Saturday, August 21, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 21-ஆம் வாரம் - ( ஆண்டு- B)- 22-08-2021- ஞாயிற்றுக்கிழமை

                              🌱விவிலிய விதைகள்🌱

...பொதுக் காலம் 21-ஆம் வாரம்...

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி:- யோவான் 6: 60-69


வார்த்தையே வாழ்வு

                    ஒருமுறை என் சக குருக்களோடு நெடுந்தொலைவு கார் பயணம் மேற்கொண்டேன். செல்லுகின்ற வழியில் உணவிற்காக சாலை உணவகம் ஒன்றில் நிறுத்தினோம். காரை விட்டு இறங்கியவுடன் அந்த உணவகத்தின் பெயரை பார்த்தோம். அப்படி பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த உணவகத்திற்கு எதிர்ப்புறம் மற்றொரு உணவகம் இருந்தது, ஏறக்குறைய இரண்டு உணவகமும் ஒன்று போல் தெரிந்தது. இரண்டு உணவகங்களில் பெயரும் வெவ்வேறாக பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்தது, ஆனால் சாலையின் மறுபுறம் இருந்த அந்த உணவகத்தின் பெயர் பலகையில் "இங்கு வீட்டு சாப்பாடு கிடைக்கும்" என்று போடப்பட்டிருந்தது. அதுவரைக்கும் இந்த உணவகத்திற்குள் நுழைவதற்காக தயார்படுத்திக் கொண்டிருந்த நாங்கள் அந்த உணவகத்தின் பெயர் பலகையில் "இங்கு வீட்டு சாப்பாடு கிடைக்கும்" என்று போடப்பட்டிருந்த வார்த்தைகளை கவனித்து, இந்த உணவகத்திற்கு செல்லாமல் சாலையை கடந்து மறு பக்கத்தில் இருந்த உணவகத்திற்கு சென்று உணவு உண்டோம்.

              அன்பார்ந்தவர்களே, ஏதோ ஒரு உணவகத்திற்கு செல்லலாம் என்று இருந்த எங்களை வேறு உணவகத்திற்கு செல்ல வைத்தது அந்த உணவகத்தின் முன்பு எழுதப்பட்டிருந்த சில வார்த்தைகள். இது வார்த்தைகளுக்கு உண்டான சக்தியை காட்டுகிறது. நம் அன்றாட வாழ்வில் வார்த்தையின் சக்தியை நாம் எல்லோரும் நன்றாகவே அறிவோம். மனிதன் பேசுகின்ற வார்த்தைகள் ஒருவரை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். இல்லை, முடியாது, அசிங்கம் மற்றும் தேவையில்லை எனும் வார்த்தைகள் மனிதனை பின்னோக்கியும், முடியும், செய்யலாம் மற்றும் தேவை எனும் வார்த்தைகள் மனித வாழ்க்கையில் அவனை முன்நோக்கியும் தள்ளிக் கொண்டிருக்கின்றன, ஆக வார்த்தைகள் மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. சாதாரண மனித வார்த்தைகளே மனிதனை அவனது வாழ்க்கையில் சாதிக்க வைக்கின்றது என்றால் இறைவனுடைய இறைவார்த்தை அவனை வாழ வைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பதைத்தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு எடுத்துரைக்கின்றது. வார்த்தையே வாழ்வு என்னும் மைய சிந்தனையை வழங்குகின்றது இன்றைய நற்செய்தி வாசகம். "கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது." (எபிரேயர் 4:12) என இறைவார்த்தையின் சக்தியையும், அவ்வார்த்தை மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் உணர்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைவார்த்தை நமக்குத் தருகின்ற இரண்டு விதமான கனிகளை பார்க்கின்றோம்.

1. தூய ஆவி

           இன்றைய நற்செய்தி வாசகத்தில் "வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன." (யோவான் 6:63) என்னும் இயேசுவின் வார்த்தைகள் இறைவார்த்தை நமக்கு தூய ஆவியை தருகின்றது என்பதை அறிவுறுத்துகிறது. ஆவியானவரின் அருளையும், ஆசியையும், அவரது கொடைகளையும் மற்றும் கனிகளையும் நாம் பெற இறை வார்த்தைக்குச் செவிகொடுத்து வாழ்வாக்குவோம், இறைவார்த்தை தூய ஆவியை நமக்கு பெற்றுத் தரும்.

2. நிலைவாழ்வு

            இன்றைய நற்செய்தி வாசகத்தில் சீமோன் பேதுரு மறுமொழியாக, ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன. (யோவான் 6:68) என்று சொல்லுகின்றார். இது இயேசுவுடன் இருந்ததன் அனுபவத்தில், அவருடைய வார்த்தைகள் நிலைவாழ்வு தரக்கூடியது என பேதுரு சொல்லுகின்றார். நமது கிறிஸ்தவ வாழ்க்கை நிலைவாழ்வை நோக்கி பயணிக்க அழைப்பு தருகிறது. நிலை வாழ்வு என்னும் இலக்கை அடைய வேண்டுமென்றால் இறைவார்த்தையை நமது வாழ்வின் ஆணிவேராக மற்றும் நங்கூரமாக அமைத்திட வேண்டும். அப்பொழுது ஆண்டவருடைய வார்த்தைகள் நிலைவாழ்வை நமக்கு பெற்றுத் தரும்இவை மட்டுமல்லாது யோவான் நற்செய்தியாளரின் பார்வையில் இறைவார்த்தை நமக்கு கிறிஸ்தவ மற்றும் துறவற வாழ்வில் தூயவர்களாக வாழும் வாய்ப்பை தருகிறது. "நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்." (யோவான் 15:3) இவ்வாறு இறைவார்த்தைக்கு செவிகொடுத்து நடந்தால், நமது வாழ்க்கையில் நாம் விரும்பி கேட்பது எல்லாம் நடக்கும். "நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்." (யோவான் 15:7) ஆக இறைவார்த்தையை இறுகப்பிடித்து வாழுகின்ற ஒவ்வொருவருக்கும் இறைவார்த்தையானது எண்ணற்ற பலன்களையும் இறை ஆசிரையும் நிறைய பெற்று தந்து கொண்டிருக்கின்றது.

         அன்பார்ந்தவர்களே, இறைவார்த்தை நமது வாழ்வின் அச்சாணியாக இருக்கின்றது. இத்தகைய அச்சாணியின் ஆரத்திலே சுழன்று கொண்டிருக்கின்ற ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வும் மகிழ்வளிக்கின்றதாக மற்றும் வளம் நிறைந்ததாக இருக்கின்றது. இன்று நமது வாழ்க்கையில் இறைவார்த்தைக்கு எந்த அளவுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஒவ்வொரு நாளும் திருப்பலியில் இறைவார்த்தை வாசிக்கப்படுகின்றது மற்றும் பகிரப்படுகின்றது. இந்த இறைவார்த்தை வழிபாட்டில் பக்தியாக பங்கேற்கின்றோமா? தியானிக்கின்றோமா? சிந்திப்போம். நமது வீடுகளில் திருவிவிலியம் வைக்கப்பட்டிருக்கின்றது, அதை நாம் ஒவ்வொரு நாளும் வாசிக்கின்றோமா? அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா? அதற்கான உரிய மதிப்பை கொடுத்து அதை நம்முடைய வாழ்க்கையில் வாழ்வாக்குகின்றோமா? சிந்திப்போம். வார்த்தை நம்மை வாழ வைக்கும். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

 

- அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF