Thursday, March 24, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 4-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) -----27-03-2022 - ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம்: யோசுவா 5: 9a, 10-12

இரண்டாம் வாசகம்: கொரிந்தியர் 5: 17-21

நற்செய்தி:  லூக்கா 15: 1-3, 11-32
ஊதாரி மைந்தன் யார்?

கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, தவக்காலத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமையில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். இது லெத்தாரே ஞாயிறு (அதாவது அகமகிழ்வின் ஞாயிறு) என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த மடத்தில் இருக்கிற ஞானியை தேடி ஒரு நபர் வந்திருந்தார். "ஐயா! நான் ஒரு குடிகாரன், இந்த குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்" என்று கேட்கிறார். அதற்கு அந்த ஞானி "நாளை மாலை வந்து என்னை பார்" என்று கூறுகிறார். அடுத்தநாள் அந்த குடிகாரன் ஞானியை தேடி வருகிறார். அப்பொழுது, அந்த ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஐயோ என்னை விட்டுவிடு என்று கத்திக் கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த அந்த குடிகாரன் ஐயா அந்த தூண் உங்களை பிடித்திருக்கவில்லை, நீங்கள் தான் அந்த தூணை கட்டிப்பிடித்திருக்கிறீர்கள் என்று கூறுகிறார்.
அதற்கு அந்த ஞானி, சிரித்துக்கொண்டே அவரைப் பார்த்து நான் இந்த தூணை பிடித்துக் கொண்டிருந்தது போல, நீயும் குடிப்பழக்கத்தை பிடித்துக் கொண்டிருக்கிறாய். அது உன்னை பிடிக்கவில்லை, நீ தான் அதை பிடித்திருக்கிறாய், எனவே நீ தான் அதை விட வேண்டும் என்று கூறுகிறார். இது வெறும் குடிப்பழக்கத்திற்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையில் தேவையற்று இருக்கின்ற பல எண்ணங்கள், செயல்கள் மற்றும் வார்த்தைகளிலிருந்து நாம் விடுபட நாம் பிடித்து வைத்திருப்பதிலிருந்து அதாவது அடிமையாய் இருப்பதிலிருந்து விடுபட வேண்டும். இத்தகைய ஒரு அழைப்பை தான் இன்று பெறுகிறோம். இன்றைய நற்செய்தியில் தன்னுடைய வாழ்க்கையில் தேவையற்றதை பிடித்து வைத்திருந்த இரு மகன்களைப் பற்றி பார்க்கின்றோம். ஒருவன் அதை உணர்ந்து அதை விட்டு வருகின்றான், மற்றொருவன் அதை உணராமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
நம்முடைய சிந்தனைக்காக நற்செய்தி பகுதியாக நாம் அதிக தடவை கேட்டு தெரிந்த ஊதாரி மைந்தன் கதையானது தரப்பட்டிருக்கிறது. ஒரு தந்தையையும் மற்றும் இரு மகன்களையும் வைத்து இறைமகன் இயேசு கிறிஸ்து எடுத்துரைக்கின்ற இந்த நிகழ்வில் நாம் அதிகம் சிந்திப்பது இளைய மகன் மற்றும் தந்தையை பற்றி தான். உண்மையாகவே இளைய மகன் தந்தையை விட்டு பிரிந்து, ஊதாரித்தனமாக வாழ்ந்தாலும், அவன் தன்னிலையறிந்து, மீண்டுமாக தந்தையிடம் வந்து அவருடைய மன்னிப்பையும் மற்றும் இரக்கத்தையும் பெற்றான். ஆனால் தந்தையோடு உடனிருந்து, அனைத்து வேலைகளையும் செய்த மூத்த மகன் அவர் அருகில் இருந்தாலும், உள்ளத்தளவில் தந்தையைப் பிரிந்து தன் எண்ணங்களில் ஊதாரித்தனமாக வாழ்ந்திருக்கின்றான். இந்நிகழ்வின் இறுதிப்பகுதி மூத்த மகனை பற்றி கூறினாலும், அவனது சிந்தனைகளும், செயல்களும் மற்றும் தந்தையிடம் அவன் பேசிய வார்த்தைகளும் அவன் எண்ணத்தால் தந்தையை விட்டுப் பிரிந்து வாழ்ந்த சூழலை நமக்கு எடுத்துரைக்கிறது.


1. அவனது சினம்:- வயலிலிருந்து வந்த மூத்த மகன் தனது வீட்டில்
நிகழ்ந்த ஆடல் பாடல்களை கேட்டு, தன் வீட்டுப் பணியாளர் மூலமாக தனது தம்பி வந்திருக்கின்றார் என்று கேள்விப்பட்டதும் சினம் கொள்கிறார். அவன் ஒரு நாளும் தன் சகோதரன் தன்னோடு இல்லை என்ற கவலையில்லாமல் வாழ்ந்ததையும், அன்பு செய்யாமல் இருந்ததையும், மேலும் தனக்கு சகோதர உறவு இல்லையே என்ற வருத்தம் அவனில் துளிக்கூட இல்லை என்பதை இது காட்டுகிறது. சாதாரணமாக, நம் உறவுகள் நம்மோடு இல்லாமல், மீண்டும் அவர்கள் நம்மிடம் வந்தால் அதை கண்டு நாம் மகிழ தான் செய்வோம். ஆனால், இவன் அதை நினைத்து கோபம் கொள்கின்றான், அதே கோபத்தை தன் தந்தையிடமும் வெளிப்படுத்துகின்றான்.

2.வீட்டிற்குள் செல்லாமை:-
அவனது உள்ளத்தில் எழுந்த சினத்தை வீட்டிற்குள் செல்லாமல் செயலில் காட்டுகின்றான். அதன் விளைவாக அவனைப் பெற்று வளர்த்தெடுத்த தந்தை அவனை வீட்டிற்குள் வர வைப்பதற்கு கெஞ்சுகிறார். தன் சொந்த தம்பி வந்ததை நினைத்து மகிழாமல், அதை நினைத்து சினமுற்று வீட்டிற்குள் செல்லாமலிருப்பது அவனது நினைவுகள், ஊதாரித்தனமாக இருந்ததை எடுத்துரைக்கிறது.

3. அடிமை போன்று வேலை செய்தேன்:- அவனது கோபத்தையும் மற்றும் வீட்டிற்குள் செல்லாமலிருந்த நிலையையும் தாண்டி, தான் அடிமை போன்று இந்த வீட்டில் வேலை செய்தேன் என்று கூறுகிறான்.
இந்த வார்த்தைகள் அவன் தன் தந்தையை ஒரு நாளும் தந்தையாக நினையாது, முதலாளியாக நினைத்திருக்கின்றான் என்பதை காட்டுகின்றது. மேலும், அந்த வீட்டில் அவனும் ஒரு மகன் என்னும் உறவை ஒரு போதும் உணர்ந்ததே இல்லை என்பதையும் இது நமக்கு காட்டுகிறது. ஆக அவன் தன் குடும்பத்திலிருந்து, தந்தையின் உறவிலிருந்து மற்றும் சகோதரனின் உறவிலிருந்து ஊதாரித்தனமாக இருந்திருக்கின்றான் என்பது தான் உண்மை. அந்த வீட்டில் அவனும் ஒரு பிள்ளை என்று கூறாமல் அடிமை என்று கூறியது அவன் தந்தையின் உறவிலிருந்து வெகுதூரத்தில் வாழ்ந்திருக்கின்றான் என்பதை எடுத்துரைக்கிறது.

4. ஓர் ஆட்டுக்குட்டிக்கூட தரவில்லை:-
நான் என் நண்பரோடு மகிழ்ந்து கொண்டாட ஒரு ஆட்டுக்குட்டியை கூட நீர் எனக்கு தந்ததே இல்லை என மூத்த மகன் தன் தந்தையை பார்த்து கூறுகின்றான். இது அவன் உறவில் மட்டுமல்ல அவனது உடமைகளிலும் கூட அவன் ஊதாரித்தனமாக தான் இருந்திருக்கின்றான் என்பதை காட்டுகிறது. அப்படியென்றால் அவன் ஒரு நாளும் தன் தந்தையிடம் அவனது ஆசைகளை வெளிப்படுத்தவில்லை என்றும், குடும்பத்தில் ஒருவனாக தன்னை எண்ணவில்லை என்றும் புரிகிறது. இவையெல்லாம் மூத்த மகனின் பிரிவையும் மற்றும் ஊதாரித்தனத்தையும் எடுத்து காட்டுகிறது.

5. விலைமகளிரோடு:- தன் கோபத்தின் உச்சகட்டத்தில் தன் சகோதரனை பழித்துரைக்கவும் ஆரம்பிக்கின்றான். 'விலை மகளிரோடு சேர்ந்து சொத்துக்களையெல்லாம் அழித்தவன்' என்று தன்னுடைய சகோதரனை பற்றி சொல்கின்றான். இணையதளமும் மற்றும் மொபைல்
போனும் இல்லாத ஒரு காலகட்டத்தில் தன் சகோதரன் விலைமகளிரோடு சேர்ந்து சொத்துகளையெல்லாம் அழித்தான் என்று இவனுக்கு எப்படித் தெரியும்? விலை மகளிரை பற்றிய அறிவு இவனுக்கு எங்கிருந்து வந்தது? சொத்துக்களை அழித்தவன் என்று மட்டும் கூறாமல், விலைமகளிரோடு சேர்ந்து அனைத்தையும் அழித்தவன் என வீண்பழி கூறுகின்றான்.


6. உம் மகன்:- எவ்வாறு 'அடிமை' என்ற வார்த்தை மூத்த மகனை தந்தையின் உறவிலிருந்து பிரித்தெடுத்ததோ, அதே போல 'உம் மகன்' என்னும் வார்த்தை அவனை தன்னுடைய சகோதரத்துவ நிலையிலிருந்து பிரித்தெடுப்பதாக இருக்கிறது. இது, அவன் தனது சகோதரத்துவத்திலும் ஊதாரியாக வெகுதொலைவில் வாழ்ந்திருக்கின்றான் என்பதை காட்டுகிறது.

மேற்சொன்ன இந்த ஆறு காரணங்களும் மூத்த மகன் தனது சிந்தனையால், சொல்லால் மற்றும் செயலால் தந்தையிடமிருந்தும், தன் சகோதரனிடமிருந்தும் மற்றும் குடும்பத்திலிருந்தும் பிரிந்து ஊதாரித்தனமாக வாழ்ந்திருக்கின்றான் என்பதை எடுத்துரைக்கிறது.
இன்று கிறிஸ்தவர்களாகிய நாமும் பலவேளைகளில் தந்தையாகிய இறைவனைப் பிரிந்து ஊதாரித்தனமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மது, மாது, பொருள், பணம், பதவி, பட்டம், செல்வம், உறவு, மொபைல்போன், லேப்டாப் மற்றும் சமூக வலைதளங்கள் என அனைத்திற்கும் அடிமையாகி, இறைவனைப் பிரிந்து ஊதாரித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பல வேளைகளில் இந்த மூத்த மகனைப் போல நாம் இறைவனோடு இருப்போம் மற்றும் அனைத்து ஜெப வழிபாடுகளிலும் பங்கேற்போம். ஆனால், நாம் உள்ளத்தளவில் பொறாமையுணர்வு, மற்றவரை ஏற்காத நிலை, பிறர் மீது வீண்பழி சுமத்துதல், நமது பெற்றோரை கஷ்டப்படுத்துதல், நாம் இறைவனின் மகன்/மகள் அதாவது கிறிஸ்தவன்/கிறிஸ்தவள் என உணராத நிலை மற்றும் கோபம் என இவையனைத்தும் நம்மில் இருக்கும் போது நம்மை அறியாமலே ஊதாரித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தந்தையின் மூத்த மகனும் மற்றும் நாமும் இத்தகைய நிலையிலிருப்பதற்கு இரண்டு காரணங்களை சொல்ல முடியும்.


1. சகோதரனின் தன்னிலை அறிதல் இல்லாமை

இளைய மகனும் ஊதாரித்தனமாக வாழ்ந்தான். ஆனால், தன் வாழ்வின் ஒரு காலகட்டத்தில், "அறிவு தெளிந்தவனாய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா,
கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்’ (லூக்கா 15:17-19) என்று சொல்லி தன்னிலையை உணர்ந்து தந்தையிடம் வந்தான். இது தான் அவனை ஊதாரித்தனத்திலிருந்து மீட்டெடுத்தது. நாம் எத்தகைய ஒரு பாவ குழிக்குள் விழுந்தாலும், தன்னிலையை உணர்கின்ற ஒரு மனநிலை நம்மில் ஏற்பட வேண்டும். இதைத்தான் மனமாற்றம் என்கின்றோம், மாற்றத்தோடு நாம் இறைவனை நோக்கி மீண்டும் வரவேண்டும், நாம் பயணித்துக் கொண்டிருக்கின்ற இந்த தவக்காலமும் அதற்கான ஒரு அழைப்பை தான் நமக்கு தருகின்றது. நம்மை, நம் பாவத்தை மற்றும் நம் வாழ்வை உணர்ந்து நாம் இறைவனை நோக்கி மீண்டும் வருவோம்.


2. தந்தையின் அன்பை மற்றும் இரக்கத்தை உணராமை

இளைய மகன் தன்னிலையை அறிந்து, தந்தையை நோக்கி வருகின்ற பொழுது, தந்தை ஓடோடி சென்று அவனை கட்டி அரவணைத்து முத்தமிட்டு கொழுத்த கன்றை அடித்து அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார். இறைவன் நம்மீது அளவு கடந்த அன்பையும் மற்றும் இரக்கத்தையும் காட்டுபவராக இருக்கின்றார். நாமும் இளைய
மகனை போல மனமாற்றம் பெற்று அவரை நோக்கி வருகின்ற பொழுது, அவர் தன்னுடைய அன்பின் மிகுதியால் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்கின்றார். இந்த மகிழ்ச்சியின் ஞாயிறுக்கு இன்றைய வாசகங்களும் முக்கிய காரணமாக அமைகின்றது. மனம்மாறி, பாவசங்கீர்த்தனம் செய்து, இறைவனை நோக்கி வந்து, அவருடைய மன்னிப்பையும் மற்றும் இரக்கத்தையும் பெறுகின்ற போது மனமகிழ்ச்சி நம்மில் ஏற்படுகின்றது. இந்த மகிழ்வை பெற தயாராக இருக்கின்றோமா? எத்தகைய ஒரு பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும், இளைய மகனைப்போல தன்னிலையை உணர்ந்து இறைவனுடைய இரக்கத்தை பெற தயாராக இருக்கின்றோமா? அல்லது மூத்த மகனைப் போல தன்னிலையை உணராது தந்தையின் இரக்கத்தைப் பெறாமல் கோபத்தோடு இருக்கப் போகின்றோமா? சிந்திப்போம்.
இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

 

 காணொளியில்/ஆடியோவில்  காண...