Friday, May 12, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பாஸ்கா 6-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A) - 14-05-2023 - ஞாயிற்றுக்கிழமை

 

🌱விவிலிய விதைகள்🌱
பாஸ்கா காலத்தின் 6-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(14 மே  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: திபணி 8: 5-8, 14-17
இரண்டாம் வாசகம்: 1 பேதுரு    3: 15-18
நற்செய்தி: யோவான் 14: 15-21


அன்பினால் உந்தப்பட...ஆவியால் இயக்கப்பட...


            நாம் அனைவரும் நன்கு அறிந்த பழைய கதை அது. காட்டிற்குள் சென்ற ஒரு மனிதன் கழுகின் முட்டையை பார்க்கின்றான். அதை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்து கோழிகளின் முட்டையோடு அடை காக்க வைக்கின்றான். கோழிக்குஞ்சுகளோடு வளர்ந்த அந்த கழுகு குஞ்சும் கோழிக்குஞ்சுகளை போலவே மண்ணைக் கொத்தி தன் உணவை தேடிக் கொள்வது, அவைகளை போலவே நடப்பது என தன்னை ஒரு கோழிக்குஞ்சாகவே அடையாளப்படுத்தி வளர்கிறது. ஒரு நாள் மற்ற கோழிக்குஞ்சுகளோடு இரைக்காக மேய்ந்து கொண்டிருந்த போது மேலே பறந்த ஒரு கழுகை பார்க்கிறது. அப்போது கழுகு குஞ்சு மற்ற கோழி குஞ்சுகளிடம், "அதோ பார் இதுதான் உண்மையானவே பறவைகளின் ராஜா, மிக அழகாக உயரத்தில் பறக்கிறது. நாமெல்லாம் முயற்சித்தாலும் மற்றும் நினைத்தாலும் இப்படி பறக்க முடியாது என்றது." தன்னாலும் அந்த கழுகை போல உயரத்தில் பறக்க முடியும் என்பதை அறியாத கழுகு குஞ்சைப் போலத்தான் இன்று நம்முடைய வாழ்க்கையும் இருக்கிறது. குறிப்பாக கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கின் வழியாக அன்பை ஆடையாகவும், ஆவியானவரை ஆற்றலாகவும் கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பாஸ்கா காலத்தின் ஆறாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் ஒவ்வொருவரும் அன்பினால் உந்தப்பட்டு, ஆவியால் இயக்கப்பட்டு இறைவனில் வாழ அழைப்பு பெறுகிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசு நம் ஒவ்வொருவரையும் அன்பிலும் ஆவியிலும் வாழ்கின்றோம் என்பதை உணர்ந்திட அழைக்கின்றார்.

1. அன்பினால் உந்தப்பட
            இன்றைய நற்செய்தியின் துவக்கமும் முடிவும் அன்பை பற்றி எடுத்துரைக்கிறது"என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.” (யோவான் 14:21) என்னும் இயேசுவின் அழைப்பிற்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் இயேசுவை அன்பு செய்து தந்தையாகிய இறைவனின் அன்பில் இணைய அழைப்பு பெறுகின்றோம். இறைவன் தன்னுடைய அன்பை தன் ஒரே மகனின் மனித பிறப்பிலும் மற்றும் இறப்பிலும் வெளிப்படுத்தினார். நம்மில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இறையன்பு இறைவனை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் கருவியாகும். படைத்த இறைவன் நம்மை அன்பு செய்கின்றார், அவர் காட்டுகின்ற அந்த அன்பை நாம் அவரோடும், ஒருவர் மற்றவரோடும் பகிர்வதற்கு முயல வேண்டும். இதைத்தான் "கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்." (1 யோவான் 4:20,21) என வாசிக்கின்றோம். எனவே நம் சகோதர சகோதரிகளிடத்தில் எந்த அளவுக்கு நாம் அன்பு கொண்டிருக்கின்றோம் என்பதை சற்று ஆழமாக சிந்திப்போம். பல வேளைகளில் நாம் இறைவன் மீது மிக எளிமையாக நம்முடைய அன்பை காட்டுகின்றோம் மற்றும் அவருடைய அன்பில் இணைகின்றோம். ஆனால் அதே அன்பை நாம் நம்முடைய சகோதர சகோதரிகளிடத்தில் இன்னும் குறிப்பாக நம்முடைய குடும்பத்திலிருக்கின்ற கணவர், மனைவி, பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகளிடத்தில் காட்டுவது கிடையாது. இறைவனை மட்டுமல்லாது யாவரையும் முழுமையாக அன்பு செய்து வாழ இறையருளை வேண்டுவோம்.

2. ஆவியால் இயக்கப்பட
    அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆண்டவருடைய விண்ணேற்பு பெருவிழாவை கொண்டாட இருக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் இயேசு தன் விண்ணேற்புக்கு முன்பு தன்னுடைய சீடர்களுக்கு ஆவியானவரை வாக்களிக்கின்றார். கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட இறையன்பு என்றும் தூய ஆவியின் வழியாக நம்மில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. விவிலியத்தில் தூய ஆவியாரின் இறையியல் கோட்பாட்டை மூன்று வெவ்வேறு பகுதிகள் விளக்குகின்றன.
       1. தூய ஆவியின் அடையாளம் (யோவான் 14: 15-26)
        2.
தூய ஆவியின் செயல்பாடுகள் (யோவான் 16: 7-15)
3.
தூய ஆவியின் வல்லமை (உரோமையர் 8: 1-17)

            இதில் யோவான் நற்செய்தியில் இயேசுவே தூய ஆவியின் அடையாளத்தையும் மற்றும் செயல்பாடுகளையும் எடுத்துரைக்கின்றார். இன்றைய நற்செய்தி தூய ஆவியார் யார் என்பதை அதாவது அவரது அடையாளத்தை தெளிவுபட எடுத்துக் கூறுகிறது. இறைமகன் இயேசு கிறிஸ்து தூய ஆவியின் ஆறு அடையாளங்களை இன்றைய நற்செய்தியில் எடுத்துரைக்கிறார்.

1. துணையாளர் (14:16a)
                நம் வாழ்வின் இன்பம் மற்றும் துன்பம் என எத்தகைய சூழ்நிலைகளிலும் துணையாக ஆவியானவர் இருக்க வேண்டுமென்று துணையாளராக அனுப்புவேன் என்கின்றார் இயேசு.

2. தந்தையால் அனுப்பப்படுபவர் (14:16b)
    தன் மக்களை காக்க நீதித்தலைவர்களையும், அரசர்களையும் மற்றும் இறைவாக்கினர்களையும் அனுப்பிய இறைவன் தன் ஒரே மகனை இறுதியாக அனுப்பினார். அவருடைய விண்ணேற்றத்திற்குப் பிறகும் தொடர்ந்து இறை பிரசன்னம் நம்மில் இருக்க துணையாளராம் தூய ஆவியானவரை தந்தையே நமக்காக அனுப்புகிறார்.

3. உண்மையை எடுத்துரைப்பவர் (14:17a)
        உண்மையை எடுத்துரைப்பதற்கும் உண்மையில் வாழ்வதற்கும் வித்தியாசம் உண்டு. உண்மையில் வாழ்பவர் உண்மையாகவே மாறுகிறார். இயேசு உண்மையில் வாழ்ந்து உண்மையாகவே மாறியவர். அத்தகையவர் உண்மையை எடுத்துரைக்கும் ஆவியானவரை நமக்காக அனுப்புகிறார்.

4. நம்மோடு இருப்பவர் (14:17b)
        திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் வழியாக நாம் பெற்றுக் கொண்ட தூய ஆவியார் என்றும் நம்மோடு இருக்கிறார். நன்மை தீமையை அறிந்து கொள்ளவும், இறைவழியில் நடக்கவும் நம்மை தொடர்ந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

5. நமக்குள் இருப்பவர் (14:17c)
        "ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல." (உரோமையர் 8:9) தூய ஆவியானவர் நமக்குள் இருக்கும் போது நாம் ஆவிக்குரிய இயல்போடு இறைவழியில் தொடர்ந்து வாழ்வோம்.

6. இயேசுவின் பிரசன்னம் (14: 19)
        "இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்." (யோவான் 14:19) என இயேசு எடுத்துரைத்து நான் வாழ்கிறேன் என்று கூறுவது தூய ஆவியில் அவருடைய பிரசன்னம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது.

            இன்றைய முதல் வாசகம் ஸ்தேவான் கல்லால் எரிந்து கொல்லப்பட்ட பின்பு கிறிஸ்தவ மக்கள் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும் ஏழு திருத்தொண்டர்களில் ஒருவரான பிலிப்பு நம்பிக்கையோடும் தூய ஆவியின் அருளோடும் உயிர்த்த ஆண்டவரை பற்றி பறைசாற்றியதையும், அதனால் பலரை பிடித்திருந்த தீய ஆவிகள் வெளியேறியதையும், முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணமடைந்ததையும் எடுத்துரைக்கின்றது. மேலும் மனமாற்றம் அடைந்த சமாரியர் மீது பேதுருவும் யோவானும் கைகளை வைக்க அவர்கள் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டனர் என்றும் எடுத்துரைக்கிறது. ஆக இவர்களில் தூய ஆவி தங்கி செயல்பட்டார் என்பதை நம்மால் உணர முடிகிறது. "நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா?" (1கொரி 6:19) என திருத்தூதர் பவுல் எடுத்துரைப்பதற்கு ஏற்ப தந்தையால் நமக்காக அனுப்பப்பட்ட துணையாளராம் தூய ஆவியானவர் நம்மோடு மட்டுமல்ல நமக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நாம் அவரின் ஆலயங்களாக இருக்கின்றோம் என்பதை பல வேளைகளில் இதை நாம் உணர்வதே கிடையாது. நம்முள் இருக்கும் துணையாளரை நாம் உணரும் போது வாழ்நாள் முழுவதும் நம் துணையாக நம்மோடு இருக்கும் நம் கணவர், மனைவி, பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளையும் அவர்களது அன்பையும் நம்மால் உணர முடியும். துணையாளராம் தூய ஆவி நம் வாழ்விற்கு மட்டுமல்ல, நம் குடும்ப வாழ்விற்கும் துணையாக இருந்து வழிநடத்த இறை அருளை வேண்டுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.