Saturday, July 17, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 16-ஆம் வாரம் - ( ஆண்டு- B)- 18-07-2021- ஞாயிற்றுக்கிழமை

  🌱விவிலிய விதைகள்🌱

பொதுக் காலம் 16-ஆம் வாரம்

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி:- மாற்கு. 6: 30- 34

ஓய்வு: ஒர் அடையாளம்



"உழைப்பின்றி ஓய்வு எடுப்பது தவறு, ஓய்வின்றி உழைப்பதும் தவறு"

என்னும் சொல்லாடலுக்கு ஏற்ப நம் வாழ்வில் ஓய்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றார் இறைமகன் இயேசு கிறிஸ்து. மிகப் பலரும் கிடைக்க வேண்டும் என விரும்புகிற, கிடைத்த பின் இனி என்ன செய்வது என்று அலுத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறது. ஏதோ வேதாந்தமாகப் பேசுவது போல் இருக்கிறதா? வேறொன்றுமில்லை, அது தான் ஓய்வு! ஓய்வு என்பது, தொடர்ச்சியான செயலில் இருந்து சிறிது நேரம் அல்லது சில காலம் விடுபடுவது. மாற்றுச் செயலில் ஈடுபடுவதும் ஓய்வு தான். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் ஒய்விற்குப்பின் செய்யும் செயல்கள் அதிக பலனை அளிக்கிறது. அன்றாட வேலைகளிலிருந்து சிறு பொழுது ஓய்வை உடலும் உள்ளமும் நாடுவது இயல்பு. அலுவலகத்தில் அல்லது தொழிலகத்தில் பல ஆண்டுகள் வேலை செய்த பின், சட்டப்படியே விடைகொடுத்து அனுப்பப்படுகிற பணி ஓய்வு வேறு வகை. சொந்தத் தொழில் மேற்கொள்வோரும் கூட, நெடுங்கால ஈடுபாட்டைத் தொடர்ந்து வயது முதிர்ந்த காலத்தில், பொறுப்புகளை வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வாய் இருக்கத் திட்டமிடுகிறார்கள்.

பழைய ஏற்பாட்டில் ஓய்வு:

"கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்". (விடுதலைப்பயணம் 20/1, 8-11) கடவுள் ஆறு நாட்கள் உலகை படைத்து ஏழாம் நாள் ஒய்வெடுத்தார். ஓய்வு நாளைப் பற்றி மோசே இவ்வளவுத் தெளிவாகக் கூறியுள்ள இந்தக் கட்டளையை மீறும் பலரை பார்த்து கோபமுற்றனர், பரிசேயர்கள். ஒய்வு நாள் என்றால் என்ன? அன்று செய்யகூடிய, செய்யக்கூடாத வேலைகள் எவை... என்று மக்களுக்கு பல விளக்கங்கள் தந்தனர். நாளடைவில், இந்த விளக்கங்களே சட்டதிட்டங்களாக மாறின. ஒய்வு நாளில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாதென்பதை விளக்க, இவர்கள் தந்த எடுத்துக்காட்டுக்கள், பெரியதொரு பட்டியலாக நீண்டன. ஒய்வு நாளில் சமைக்கக் கூடாது, பொருள்களைச் சேகரிக்கக் கூடாது, எதையாவது கைதவறி கீழே போட்டு விட்டால், குனிந்து எடுக்கக் கூடாது, பயணம் செய்யக் கூடாது, பாரம் சுமக்கக் கூடாது... இப்படி ‘கூடாது’ என்ற இந்தப் பட்டியல் நீளமானது. ஒய்வு நாள் குறித்த விளக்கங்களில், பரிசேயர், சதுசேயர், மறைநூல் வல்லுநர் இவர்களுக்கிடையே பற்பல சர்ச்சைகள் எழுந்தன. எடுத்துக்காட்டாக, ஒய்வு நாளில் எவ்வளவு பாரம் சுமக்கலாம் என்ற கேள்விக்கு, காரசாரமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில், ஒரு முடிவு எடுக்கப்பட்டது: காய்ந்து போன அத்திப் பழம் ஒன்று, எவ்வளவு எடையோ, அதுவே ஓய்வு நாளில் சுமக்க அனுமதிக்கப்படும் எடை. அதற்கு மேல் பாரமான எதையும் எடுக்கவோ, சுமக்கவோ கூடாது என்பதே அந்த முடிவு. இதே போல், எவ்வளவு தூரம் நடக்கலாம், எவ்வளவு உண்ணலாம், குடிக்கலாம்.... என்று மிகவும் நுணுக்கமான விதிமுறைகள் பல விதிக்கப்பட்டன. மோசே வழியாக இறைவன் கொடுத்த ஒய்வு நாள் பற்றிய கட்டளையைச் சுற்றி, அடுக்கி வைக்கப்பட்ட இந்த விளக்கங்கள், அந்த அடிப்படை கட்டளையையே மறைத்து விட்டன.

புதிய ஏற்பாட்டில் ஓய்வு:



பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் சுயநலத்தால் இறைவன் காட்டிய ஆய்வின் முக்கியத்துவம் மறைக்கப்பட்டது ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசு காட்டுகின்ற ஓய்வு இறைவனின் இன்னும் தலையை முழுமை பெறச் செய்கின்றன. அதன் எடுத்துக்காட்டுதான் இன்றைய நற்செய்தி வாசகம் இருவர் இருவராக தன்னுடைய சீடர்களை பணிக்காக அனுப்பிய இயேசு அவர்கள் மீண்டும் வருகின்ற பொழுது அவர்களுடைய நிலை அறிந்து அவர்களை ஓய்வெடுக்க அனுப்புகின்றார். “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” (மாற்கு 6:31). என்னும் வார்த்தைகளில் இயேசு ஓய்வின் மூன்று அடையாளங்களை வெளிப்படுத்துகிறார்.

1. அன்பின் அடையாளம்
2. இரக்கத்தின் அடையாளம்
3. உறவின் அடையாளம்

1. அன்பின் அடையாளம்

நம்மோடு உடனிருக்கும் ஒருவரது கடின உழைப்பை உணர்ந்து அவரை ஓய்வெடுக்க அனுப்புவது என்பது நாம் அவர் மீது கொண்டிருக்கின்ற அன்பை வெளிப்படுத்துகிறது. இறைமகன் இயேசு கிறிஸ்து தனது சீடர்கள் ஓய்வின்றி பணி செய்து இருக்கின்றார்கள், அவர்களுக்கு ஓய்வு தேவை என்று உணர்ந்து "ஓய்வெடுங்கள்” (மாற்கு 6:31). என கூறுவது அவர் தனது சீடர்கள் மீது கொண்டிருக்கின்றன அன்பை வெளிப்படுத்துகின்றது.

2. இரக்கத்தின் அடையாளம்

“ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை" (மாற்கு 6:31) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில், இயேசு சீடர்களின் நிலையை நன்கு அறிந்து, அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களை ஓய்வெடுக்க அனுப்புகின்றார். இயேசு இரக்கம் உடையவராக இருக்கின்றார் அதனால் தான் பாலைவனத்திற்கு வந்த மக்கள் மீது இவர்கள் "ஆயனில்லா ஆடுகளாக இருக்கிறார்கள்" என்று பரிவு கொள்கின்றார். "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்தேயு 9:13). நமது வீடுகளில் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றவர்கள் மீது நாம் இரக்கம் கொண்டால் நம் மனம் அவர்களை ஓய்வெடுக்க கூறும்.

3. உறவின் அடையாளம்

"இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்". (யோவான் 15:15) என தன் சீடர்களை நண்பர்கள் என்று அழைத்த இயேசு, அவர்கள் தன்னோடு உறவு கொண்டிருக்கின்றார்கள். என் உறவு என்பதை, அவர்கள் சோர்வுற்று இருந்த பொழுது அவர்களை ஓய்வெடுக்க அனுப்புவதன் மூலம் உணரலாம். பொதுவாக நம் உறவுகள் மீது தான் நமக்கு அதிகம் அன்பு இருக்கும், அவர்கள் சோர்வுற்று இருக்கின்ற பொழுது தான் அவளை நாம் ஓய்வெடுக்க அனுப்புவோம். ஆக இயேசு தன் சீடர்களை ஓய்வெடுக்க அனுப்புவது, அவரை தன் உறவாக பாவித்துள்ளார் என்பதன் அர்த்தம். நாமும் பிறர் மீது இரக்கம் கொண்டு அவர்களை ஓய்வெடுக்க அனுப்புகின்ற பொழுது, அவர்களை நாம் அன்பு செய்வது மட்டுமல்லாது, அவர்களை நம் உறவாக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதன் அடையாளம் ஆகும்.

நாம் அனைவரும் நன்கு அறிந்த கதை இது. துறவிகள் மடம் ஒன்றில், அனைவரும் பூஜைக்கு அமர்ந்தனர். அந்த மடத்திற்கு புதிதாக வந்து சேர்ந்த ஒரு பூனை, பூஜை நேரத்தில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. எனவே, பூஜை நேரத்தில், அந்தப் பூனையை, ஒரு தூணில் கட்டிவைக்கச் சொன்னார், பெரிய குரு. இப்படி சில நாட்கள் பூனை கட்டப்பட்டது, பூஜை நடந்தது. ஒரு மாதம் கழித்து, பூஜை ஆரம்பிக்கப் போகும் நேரத்தில், பூனையைக் காணவில்லை. சீடர்கள், மடம் எங்கும் தேடி, பூனையைக் கண்டு பிடித்து, கொண்டு வந்து, தூணில் கட்டிவைத்துவிட்டு, பூஜையை ஆரம்பித்தனர். பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற சூழல் உருவாக ஆரம்பித்தது.

சில ஆண்டுகள் கழித்து, அந்தப் பூனை இறந்தது. கதை இதோடு முடிந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். ஆனால், இல்லை. இறந்தப் பூனையைப் போல் இன்னொரு பூனையை வாங்கி வர, அல்லது, தேடிக் கண்டுபிடிக்க, சீடர்கள் புறப்பட்டுச் சென்றனர். புதுப் பூனை, இறந்த பூனையைப் போலவே வெள்ளையாக இருக்க வேண்டும், அதன் கழுத்தில் ஒரு கருப்பு வட்டம் இருக்க வேண்டும் என்ற நுணுக்கங்களை மனதில் கொண்டு இந்தத் தேடல் வேட்டை நடந்தது. தீவிர முயற்சிகள் எடுத்து, பூனையைக் கண்டுபிடித்தனர் சீடர்கள். அதை மடத்திற்குக் கொண்டுவந்து, முந்தையப் பூனை கட்டப்பட்ட அதே தூணில் கட்டி, பின்னர் பூஜைக்கு அமர்ந்தனர்.

பூஜைக்குத் தடையாக இருந்ததால் கட்டப்பட்ட பூனை, பூஜைக்கு முக்கியமாகத் தேவைப்பட்டது. பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற சூழ்நிலை உருவானது. பூனையா? பூஜையா? என்ற விவாதம் எழுந்தால், பூஜையைவிட, பூனை முக்கியம் என்ற முடிவு எடுக்கப்படும். பூஜைகளை மறக்கச் செய்யும் அளவு, பூனைகளைத் தொழுவது ஆபத்து. பூனையை மறந்து விட்டு, பூஜையில் கவனம் செலுத்துங்கள் என்று இயேசு வலியுறுத்திக் கூறுகின்றார்; தான் சொன்னதைச் இன்றைய நற்செய்தியில் செயலிலும் காட்டினார். நாமும் நமது வாழ்வில் பூஜையை போல இருக்கும் ஓய்வு நேரத்தில் பூனையாக தொலைக்காட்சியை பார்ப்பதும், கையில் இருக்கின்ற அலைபேசியை பயன்படுத்தி, அதில் சோஷியல் நெட்வொர்க்கை பயன்படுத்துவதும் வாடிக்கையாக மாறிவிட்டது. ஓய்வெடுக்க வேண்டிய இரவு நேரங்களில் அலைபேசியின் பயன்பாட்டால் தூக்கத்தையும் ஓய்வையும் மறந்து, நம் உடல் நலத்தை நாமே சீர் குலைய செய்கின்றோம்.

கடவுள் தந்த ஒய்வு , மனிதருக்கு நலம் தரும் வழிகளைச் சொல்லித்தர ஏற்படுத்தப்பட்டது. எப்போதும் வேலை, வேலை என்று அலைய வேண்டாம். அதனால், உடல் நலம், மன நலம், குடும்ப நலம் எல்லாம் கெடும். வேலை, சம்பாதிக்கும் பணம் இவற்றைவிட இன்னும் மேலான விழுமியங்கள் வாழ்க்கையில் உள்ளன. இந்த மேலானவற்றைத் தேடி கண்டுபிடிக்க, வேலையை விட்டு வெளியே வாருங்கள்... ஓய்வேடுங்கள்... இறைவனை, பிறரை, குடும்பத்தை நினைத்துப் பார்க்க ஒய்வு தேவை.

“மனிதர்கள் வயதாகிவிடுவதால் விளையாடுவதை நிறுத்திக்கொள்வதில்லை. அவர்கள் விளையாடுவதை நிறுத்திக்கொள்வதால் தான் வயதாகிறது,” என்றார் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கவிஞர் ஒலிவர் வெண்டல் ஹோம்ஸ். விளையாட்டு என்று அவர் சொன்னது விளையாட்டு மட்டுமாகாது, மனித மனதிற்கு விளையாட்டு தரும் ஒய்வும் புத்துணர்ச்சியும் தான். எனவே இயேசு காட்டும் உண்மையான ஓய்வின் மகத்துவத்தை உணர்ந்து நாமும் சரியான ஓய்வை நமக்கு கொடுப்போம். நமது குடும்பங்களில் இருக்கின்ற கணவர், மனைவி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் நிலை அறிந்து அவர்களையும், இயேசுவைப் போல ஓய்வெடுக்க அழைப்பு கொடுப்போம். அதில் தான் நமது உண்மையான அன்பும், இரக்கமும் மற்றும் உறவும் வெளிப்படும். இந்த அடையாளத்தை பின்பற்றி, இதை கொடுக்கும் அன்பையும், இரக்கத்தையும் மற்றும் உறவையும் கொடையாக நமது வாழ்க்கையில் பெறுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


- அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF