Saturday, August 14, 2021

   - அன்னையின்

  விண்ணேற்பு பெருவிழா - 

சுதந்திர தின விழா 

 15-08-2021



 சுதந்திரம் கண்ட இந்திய தாயும்

  சுதந்திரம் தந்த இறைவனின் தாயும்


 இறை இயேசுவில் இனியவர்களே!

      சுதந்திர காற்றை சுவாசிக்கும் ஒவ்வொரு இந்தினுக்கும், இது ஒரு மகிழ்ச்சியான நாள், ஏனென்றால் இந்திய தாய் கண்ட சுதந்திர தினவிழாவை மகிழ்வோடு கொண்டாடுகின்றோம். 

          இந்திய கிறிஸ்தவர்களுக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சிதான். இந்திய தாய் கண்ட சுதந்திர தினத்தன்று இறைவனின் தாய்


தந்த சுதந்திரத்தை நினைவு கூறுகின்றோம். இறைத் தாயின் விண்ணேற்பு பெருவிழாவை கொண்டாடுகின்றோம்.

 200 ஆண்டு ஆங்கிலேயே ஆதிக்கமும், இந்திய அடிமைத்தனமும் முடிவுக்கு வந்து இந்திய தாய் கண்ட சுதந்திர தினம் தான் இந்த ஆகஸ்ட்-15 ஆம் நாள். இந்திய தாய்க்கு சுதந்திரம் தந்து, சுதந்திர காற்றை சுவாசிக்க செய்த நம் நாட்டு தியாகிகளுக்கு  தலை வணங்குவோம்.

தன் அடிமை கல்லறையை உடைத்தெறிந்து விடுதலை தாயாய் திகழும் இந்திய தாயின் சுதந்திர தினத்தில், தன் மகனோடு சேர்ந்து சாவை வென்று வெற்றியின் தாயாம் இறைவனின் தாய் தன் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு சென்ற விசுவாச பிரகடனத்தை (நம்பிக்கை கோட்பாட்டை)  பெரு விழாவாக கொண்டாடுகின்றோம்.

“அன்னை மரியாளின் விண்ணேற்றம் மறுக்க முடியாத உண்மை.” என்னும் லிவியுஸ் அவர்களின் கூற்றுக்கு ஏற்ப அன்னை மரியாளின் விண்ணேற்றம் நம் விசுவாசமாக மற்றும் மாபெரும் விழாவாக எப்படி மாறியது என்பதை தியானிப்போம்.

   தொடக்க திருச்சபையில் கிறிஸ்தவர்கள் அன்னையின் மறைவை புனிதமாக கருதினர். பல நாடுகளில்  அன்னையின் மறைவை விழாவாக கொண்டாடினர்.  6-ஆம் நூற்றாண்டில் கீழைத் திருச்சபை மரியாவின் இறப்பை மரியா ஆண்டவரிடம் இளைப்பாறிய நாளாக கருதி கொண்டாடினர். 7-ஆம் நூற்றாண்டில் அன்னையின் இறப்பு உரோமை புனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றது. கிரேக்க திரு அவையில்  அன்னையின் இந்த விழா  ஐனவரி-18 தேதியில் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு சிரியாவில் ஆகஸட் மாதம் கோடை காலமாக இருந்ததால் அம்மாதத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டது. கிபி 580-ல் பிரான்ஸ் நாட்டில் ஜனவரி மாதம் அன்னையின் பெயரால் பெரிய விழாவாக கொண்டாடப்பட்டதாக   ரூர்ஸ் நகர் புனித கிரகோரியார் குறிப்பிடுகிறார். கிபி 690-ல் இங்கிலாந்து நாட்டில் ஆகஸ்ட் மாதம்  அன்னையின் விண்ணகப் பிறப்பு விழா கொண்டாடப்பட்டதாக தூய ஆல்டெம் குறிப்பிடுகிறார். 7-ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவிலும் மரியாவின் விண்ணக பிறப்பு கொண்டாடப்பட்டது.

