Saturday, August 22, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 23-08-2020 - பொதுக்காலம் 21ஆம் வாரம் ( ஆண்டு- A)

 

பொதுக்காலம் 21ஆம் வாரம்
(
ஆண்டு- A)

23-08-2020

ஞாயிற்றுக்கிழமை


 

தன்னிலை அறிந்து வாழ்வோம்

 

ஒரு முறை ஒரு குரு தன்னுடைய சீடர்களிடம், ஒரு மனிதனுடைய நல்ல வாழ்க்கையின் ஆயுட்காலம்  எவ்வளவு? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு ஒரு சீடன் நூறு ஆண்டுகள் குருவே என்று கூறினார். இல்லை என்று குரு கூற, மற்றொரு சீடன் 90 ஆண்டுகள்  என்று கூறினார். அதற்கும் குரு இல்லை என்று கூற, மற்ற சீடர்கள் 80, 70, 60 என  ஒவ்வொன்றாக கூறினார்கள். இதற்கு குரு இல்லை என்று கூறிவிட்டு, ஒரு மனிதனுடைய நல்ல ஆயுட்காலம் ஒரே ஒரு நொடி என்று கூறினாராம். இதைக் கேட்ட சீடர்கள் ஆச்சரியப்பட்டார்கள்ஒரு மனிதனுடைய நல்ல ஆயுட்காலம் ஒரே ஒரு நொடி எப்படி  குருவே என்று  ஆச்சரியப்பட்டு  கேட்டார்கள். அதற்கு அந்த குரு எவன் ஒருவன் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் உணர்ந்து, தான் அந்த நொடியில் எப்படி இருக்கின்றேன் என தன்னிலையை அறிந்து, தன்னை அறிந்து  வாழ்கின்றானோ, அவன் வாழ்க்கை மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கையாக, அர்த்தமுள்ள வாழ்க்கையாக, தன்னுடைய இலக்கை அடையக்கூடிய வாழ்க்கையாக மாறும் என்று கூறினாராம்.

 ஆம் அன்பார்ந்தவர்களே இன்றைய இறைவார்த்தை  நாம் நம் நிலையை அறிந்து வாழ நமக்கு அழைப்பு தருகின்றது. தன்னிலை அறிதல் நம்மை மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள இலக்குகளை அடைய கூடியதாக வாழ அழைத்துச்செல்லும்.

 ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய இலக்கை அடைவதற்கு தன் நிலையை நன்கு அறிந்திருக்க வேண்டும். இறைமகன் இயேசு தன் நிலையை நன்கு அறிந்திருந்தார். கொள்கைப் பிடிப்பு கொண்டிருந்தார். அவர் தம்மைப் பற்றிய கருத்துகளைப் பிறரிடம் கேட்டு அறிந்தார்

  தந்தையோடு மனிதருடன் நல்லுறவு கொண்டிருந்தார். தன்னுடைய பணிகளை பற்றி சிந்தித்தார். தான் செய்யவிருந்த பணிகளை திட்டமிட்டு அதற்கான மதிப்பீடுகளை செய்தார். இறைமகன் இயேசு கிறிஸ்து தம்மைப் பற்றி பிறர் கொண்டிருந்த கருத்துக்களை கேட்டறிந்தார். இன்றைய நற்செய்தியில் தான் யார் என்பது பற்றி சீடர்கள் கூறியதை கவனமுடன் கேட்கின்றார், அதனை நேரிய மனதுடன் ஏற்றுக் கொள்கின்றார். இதுதான் இன்றைய இறைவார்த்தை பகுதி நமக்கு தரும் அழைப்பாக இருக்கிறது

 இயேசு மக்களும் சீடர்களும் தன்னைப் பற்றி எத்தகைய ஒரு கருத்துக்களோடு இருக்கின்றார்கள் என்பதை கேட்டு தன்னையே அறிந்து கொள்வதை பார்க்கின்றோம். இயேசு நாற்பது நாட்கள் நோன்பிருந்து, அதிலும் அலகையால் சோதிக்கப்பட்டு, தன்னைப்பற்றி முழுமையாக அறிந்து  புரிந்துகொள்கிறார். (மத்தேயு 4:1-2) இயேசு தனிமையில் ஒவ்வொரு முறையும்   தனிமையான இடத்திற்கு விடியற்காலையில்  சென்று ஜெபிப்பது தன்னைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்வதன் அடையாளம். (மாற்கு 1:35 /லுக்கா 11: 1) "என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையை செய்து முடிப்பதுமே என் உணவு" (யோவான் 4 :34) "மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாக தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" (மாற்கு 4:34) இந்த இறை வசனங்கள் இயேசு தன்னை முழுவதுமாக அறிந்திருந்ததையும், தன்னுடைய இலக்கை முழுவதுமாக அறிந்ததையும் நமக்கு  வெளிப்படுத்துகின்றது. இயேசு ஒவ்வொரு முறையும் தன்னுடைய சீடர்களிடம் தன்னுடைய இறப்பைப் பற்றி, பாடுகளைப் பற்றி கூறுவது அவர் தன் இலக்கை நன்கு அறிந்திருந்ததை நமக்கு காட்டுகின்றது. (மத்தேயு 16: 21 -23 )  "தந்தையே உமக்கு விருப்பமானால்  இத்துன்ப கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும்  என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்"( லூக்கா 22-42)

 இன்று ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்து கொள்வது மிக அவசியமாக இருக்கின்றதுநம்மை அறிதல் நம்மை மகிழ்வான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும். நாம் நம்மை முழுமையாக அறிகின்ற பொழுது நம்முடைய வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நாம் நம்முடைய இலக்கை  அடைய இயலும். இயேசுவைப் போல நம்மை நாம் முழுவதுமாக அறிந்தவர்களாக இருக்க வேண்டும். "சீர்தூக்கிப் பார்க்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது" என்கிறார் தத்துவ மேதை சாக்ரடீஸ். நாம் நம்முடைய வாழ்க்கையை சீர் தூக்கிப் பார்க்க நாம் நம்மை முழுவதுமாக அறிய  வேண்டும்.

 பொதுவாக இருவகை நோக்கங்களைக் கொண்ட   மனிதர்களைப் பற்றிப் பேசுவார்கள்.

  1 அகநோக்கு  கொண்ட மனிதர்கள்

 2. புறநோக்கு கொண்ட மனிதர்கள்.

 அகநோக்கு கொண்ட மனிதர்கள் தங்களைப் பற்றி அதிகம் அக்கறை கொண்டிருப்பார்கள். தங்களைப் பற்றி எப்போதும் சிந்திப்பார்கள். இவர்களிடம் அகநோக்கு அதாவது ஆக வளர்ச்சியானது அதிகமாக காணப்படும்புறநோக்கு கொண்ட மனிதர்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவிக் கொண்டே இருப்பார்கள். அவர்களது வாழ்க்கை சீர் தூக்கிப் பார்க்கப்பட்டதாக  இருக்காது. அவர்கள் உள்ளார்ந்த வளர்ச்சி அற்றவர்களாகவே அதாவது அக வளர்ச்சி அற்றவர்களாகவும் இருப்பார்கள். இன்று நாம் எத்தகைய மனிதர்களாக இருக்கின்றோம்? ஒரு முழுமையான மனித தன்மைக்கு அகநோக்கிலும் புறநோக்கிலும் சமநிலையை கொண்டிருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக அகநோக்கு, தேவைக்கு மிதமிஞ்சிய புறநோக்கு இரண்டுமே சம நிலைக்கு புறம்பானவையாக கருதப்படுகிறது. இத்தகைய ஒரு சம நிலையை அடைவதற்கு தான் நாம் நம்மை அறிந்தவர்களாக வாழ வேண்டும்.

 நாம் நம்மை அறிந்து கொள்ள ஜோ லுப்ட், ஹரி இன்காம் என்பவர்கள் ஒரு சிறந்த வழி முறையை கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு ஜோஹரி சன்னல் என பெயரிடப்பட்டுள்ளது.

 1.மற்றவர்களும் நானும் அறிந்தது

மற்றவர்களும் நானும் அறிந்த சுதந்திரமான வாழ்க்கை பகுதி. என்னை பற்றி நானும் அறிந்திருக்கின்றேன், மற்றவர்களும் அறிந்து இருக்கிறார்கள்.

 2. மற்றவர்கள் மட்டும் அறிந்தது

            மற்றவர்கள் மட்டும் அறிந்து நான் அறியாத இருட்டு பகுதி. என்னை பற்றி நான் அறியவில்லை ஆனால் மற்றவர்கள் அறிந்திருக்கிறார்கள். இத்தகைய சூழலில் நான் மற்றவர்களிடம் என்னை பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

 3. நான் மட்டும் அறிந்தது 

நான் மட்டும் அறிந்து மற்றவர்கள் அறியாத மறைந்த வாழ்க்கை பகுதி. அப்பொழுது என்னைப் பற்றி நான் மற்றவர்களுக்கு எடுத்துரைப்பவனாக, என்னை முழுவதுமாக வெளிப்படுத்துபவனாக  மாற வேண்டும்.

 4.  நானும் மற்றவர்களும் அறியாதது

நானும் மற்றவர்களும் அறியாத என் இருண்ட வாழ்க்கை பகுதி. அத்தகைய ஒரு சூழலில்  நாம் நம்மை முழுமையாக அறிய வேண்டும்.

நம்மை பிறர் அறிய செய்ய வேண்டும். அப்போது தான் வாழ்க்கையின் அனைத்து இலக்குகளையும் நம்மால் அடைய இயலும்.

 இன்று நாம் எத்தகைய ஒரு நிலையில் இருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்ப்போம். இறைமகன் இயேசு கிறிஸ்து தன்னை முழுவதுமாக அறிந்தவராக இருக்கிறார். தன்னைப்பற்றி பிறரும் முழுமையாக அறிய வேண்டும் என்று விரும்புகின்றார். எனவே தான் சீடரிடம் இத்தகைய ஒரு கேள்வியினை அவர் கேட்கின்றார். நம்முடைய வாழ்க்கையில் நாம் நம்மை அறிந்தவர்களாக நம்மைப் பற்றி பிறருக்கு வெளிப்படுத்துபவர்களாக  மாறுவோம். அப்போது நாம் நம்முடைய வாழ்க்கையை மகிழ்வாக வாழ இயலும். அத்தகைய ஒரு நிலையை அடைய இறையருளை வேண்டி மன்றாடுவோம். இறைவன்  நம்மை ஆசீர்வதிப்பார்.


Fr.
குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.