பொதுக்காலம் 24ஆம் வாரம்
(ஆண்டு- A)
13-09-2020
ஞாயிற்றுக்கிழமை
மகிழ்வான வாழ்வுக்கு மன்னிப்பு என்னும் சாவி
நெல்சன் மண்டேலா சிறைச்சாலையில் இருந்த காலத்தில் ஜெயிலர் ஒருவரால் அதிகம் துன்புறுத்தப்பட்டார். எந்த அளவுக்கு அவர் கொடுமை அனுபவித்தார் என்றால் தன்னுடைய ஒரே மகனுடைய இறப்புக்கு கூட அவரால் செல்ல முடியவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்பு அவர் சிறைச்சாலையில் இருந்து, விடுதலை அடைந்து நாட்டினுடைய ஜனாதிபதியாக மாறிய பொழுது அனைத்து அரசு அலுவலர்களுக்கும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். அப்போது அதே ஜெயிலர் விருந்தில் பங்குபெற வந்தார். இவர் தான் ஜனாதிபதி என்று இவரை பார்த்தவுடன் குற்ற உணர்ச்சியோடு ஓரம் ஒதுங்கினார். அதனைக் கண்ட நெல்சன் மண்டேலா அவரை அழைத்துச் சென்று நீங்கள் உங்களுடைய பணியை தான் செய்தீர்கள். உங்களை நான் மனமார மன்னிக்கின்றேன். வாருங்கள் நாம் இணைந்து நம் நாட்டு மக்களுக்கு பணி செய்வோம் என்று அழைத்துச் சென்றாராம்.
ஆம் அன்பார்ந்தவர்களே, நெல்சன் மண்டேலாவினுடைய மன்னிப்பு என்னும் சாவி அவர்கள் இருவருக்கும் ஒரு அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிவகை செய்தது. நம்முடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி என்னும் சாவியை ஏற்றுக் கொள்கின்ற போது, நம் வாழ்வு ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வாக நமக்கு அமையும். இன்றைய இறைவார்த்தை நமக்கு கொடுக்கின்ற
அழைப்பும் இதுவாகவே இருக்கின்றது.
யூத முறைப்படி மூன்று முறை மன்னித்தால் போதும். மூன்று முறைக்கு மேல் அவர்கள் தவறு செய்தால் இறைச் சட்டத்தின்படி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பேதுரு மூன்று முறை மட்டுமல்லாது, “ஏழு முறை மன்னிக்க வேண்டுமா” என்று இயேசுவைப் பார்த்து கேட்க, இயேசுவோ “ஏழு முறை அல்ல ஏழு முறை ஏழுபது தடவை என்று கூறுகின்றார். அதாவது வரையறையின்றி மன்னிக்க இயேசு அழைக்கின்றார். இன்றைய முதல் வாசகமும் “உனக்கு அடுத்திருப்பவர் உனக்கு செய்த அநீதியை மன்னித்துவிடு” என்று இந்த மன்னிப்பு என்ற சாவியை நம்முடைய வாழ்க்கையிலே பெற்றுக் கொள்ள நமக்கு அழைப்புத் தருகிறது.
இன்றைய நற்செய்தியில் மன்னிப்பின் அடித்தளத்தில் மூன்று வகையான உறவுகளை நாம் பார்க்கின்றோம்.
1. மன்னிக்கும் உறவு
2. மன்னிக்க மறந்த உறவு
3. மன்னிப்பை மறுதலித்த உறவு.
1. மன்னிக்கும் உறவு
மன்னிப்பை பெற்ற பணியாளன் தன்னுடைய சக பணியாளருடைய கடனை மன்னிக்காதது வெறும் 3 மாத சம்பளம் தான். யூத நாணய மதிப்பு படி ஒரு தெனாரி என்பது ஒரு நாள் கூலி தான், ஆக அது வெறும் மூன்று மாத சம்பளம் ஆனால் அரசர் மன்னித்ததோ மிகப்பெரிய தொகை ஏனென்றால்ஒரு தாலந்து என்பது ஆறாயிரம் முதல் பத்தாயிரம் தெனாரியமாக கருதப்படுகின்றது. அரசருக்கு வரி வசூலிக்கும் தொகையே வெறும் 900 தாலந்து ஆக அரசர் தன் பணியாளர் மீது கொண்ட உறவானது உண்மையாகவே மன்னிக்கிற உறவாக இருக்கின்றது.
2. மன்னிக்க மறந்த உறவு
பணியாளர்களுக்கு இடையே உள்ள உறவு தான் மன்னிக்க மறந்த உறவு. மன்னிப்பைப் பெற்ற பணியாளர் தனக்கு கீழ் இருக்கின்ற மற்றொரு பணியாளனை மன்னிக்க மறந்து இருக்கின்றான். மன்னிப்பை உணராத ஒரு தன்மை, எளிதில் திருப்பிக் கொடுக்க கூடிய ஒரு கடனை மன்னிக்க மறந்த ஒரு பணியாளன் கொண்ட உறவு அர்த்தமற்ற ஒரு உறவு. நாம் இத்தகைய உறவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா?
3. மன்னிப்பை மறுதலித்த உறவு.
இரண்டாவது முறையாக அரசருக்கும் பணியாளருக்கும் உள்ள உறவு மன்னிப்பை மறுதலித்த உறவு. இது பெற்றதை திருப்பிக் கொடுக்காத ஒரு தன்மை, அதனால் பெற்ற மன்னிப்பு அவரிடம் பறிபோகின்றது. மன்னிப்பினுடைய அர்த்தத்தை உணராத ஒரு தன்மை அதனால் அவருக்கு துன்பமும் கஷ்டமும் வருகின்றது. இறை மன்னிப்பை உணராத தருணங்களில் நம்முடைய வாழ்வும் இப்படிதான் மறுக்கப்படுகின்ற வாழ்வாக மாறும்.
இறைமகன் இயேசு கிறிஸ்து மீண்டும் மீண்டுமாக நமக்கு எடுத்துரைக்கின்ற ஒரு நற்குணம் இந்த மன்னிப்பு. இந்த மன்னிப்பு என்னும் சாவியை நாம் நமதாக்கிக் கொள்ள முயலவேண்டும். மத்தேயு. 6 :9 -11-ல் இயேசு நமக்கு ஜெபிக்க கற்று கொடுக்கின்ற பொழுது “எங்களுக்கு எதிராக தவறு செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்” என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றார். லூக்கா. 23 :34-ல் இயேசு சிலுவையில் இருக்கின்ற பொழுது மன்னிப்பதை நாம் பார்க்கின்றோம், “தந்தையே இவர்கள் செய்வது என்னதென்று தெரியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும்” என்கின்றார். புனித மரிய கொரற்றி தன்னை கத்தியால் கொன்ற அலெக்ஸாண்டரை மன்னிப்பதை பார்க்கின்றோம். புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் தன்னை சுட்டுக் கொல்ல முயன்ற மெக்பத் அலி அகாவை சிறைச்சாலை சென்று மன்னித்தார். அருட்சகோதரி. ராணி மரியாவை கொன்ற சமாந்தர் சிங்கை அவருடைய இல்லத்தார் மன்னிப்பதை பார்க்கின்றோம். மாவீரன் நெப்போலியன் போருக்குப்பின் ரஷ்ய நாட்டு வீரரையும் மன்னித்து அவருடைய உயிரை காப்பாற்றியது வரலாறு. இவர்கள் அனைவரும் இந்த மன்னிப்பு எனும் சாவியை தங்களுடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டார்கள். இதைத்தான் பவுல் அடிகளார் எபேசியர். 4 :26 -ல் “பொழுது சாய்வதற்கு முன்பு உங்களுடைய சினம் தனியட்டும்”, பிறரையும் மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிடுகின்றார்.
Campaign for forgiveness –ல் ஏறக்குறைய 48 ஆய்வுகளை நடத்தினார்களாம். மன்னிப்பு எனும் குணம் கொண்ட ஒவ்வொருவரும் நீண்ட ஆயுள் வாழ்வார்கள் என்றும், நல்ல உடல் உள்ள சுகத்தோடு அவர்கள் இருப்பார்கள் என்றும் இந்த ஆய்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றது. 7 -பல்கலைக்கழகங்கள் மன்னிப்பை பற்றி நடத்திய மற்றொரு ஆய்வில் யாரெல்லாம் மன்னிப்பு என்னும் சாவியை கொண்டு இருக்கிறார்களோ அவருக்கு கேன்சர் நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்றும், மன அழுத்தம் இருக்காது என்றும் குறிப்பிடுகின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள் நாம் ஒருவரை மன்னிக்காதது நாம் நமக்குள்ளே தேவையில்லாத விஷத்தை செலுத்தி கொண்டிருப்பது ஆகும்.
நாம் ஒருவர் மற்றவரை மன்னித்து வாழுகின்ற பொழுது நல்ல உடல் உள்ள சுகத்தோடு இருப்போம். அதற்கு முதலில் நாம் நம்மை நாமே மன்னிக்க வேண்டும். நம்மை நாமே நாம் அறிகின்ற போது, நம்முடைய தாழ்வு மனப்பான்மை, தோல்வி மனப்பான்மை அனைத்தும் நம்மிடையே இருந்து அகன்று போகும், அப்பொழுது நமக்கு வெற்றி கிடைக்கும். பல வேளைகளில் நாம் நம்மிடையே இல்லாததை பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். நம்முடைய தேவைகள் அனைத்தையும் நம்மிடையே இல்லாததில் செலுத்துகின்றோம். இனி நாம் நம்மிடையே இருப்பதில் நம்முடைய கவனத்தை செலுத்துவோம். அப்பொழுது இந்த மன்னிப்பு என்ற சாவி, நம்முடைய வாழ்க்கை முழுவதும் நமது ஆகும். இது நம்முடைய வாழ்க்கையை மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இட்டுச் செல்ல முடியும்.
இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
|
|
||||
|
|
|
|||
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம். |