு "அனைவரையும் அமரச் செய்யுங்கள்" என்றார், கடவுளுக்கு நன்றி செலுத்தினார், யாவருக்கும் பகிர்ந்தளித்தார். இயேசுவின் இறைநம்பிக்கை கடவுளுக்கு நன்றி செலுத்தி, இருந்தவற்றை பலுகிப் பெருகச் செய்து, அனைவருக்கும் பகிர்ந்தளிக்கச் செய்தது. அப்பம் கொஞ்சம் இருக்கிறதா? நிறைய இருக்கிறதா? எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்றெல்லாம் இயேசு பார்க்கவில்லை. அவர் இறைவனில் நம்பிக்கை கொண்டார், அற்புதம் செய்தார், பலுகிப் பெருகியது அப்பமும் - மீனும் மட்டுமல்ல மாறாக இயேசுவும் மக்களின் உள்ளத்தில் பலுகிப் பெருகினார்.
நம்பிக்கை தந்த பகிர்வு:
இயேசு தந்தையாகிய கடவுள் மீது கொண்ட நம்பிக்கை ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளிக்க செய்தது. இயேசுவின் இத்தகைய பகிர்வால் வயிறார உண்ட மக்கள் மற்றும் இத்தகைய அற்புதத்தை கண்ட மக்கள் அவரில் நம்பிக்கை கொண்டு தாங்கள் சென்ற இடமெல்லாம் இயேசுவை பிறருக்கு பகிர்ந்தளித்தனர். இதையே தான் சீடர்கள் இயேசுவில் நம்பிக்கை வைத்து "படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்னும் இயேசுவின் வார்த்தையை ஏற்று உலகெங்கும் இயேசுவை பகிர்ந்து கொண்டனர். திருஅவையின் அனைத்து புனிதர்கள், மறைசாட்சிகள், ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள் மற்றும் பொதுநிலையினர் என அனைவரும், கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையை பிறரோடு பகிர்ந்து, கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆக நம்பிக்கை இயேசுவை பலுகிப் பெருகி பகிர செய்து கொண்டிருக்கின்றது.
இன்று நம்முடைய வாழ்க்கையிலும் நம்பிக்கை தான் பகிர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. பகிரப்பட வேண்டியது வெறும் உணவு மட்டுமல்ல, நம்மிடையே பகிர்வதற்கு நிறைய உண்டு, அவை நம்பிக்கை கொள்கின்ற போது தான் உருவாகும். கணவர், மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் மீது நம்பிக்கை கொள்ளுகின்ற போது தான், நாம் அவர்களுக்கு நம்முடைய அன்பை, மகிழ்வை, இரக்கத்தை மற்றும் உறவை பகிர முடியும். இறைவன் மீது நாம் கொள்ளுகின்ற முழுமையான நம்பிக்கை தான் நம்முடைய வாழ்க்கையை அவரிடம் பகிர வைக்கும். பகிர்வுக்கு அடிப்படையாக நமது தன்னம்பிக்கையும், பிறர் நம்பிக்கையும் மற்றும் இறை நம்பிக்கையும் திகழ்கிறது. ஆக, இந்த முப்பரிமாண நம்பிக்கையில் நாளும் வளர்வோம். அதன் வெளிப்பாடாக பிறரோடு பகிர்ந்து வாழ்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
- அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF