பொதுக்காலம் 33ஆம் வாரம்
(ஆண்டு- A)
15-11-2020
ஞாயிற்றுக்கிழமை
கணக்கு கொடுக்க தயாராயிருங்கள்
ஒவ்வொரு செயலுக்கும்
எதிர்வினை இருக்கிறது. இது சர் ஜசக் நியூட்டனின் இயற்பியல் விதிகளில் மூன்றாவது, மற்றும் விண்வெளி விமானத்திற்கு மிகவும் முக்கியமானது. இது எவ்வாறு செயல்படுகிறது. நீங்கள் எதையும் தள்ளினால், அது உங்களை மீண்டும் தள்ளும். நீங்கள் எதையாவது எறிந்தால் அது அதிக சக்தியுடன் பின்னால் தள்ளப்படுகிறது.
நீங்கள் உங்களிடமிருந்து எதையாவது தூக்கி எறிந்தால், உங்களுக்கும் தளத்திற்கும் இடையிலான உராய்வு உங்களை அதே இடத்தில் வைத்திருக்க எதிர்ப்பை ஏற்படுத்துகிறது. அதனால் நீங்கள் உராய்வை அகற்றிவிட்டு மீண்டும் முயற்சித்தால், நீங்கள் எறிந்த விஷயத்திலிருந்து அது விலகிச் செல்லும் வரை நீங்கள் விலகிச் செல்வீர்கள். இது
பெரிய உந்துதல்,
அதனால்தான் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் பின்வாங்குகின்றன. பீரங்கி பந்து ஒரு திசையில் பறக்கும்போது,
பீரங்கி எதிர் திசையில் நகர்கிறது.
ஜெட் விமானங்கள், ராக்கெட்டுகள் இவ்வாறு செயல்படுகின்றன.
ஆக, ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பதை நாம்
அறிவோம். இது வெறும் செயலுக்கு மட்டுமல்ல நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். வாழ்க்கையில் நமது பிறப்புக்கு,
நாம் பேசுகின்ற பேச்சுக்கு, செய்கின்ற செயலுக்கு, ஏன் நம் வாழ்க்கை முழுவதற்கும்
நிச்சயம் எதிர்வினை உண்டு. அப்படியானால் அனைத்திருக்கும்
நாம் பதில் கூற வேண்டும், கணக்கு கொடுக்க வேண்டும்.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நாம் நம்முடைய வாழ்க்கைக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட அழைப்பு தருகின்றது. இறைவன் நமக்கு கொடுத்திருக்கிற இந்த வாழ்க்கைக்கு, இறைவனிடமிருந்து நாம் பெற்றவைக்கு, நாம் நம்முடைய வாழ்க்கையிலே பேசி கொண்டிருப்பதற்கு, செய்து கொண்டிருப்பதற்கு, நாம் ஒரு நாள் நிச்சயம் கணக்கு கொடுக்க வேண்டும் ஏனென்றால் அனைத்திற்கும் ஒரு எதிர்வினை உண்டு, இன்றைய நற்செய்தி வாசகம் அதற்கான ஒரு அழைப்பை நமக்கு தருகின்றது. நற்செய்தியில் நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தன் பணியாளர்களை அழைத்து அவர்களிடையே ஐந்து, இரண்டு மற்றும் ஒன்று என தாலந்துகளை கொடுப்பதை பார்க்கின்றோம்.
அவர் நெடுங்காலத்திற்கு பின் வந்த போது, அவர்களை அழைத்து, கணக்கு கேட்பதிலே
நாம் உணர்வது, நாம் நம்முடைய வாழ்க்கையில் எதைப் பெற்றாலும், எவ்வளவு பெற்றாலும், எதை செய்தாலும், என்ன சொன்னாலும்
ஒரு நாள்
அனைத்துக்கும் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்கின்றோம்.
நற்செய்தியில் காணும் பணியாளர்களின் அடித்தளத்தில் நாம் இரண்டு வகையான மனிதர்களை காண்கின்றோம்.
1. தன்னிலை அறிந்தவர்கள்
தன்னிலை உணர்ந்த மனிதர்கள் நற்செய்தியில் பார்க்கின்ற ஐந்து மற்றும் இரண்டு தாலந்துகளை பெற்ற பணியாளர்கள். இவர்கள்
நம்பிக்கைக்குரியவர்கள், நல்ல பணியாளர்கள், பொறுப்புகளில் சிறந்தவர்கள், முன்மதி உடையவர்கள் மற்றும் உழைப்பவர்கள்.
2. தன்னிலை அறியாதவர்கள்
தன்னிலை அறியாத மனிதர்கள் நற்செய்தியில் பார்க்கின்ற ஒரு தாலந்தை பெற்ற பணியாள். இத்தகையோர் சோம்பேறிகள், உழைக்க மனம் இல்லாதவர்கள், பொல்லாத பணியாளர்கள், வாழ்க்கையில் செய்யும் செயல்களை தள்ளி போடுபவர்கள் மற்றும்
முன்மதியற்றவர்கள்.
நற்செய்தியில் கானும் இத்தகைய பணியாளர்களில்,
நாம் நம்முடைய வாழ்க்கையில் தன்னிலையை உணர்ந்தவர்களாக வாழ்கின்றோமா? அல்லது தன்னிலையை உணராதவர்களாக
வாழ்கின்றோமா? என்பதை பற்றி சற்று சிந்தித்துப் பார்ப்போம். நான் என் நிலையை உணர்ந்தவராக வாழுகின்ற போது, உழைக்க மனம் உள்ளவராய், முன்மதியுடையவராய், நம்பிக்கைகுரியவராய், பொறுப்புகளில் சிறந்தவராய் மற்றும் இறைவனில் நல்ல ஒரு பணியாளராய் இருப்பேன். இன்றைய நாளிலே அத்தகையோராய் நாம் வாழ்வதற்கு இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு
அழைப்பு தருகின்றது. அப்பொழுது தான் நான் என்னுடைய வாழ்க்கையில் நான் பெறுபவைகளுக்கு எல்லாம்
கணக்கு கொடுக்க முயற்சிப்பேன். அதாவது பொறுப்புகளில் சிறந்தவனாக நாளும் வளர்வேன், என் வாழ்க்கையும் வளரும்.
