முதல் வாசகம்: திருத்தூதர் பணி 1: 1-11
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 9: 24-28; 10: 19-23
நற்செய்தி: லூக்கா 24: 46-53இயேசுவின் விண்ணேற்றம் தந்த மகிழ்ச்சி
இயேசு உயிர்த்தெழுந்து நாற்பதாம் நாள் விண்ணேற்றமடைந்த பெருவிழாவை தான் இன்று கொண்டாடுகின்றோம். இன்றைய விழா கிறிஸ்தவர்களாகிய நம் அனைவரையும் உயிர்த்த ஆண்டவர் விண்ணேற்றத்திற்கு முன் விட்டு செல்லும் மகிழ்ச்சியை பெற்றுக் கொள்ளவும் மற்றும் அதற்காக அவரின் உடனிருப்பை உணரவும் அழைப்பு தருகிறது. ஒருவர் எப்போதுமே மன கஷ்டத்துடன் வாழ்ந்து வந்தார். ஒரு நேரத்தில் அவரால், மனக்கஷ்டத்தை தாங்க முடியவில்லை. அதனால் அவர் ஒரு ஜென் துறவியை நாடி, அதற்கான காரணத்தை அறிய வேண்டும் என்று முடிவெடுத்து, துறவியைப் பார்க்க புறப்பட்டார். துறவி ஒரு மரத்தின் அடியில் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் அருகில் சென்று "குருவே! எனக்கு எப்போதுமே மனம் கஷ்டமாக உள்ளது. அதை எப்படி போக்குவது?" என்று கேட்டார். அதற்கு குரு அவரிடம், "ஒவ்வொரு நாளும் காலையில் எழும் போது நீ என்ன நினைப்பாய்?" என்று கேட்டார். அதற்கு வந்தவர், "இன்றும் மனம் கஷ்டமாக இருக்குமோ! என்று நினைத்து எழுவேன்" என்றார். அப்போது குரு "இது தான் தவறு. உன் மனம் கஷ்டமாக இருப்பதற்கு நீ தான் காரணம். காலையில் எழும் போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று மனதில் நீயாகவே நினைத்தால், கண்டிப்பாக நீ சந்தோஷத்தை உணர்வாய். கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டத்தை தான் உணர்வாய்" என்று கூறினார். சீடர்களும் இயேசுவின் இறப்புக்கு பிறகு அவரது பிரிவை நினைத்து வருத்தமுற்றார்கள், ஏனெனில் அவர்கள் அவர் உடனிருப்பை உணரவில்லை. ஆனால் அவரின் விண்ணேற்றத்திற்கு பிறகு உடனிருப்பை உணர்ந்து பெருமகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு சீடர்களிடம் ஒவ்வொருமுறையும் தன்னுடைய இறப்பை பற்றி அறிவிக்கின்ற பொழுதெல்லாம் அவர்கள் அதன் பொருட்டு வருத்தப்பட்டார்கள். இயேசுவின் இறப்புக்கு பிறகும் கூட பயத்திலும், சோகத்திலும் மற்றும் துன்பத்திலும் மூழ்கி கிடந்தார்கள். அதே ஆண்டவர் உயிர்த்து அவர்களுக்கு காட்சி அளித்த பொழுது அவர்கள் மீண்டுமாக புதுப்பொலிவு பெற்று மகிழ்ச்சியுற்றார்கள். இயேசு நாற்பது நாட்கள் கழித்து மீண்டும் அவர்களை பிரியும் போது அதாவது விண்ணேற்றம் அடையும் போது அவர்கள் வருத்தம் அடையாமல், பெருமகிழ்ச்சியோடு எருசலேம் சென்றதாக (லூக்கா 24: 52) இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. அவர் பிரிவை கண்டு வருத்தமுற்ற சீடர்கள் பெருமகிழ்ச்சி கொள்வதன் காரணம் இயேசு தனது விண்ணேற்றத்திற்கு முன் "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்தேயு 28:20) என்று கூறிய உடனிருப்பு வாக்குறுதி.
சாட்சிய வாழ்வு தரும் மகிழ்வு
இயேசுவினுடைய விண்ணேற்றம் இன்றைய நற்செய்தியாக தரப்பட்டிருக்கிறது, இது அவரின் மண்ணுலக பணியை நிறைவு செய்கிறது, அவர் விண்ணேற்றம் அடைவதற்கு முன்பு தன்னுடைய சீடர்களுக்கு எண்ணற்ற வாக்குறுதிகளையும் மற்றும் அழைப்புகளையும் கொடுத்திருந்தாலும், இறுதியாக இறையாசீரையும் மகிழ்ச்சியையும் வழங்குகிறார். விண்ணேற்றமடைந்த இறைமகன் இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் அதே மகிழ்ச்சியை வழங்குகிறார். அன்றைக்கு சீடர்கள் இயேசு தந்த மகிழ்ச்சியை பெற்றதற்கு காரணம் அவரின் அழைப்புக்கு செவி கொடுத்ததாகும். நற்செய்தி அறிவிப்பும் மற்றும் சாட்சிய வாழ்வும் என அவர் கொடுத்த அழைப்பை வாழ்வாக்க தயாராக இருந்தார்கள். இன்றைக்கு நாமும் இவற்றை நமது வாழ்வில் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இன்றைய முதல் வாசகம் இயேசுவின் விண்ணேற்பு மக்களுக்கு உணர்த்தும் வல்லமையையும் செய்தியையும் எடுத்துரைக்கிறது. அதே நற்செய்தியை அகிலமெங்கும் பறைசாற்ற நமக்கும் அழைப்பு தருகிறது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடிகளார் எபேசு நகர் மக்கள் கிறிஸ்துவை முழுமையாக அறிந்து கொள்ளவும், அவரை வாழ்விலே அனுபவித்து உணரவும் அவர்களுக்காக ஜெபிக்கிறார். இது சாட்சிய வாழ்வுக்கான அழைப்பாகும். இன்றைக்கு நாமும் நமது வாழ்க்கையில் இவ்விரண்டு செயல்பாடுகளையும், நமது இரு கண்களாக ஏற்று கிறிஸ்தவ வாழ்வில் பயணிக்க வேண்டும். "நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்து தான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்". (பிலிப்பியர் 3:20) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நம் தாய் வீடாம் விண்ணகம் செல்ல அடித்தளமாய் இருக்கும் இவற்றை ஏற்று மகிழ்வாக வாழ்வோம். சீடர்கள் இயேசுவின் உடனிருப்பு உணராத தருணங்களில் வருத்தமாக கவலையோடு இருந்தார்கள், அதேபோல தான் நமது வாழ்க்கையிலும் நம் இறைவன் என்றும் நம்மோடு இருக்கின்றார் என்பதை நமது வாழ்வில் உணராத பொழுது மகிழ்ச்சி நிலைத்திருக்காது. மகிழ்ச்சி என்பது நம்மிடம் தான் உள்ளது. நாம் அதை உணர்ந்து பிறரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்கிறார்கள். நம்மில் இம்மகிழ்ச்சியை உணர்வதற்கு சாட்சிய வாழ்வாம் கிறிஸ்தவத்தை வாழ்ந்து காட்ட வேண்டும். இவையனைத்திற்கும் மேலாக இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாக தனது சீடர்களிடம் உங்களுக்காக துணையாளராம் தூய ஆவியை அனுப்புவேன் என்னும் வாக்குறுதியையும், இறையாசீரையும் தருகிறார். இதுவும் சீடர்களின் மகிழ்வுக்கு காரணமாக அமைகின்றது.