                  582-602-வரை உள்ள காலத்தில் வாழ்ந்த பேரரசர் மௌரியுஸ் ஆகஸ்ட் 15-ம் தேதி விண்ணேற்பு பெருவிழாவை கொண்டாட அழைப்பு விடுத்தார். முதல் வத்திக்கான் சங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆயர்கள் அன்னை மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை நம்பிக்கை கோட்பாடாக அறிவிக்க கேட்டுக் கொண்டனர். 1922-ல்  திருத்தந்தை 11-ஆம் பயஸ்  பிரான்ஸ் நாட்டை விண்ணேற்பு அன்னையின் பாதுகாவலில் அர்ப்பணித்தார். 1945-ல் திருத்தந்தை 12-ஆம் பயஸ் உலக ஆயர்களுக்கு (மடல்) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் அன்னை  மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்பு அடைந்ததை நம்பிக்கை கோட்பாடாக அறிவிக்க உம் ஞானத்திற்கும், விவேகத்திற்கும் ஏற்ப  விரும்புகிறீர்களா? என்னும் கேள்வியினை கேட்டார். அதற்கு 98"ஆம்" என்று ஒப்புதல் அளித்தனர். எனவே  1950-ல் நவம்பர் 1-ம் தேதி அன்னை மரியாள் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்து செல்லப்பட்டத்தை திருஅவையின் நம்பிக்கை கோட்பாடாக பிரகடனப்படுத்தினார். 

நம் சுதந்திர தாய் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்து செல்லப்பட்டாள் என்னும் விசுவாச மறையுண்மையை பெருவிழாவாக கொண்டாடும் இந்நாளில் அன்னை மரியாளாம் நம் சுதந்திர தாய் தந்த சுதந்திரத்தை இரண்டு நிலைகளில் தியானிக்கலாம்.

1. மண்ணக சுதந்திரம்:

        தன் உதிரத்தில் கிறிஸ்து என்னும் இயேசுவை சுமந்து, இறை மீட்பு திட்டத்துக்காய் பல சிலுவைகளை வாழ்வில் சுமந்து, இந்த மண்ணக சுதந்திரத்தை நமக்கு தந்திருக்கிறாள். முதல் பெற்றோரின் பாவத்துக்கான விளைவு சாவு, துன்பம், வேதனை, பகை, மற்றும் பிளவுகள். “உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்.” (தொ.நூல் 3:16) “ உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து உண்பாய்.” (தொ.நூ3:17-18) என்னும் இறைவனின் வார்த்தைகள் பாவத்தின் விளைவாய் மானிட குலத்துக்கு துன்பத்தை தந்தது. தொ.நூ 4: 8-12-ல் காயின் தன் சகோதரன் ஆபேலை கொல்வது முதல் பாவத்தால் மனித உறவில் பிளவை ஏற்படுத்தியதை காட்டுகிறது. தொ.நூ 11: 7-8-ல் பாபேல் கோபுர நிகழ்வு, முதல் பாவத்தால் மொழி பிளவு உருவானத்தை காட்டுகிறது. தொடர்ந்து மீட்பின் வரலாறு முழுவதும் துன்பமும், வேதனையும் இஸ்ரயேல் மக்களை சூழ்ந்து கொண்டதை பார்க்கின்றோம்.

            முதல் பாவத்தின் விளைவாய் மீட்பின் வரலாற்றில் நிறைந்த துன்பம், பாவம், வேதனை, பிளவு, சாவு அனைத்தும் நம் சுதந்திர தாயின் “ஆம்” –என்னும் வார்த்தையாளும் இறைமகனை கருவிலும் வாழ்விலும் சுமந்ததாளும் மடிந்து போகிறது. மண்ணக சுதந்திரம் உருவாகிறது.

2. விண்ணக சுதந்திரம்

                    பழைய ஏற்பாட்டில் ஒரு பெண் பாவத்தின் காரணமானாள். புதிய ஏற்பாட்டில் மறு பெண் பாவத்திலிருந்து விடுதலையளிக்க காரணமானாள் தனி வரம் பெற்று, அமல உற்பவியாய் வாழ்ந்து, மண்ணக சுதந்திரம் தந்தது மட்டுமல்லாது உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்துக்கு எடுத்து செல்லப்பட்டு  விண்ணக வாழ்வு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி விண்ணக சுதந்திரத்தையும் தருகிறாள் நம் சுதந்திர தாய். பாவ அடிமையிலிருந்து நம்மை மீட்க சுதந்திர பறவையாக மகிழ்வோடு வாழ இறைவன் வரைந்த அழகின் மற்றும் ஆவியின் ஓவியம் நம் அன்னை மரியாள்.                 

         இந்திய தாயும், இறைவனின் தாயும் கொடுத்த சுதந்திர காற்றை நாம் எப்படி பயன்படுத்துகிறோம்? என் வார்த்தையும், செயலும், வாழ்வும் என் சுதந்திரத்தை உருவாக்கும்….சுதந்திர காற்றை சுவாசிக்க….. இந்திய தாயும், இறைவனின் தாயும் தந்த சுதந்திரத்தை நம் வாழ்வின் வார்த்தையிலும், செயலிலும் காட்டுவோம், சுதந்திர காற்றை சுவாசிப்போம். இறைவழி நடப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பார்.


- அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF