🌱விவிலிய விதைகள்🌱
தவக்காலத்தின் 3-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(12 மார்ச் 2023, ஞாயிறு)
வழங்குபவர்
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை
முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 17: 3-7
இரண்டாம் வாசகம்: உரோமையர் 5: 1-2, 5-8
நற்செய்தி: யோவான் 4: 5-42
நிலைவாழ்வு தரும் தண்ணீர்
ஒருவர் பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றார். அங்கிருந்த பணம் கொடுப்பவரிடம் சீட்டு எழுதிக் கொடுத்து பணத்தைப் பெற்று, அதை எண்ணிய போது ஒரு தாள் குறைவாக இருப்பது போல் தோன்றியது. அப்போது அவர் பணம் கொடுப்பவரிடம் இதை இன்னொரு முறை இயந்திரத்தில் எண்ணி கொடுக்கும்படி கேட்டார். அதற்கு அவரோ ஏன் ஒரு தாள் குறைவாக இருக்கிறதா? இப்பொழுது அதற்கெல்லாம் நேரமில்லை, நீங்களே சரியாக எண்ணுங்கள் என்று கூறினாராம். அதற்கு அந்த நபர் இல்லை ஒரு தாள் கூட இருப்பது போல் தெரிகிறது என்று சொல்ல, உடனே பணம் கொடுப்பவர் அதை வேகமாக வாங்கி ஒரு முறைக்கு நான்கு முறை இயந்திரத்திலும் கையிலும் எண்ணி கொடுத்தாராம். இதிலிருந்து நாம் தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பேசினால் நிச்சயம் மாற்றமிருக்கும் என்பதை உணர்கிறோம். இன்றைய நற்செய்தியிலும் இயேசு சமாரியப் பெண்ணோடு சரியான வார்த்தைகளை பேசி அவருடைய தாகங்களுக்கு வாழ்வு தரும் தண்ணீரைத் தந்து மாற்றத்தை ஏற்படுத்துவதை பார்க்கின்றோம்.
இயேசுவும் சமாரியர்களும்
இயேசு தன்னுடைய மூன்று ஆண்டு பணி வாழ்வில் பல்வேறு சூழல்களில் சமாரியர்களை சந்தித்திருக்கிறார். லூக்கா 10: 25-37 வசனங்களில் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு நல்ல சமாரியர் உவமையை எடுத்துரைக்கிறார். உயிருக்காக போராடிக் கொண்டிருந்தவரை அதாவது குருவும் மற்றும் லேவியரும் கைவிட்டுப் போனவரை சமாரியர் ஒருவர் காப்பாற்றுவதை எடுத்துரைக்கிறார். அதுமட்டுமல்ல லூக்கா 17 :11 -17 வசனங்களை வாசிக்கின்ற பொழுது 10 தொழுநோயாளர்கள் இயேசுவிடம் வருகின்றார்கள். எல்லோரும் இயேசுவின் வார்த்தையை கேட்டு குருவிடம் சென்று குணமடைந்த போது, ஒரு நபர் மட்டும் அதாவது சமாரியர் மட்டும் இயேசுவிடம் நன்றி கூற வருவதை பார்க்கிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசு கிணற்று அருகிலிருந்த சமாரிய பெண்ணை சந்திப்பதை வாசிக்கிறோம். இவ்வாறு இயேசு பல வேளைகளில் சமாரியர்களை சந்தித்திருந்தாலும், நற்செய்தியில் சமாரியப் பெண்ணோடு உரையாடி அவர் தாகத்திற்கு வாழ்வு தரும் தண்ணீரை தருவது புது அனுபவமாக அமைகிறது. இன்றைக்கு அதே அனுபவத்தை நாமும் பெற்று இயேசு தரும் வாழ்வின் தண்ணீரை நமதாக்க அழைக்கப்படுகின்றோம். சமாரியப் பெண்ணுக்கு இரண்டு
விதமான தாகங்கள் இருந்தது.
1. சமுதாய தாகம்
கிமு 722-லிருந்து யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் எப்போதும் பகைமையுணர்வு இருந்து வந்தது. யூதர்கள் உயர்ந்தவர்கள், அறிவாளிகள் மற்றும் ஞானிகள் என்ற ஒரு நிலைப்பாடும், சமாரியர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற ஒரு நிலைப்பாடும் இருந்த சூழல் அது. அதுமட்டுமல்லாது யூதருக்கும் சமாரியருக்கும் இடையே பல்வேறு நிகழ்வுகளால் உறவு சீர்குலைந்து இருந்தது. அவர்கள் ஒருவர் மற்றவரை வெறுத்தனர், அவர்களிடையே பகைமை இருந்தது. அதனால் தான் யூதர்கள் எருசலேமுக்கு செல்லுகின்ற பொழுது சமாரியாவின் வழியாக செல்லாமல், யோர்தான் நதியை கடந்து 'பெரேயா' வழியாக அதாவது இரு மடங்கு தூரம் அதிகமாக பயணித்தார்கள். அதனால்தான் இயேசு குடிக்க தண்ணீர் கேட்கின்ற போது, நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்க தண்ணீர் கேட்பது எப்படி? என கேட்கிறார். அது மட்டுமல்லாது இயேசு வாழ்ந்த காலத்தில், ஆண்கள் சமூகத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தி பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதினார்கள். இந்த சமுதாயம் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரு தவிப்பும் தாகமும் இந்த சமாரிய பெண்ணில் இருந்தது.
2. சமய தாகம்
இயேசுவின் காலத்தில் பாலஸ்தீன நாட்டை அதாவது இஸ்ராயேலை மூன்று பகுதிகளாகப் பிரித்திருந்தார்கள். வடக்கே கலிலேயா தெற்கே யூதேயா, கலிலேயோவுக்கும் யூதேயாவுக்கும் நடுவே சமாரியா இருந்தது. அந்தச் சமாரியா பகுதியில் சிக்கார் என்னும் ஊர் இருந்தது, இது பழைய ஏற்பாட்டு மரபுகளில் மைய இடமாகவும் சமாரியர்களின் வழிபாட்டுத் தலமாகவும் இருந்தது. சமாரியர்களின் நம்பிக்கையின் மையமான சிக்காரில் சமாரியப் பெண் சமய தாகத்தோடு இருக்கிறார். அந்த ஊரிலே ஈசாக்கின் மகன் யாக்கோபு அவருடைய மகன் யோசேப்புக்குக் கொடுத்த கிணறு இருந்தது. அதன் நீர் சுவையாக இருந்ததால் ஊர் மக்கள் எல்லோரும் அதில் தண்ணீர் எடுக்க வருவார்கள். அப்படி தனது உடல் தாகத்தைப் போக்க நினைத்த சமாரியப் பெண்ணின் உள்ளத்தில் சமய தாகமும் இருந்தது. ஆம், ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என இயேசு சொல்வது சமாரியர்கள் ஆசீரிய நாடு கடத்தலுக்கு பின் வழிபட்டு வந்த ஐந்து பிற இனத்து (அதாவது பாபிலோன், ஊத்தா, அவ்வா, ஆமாத்து, செபர்வயிம் நகரத்து தெய்வங்களை) வழிபட்டதை குறிப்பதாக இருக்கிறது. (2 அரச 17: 24 தொ) ஏனெனில் 'பாகால்' என்கிற எபிரேய வார்த்தைக்கு கணவர் மற்றும் பிற இனத்து கடவுள் என்று இரு பொருள் இருந்தது. ஆக இவ்வாறு சமாரியர்கள் பிற தெய்வங்களை வழிபட்டு சமய தாகத்தில் இருந்தனர். எனவேதான் இறைமகன் இயேசு கிறிஸ்து உம்முடன் இருப்பவர் உன் கணவர் அல்ல என கூறுகிறார். இது சமாரியப் பெண் வழிபடும் கடவுள் உண்மை கடவுள் இல்லை என்பதை காட்டுகிறது.
இவ்வாறு இயேசு சந்தித்த சமாரியப் பெண் சமய மற்றும் சமுதாய தாகங்களில் தவித்திருந்தாள். இதை இயேசு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்னும் வார்த்தையில் தொடங்கி தன் உரையாடலின் வழியாய் உணர வைத்து வாழ்வு தரும் தண்ணீரை கொடுத்து புது வாழ்வை தருகிறார்.
வாழ்வு தரும் தண்ணீர்
நேர்மையாளர்களை அல்ல பாவிகளையே மனம் திரும்பி வாழ அழைக்க வந்தேன் என இயேசு எடுத்துரைத்ததற்கு ஏற்ப பாவியான சமாரிய பெண்ணின் சமுதாய மற்றும் சமய தாகத்தை வாழ்வு தரும் தண்ணீரைத் தந்து போக்குகிறார். பழைய ஏற்பாட்டில் வாழ்வு தரும் தண்ணீர் தூய ஆவியாக சுட்டிக்காட்டப்படுகிறது. "நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன்."(எசே 36:25-26) மற்றும் "தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்; வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன்; உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்; உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன்" (எசாயா 44:3) மேலும் யோவான் நற்செய்தி 7வது அதிகாரம் 37 & 39 இறைவார்த்தைகளில் இயேசு எழுந்து நின்று உரத்த குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக் குறித்தே அவர் இவ்வாறு சொன்னார். என ஆவியாரே வாழ்வு தரும் தண்ணீர் என மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது." இயேசு சமாரியப் பெண்ணோடு உரையாடுகையில் அவர் சிறிது சிறிதாக இயேசுவின் மீது நம்பிக்கையில் வளர்வதைப் பார்க்கின்றோம். அதனால்தான் 'ஐயா' என்று மரியாதையுடன் அழைக்கத் தொடங்கிய (11:5) சமாரியப் பெண் இயேசுவை ஒரு இறைவாக்கினராகப் பார்க்கத் தொடங்குகிறார் (19). அவரது நம்பிக்கை இன்னும் அதிகமாக, இயேசுவை அவர் மெசியா எனக் கண்டு கொள்கிறார். இறுதியாக அவரை உலக மீட்பராக ஏற்றுக் கொண்டு சாட்சியும் பகர்கிறார். இவ்வாறு இயேசு சமாரியப் பெண்ணுக்கு வாழ்வு தரும் தூய ஆவியை தருகிறார்.
நம் வாழ்வின் தாகங்கள்
இயேசு தந்த வாழ்வு தரும் தண்ணீரைப் பெற்ற சமாரியப் பெண் இயேசுவே மெசியா என உலகிற்கு அறிக்கையிட்ட முதல் நற்செய்தியாளர் ஆகிறார். இந்த நற்செய்தி அறிவிப்பு தான் இவர் பாவ வாழ்விலிருந்து புது வாழ்வுக்கு கடந்த சென்றதன் அடையாளமாகிறது. இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவருமே சமாரியப் பெண்ணை போல பல்வேறு தாகங்களுக்கு உட்பட்டிருக்கிறோம். சமய, சமுதாய, இன, மொழி, குடும்ப மற்றும் எண்ணற்ற உள்ளத்து தாகங்கள் அன்றாடம் நம்மை நிலைவாழ்வு தருகின்ற நீருக்காக ஏங்க வைத்துக் கொண்டிருக்கிறது. நம் ஒவ்வொருவருக்குமே வாழ்வு தருகின்ற தண்ணீரை தருபவராக இறைமகன் இயேசு இருக்கின்றார். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகமும், "நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது." (உரோமையர் 5:5) என்கிறது. நம்பிக்கையோடு அவர் பாதம் சரணடைகின்ற ஒவ்வொருவருக்கும் நிலைவாழ்வு தரும் தண்ணீரால் புது வாழ்வை அவர் தருவார். கல்வாரி மலையில் திருச்சிலுவையில் தாகமாய் இருக்கிறது என்று இவ்வுலகின் பாவமென்னும் தாகத்தை தீர்த்து துணையாளராம் தூய ஆவியின் வழியாய் நிலைவாழ்வு தரும் தண்ணீரை தந்த இயேசு நம் ஒவ்வொருவருக்கும் அதை என்றும் தர காத்திருக்கிறார். நம்பிக்கையோடு அவரிடம் செல்வோம், புது வாழ்வு பெறுவோம். இறைவன் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.