நற்செய்தி:-
மாற்கு 12:28-34
விவிலிய விளக்கம்:-
1. யூதர்கள் மத்தியில் இரண்டு விதமான விவாதங்கள் மற்றும் பேச்சுகள் பழக்கத்தில் இருந்து வந்தது. ஒன்று இருக்கின்ற கட்டளைகளை தங்கள் விருப்பப்படி பல நூறு கட்டளைகளாக பலுகி பெருக்குவது. மற்றொன்று இருக்கின்ற கட்டளைகளில் எது முதன்மையான கட்டளை? என வாக்குவாதம் எழுப்புவது. இத்தகைய பின்னணியில் தான் இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞர் இயேசுவிடம், “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்கிறார்.
2. "உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக " என்பது யூதர்களின் செமா எனப்படுகின்ற ஜெபமாகும். இந்த ஜெபம் மூன்று பழைய ஏற்பாட்டு பகுதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது (இணைச் சட்டம் 6: 4-9, 11: 13-21/எண்ணிக்கை 15: 37-41). எனவே இந்த முதல் கட்டளையை யூதர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
3. ‘உன் மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது பழைய ஏற்பாட்டில் எண்ணிக்கை நூலில் 19: 18 பகுதியின் அடிப்படையில் உள்ளது. யூதர்களுக்கு பிறரன்பு என்பது வெறும் யூதர்களை மட்டுமே அன்பு செய்வது ஏனெனில் அவர்கள் பிற இனத்தாரை ஏற்றுக்கொள்வதில்லை.
மறையுரை:-
அன்பில் வளர...
1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் அன்னை தெரேசாவின் இறுதி அடக்க திருப்பலி நடைபெற்றது. அப்பொழுது திருத்தந்தையாக இருந்த மறைந்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் தனது பிரதிநிதியாக கர்தினால் ஆஞ்சலோ சொதோனோவை அனுப்பினார். இவர் இறுதி அடக்க திருப்பலியின் மறையுரையில், "இன்று அன்னையின் இந்த இறுதி அடக்க நிகழ்வுக்கு பல நாடுகளிலிருந்தும், பல மதங்களிலிருந்து ஒன்றாகக் கூடி வந்திருக்கிறார்கள். எல்லா மதத்தின் முறைப்படியும் இந்த இறுதி அடக்க நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. உலகமே ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியிருக்கிறது. இவை அனைத்திற்கும் காரணம் இந்த அன்னை தனது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்ட, வெளிப்படுத்திய முழுமையான அன்பு தான். இந்த அன்பு நற்செய்தியின் அன்பு, இறைவன் மீது அன்னை தெரேசா கொண்ட இறையன்பு, அதை அவர் தன்னுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்திய பிறர் அன்பு" என்று கூறினார். கிறிஸ்தவ வாழ்வின் இரண்டு கண்களான இறையன்பையும், பிறர் அன்பையும் அன்னை தெரேசா தனது வாழ்க்கையில் வெளிப்படுத்தியதால் தான் இன்று திருஅவையில் புனிதையாக உயர்த்தப்பட்டிருக்கிறார். அன்னை தெரேசா தனது வாழ்க்கையில் அன்பை முழுமையாக வெளிப்படுத்தினார். இறைவன் மீது அவர் கொண்ட அன்பு சாலையோரங்களில் இருந்த ஒவ்வொரு நோயாளிகள், அனாதைகள், கைவிடப்பட்டவர்கள் மீது பிறர் அன்பாக வெளிப்பட்டது. இன்று நமது வாழ்க்கையிலும் முழுமையான இறையன்பும், பிறர் அன்பும் என்றும் வெளிப்பட வேண்டும் என்பது தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு தருகின்ற மையச் சிந்தனை.
யூதர்கள் மத்தியில் இரண்டு விதமான விவாதங்கள் மற்றும் பேச்சுகள் பழக்கத்தில் இருந்து வந்தது. ஒன்று இருக்கின்ற கட்டளைகளை தங்கள் விருப்பப்படி பல நூறு கட்டளைகளாக பலுகி பெருக்குவது. மற்றொன்று இருக்கின்ற கட்டளைகளில் எது முதன்மையான கட்டளை? என வாக்குவாதம் எழுப்புவது. இத்தகைய பின்னணியில் தான் இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞர் இயேசுவிடம், “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்கிறார்.(மாற்கு 12:28), மோயீசன் பெற்ற பத்து கட்டளைகளை யூதர்கள் 613 கட்டளைகளாக பலுகிப் பெருகினார்கள். தாவீது இதை வெறும் பதினோரு கட்டளைகளாக திருப்பாடல்கள் 15-ல் தருகிறார்.
1. மாசற்றவராய் நடத்தல்
2. நேரியவற்றை செய்தல்
3. உளமார உண்மை பேசுதல்
4. தம் நாவினால் புறங்கூறாதிருத்தல்.
5. தம் தோழருக்குத் தீங்கிழையாதிருத்தல்.
6. அடுத்தவரைப் பழிந்துரையாதிருத்தல்.
7. நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதாதிருத்தல்.
8. ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதித்தல்.
9. தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறாதிருத்தல்.
10. தம் பணத்தை வட்டிக்குக் கொடாதிருத்தல்.
11. மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறாதிருத்தல்.
எசாயா இறைவாக்கினர் இதை ஆறு கட்டளைகளாக கூறுகின்றார். (எசாயா 33:15)
1. நீதிநெறியில் நடத்தல்
2. நேர்மையானவற்றைப் பேசுதல்.
3. கொடுமை செய்து பெற்ற வருவாயை வெறுத்தல்.
4. கையூட்டு வாங்கக் கை நீட்டாதிருத்தல்.
5. இரத்தப் பழிச் செய்திகளைச் செவி கொடுத்துக் கேளாதிருத்தல்.
6. தீயவற்றைக் கண்கொண்டு காணாதிருத்தல்.
மீக்கா இறைவாக்கினர் இதை ஆறிலிருந்து மூன்றாக தருகின்றார்.(மீக்கா 6:8)
1.நேர்மையைக் கடைப்பிடித்தல்.
2. இரக்கம் கொள்ளுதல்.
3. தாழ்ச்சியோடு நடந்து கொள்ளுதல்.
இது அபக்கூக்கு 2:4-ல் நேர்மையுடையவர் தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர் என ஒற்றை கட்டளையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு காலத்தில் சிறந்த கட்டளைகள் என சிலவற்றை குறிப்பிடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. எனவே தான் அவர்கள் இயேசுவிடம் முதன்மையான கட்டளை எது? என்று கேட்கிறார்கள். இயேசு அதை இரண்டு கட்டளைகளில் எடுத்துரைக்கின்றார்.
1. இறையன்பு
"இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை" (மாற்கு 12:29-30) என முழுமையான இறையன்பில் வளர அழைப்பு தரப்படுகிறது. இது யூதர்களின் செமா எனப்படுகின்ற ஜெபமாகும். இந்த ஜெபம் மூன்று பழைய ஏற்பாட்டு பகுதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது (இணைச் சட்டம் 6: 4-9, 11: 13-21/எண்ணிக்கை 15: 37-41). எனவே இந்த முதல் கட்டளையை யூதர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இயேசு கொடுக்கும் இந்த அழைப்பு சாதாரண அன்பிற்கானது அல்ல, மாறாக முழுமையான அன்பிற்கான அழைப்பு. இங்கு முழுமை என்பது நமது உடல், மனம், உள்ளம் மற்றும் அறிவு என மனிதனின் எல்லா நிலைகளையும் உள்ளடக்கியதாகும். இன்று நான் இறைவனிடத்தில் காட்டுகின்ற அன்பு எனது தேவைகளுக்காக காட்டுகின்ற அன்பா? நான் ஆலயம் செல்வதும், இறைவனை வணங்குவதும், திருப்பலியில் பங்கேற்பதும், நேர்த்திக் கடன்களையும் பொருத்தனைகளையும் செய்வதும், ஜெபிப்பதும், நோன்பிருப்பதும் எதற்காக? இறைவன் நான் கேட்டதை தர வேண்டும் என்பதற்காகவா? அல்லது நான் இறைவனிடத்தில் கொண்டிருக்கின்ற அன்பின் நிமித்தமாகவா? பரிசேயர்களும், சதுசேயர்களும் சுயநலத்திற்காக இறைவனுடைய கட்டளைகளை கடைபிடித்து வாழ்ந்தது போல அல்லாது, நாம் முழுமையான அன்போடு அவரில் அன்பு கொண்டு வாழ அழைப்பு பெறுகின்றோம். எனது உடல், உள்ளம், அறிவு, மனம், ஆன்மா ஆகியவற்றின் தேவைகளுக்காக நாம் இறைவனை அன்பு செய்யாமல், இவை அனைத்திலும் முழுமையாக நாம் இறைவனில் அன்பை காட்ட வேண்டும் என்கிற ஒரு அழைப்பை இயேசு நமக்கு கொடுக்கின்றார். இறையன்பில் வளர தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்!
2. பிறர் அன்பு
‘உன் மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” (மாற்கு 12:31) என இறையன்பின் வெளிப்பாடாக பிறர் அன்பிலும் வளர அழைக்கின்றார். இப்பகுதி பழைய ஏற்பாட்டில் எண்ணிக்கை நூலில் 19: 18 பகுதியின் அடிப்படையில் உள்ளது. யூதர்களுக்கு பிறரன்பு என்பது வெறும் யூதர்களை மட்டுமே அன்பு செய்வது ஏனெனில் அவர்கள் பிற இனத்தாரை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் இயேசு கொடுக்கும் அழைப்பு எல்லோரையும் ஏற்றுக் கொள்கின்ற முழுமையான அன்பு. இதைத்தான் இயேசு நம் ஒவ்வொருவரிடத்திலும் எதிர்பார்க்கின்றார். இன்று நமது வாழ்க்கையிலும் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களை போல என் இனம், மதம், மொழி, நாடு, மாநிலம், ஊர் மற்றும் குடும்பம் என என்னைச் சார்ந்தவர்களை தான் நான் அன்பு செய்வேன் என்று வாழாது யாவரையும் ஏற்றுக்கொள்வது தான் முழுமையான அன்பு. அத்தகைய ஒரு முழுமையான பிறர் அன்பில் வளர தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்!
இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
ஆடியோவாக கேட்க...
https://youtu.be/jDKN8gg_mSo
அன்புடன்,
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF