தவக்காலம் 1-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
முதல் வாசகம்: இணைச்சட்டம் 26: 4-10
இரண்டாம் வாசகம்: உரோமையர் 10: 8-13
நற்செய்தி: லூக்கா 4: 1-13
இறைவார்த்தையே அடித்தளம்
(...சோதனைகளை சாதனைகளாக்க...)
சில நாட்களுக்கு முன்பு நான் சென்னையில் பயணித்த போது, சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதில் "Today's Pain, Tomorrow's Gain" என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது இன்றைய துன்பம் நாளைய பலன். கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, நமது வாழ்க்கையில் நாம் படுகின்ற ஒவ்வொரு துன்பமும் நம்மை எதிர் காலத்தில் வளர்த்தெடுக்கும் வழிகளாக இருக்கின்றது. பல வேளைகளில், இந்தத் துன்பங்களை மற்றும் சோதனைகளை சரியான முறையில் கையாளத் தெரியாமல், நாம் அதிலே மூழ்கி விடுகின்றோம். இதனுடைய நாளைய பலனை அனுபவிக்காமல் போய் விடுகின்றோம். இன்றைய நற்செய்தி வாசகம் நமது வாழ்வில் சோதனைகளை சரியான முறையிலே கையாளுவதற்கான வழியை நமக்கு எடுத்துரைக்கிறது. அதில் இயேசு பாலைவனத்தில் அலகையால் சோதிக்கப்படுகிறார். அவர் சோதனைக்குப்பட்ட பாலைவனப் பகுதி பாலஸ்தீன நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள யூதேயா நாட்டின் எல்லைக்குட்பட்டது. சாக்கடலை தொடர்ந்த 50 மைல் நீளமான பகுதியாகும். அலகை இயேசுவை மூன்று முறை சோதிக்கிறது. இந்த மூன்று சோதனைகளும் கிறிஸ்தவர்களாகிய நாம், நமது வாழ்வில் சோதனைகளின் மற்றும் துன்பங்களின் சூழலில் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது மற்றும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறது, குறிப்பாக பின்வரும் மூன்று செயல்பாடுகளை கவனத்தில் ஏற்போம்.
1. சூழலை விட்டு விலகாதே
2. செய்ய கூடாதவற்றை செய்யாதே
3. இறைவனை சந்தேகிக்காதே
1. சூழலை விட்டு விலகாதே
முதல் சோதனை:- கற்களை அப்பமாக்கி உண்பது.
இயேசு சோதனைக்குட்பட்ட பாலைவனப் பகுதி மணலை காட்டிலும் ஒரு விதமான கற்கள் கொண்ட பகுதியாக இருந்தது. எனவே தான் சாத்தான் இந்த கற்களை அப்பமாக மாற கட்டளையிடும் என்கிறது. அதற்கு இயேசு "மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என்கிறார் (இணைச்சட்டம் 8 : 3). இது கிறிஸ்தவ வாழ்வில் வரும் சோதனைகளை எதிர் கொள்ள புதிய சூழல்களை நாடிச் செல்லத் தேவையில்லை என்கிறது. நாம் இருக்கும் சூழலை விட்டு விலகாமல், இருக்கும் சூழலில் சோதனைகளை சாதனைகளாக்க வேண்டும் என்னும் கருத்தை முன் வைக்கிறது. இயேசு பசியாய் இருக்கிறார் என்பதை அறிந்த சாத்தானும் அவருக்கு ஒரு புதிய சூழலை உருவாக்க முயலுகின்றது. இது உணவு இல்லாத ஒரு சூழலிலிருந்து உணவு இருக்கின்ற ஒரு சூழலுக்கு மாறி செல்வதாகும். இங்கு சாத்தான் உருவாக்குகின்ற சூழல், அழிந்து போகின்ற உணவு, ஒரு தற்காலிக சூழல். ஆனால் இறைமகன் இயேசு கிறிஸ்து நிறைவாழ்வை தருகின்ற, சோதனைகளை சாதனையாக்கின்ற ஒரு சூழலில் நிலைத்து வெற்றி கொள்ள அழைக்கின்றார். எனது குடும்பத்தில் ஒரே பிரச்சனையாக இருக்கிறது, கடன் தொல்லையாக இருக்கிறது என்று குடும்பத்தின் பொறுப்புகளிலிருந்து விட்டு விலகி வேறு ஒரு புதிய சூழலுக்கு ஓடிச் செல்வது. என் நண்பன் இதுவரைக்கும் மகிழ்ச்சியாக இருந்தான், இனி அவன் கஷ்டப்படுகிறான் இந்த சூழலில் நான் ஒருபோதும் இருக்கக் கூடாது என்று அந்த சூழலை விட்டு வேறு ஒரு புதிய சூழலுக்கு ஓடோடி செல்வது. இந்த பள்ளியில், கல்லூரியில் மற்றும் வேலை செய்யும் இடத்தில் எனக்கு பிரச்சனையாக இருக்கிறது. அதனால் நான் வேறு ஒரு பள்ளிக்கு, கல்லூரிக்கு மற்றும் அலுவலகத்திற்கு செல்கிறேன் என மாறி செல்வது. இவை தான் இன்று நாம் செய்யும் தவறுகளாக இருக்கின்றது. நாம் வாழ்க்கையில் பெறக்கூடிய ஒவ்வொரு சோதனைகளையும் இயேசுவை போல், அந்த சூழலிலே நிலைத்து நின்று, சோதனைகளை சாதனைகளாக மாற்ற தான் இயேசுவினுடைய இந்த முதல் சோதனை நமக்கு அழைப்பு தருகிறது.
2. செய்ய கூடாதவற்றை செய்யாதே
இரண்டாம் சோதனை:- என்னை வணங்கு என சாத்தான் கூறுதல்.
நீ என்னை வணங்கு என சாத்தான் சோதிப்பதும், அதற்கு இறைமகன் இயேசு கிறிஸ்து "உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக" என்கிறார் (இணைச்சட்டம் 6; 13). வாழ்வில் நாம் எத்தகைய ஒரு நிலையில் இருந்தாலும் சிலவற்றை மாற்ற முடியாது, மாற்றவும் கூடாது. கடவுள் என்றால் அவர் கடவுள் தான், சரியானது என்றால் அது சரியானது தான், தவறானது என்றால் அது தவறானது தான். நமக்கு சோதனை வந்து விட்டது என்பதற்காக இறைவனுக்கு தரும் முக்கியத்துவத்தை சாத்தானுக்கு தர இயலாது என்பதை இது எடுத்துரைக்கிறது. இறைமகன் இயேசு கிறிஸ்துவுக்கு சாத்தானை வணங்கினால் தன் நிலை மாறும் என்னும் சோதனை வந்த பிறகும் மாற்றக் கூடாதவற்றை மாற்ற கூடாது என்பதற்காக தன் சோதனையில் நிலைத்து நிற்கிறார், அதை சாதனையாக மாற்றுகிறார். அத்தகையோராய் வாழ நாமும் அழைக்கப்படுகிறோம். நான் இயேசுவிடம் வேண்டினேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை, அதனால் நான் வேறு ஒரு தெய்வத்தை தேடி செல்லுகிறேன். அந்த குருவானவர் என் மகனை மந்திரித்து அவனக்கு நலமாகவில்லை, அதனால் நான் வேறு ஒரு பூசாரியிடம் சென்று அவனை காட்டப்போகிறேன். எங்க குடும்பத்திற்கு சோதனையாக வந்து கொண்டிருக்கிறது, அதனால் நான் தாயத்துக் கட்டப்போகிறேன் மற்றும் எலுமிச்சை பழத்தை மந்திரித்து வீட்டில் தொங்க விடப்போகிறேன். ஆலயத்தில் செய்கின்ற ஜெபம் எனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் பெந்தகோஸ்து கூட்டத்துக்கு செல்கிறேன் என ஒரு சோதனை வந்ததால் செய்யக்கூடாத மற்றும் மாற்றக்கூடாதவற்றை மாற்றி செயல்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நாம் எத்தகைய ஒரு சூழலுக்கு சென்றாலும் வாழ்வில் சிலவற்றை மாற்றாது, சிலவற்றின் மதிப்பை உணர்ந்து அதில் நிலைத்து நிற்க வேண்டும். இவை உலகளாவிய உண்மை, இதில் நாம் நிலைத்து நிற்போம்.
3. இறைவனை சந்தேகிக்காதே
மூன்றாவது சோதனை:- நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும் என்னும் சோதனை.
எருசலேம் ஆலயத்தின் உயர்ந்த பகுதியில் நின்று, 'நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்' என்னும் சோதனைக்கு, "உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்" என்கிறார் இயேசு (இணைச்சட்டம் 6; 16). சாத்தான் இரண்டு முறையும் சோதித்த போது கூறாத ஒரு பதில், மூன்றாவது சோதனையின் போது 'உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்க வேண்டாம்' என்கின்றார் இயேசு. இறைவனை சோதிப்பவர்களாக நாம் வாழ வேண்டாம் என்னும் அழைப்பை இது தருகிறது. இன்று நாமும் நமது வாழ்க்கையில் பலமுறை இறைவனை சோதிக்க முயலுகின்றோம். நமது வாழ்விலும் பல வேளைகளில் கஷ்டம் துன்பம் நேரிட்டால் இறைவனிடம் நாம் ஜெபிக்கும் போது "நீ உண்மையாகவே சக்திவாய்ந்த தெய்வமாக இருந்தால் என்னுடைய கஷ்டத்தை நீக்கி விடு என்றெல்லாம் நாம் ஜெபிக்கிறோம். இன்னும் பல வேளைகளில் இறைவா நீ இந்த உலகத்தில் இருக்கிறாயா? உனக்கு கண் இருக்கிறதா? இவையனைத்தும் நாம் இறைவனை சோதிப்பதாக மற்றும் சந்தேகிப்பதாக அமைகிறது. அத்தகைய ஒரு நிலையை நாம் நம்மிடமிருந்து முழுமையாக அகற்ற முயலுவோம்.
இறைவார்த்தையே அடித்தளம்
நாம் சிந்தித்த இந்த மூன்று செயல்பாடுகளும், சோதனை காலத்தில் நம்மை அறியாமலே நாம் செய்யும் செயல்களாகும். இவை தான் நமது சோதனைகளை சாதனையாக்க எழும் தடைகளாகும். இயேசு தனது பணி வாழ்வுக்கு முன் எழுந்த இந்த சோதனைகள் அனைத்தையும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் வெளிகொணர்கின்றார். ஒவ்வொரு முறையும் சாத்தான் அவரை சோதித்த போது, மறைநூலில் எழுதியுள்ளதை அதாவது இறைவார்த்தையை எடுத்துரைத்து அதிலிருந்து சோதனைகளை சாதனையாக்கியதை பார்க்கின்றோம். இன்று நமது வாழ்க்கையிலும் சோதனைகள், வேதனைகள், கஷ்டங்கள், பாரங்கள், கடன் தொல்லைகள் மற்றும் துன்பங்கள் என அனைத்தும் வரும் பொழுது நாம் நமது வீடுகளில் இருக்கின்ற இறைவார்த்தையை எடுத்து வாசிப்போம். அதன் சக்தி நமது சோதனைகளை விட்டு நாம் வெளி வருவதற்கு நமக்கு ஆற்றல் தரும். எனவே, இறைவார்த்தையை எடுத்து வாசிப்போம். நமது வாழ்வின் சோதனைகளை சாதனையாக்குவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
அன்புடன்:-
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில்/ஆடியோவில் காண...