Friday, July 7, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலத்தின் 14-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A)- 09-07-2023- ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 14-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(09 ஜூலை  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: செக்கரியா 9: 9-10
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8: 9, 11-13
நற்செய்தி: மத்தேயு 11: 25-30

சுமைகளை சுகங்களாக்க...
(வாக்குறுதியோடு அழைப்பு)


ஒரு நாட்டின் அரசர் தன்னுடைய மக்களில் சிறந்த பொதுநல உள்ளம் கொண்டவரை கண்டறிய விரும்பினார். அதனால் அந்நகரத்தின் முக்கிய சாலையின் நடுவே ஒரு பெரிய கல்லை வைத்துவிட்டு அவருடைய படைவீரர்களோடு அருகே ஒளிந்து கொண்டார். பலரும் அவ்வழியே சென்றார்கள், அந்த கல் இருப்பதை பார்த்து ஒதுங்கி சென்று விட்டார்கள். இன்னும் சிலரோ அந்த கல்லை யார் இங்கு வைத்தது என்று புலம்பிக் கொண்டே சென்றார்கள். அதில் ஒரு சிலர் இந்த கல்லை ஒரு ஓரம் நகர்த்தினால் நன்றாக இருக்கும் என பேசி அதை நகர்த்தாமலே சென்றுவிட்டார்கள். அவ்வழியே காய் மூட்டையை முதுகில் சுமந்து வந்த விவசாயி மட்டும் அந்தக் கல்லை பார்த்துவிட்டு, தன் சுமையான காய் மூட்டையை இறக்கி வைத்துவிட்டு கல்லை ஓரம் நகர்த்துவதற்காக முயற்சித்தார். அது அவரால் முடியவில்லை இருப்பினும் விடாமுயற்சியோடு அதை சாலையின் ஓரம் ஒதுக்கினார். அப்போது ஒளிந்திருந்த அரசரும் அவருடைய படைவீரர்களும் அவரை பாராட்டி அவருக்கு பொற்காசுகளை பரிசாக கொடுத்தார்கள். இச்சிறுகதை வாழ்வின் சுமைகளை கையாளும் நான்கு வகையான மனிதர்களை சுட்டிக் காட்டுகிறது.
1. சுமைகளே இல்லாமல் மகிழ்வோடு வாழ நினைப்பவர்கள். (கதையில் கல்லை பார்த்துவிட்டு ஓரம் ஒதுங்கி சென்றவர்கள்)
2. சுமைகளை கண்டு புலம்பி அதை ஏற்காமல் வாழ்பவர்கள். (கதையில் யார் இந்த கல்லை சாலையில் போட்டது என புலம்பிவிட்டு சென்றவர்கள்)

3. சுமைகளை ஏற்க நினைத்து ஏற்காமல் வாழ்பவர்கள். (கதையில் கல்லை புரட்டி ஓரம் நகர்த்தினால் நன்றாக இருக்கும் என பேசிவிட்டு அதை நகர்த்தாமலே சென்றவர்கள்)

4. சுமைகளை ஏற்று வாழ்வை சுகமாக்கியவர்கள். (கதையில் கானும் விவசாயியை போல எத்தகைய சுமை இருந்தாலும் அதை சுமந்து பரிசு பெற்றவர்கள்)

கிறிஸ்தவர்களாகிய நாம் மேற்காணும் நான்கு வகையான மனிதர்களில் எத்தகையோராய் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என சிந்தித்து பார்க்க இன்று அழைப்பு பெறுகின்றோம். பொதுக்காலத்தின் 14-வது ஞாயிற்றுக்கிழமையின் இறைவார்த்தை வழிபாடு நம் சுமைகளை இயேசுவில் சுகங்களாக மாற்ற அழைப்பு தருகிறது. இன்றைய நற்செய்தி இயேசுவின் அழைப்பையும், வாக்குறுதியையும் மற்றும் அதற்கான உள்ளத்தையும் எடுத்துரைக்கிறது.

அ. இயேசுவின் அழைப்பு:-

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." (மத் 11:28) என்னும் இயேசுவின் வார்த்தையில் நாம் வாழ்வின் சுமைகளோடு அவரில் சரணடைய அழைப்பு பெறுகின்றோம். இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தில் ஒரு மனிதன் நான்கு விதமான சுமைகளைக் கொண்டிருக்கின்றான்.

1. உடல் சுமைகள்: இது மனிதனுடைய உழைப்பால் ஏற்படும் உடல் வலிகளையும், காயங்களையும் மற்றும் நோயால் ஏற்படும் வலிகளையும் சுட்டிக்காட்டும் சுமைகளாகும்.

2. உள்ளத்து/உணர்வு சுமைகள்: இது மனித உள்ளத்திலும் உணர்விலும் ஏற்படும் இழப்பு, கவலை, ஏமாற்றம் மற்றும் துக்கம் ஆகியவற்றால் ஏற்படும் சுமைகளாகும்.

3. பொருளாதார சுமைகள்: இது மனிதன் தன்னுடைய மற்றும் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் உறைவிடம் ஆகியவற்றை பூர்த்தி செய்வதற்காக சுமக்கும் சுமைகளாகும். இது வேலையின்மை, கடன், பொருள் மற்றும் பணமின்மை ஆகியவற்றால் உள்ளத்திலும் மற்றும் உணர்விலும் ஏற்படும் சுமைகளாகும்.

4. ஆன்மீக சுமைகள்: இது நாம் செய்யும் பாவங்களால் இறைவனை விட்டு பிரிந்து வாழும்போது ஏற்படும் சுமைகளாகும்.

இறைமைந்தன் இயேசு கிறிஸ்து இத்தகைய சுமைகளை சுமந்து என்னிடம் வாருங்கள் என்கிறார், குறிப்பாக இறை உறவிலிருந்து நம்மைப் பிரித்தெடுக்கும் பாவங்களை அவரில் அர்ப்பணித்து மன்னிப்பை பெற்று சுகமான ஒரு வாழ்வை வாழ அழைக்கிறார். இயேசு வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு மோசேயின் சட்டங்களாக 613 இருந்தது. இவைகளை பின்பற்ற பரிசேயர் மற்றும் சதுசேயர்களின் செயல்பாடுகளே மக்களுக்கு பெரும் சுமைகளாக மாறியது. இவ்வாறு மக்கள் சமூக, சமுதாய மற்றும் அரசியல் சுமைகளால் அவதியுறும் நிலையை அறிந்துதான் இன்றைய நற்செய்தியில் இயேசு என்னிடம் வாருங்கள் என்று அழைப்பு கொடுக்கிறார். அதே அழைப்பு நம் வாழ்வின் சுமைகளுக்கும் தரப்படுகிறது.

ஆ. இயேசுவின் உள்ளம்:-

"நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்." (மத் 11:29a) என இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தைகள் கனிவான மற்றும் தாழ்ச்சி கொண்ட அவரது உள்ளத்தை சுட்டிக் காட்டுகிறது. இயேசுவினுடைய இத்தகைய கனிவான மற்றும் மனத் தாழ்மையுடைய உள்ளம் தான் நம்முடைய பாவம் என்னும் சுமைகளுக்காக சிலுவையை ஏற்க வைத்தது. இன்றைக்கும் நம்முடைய அன்றாட சுமைகளை ஏற்க தயாராக இருக்கிறது. இன்றைய முதல் வாசகத்திலும் வருகின்ற அரசர் நீதியுள்ளவர், வெற்றி வேந்தர் மற்றும் எளிமையுள்ளவர் என அரசராம் இறைவனின் உள்ளத்தின் குணங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் அவர் கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் ஏறி வருவார் என கூறப்படுவது கழுதை தாழ்ச்சியான குணத்தை கொண்டிருப்பது போல அவரும் கொண்டிருக்கிறார் என்பதாகும். தாழ்ச்சியான உள்ளமின்றி அமைதி இல்லை. சுமைகளை சுகங்களாக்க தாழ்ச்சியான உள்ளம் அவசியமாகிறது. இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியில் இயேசு, “ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்" (மத் 11:25) என்று கூறுகிறார். தந்தையாகிய கடவுள் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினார் என்பது குழந்தைகளின் கள்ளங்கபடற்ற கனிவான உள்ளத்தை எடுத்துரைப்பதாகவும், அத்தகைய கனிவான உள்ளத்தவராய் நம் சுமைகளை ஏற்று இறைப்பாதம் சரணடைய நாமும் அழைப்பு பெறுகின்றோம் என்பதையும் காட்டுகிறது.

இ. இயேசுவின் வாக்குறுதி:-

"என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்." (மத் 11:29b) என்னும் இயேசுவின் வார்த்தைகள் நமக்கு மற்றும் நம் சுமைகளுக்கு இளைப்பாறுதல் என்னும் சுகம் நிச்சயம் கிடைக்கும் என்னும் வாக்குறுதியை தருகிறது. நுகம் என்பது ஏரிலும் வண்டியிலும் காளைகளைப் பூட்டும் மரம் அதாவது மேல் வைக்கும் மரத்தடி. இது அவைகளை நகராமல் நேராக செல்ல உதவும் சுமைகளாகும். இரு காளைகள் மீது நுகத்தை வைக்கும் போது அது ஒன்றுக்கு மட்டும் சுமையை தராது இரண்டுக்கும் என சமநிலைப்படுத்தி சுமைகளை எளிமையாக்கும். என் நுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பது இயேசு தன் அன்பென்னும் நுகத்தால், நம் சுமைகளை பகிர்ந்து, நம்மோடு உடன் நடந்து இளைப்பாறுதல் தருவார் என்பதாகும். நம் வாழ்வின் சுமைகளை சுகங்களாக்க இயேசு தயாராக இருக்கிறார். இன்றைய முதல் வாசகமும் இறைவனின் மக்களுக்கு இளைப்பாறுதல் என்னும் விடுதலை அளிக்க அரசர் வருவார் என்னும் வாக்குறுதியை அளிக்கிறது. இன்றைய இரண்டாம் வாசகம் இவ்வுலகின் ஊனியல்புக்கு ஏற்றவாறு வாழாமல் இறைவனுடைய ஆவிக்கு ஏற்றவாறு வாழ்வதற்கு அழைப்பு தருகின்றது. இறைவனுடைய ஆவி நம்மை அவரில் சரணடைய அழைப்பு தருகின்றது. நம் மனித இயல்பால் சுமக்கும் சுமைகளை குறிப்பாக பாவம் என்னும் சுமைகளை இயேசுவிலே சுகங்களாக்குவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.