முதல் வாசகம் : ஆமோஸ் 6: 1, 3-7 இரண்டாம் வாசகம் : 1 திமொத்தேயு 6: 11-16 நற்செய்தி : லூக்கா 16: 19-31
இடைவெளியில்லா உறவு
குளக்கரை ஒன்றில் இருவர் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கு மட்டும் மீன் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. மற்றொருவருக்கு மீன் எதுவும் கிடைக்கவில்லை, அதை கவனித்த அவர் ஆச்சரியப்பட்டு அவருடைய தூண்டிலை வாங்கி பார்க்கிறார். அதில் புழுவுக்கு பதிலாக ஸ்ட்ராபெரி (Strawberry) பழம் இருந்தது. ஏன் இந்த பழத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது எனக்கு புழு பிடிக்காது அதனால் தான் தூண்டிலில் இந்த பழத்தை வைத்திருக்கிறேன் என்றார். இன்றைக்கு பல வேளைகளில் நாம் கூட, நமக்கு பிடித்தவற்றில் கவனத்தை செலுத்தி கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்மை சார்ந்தவர்களுக்கோ, நம்மை சார்ந்த சூழலுக்கோ மற்றும் நமது இலக்குகளை அடைவதற்கோ, எது தேவை என்பதை பார்க்க மறந்து விடுகின்றோம், இதனால் நமக்கும் பிறருக்கும், நமக்கும் நமது சூழல்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உருவாகி, நம்முடைய இலக்குகளிலும் வாழ்க்கையிலும் தோல்வியை பெறுகின்றோம். இன்றைய நற்செய்தியில் இயேசு எடுத்துரைக்கின்ற உவமையில் வருகின்ற செல்வந்தர் கூட தனக்கென்று ஒரு இடைவெளியை உருவாக்கிக் கொள்கிறார். இது அவருக்கும் அவரது சூழலுக்கும் இடையே உருவான இடைவெளி. விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்ற செல்வந்தர் தன்னிலையை மட்டுமே கவனித்தார். தன் வீட்டின் வாயிலில் நோயுற்று, அவர் மேசையிலிருந்து விழுகின்ற சிறு துண்டுகளால் தன்னுடைய வயிற்றை நிரப்ப விரும்பிய ஏழை இலாசரை கண்டு கொள்ளாமல் பெரும் இடைவெளியை உருவாக்கி விட்டார். இன்றைக்கு நான் எனது வாழ்வில் இத்தகைய இடைவெளியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றேனா? சிந்தித்து பார்க்க அழைப்பு கொடுக்கின்றது பொதுக்காலத்தின் 26-வது ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தை வழிபாடு.
நற்செய்தியில் வரும் செல்வந்தர் தன் வீட்டு வாயிலிலிருந்த இலாசருக்கு எந்த தொந்தரவும், கஷ்டமும் மற்றும் துன்பமும் தரவில்லை. இங்கு அவர் செய்தது எல்லாம் அவர் உருவாக்கிய இடைவெளி தான். இறைவன் கொடுத்த சொத்துகளோடு மகிழ்வாக, உயர்ந்த ஆடை அணிந்து மற்றும் சுவையான விருந்துண்டு வாழ்ந்த அச்செல்வந்தர் தன் வீட்டு வாயிலிலிருந்த ஒரு சகோதரனை பார்க்க மறந்து விடுகின்றான். அவர் தீமை எதுவும் செய்யவில்லை, ஆனால் அதே வேளையில் நன்மையும் செய்யவில்லை. எனவே இங்கு பெரும் சமுதாய உறவு இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. அவர் இறந்த பிறகும் இந்த உறவு இடைவெளி தொடர்கிறது, பாதாளத்திலிருந்து தான் செய்த தவறை உணர்கின்ற பொழுதும், அவர் இலாசரை தன்னுடைய பணியாளனாக பயன்படுத்த நினைக்கின்றான். எனவே, இலாசரை அவரின் சகோதரர்களுக்கு அனைத்தையும் குறித்து எச்சரிக்க அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறான். மீண்டுமாக அவருக்கும் இலாசருக்கும் இடையே உறவு இடைவெளி உருவாகிறது. இன்றைக்கு நாம் எல்லோரும் உறவுகளை வளர்க்க இச்சமுதாயத்தில் வளர்த்தெடுக்கப்படுகிறோம். அப்படியென்றால் இச்சமுதாயத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் நமது சகோதர சகோதரிகளாக நினைத்து மனித நேயம் பேணுவது, அவர்களை மதிப்பது மற்றும் அவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்வது என்னும் பொறுப்பை நம் சமுதாயம் நம்மிடையே இருந்து எதிர்பார்க்கிறது. ஆனால் நான், எனது குடும்பம், எனது வேலை, எனக்கான பணம் மற்றும் சொத்து என நமக்கு தேவையானவற்றில் அதிக கவனம் செலுத்தி இச்சமுதாயத்திற்கும் நமக்குமிடையே உறவை வளர்க்காத பெரும் இடைவெளியை உருவாக்கி கொண்டிருக்கின்றோம்.
இடைவெளியின் எச்சரிக்கை:
இன்றைய முதல் வாசகத்தில் இடைவெளியோடு அதாவது கண்டுகொள்ளாத தன்மையோடு வாழுகின்ற தன் காலத்து செல்வந்தர்களை சாடுகிறார் ஆமோஸ் இறைவாக்கினர். மேலும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் செல்வ ஆசைகளால் வரும் ஆபத்து பற்றியும், அதனால் அதனை விட்டு உனது இடைவெளியை குறைத்து வாழ்வதற்கு முயற்சி செய் என்னும் அழைப்பையும் திருத்தூதர் பவுல் தருகின்றார். இன்னும் இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் உவமையில் வருகின்ற செல்வந்தர் மனித நேயமற்று, தனது வாழ்வில் மட்டும் கவனம் கொண்டு, பிறரை கண்டு கொள்ளாது மற்றும் பிறருக்கு எதையும் பகிராது இடைவெளியை உருவாக்கியதால் அவருக்கு பாதாளம் என்னும் பரிசு தரப்படுகிறது. மேலும், செல்வந்தர் இலாசரை தன்னுடைய சகோதரர்களை எச்சரிக்க அனுப்ப கேட்டுக் கொள்கின்ற பொழுது, மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு என்று ஆபிரகாம் குறிப்பிடுகின்றார். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலும் நாம் உறவுகளை மதிக்காது தவற விடுகின்ற பொழுது எச்சரிக்கை நமக்கும் விடுக்கப்படுகிறது மற்றும் அதற்கான துன்பங்களையும் நாம் அனுபவிக்கின்றோம். நமக்கு சொத்து, பணம் மற்றும் வேலை தான் முக்கியம் என்று பணத்தைச் சார்ந்தவர்களாக வாழுகின்ற பொழுது நம்முடைய குடும்ப உறவுகளுக்கும் நமக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்படுகிறது. நமது வயதான பெற்றோரை விட்டு நாம் தனி குடும்பமாக வாழுகின்ற பொழுது நமது பிள்ளைகள், தாத்தா மற்றும் பாட்டி என்னும் பெரும் உறவு இடைவெளியை குழந்தைகள் பெறுகிறார்கள். இதனால் அவர்களின் அனுபவ கல்வியை இவர்கள் பெறாமலே போய் விடுகிறார்கள். இன்னும் நம்முடைய அன்றாட வேலையும்-குடும்பமும் என்று வாழ்கின்ற பொழுது, நம் அக்கம் பக்கம் வீட்டில் கூட யார் வாழ்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு பெரும் இடைவெளியை நாம் உருவாக்கி விடுகின்றோம். எனவே, இத்தகைய எச்சரிக்கையிலிருந்து கவனமாய் இருக்க வாழ்வின் உறவு இடைவெளியை குறைப்போம்.
இடைவெளியில்லா உறவு வாழ்வு:
உறவுகள் இல்லாத நிலையில் நாம் செல்வம் அற்றவர் ஆகிவிடுகிறோம், பணம் இருந்தும் ஏழையாகி நிற்போம். உறவுகள் சூழ வாழாதவருக்கு மனமகிழ்ச்சி இருக்காது. நமது வாழ்க்கைப் பயணம் முழுக்க உடனிருக்கக்கூடியவர்கள் நம் உறவுகள். கடினமான நேரங்களில் ஆறுதலும் உதவியும் அளிக்கக்கூடியவர்கள். எனவே, தாய், தந்தை, தாத்தா, பாட்டி, சகோதரன், சகோதரி, கணவன், மனைவி, பிள்ளைகள், உறவுகள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் உங்கள் உறவில் இடைவெளி இல்லாமல் போகட்டும். மனிதனின் வாழ்க்கை மனித உறவுகளால் வரையறுக்கப்படுகிறது. நல்ல உறவுகள் எண்ணற்ற பரிசுகளை அள்ளித்தரும். அது உங்களின் பணியில் வெற்றிகள் பெற உதவும். நல்ல உறவினர்களும் நண்பர்களும் உள்ளவர்களே உலகில் நிறைவான, மகிழ்வான வாழ்க்கை வாழ்பவர்கள். அவ்வாழ்வை
வாழ இடைவெளி இல்லா உறவை வளர்ப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
அன்புடன்:-
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF