Thursday, April 20, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பாஸ்கா 3-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A) - 23-04-2023 - ஞாயிற்றுக்கிழமை

 

🌱விவிலிய விதைகள்🌱
பாஸ்கா காலத்தின் 3-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(23 ஏப்ரல் 2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: திபணி 2: 14, 22-33
இரண்டாம் வாசகம்: 1 பேதுரு  1: 17-21
நற்செய்தி: லூக்கா 24: 13-35

நம்மோடு நடக்கிறார்
நம்மோடு தங்குகிறார்


அந்த விதவைத் தாயின் மகன் சூதாடுகிறான் என்று கேள்விப்பட்டு அவனை கண்டித்தாள். அவனோ தாயின் வார்த்தையை கேட்காமல் தொடர்ந்து சூதாடியபோது போலீசால் பிடிக்கப்பட்டான். அவனோடு கூட பிடிப்பட்ட மற்ற இளைஞர்கள் அபராத தொகையை கட்டி விடுதலையாகி வந்தார்கள். ஆனால் அவனுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை கட்ட வழி இல்லாததால் சிறையில் அடைக்கப்பட்டான். தன் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் மகன் போனான் என்பதற்காக அந்த தாய் அவனை கைவிட்டு விடவில்லை. மாறாக அவனோடு உடன் பயணிக்க விரும்பி காலை முதல் இரவு வரை கல்லுடைத்து, கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து, சில மாதங்களுக்குப் பிறகு அபராத தொகையை கட்டி மகனை விடுவித்தாள். இதையெல்லாம் கேள்விப்பட்ட மகன் திருந்தி புது வாழ்வு பெற்றான். தன் வார்த்தையை கேட்காததால் சிறை சென்றான் என்று அவனது தாய் அவனை கைவிட்டு விடாமல் அவனுடைய துன்பமான சூழலிலும் அவனோடிருக்க கல்லுடைத்து அபராதத்தை கட்டி அவன் வாழ்வை மாற்றினாள். இன்றைக்கு நாமும் ஆண்டவரை விட்டு விலகி துன்பமான ஒரு சூழலிலே பயணித்துக் கொண்டிருந்தாலும் அவர் நம்மை கைவிட்டு விடாமல் நம்மோடு உடன் பயணிக்கிறார், நம்மோடு தங்குகிறார் மற்றும் நம் வாழ்வை மாற்றுகிறார் என்ற ஆழமான இறைச்சிந்தனையை நமக்கு தருகிறது இன்றைய பாஸ்கா காலத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய நற்செய்தியில் எம்மாவு நோக்கி சென்ற சீடர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார் (லூக்கா 24:15). எருசலேமிலிருந்து ஏழு மைல் தொலைவில் எம்மாவு இருந்தது, இதை சாதாரணமாக இரண்டு மணி நேரத்தில் நடந்து செல்லலாம். ஆக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தன்னை யாரென்று கூட முழுமையாக காட்டிக் கொள்ளாமல் அவர்களின் நிலையை மாற்ற அவர்களோடு உடன் நடந்து மற்றும் அவர்களோடு தங்கி புது வாழ்வை தருகிறார். இயேசு அவர்களுடன் நடந்தபோது மூன்று கேள்விகளை கேட்கிறார். இவை அவர்களின் நிலையை அறிந்து மாற்றம் தந்திட படிக்கற்களாக மாறியது.

1. வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? (லூக்கா 24:17)

எம்மாவு நோக்கி நடந்த இரண்டு சீடர்களின் மனநிலையை அறியவும் மற்றும் அவர்களோடு உரையாடலை துவங்கவும் ஒரு தொடக்கம்தான் இந்த முதல் கேள்வி. இவர்கள் தங்களோடு உடனிருந்த இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் இறந்ததால் தங்களுடைய வாழ்வை வெறுத்து எல்லாம் முடிந்தது என நினைத்தனர். நம்பிக்கை இழந்து, துன்பம் என்னும் பள்ளத்தில் விழுந்து தனிமையில் மற்றும் முகவாட்டமாய் (லூக்கா 24:17) எம்மாவு நோக்கி நடந்தனர். இயேசுவின் முதல் கேள்வி இந்த சீடர்களின் நிலையை எடுத்துரைக்கிறது. இன்றைக்கு நம்முடைய வாழ்வின் நிலை என்ன? நாமும் இந்த சீடர்களைப் போல நம்பிக்கையிழந்து மற்றும் வாழ்க்கையை வெறுத்தவர்களாக பயணித்துக் கொண்டிருக்கின்றோமா?

2. என்ன நிகழ்ந்தது? (லூக்கா 24:19)

சீடர்கள் துன்பத்திலும் மற்றும் சோகத்திலும் இருப்பதற்கு அடிப்படை காரணம் என்ன என்பதை எடுத்துரைக்கிறது இயேசுவின் இரண்டாவது கேள்வி. இயேசு மிகப்பெரிய ஆசிரியராக, அரசராக மற்றும் மெசியாவாக இருந்து, மீட்பு தந்து, மக்களின் வாழ்க்கை நிலையை மாற்றுவார் என்ற சீடர்களின் எதிர்பார்ப்பு இயேசுவின் மரணத்தில் அழிந்து போய் ஏமாற்றத்தை தந்தது (லூக்கா 24:19-21). தங்களது வாழ்க்கை முழுவதும் இயேசுவோடு உடன் இருக்கலாம் என்று நினைத்தவர்களின் கனவு சரிந்து போய்விட்டது. சீடர்கள் எம்மாவு நோக்கி பயணித்த அதே நாள் காலையில்தான் பெண்களும் தங்களோடு உடன் இருந்தவர்களும் கல்லறை காலியாக இருக்கிறது எனவும், வானத்தூதரையும், உயிர்த்த இயேசுவையும் கண்டதாக சான்று பகர்ந்தார்கள். ஆனால், அவர்கள் அச்செய்தியை முழுமையாக ஏற்று நம்பவில்லை (லூக்கா 24:22-24). எனவே, எருசலேமிலிருந்து எம்மாவு நோக்கி நடந்தார்கள். சீடர்களோடு உடன் நடந்து அவர்களின் நிலையை மட்டுமல்லாமல் அந்நிலையில் அவர்கள் இருப்பதற்கான காரணத்தையும் அறிந்து கொள்கிறார். இன்றைக்கு நம்முடைய வாழ்வின் துன்பமான மற்றும் சோகமான தருணங்களிலும் இயேசு உடன் நடக்கிறார் என்பதை நாம் உணர்கின்றோமா? நம்மோடு அவர் உரையாடுகின்றார் என்பதை உணர்ந்து அவருடைய உரையாடலுக்கு செவி கொடுக்கின்றோமா? நம் வாழ்வை அவரோடு பகிர்ந்து நம்முடைய இந்நிலைக்கு என்ன காரணம் என்பதை புரிந்து கொள்கின்றோமா?

3. மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! (லூக்கா 24:26)

இச்சீடர்கள் இந்நிலையில் இருப்பது தவறு என்பதை சுட்டிக் காட்ட இயேசு மூன்றாவது கேள்வியை கேட்டு அவர்களுக்கு விளக்குகிறார். இயேசுவின் வாழ்வில் நடந்த அனைத்தும் ஏற்கனவே முன் அறிவித்தவை என்பதையும், அதை அவர்கள் நம்பாமல் இருக்கிறார்கள் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார் (லூக்கா 24:25-27). இயேசு தன்னுடைய பாடுகளின் மறைபொருளை அவர்களுக்கு விளக்கி நம்பிக்கையையும் புதுவாழ்வையும் தருகிறார். இன்று நம்மோடு உடன் நடக்கும் இயேசு நாம் இந்நிலையில் இருப்பது சரிதானா? என்னும் கேள்வியை நம்மை பார்த்தும் கேட்கிறார். அவர் நம்மை நம்பிக்கையற்ற நிலையில் விட்டு விடுவதில்லை. அவர் விண்ணகம் எழுந்தது அவரது மகிமைக்காக அல்ல, தம்மோடு நம்மை சேர்த்துக் கொள்வதற்காகவே. அன்று சீடர்களோடு நடந்து சென்றது போல, இன்றும் நம்மோடு அவர் நடக்கிறார். எனவே, நம் எதிர்பார்ப்புகள், கனவுகள் மற்றும் நம்பிக்கைகள் சிதறடிக்கப்படும் போது நம்மோடு உடன் நடக்கும் ஆண்டவரை நம் மனக்கண் முன் கொணர்வோம். அவரோடு உரையாடி
புது வாழ்வு பெறுவோம்.

நம்மோடு நடக்கிறார்

இன்றைய நற்செய்தியில் எம்மாவு நோக்கி பயணித்த இரண்டு சீடர்களில் ஒருவர் பெயர் கிளயோப்பா என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. மற்றொரு சீடரின் பெயர் சொல்லப்படவில்லை, இந்த பெயர் சொல்லாத சீடரின் இடத்தில் நம்முடைய பெயரை எழுதுவோம். நாம் வாழ்வை வெறுத்து யாருமே இல்லை என்று தனியாக பயணிக்கின்ற பொழுதெல்லாம் "நான் இருக்கின்றேன், உம்மோடு நடக்கின்றேன்" என்று நம்மை தேடி வருகிறார் உயிர்த்த இயேசு. எம்மாவு சீடர்கள் விரக்தியோடு நடந்து சென்றார்கள், இயேசு அவர்களை தேடி வந்து, உடன் நடந்து, இறைவார்த்தையாலும் நற்கருணையாலும் அவர்களுடைய கண்களைத் திறந்து புது வாழ்வை தந்தார். அதே போல் இன்று கிறிஸ்தவர்களாகிய நம்முடைய வாழ்வின் நிலையை மாற்ற உடன் நடக்கிறார். இறையாட்சியை பறைசாற்றுவதற்காக பல்வேறு ஊர்களுக்கு நடந்தவர், சிலுவையை சுமந்து கல்வாரி மலை நோக்கி நடந்தவர் மற்றும் எம்மாவு சீடர்களோடு உடன் நடந்தவர், இன்று நமக்காக, நம்மோடு நடக்கிறார். நம் வாழ்வும் மாறுபட நடக்கிறார், நம்மோடு நடக்கும் இயேசுவை நம் வாழ்வில் உணர்வோம், புது வாழ்வை பெறுவோம்.

நம்மோடு நம் துன்ப வேளைகளில் உடன் நடந்த இயேசுவைப் போல நாமும் நம்முடைய குடும்பத்தில் உள்ளவர்களின் துன்ப வேளைகளில் அவர்களோடு உடன் நடக்கின்றோமா? என சிந்திப்போம். பெற்றோர்களாகிய நாம் நம்முடைய பிள்ளைகளின் வளர்ச்சியில் குறிப்பாக தேர்வுக்காக, வேலைக்காக மற்றும் வாழ்க்கைக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களுடன் நடக்கின்றோமா? இன்னும் நம்முடைய சகோதர சகோதரிகளோடு, நண்பர்களோடு மற்றும் உறவினர்களோடு உடன் நடக்கின்றோமா? இன்னும் குறிப்பாக வயதான நம் பெற்றோர்களோடு மற்றும் முதியவர்களோடு அவர்களது வாழ்க்கையில் பங்கு கொண்டு உடன் நடக்கின்றோமா? சிந்திப்போம்! இயேசு நம் வாழ்வில் உடன் நடப்பது போல, நாமும் பிறரது வாழ்வில் உடன் நடப்போம்.

நம்மோடு தங்குகிறார்

எம்மாவு நோக்கி பயணித்த இந்த இரண்டு சீடர்களும் இயேசுவை தங்களோடு தங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இயேசுவின் பணி வாழ்வின் துவக்கத்தில் இரண்டு சீடர்கள், “ரபி*, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள் (யோவான் 1:38-39). அதேபோல இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகும் எம்மாவு நோக்கி நடந்த இரண்டு சீடர்களும் இயேசுவோடு தங்கி அவர் யார் என்று முழுமையாக அறிந்து கொண்டார்கள். இதுவரைக்கும் இயேசுவின் வார்த்தைக்கு செவி கொடுத்தவர்கள், அவரோடு உரையாடியவர்கள், தொடர்ந்து அவருடைய பிரசன்னத்தில் வாழ ஆசைப்பட்டு 'எங்களோடு தங்கும்' என்கிறார்கள். இறைவார்த்தைக்கு செவிகொடுத்தவர்கள் இயேசு ஏற்படுத்திய நற்கருணை என்னும் திருவருட்சாதனத்திற்குள் நுழைகிறார்கள். இந்த நற்கருணை பகிர்வு அவர்கள் இயேசுவை முழுமையாக கண்டுணர செய்தது. அவர்களுக்கு புதுவாழ்வும் கிடைக்க செய்தது. இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்மோடு உடன் பயணிக்கும் இயேசுவை நம்மோடு தங்குவதற்கு அழைக்க தயாராக இருக்கிறோமா? சிந்திப்போம்!

திருச்சபை இன்று உயிர்த்தெழுந்த இயேசுவின் பணியை தொடர்கிறது. இயேசு தன் பாடுகளிலிருந்து மகிமையடைந்தது போல் கிறிஸ்தவ வாழ்வும் துன்ப துயரங்களிலிருந்து நற்கருணை என்னும் இயேசுவின் உடனிருப்பு வழியாய் புதுவாழ்வு பெறுகிறது. நாம் பங்கேற்கும் நற்கருணை என்னும் திருவருட்சாதனம் இயேசுவை நம்மோடு உறவு கொள்ள வைத்து, அவர் நம்மோடு நடக்கின்றார் மற்றும் தங்குகிறார் என்பதை எடுத்துரைக்கின்றது. இதை உணர்ந்து நம்மோடு உடன் நடக்கும் மற்றும் இருக்கும் இயேசுவை நம் வாழ்வாக்குவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.