Friday, September 17, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 25-ஆம் வாரம் - ( ஆண்டு- B) - 19 -09-2021- ஞாயிற்றுக்கிழமை

 🌱விவிலிய விதைகள்🌱

பொதுக் காலம் 25-ஆம் வாரம்

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி: -மாற்கு 9: 30-37



வானளவு உயர்த்தும் தாழ்ச்சி

1932 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலாக ஏர்லைன்ஸ் டாட்டா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு இது ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1947 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்த நிறுவனத்தை ஏற்று நடத்த ஆரம்பித்தது. ஏறக்குறைய 25 ஆண்டுகளாக இந்த ஏர் இந்தியா நிறுவனத்தினுடைய தலைவராக இருந்தவர் JRD டாட்டா அவர்கள், இவர் ஒவ்வொரு முறையும் விமானத்தில் பயணிக்கும் போது, விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு சோதனைக்கு எல்லோரையும் போல வரிசையில் தான் நிற்பாராம். விமான நிறுவனத்தின் தலைவராக இருக்கின்ற இவரே வரிசையில் நிற்கும் காட்சி, இவரது எளிமையையும் தாழ்ச்சியையும் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது புகழ்பெற்ற தாஜ் ஓட்டலின் நிறுவனராகவும் இருந்த இவர், ஒவ்வொரு முறையும் தன்னுடைய ஓட்டலுக்கு செல்லுகின்ற போது எல்லோரை போலவும் அறை குறிப்பேட்டில் கையெழுத்திட்டு தான் செல்வாராம். இத்தகைய எளிமையும், தாழ்ச்சியும் தான் அவரை வானளவுக்கு உயர வைத்திருக்கின்றது. இதைத் தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடும் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது. நமது வாழ்க்கையிலே பணம், பொருள், பட்டம் மற்றும் பதவி மட்டுமே நம்மை வானளவுக்கு உயர்த்தும் என்று பொய்யாக இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், உண்மையாக தாழ்ச்சி என்னும் பண்பு தான் நம்மை வானளவுக்கு உயர வைக்கும் என்பதை இயேசு எடுத்துரைக்கின்றார். இத்தகைய தாழ்ச்சி என்னும் பண்பு நம்மில் சிறந்து விளங்க இறைமகன் இயேசு மூன்று மாதிரிகளை தன் வாழ்வின் வழியாய் நமக்கு சுட்டிக் காட்டுகின்றார்.

1. அடிமையின் மாதிரி


இம்மூன்று மாதிரிகளில் முதல் மாதிரியாக அடிமையின் மாதிரியை இயேசு தன்னுடைய வாழ்வில் நமக்கு வாழ்ந்து காட்டி இருக்கின்றார்."ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். (பிலிப்பியர் 2:6,7,8) என்னும் பவுல் அடிகளாரின் வார்த்தையில் கிறிஸ்து அடிமையின் வடிவை ஏற்று, தந்தைக்கு கீழ்படிந்து, தன்னையே தாழ்த்தி தன்னுடைய இறைச்சாயலில் இருந்து மனித சாயலை ஏற்று, அதிலிருந்து அடிமையின் சாயலை ஏற்று தாழ்ச்சி என்னும் பண்பு நம்மில் வளர இயேசு அழைக்கிறார். இயேசு அடிமையை போல் நம்மை வாழ சொல்லவில்லை மாறாக அவர் நம் ஒவ்வொருவரும் இம்மாதிரியை பின்பற்றி தாழ்ச்சி என்னும் பண்பை நம்முடைய வாழ்க்கையிலே வாழ்ந்து காட்ட அழைக்கிறார்.

2. பணியாளரின் மாதிரி
இன்றைய நற்செய்தி பகுதியில் இயேசு தன்னுடைய சீடர்கள் யார் பெரியவர்? என்று தங்களிடையே பேசிக் கொண்டிருப்பதை அறிந்து அவர்களுக்கு தாழ்ச்சி என்னும் பண்பை உணர்த்துகின்றார். அதற்காக இன்றைய நற்செய்தியில் அவர் இன்னும் இரண்டு மாதிரியை அவர்களுக்கு தருவதை பார்க்கின்றோம். “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” (மாற்கு 9:35) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் அவர்கள் ஒவ்வொருவரையும் பணியாளரை போல தாழ்ச்சி என்னும் பண்போடு வாழ அழைப்பு விடுக்கின்றார். இயேசு தன்னுடைய சீடர்களுடைய பாதங்களை கழுவி இத்தகைய ஒரு மாதிரியை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்ததை பார்க்கின்றோம். நாமும் நம்முடைய வாழ்க்கையிலே அனைவருக்கும் பணியாளராக தாழ்ச்சியில் சிறந்தோங்க அழைப்பு பெறுகின்றோம்.

3. குழந்தையின் மாதிரி

இன்றைய நற்செய்தியின் இறுதி பகுதியில், இயேசு மூன்றாவது மாதிரியாக அவர்கள் முன் ஒரு சிறிய குழந்தையை அழைத்து இக்குழந்தையின் உள்ளத்தை பெற்றவர்களாக வாழ அவர்களுக்கு அழைப்பு தருகிறார். ஆணவமும் அகங்காரமும் இல்லாமல், கள்ளம் கபடமற்ற வெள்ளை மனம் கொண்ட குழந்தைகள் போல வாழ அழைக்கிறார். அதனால் தான் இயேசு "குழந்தைகளை தன்னிடம் வர விடுங்கள்" என்று குறிப்பிடுகிறார்.
“சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்” (மாற்கு 9:37) என்னும் வார்த்தையின் வழியாக அவர் குழந்தைகளை ஏற்றுக் கொள்ள அழைப்பது, குழந்தைகளின் உள்ளமான தாழ்ச்சி நிறைந்த குணத்தை, அகங்காரம் மற்றும் ஆணவம் இல்லாத உள்ளத்தை ஏற்றுக் கொள்ள அழைப்பு தருவதாகும்.

இன்று, நம்மிடம் சற்று அதிகமாக திறமை, பணம், பொருள், பதவி இருந்தாலும் மற்றும் சமுதாயத்தின் உயர்நிலையில் இருந்தாலும் நம்மிடையே நம்மை அறியாமலே ஆணவமும் அகங்காரமும் ஒட்டி விடும். இத்தகைய நிலையிலிருந்து மாறி தாழ்ச்சி என்னும் பண்பில் நாம் வளர்கின்ற பொழுது தான் நம்முடைய வாழ்வு உண்மையாகவே மேலோங்கி நிற்கும். இதை இன்றைய நாளிலே உணர்ந்திருக்கின்றோமா சிந்தித்து பார்ப்போம். தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர். (மத்தேயு 23:12) என்னும் இறைவார்த்தைகளுக்கு ஏற்ப தாழ்ச்சியை நம்முடைய வாழ்க்கையாக்குவோம். இதைத்தான் பவுல் அடிகளார் "கிறிஸ்துவுக்கு திருச்சபை பணிந்து இருப்பது போல மனைவி கணவனுக்கு பணிந்து இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். இன்று நம்முடைய குடும்பங்களிலும் இந்த தாழ்ச்சி என்னும் பண்பு அதிகம் தேவைப்படுகின்றது. தாழ்ச்சி நம்முடைய வாழ்க்கையிலும் எல்லா நிலைகளிலும் நமக்கு அடிப்படையாக தேவைப்படுவதாக உள்ளது. 'எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் ரயில் ஏறுவதற்கு பிளாட்பார்ம் வந்து தான் ஆக வேண்டும்' என வேடிக்கையாக கூறுவதை போல நம்முடைய வாழ்க்கையில் எத்தகைய ஒரு நிலையில் இருந்தாலும் தாழ்ச்சியை நமது வாழ்க்கையாக்க வேண்டும் என்பதை நாம் உணர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அன்புடன்

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF