Friday, January 7, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு பெருவிழா - ( ஆண்டு- C) ----- 09-01-2022- ஞாயிற்றுக்கிழமை

 



                    நீங்கள் திருமுழுக்கு பெற்ற நாள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதை கொண்டாடுவீர்களா? நமது பிறந்த நாளை தெரிந்து, அதை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்றோம். ஆனால், நமது திருமுழுக்கு  நாளை மறந்து விடுகின்றோம்.  ஏனென்றால் நமது திருமுழுக்கின் முக்கியத்துவத்தை நாம் எப்பொழுதும் உணர்வதில்லை.  இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்குப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். இது  இயேசுவின் மற்றும் நமது திருமுழுக்கின் முக்கியத்துவத்தை  உணர்ந்து கொள்ள அழைப்பு தருகிறது.  இயேசுவின் திருமுழுக்கு பெருவிழா கிறிஸ்து பிறப்பு காலத்தின் நிறைவாகவும் அமைகிறது.

   திருவிவிலியம் நமக்கு எண்ணற்ற  திருமுழுக்கின் நிலைகளை/வகைகளை எடுத்துரைக்கிறது.

1. யோவானின் திருமுழுக்கு (மத் 3:6)
2. இயேசுவின் திருமுழுக்கு (மத் 3:13-17)
3. தூய ஆவியில் திருமுழுக்கு (1 கொரி 12:12-13) 
4. நெருப்பில் திருமுழுக்கு ( லூக். 3:16) 
5. நம்பிக்கையாளரின் திருமுழுக்கு (தி. பணி 2:41)
6. மேகத்தால்/கடலால் திருமுழுக்கு-மோசேயின் திருமுழுக்கு  (1 கொரி 10:2)
7. இறந்தோருக்காக திருமுழுக்கு ( 1 கொரி 15:29)

           ஆனால், கத்தோலிக்க திருஅவையில் மூன்றுவிதமான திருமுழுக்கை பற்றி சொல்லப்படுகிறது.
 
 1. தண்ணீரால் திருமுழுக்கு:-
 
              இது திருஅவையிலிருக்கும் பொதுவான முறையாகும்.  நாம் எல்லோருமே குழந்தையாக இருந்த பொழுது, குருவானவர் நம்மீது தண்ணீர் ஊற்றி,  தமத்திருத்துவத்தின் பெயராலே நமக்கு பெயர் வைத்து கிறிஸ்துவில் நம்மை இணைத்தார். இது தண்ணீரால் திருமுழுக்கு என்பதாகும்.

 2. இரத்தத்தால் திருமுழுக்கு:-
 
                      திருமுழுக்குப் பெறாத ஒருவர் கிறிஸ்துவுக்காக, அவரின் பொருட்டு தன்னுடைய உயிரையே அர்ப்பணித்து, அவருக்காக இரத்தம் சிந்துவது தான் இந்த திருமுழுக்கு.  இயேசுவின் பிறப்பின் பொழுது எண்ணற்ற குழந்தைகள் ஏரோதுவால் கொல்லப்பட்டார்கள். (மத் 2:16)  இந்த மாசில்லா குழந்தைகள் கிறிஸ்துவின் பொருட்டு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக திருமுழுக்கு பெற்றவர்கள்.  தொடக்க கால கிறிஸ்தவர்கள் உரோமையர்களால் இயேசுவின் பெயரால் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட போதும்  இரத்தத்தால் திருமுழுக்குப் பெற்றார்கள். ஆக இரத்தத்தால் திருமுழுக்கு என்பது தண்ணீரால் திருமுழுக்கு போல திருஅவையால் ஏற்றுக்கொள்ளபட்டதாகும் (CCC-1258).

3. விருப்பத்தால் திருமுழுக்கு

                           கிறிஸ்தவத்தை சாராத ஒரு நபர் தன்னுடைய வாழ்வின் ஏதாவது ஒரு நிலையில்  அல்லது சாகும் தருவாயில் தான் ஒரு கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என மனதால் நினைத்தாலோ மற்றும் கிறிஸ்தவராக மாறுவதற்கு தன்னைத் தயாரித்து கொண்டிருக்கையில் இறந்திருந்தாலோ,  அவர்கள் தங்களது விருப்பத்தால் திருமுழுக்கு பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள் (CCC-1260). இன்று நாம் கொண்டாடுகின்ற  இயேசுவின் திருமுழுக்கு, நமது  திருமுழுக்கை நினைவுபடுத்துகின்றது.  இது திருமுழுக்கின் உன்னதமான நிலைகள், அதன் அர்த்தங்கள் மற்றும் அது தரும் அழைப்பு பற்றியும் புரிந்து கொள்ள அழைக்கிறது. இதற்கு அடித்தளமாய் இருப்பது  இயேசுவின் திருமுழுக்கு.

இயேசுவின் திருமுழுக்கு:-

                 ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான தருணம் இருக்கும். அது அவனுடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கும் மற்றும் புது மாற்றத்தை தரும். இறைமகன் இயேசுவின்  வாழ்க்கையிலும் அத்தகைய சில தருணங்கள் இருந்தது. அவர் தன்னுடைய பன்னிரண்டாம் வயதில் ஆலயத்திலேயே தங்கியிருந்து தந்தைக்கும் அவருக்கும் உண்டான உறவை  முதன் முதலாக கண்டுணர்ந்தது.(லூக்கா 3:23).
                  
                    ஏறக்குறைய 18-வருடங்களுக்கு பிறகு அவருடைய 30-வது வயதில் மீண்டும் அப்படி ஒரு தருணம் ஏற்படுகிறது, அது தான் அவரின் திருமுழுக்கு.  பெரும் கூட்டம் ஒன்று  யோவானை நோக்கி திருமுழுக்கு பெறுவதற்காக செல்கிறது. அந்தக் கூட்டம் கடவுளோடு தங்களுடைய உறவை புதுப்பிப்பதற்காக மற்றும் தந்தையாகிய கடவுளை கண்டு கொள்வதற்காக சென்றது. இயேசுவும் அங்கு சென்றது 18- ஆண்டுகளுக்கு முன்பு ஆலயத்தில் கண்டு கொண்ட தந்தையின் உறவில் இணைந்து கொள்வதற்காகும். இயேசுவின் திருமுழுக்கு அவரது மூன்று விதமான சாயலை நமக்கு வெளிப்படுத்துகிறது.

 1. இறைச்சாயல் 
 2. மனித சாயல் 
 3. பணிச்சாயல்

1. இறைச்சாயல்:-

                       தந்தையோடு உறவை மீண்டும் புதுப்பித்த அந்த தருணம் தான் இயேசுவின் இறைச்சாயலை எடுத்து காட்டுகிறது.  அவரின் திருமுழுக்கின் போது மூவொரு இறைவனின் பிரசன்னத்தை பார்க்கின்றோம். தந்தையாகிய கடவுள் எனும் வார்த்தையும் புறா வடிவில் தூய ஆவியாரின் வருகையும் என  இங்கு இவர்கள் கிறிஸ்துவின் இறைச்சாயலை உறுதிப்படுத்துகிறார்கள். இதற்கும் மேலாக தந்தையாகிய இறைவன் "என் அன்பார்ந்த மகன் நீயே" (லூக்கா 3:22) என எடுத்துரைத்தது, இவர் கடவுளின் மகன் மற்றும் இறைச்சாயல் கொண்டவர் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
 
2. மனித சாயல்:-

                யோவானிடம் பெருந்திரளான மக்கள் இறைவனை தங்களது வாழ்க்கையில் தேடியவர்களாக மனமாற்றம் பெற்று திருமுழுக்கு பெறுகிறார்கள்,  அவ்வேளையில் இயேசுவும் திருமுழுக்கு பெறுகிறார். இறைவனைத் தேடும் மக்களோடு தன்னையும் அடையாளப்படுத்தி கொள்வதற்காக இந்த திருமுழுக்கு. இதைத்தான் இயேசுவின் திருமுழுக்கின் போது கேட்ட அந்த விண்ணக குரலும் உறுதி செய்கிறது. என் அன்பார்ந்த மகன் நீயே" (லூக்கா 3:22) என்பது திருப்பாடல் 2;7 -லிருந்து எடுக்கப்பட்டது.  இது வரவிருக்கின்ற மெசியா இவர் என்பதை சுட்டிக்காட்டுகிறது. "உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (லூக்கா 3:22) என்பது இறைவாக்கினர் எசாயாவின் நூலில் காணப்படுகிறது (எசாயா 42 ;1).  இது இவர் தந்தையின் பணியாளனாக இறை சித்தத்தை நிறைவேற்ற மனித சாயலில் தன்னை அர்ப்பணித்ததை  காட்டுகிறது. தங்களுடைய பாவத்திலிருந்து மனமாற்றம் பெறுவதற்காக, யோவானிடம் திருமுழுக்கு பெற்ற மக்களோடு இயேசுவும் திருமுழுக்கு பெறுவது, அவர் ஒரு பாவி என்பதை காட்டுவதற்காக அல்ல.  மாறாக மனித பாவங்களைப் போக்க தெய்வமே மனித சாயலை தெரிந்து கொண்டதாகும். ஆக இயேசுவின் திருமுழுக்கு மனித சாயலையும் காட்டுகிறது.

 3. பணிச்சாயல்:-

                     இயேசுவின் பணிச்சாயல் என்பது  திருமுழுக்கு அவரது பணி வாழ்வின் தொடக்கமாக அமைந்ததாகும். "என் கடன் பணி செய்து கிடப்பதே"  என்னும் கூற்றுக்கு ஏற்ப, "தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டாற்றுவதற்கே வந்தேன்" என்னும் வார்த்தையை வாழ்வாக்க, ஊற்றாக அமைந்தது தான் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு. முப்பது ஆண்டுகள் தன்னுடைய பிரசன்னத்தால் நற்செய்தியைஅறிவித்தவர், அடுத்த மூன்று ஆண்டுகள்  ஆற்றும் மகத்தான வரலாற்று நினைவுக்கு தொடங்கியிருக்கும் பணிக்கு அச்சாணி தான் இந்த திருமுழுக்கு. அவரின் இந்த மகத்தான பணியை போல எவரும்  இம்மண்ணுலகில்   செய்ததும் இல்லை, ஏன்? இவ்வாறு செய்ய போவதும் இல்லை என்று  கூறலாம். அதற்காக தம்மை கடுமையாக தயாரித்து அளப்பெரிய இறைபணியாம் மீட்புப்பணியை இறைமகன் இயேசு கிறிஸ்து செய்தார் என்பதை தான் அவரது இந்த திருமுழுக்கு நினைவுப்படுகின்றது. "ஜெபமின்றி ஜெயம் இல்லை, தூய ஆவியின்றி பணியில் நிறைவில்லை" என்பதை முற்றிலும் உணர்ந்த இறைமகன் இயேசு கிறிஸ்து, ஆவியின் துணைப்பெற்று பணி வாழ்வை தொடங்க முற்படுகின்ற ஒரு நினைவுச் சின்னம் தான் அவரது இந்த திருமுழுக்கு.

கிறிஸ்தவர்களின் திருமுழுக்கு:-

                  கிறிஸ்தவர்களின் திருமுழுக்கு என்றால் என்ன?  திருமுழுக்கு "baptizein" என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்தும் அதாவது ஆங்கிலத்தில் "plunge" அல்லது "immerse". இது தமிழில் தண்ணீரில் மூழ்குதல் என பொருள் படும். அன்று நாம் குழந்தையாக இருந்த பொழுது நம்முடைய ஜென்ம மற்றும் கர்ம பாவத்தை நீக்கி,  இறைவனுக்கும் திருஅவைக்கும் நம்மை பிள்ளைகளாக மாற்றிய ஒரு உன்னதமான திருவருட்சாதனம் தான் இந்த திருமுழுக்கு. இது ஒரு திருவருட்சாதனம் = திரு + அருள் + சாதனம். கடவுளின் அருளை நமக்கு பெற்று தரும் ஒரு சாதனமாகும். இதன்  முக்கியத்துவத்தை  கத்தோலிக்க மறைக்கல்வி நமக்கு ஏழு நிலைகளில் எடுத்துரைக்கிறது. (Catechism of Catholic Church - CCC-1213)

1. கிறிஸ்தவத்தின் அடித்தளம்.
2. தூய ஆவியில் நாம் வாழ்வதற்கான நுழைவுவாயில்.
3. மற்ற திருவருட்சாதனங்கள் பெறுவதற்கான முதல் படி.
4. பாவத்திலிருந்து நம்மை கழுவி புது பிறப்பெடுக்க வைக்கிறது.
5. இறைவனின் பிள்ளையாக மாற்றுகிறது.
6. கிறிஸ்துவின் அங்கத்தினர்களாக உருவெடுக்க வைக்கிறது.
7. திருஅவையில் நம்மை இணைத்து அதன் பணி பொறுப்பை நமக்குத் தருகிறது.

             இன்று நாம் எதற்காக திருமுழுக்குப் பெற்றோம்? மேற்காணும் திருமுழுக்கின் அர்த்தங்களை நமது வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறோமா? என சிந்திப்போம்.  கிறிஸ்துவிடம் திருஅவையில் நம்மை இணைத்து இறையருளை நமக்கு  வழங்கியிருக்கும் திருமுழுக்கு என்னும் திருவருட்சாதனம் நம்மை இறைவனின் பணி வாழ்விற்கு அழைக்கிறது. இதைத்தான் பெற்றோர்களாகிய நாம் கொடுத்த திருமுழுக்கு வாக்குறுதிகளும் நமக்கு நினைவூட்டுகிறது. "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்"( மத்தேயு 28:19).  எனும் இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்க்கையால் நாம் நம்முடைய திருமுழுக்கை வெளிப்படுத்த அழைப்பு பெறுகிறோம். நமது வார்த்தை, செயல் மற்றும் வாழ்வு நாம் திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்கள் என்பதை பிறருக்கு எடுத்து கூற வேண்டும்.  அத்தகையோராய் நாம் வாழ்வோம்.                                                                                                
                                                               இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

அன்புடன்,

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF

வீடியோவாக பார்க்க...