நம் வாழ்வும் மகிழ்வும்
இன்றைய உலகில் நாம் எல்லோரும் மகிழ்ச்சியை எதிர்பார்க்கின்றோம். வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதை மகிழ்ச்சியாக வாழ்ந்து விட வேண்டும் என என்னுகிறோம். எப்பொழுதும் மனதில் மகிழ்ச்சியோடும் புன்சிரிப்போடும் இருக்க பழக வேண்டும். நம்முடைய மகிழ்ச்சி நம் வீட்டினரையும் சுற்றத்தாரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். மகிழ்ச்சி தான் நம்முடைய பலம். அதைத் தேடி நாம் அலைய வேண்டாம் அது நம்முள்ளே தான் இருக்கிறது. சந்தோஷமாக இருக்க நாம் எதையோ தேடுகிறோம். ஆனால் அது கிடைத்த பின்னரும் சந்தோஷமாக இருப்பதில்லை. பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவன், தான் கல்லூரிக்குச் சென்ற பின்னர் மேலும் சுதந்திரமாக இருப்பேன் அதனால் மகிழ்ச்சியடைவேன் என்று எண்ணிக் கொள்கின்றான். சந்தோஷமாக இருக்கின்றாயா என்று ஒரு கல்லூரி மாணவனைக் கேட்டால், வேலை கிடைத்த பின்னர் தான் மகிழ்ச்சியுடன் இருப்பேன் என்று கூறுகிறான். நல்ல வேலையில் அல்லது தொழிலில் இருக்கும் ஒருவரிடம் பேசினால், முற்றிலும் சரியான ஒரு வாழ்க்கைத் துணை கிடைத்த பின்னரே மகிழ்ச்சியடைவேன் என்று கூறுகிறான். அத்தகைய துணையுடன் இருப்பவரைக் கேட்டால், ஒரு குழந்தை வேண்டும், அப்போது மகிழ்வடைவேன் என்கிறான். குழந்தைகள் இருப்பவரை மகிழ்வுடன் இருக்கிறீர்களா என்று கேட்டால், அவர், அது எப்படி முடியும், குழந்தைகள் நன்றாக வளர வேண்டும், நல்ல கல்வி கற்க வேண்டும், அவர்கள் சுயமாக நிற்க வேண்டும், அப்போதுதான் சந்தோஷம் என்கிறார். தங்கள் பொறுப்புக்களையெல்லாம் நிறைவேற்றி, ஒய்வு பெற்று விட்டவர்களை மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள். அவர்கள் தங்கள் இளமைக் காலத்தினை எண்ணி ஏங்கிக் கொண்டிருப்பர். இது தான் இன்றைய சூழல், இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படும் நிலை. இதைத்தான் இயேசு "வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!" என கவலையின்றி மகிழ்வாய் வாழ அழைக்கிறார் (மத்தேயு 6:26). வாழ்க்கையில் 80 சதவீதம் சந்தோஷம், 20 சதவீதம் துன்பம். ஆனால் நாம் அந்த 20 சதவீதத்தையே விடாமல் பிடித்துக் கொண்டு, அதை 200 சதவீதமாக்கி விடுகின்றோம் ! உலகில் அதிக ஆயுள் வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆலிஸ் ஹெர்ஸ். இவர் 108 வயது வரை வாழ்ந்தார். அவரிடம் ஒருமுறை, கடினமான வாழ்க்கைக்கு இடையே எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்வது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் நல்லதையே தேடுகிறேன். நல்லதையே தேர்வு செய்கிறேன். இங்கு பல கெட்ட விஷயங்கள் இருந்தாலும், நான் நல்லதையே தேடி ஏற்றுக்கொள்வதால் எனது மகிழ்ச்சி நிலைக்கிறது.” என்றார். அவரது அனுபவம், நமக்கும் மகிழ்ச்சியின் வேரை நினைவுபடுத்துகிறது. இன்று அந்த நல்லவர் தான் இயேசு கிறிஸ்து, அவர் காட்டும் வழிகளும் வாழ்வும் தான் நல்லவைகள். உலகின் மாயைகளை நினையாமல் இயேசுவை நினைப்போம், அவர் தரும் நல்லவைகளை நமது வாழ்வில் உணர்வோம், மகிழ்வில் திளைப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
அன்புடன்:-
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...
புத்தம் புதிய காணிக்கைப் பாடல்
(கேட்டு மகிழுங்கள்)
https://youtu.be/NKp1EXTZLWw