நமது வாழ்வின் பாதையில், நான் எவைகளுக்கெல்லாம் கணக்கு கொடுக்க வேண்டும். எவைகளில் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும்.
A. சொன்னவைக்கு...
எனது வாழ்க்கையில் நான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும். என்னுடைய வார்த்தைகள் அனைத்தும் அதற்கு இணையான மாற்று வினையை உண்டாக்குவதாக இருக்கின்றது. நான் பேசுகின்ற வார்த்தைகள் மற்றவரை வளப்படுத்துகின்றதா?
அல்லது மற்றவரை காயப்படுத்துவதாக இருக்கின்றதா? என்னுடைய வார்த்தைகள் மற்றவர்களை வாழ வைக்கின்றதா?
அல்லது மற்றவர் வாழ்வை அழிக்கின்றதா? சிந்தித்துப் பார்ப்போம். அன்று இறைவனின் வார்த்தை உலகைப் படைத்தது.
"உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, எழுந்து படுக்கையை எடுத்துக்கொண்டு போ"
என்றதும்
படுத்த படுக்கையாக இருந்த
முடக்குவாதமுற்றவர் எழுந்து நடந்து சென்றார். அக, இயேசுவின் வார்த்தை பல நோயாளிகளை குணப்படுத்தியது."இன்றே நீ என்னுடன் விண்ணக வீட்டில் இருப்பாய்"
என்று இயேசு சிலுவையில்
நல்ல கள்வனை பார்த்து கூறியது
வார்த்தை பிறரை வாழ வைக்கும் என்பதையும், வார்த்தைக்கு உண்டான சக்தியையும் எடுத்து கூறுகின்றது. நம் வார்த்தைகள் நம்முடைய வாழ்வுக்கு வளர்ச்சி கொடுக்க அதை உணர்ந்து பேசுவோம். வார்த்தைகளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து பேசுவோம்.
B. செய்தவைக்கு...
நமது வாழ்க்கையில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் கூட நாம் கணக்குக் கொடுக்க கடமைப்பட்டிருக்கின்றோம். என்னுடைய செயல்கள் ஒரு மாற்றத்தை உருவாக்கும்.
விவிலியத்தில் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளை போல என்னுடைய செயல்கள் இருக்க வேண்டும். என்னுடைய செயல்கள் நல்ல நிலத்தில் விழுந்த செயல்களாக இருக்கின்ற பொழுது, அதனுடைய வினையானது மென்மேலும் பலுகிப் பெருகும். என்னுடைய செயல்கள் நல்ல சமாரியனின்
செயல்களை போல அமைய வேண்டும். அது என்னுடைய வாழ்க்கையை வளம் பெற செய்யும். பல வேளைகளில் நம்முடைய செயல்கள் ஊதாரி மைந்தனின் செயல்களை போல நமக்கு கிடைத்த
வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தாது வீண்படுத்துகின்ற செயல்களாக இருக்கிறது. நம்முடைய செயல்கள் மன்னிக்க மறந்த பணியாளனை போல பிறரை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத செயல்களாக இருக்கின்றது. இன்று என்னுடைய செயல்கள் எத்தகைய செயல்களாக இருக்கின்றது? என்னுடைய செயல்கள் அனைத்திற்கும் எதிர்வினை உண்டு நான் ஒரு நாள் எனது செயல்களுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
C. பெற்றவைக்கு...
நம்முடைய வாழ்க்கையில் நாம் இறைவனிடம் இருந்து பெற்றுக்கொண்ட அனைத்திற்கும் ஒருநாள் கணக்கு கொடுக்க வேண்டும்.
"ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது, ஏனெனில் அவர் என்னை அபிஷேகம் செய்து உள்ளார்"
என்று ஆண்டவர் தனக்குக் கொடுத்து இருக்கின்ற அந்த ஆவியின் நிமித்தமாக ஏழைகளை சந்திக்க வேண்டும், சிறைபட்டோரை சந்திக்க வேண்டும், அவர்களுக்கு பணி செய்ய வேண்டும் என்னும் இறை மகன் இயேசுவின் வார்த்தையின் அடித்தளத்தில், நாமும் நம்முடைய வாழ்க்கையிலே, நாம் இறைவனிடம் இருந்து பெற்று கொண்டிருக்கின்ற நம்முடைய திறமைகள், நம்முடைய திறன்கள், வாய்ப்புகள் மற்றும் நமது வாழ்க்கை என அனைத்திற்கும் நாம் இறைவனுக்கு
கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து வாழ்வோம்.
கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே,
"நீங்கள் எல்லோரும் ஒளியைச் சார்ந்தவர்கள். பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே, மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம் என இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளாரின் வார்த்தைகளுக்கு இணங்க
ஐந்து மற்றும் இரண்டு தாலந்தை பெற்ற பணியாளர்களை போல, நாமும் நம்முடைய வாழ்க்கையில் இறைவன் ஒரு நாள் நமக்கு கொடுத்திருக்கின்ற யாவற்றிற்கும் கணக்கு கேட்பார், நாம் அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒரு உணர்வோடு, தன்னிலை அறிந்தவர்களாக, உழைப்பவர்களாக, அறிவுத் தெளிவோடு வாழ்பவர்களாக மாறுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
|
|
||||
|
|
|
|||
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம். |