பொதுக்காலம் 32ஆம் வாரம்
(ஆண்டு- A)
08-11-2020
ஞாயிற்றுக்கிழமை
விளக்கிருந்தும் ஒளியில்லை...
இளைஞன் ஒருவன் குருவிடம் வந்து, நான் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. என்னை எல்லோரும் நீ ஒன்றுக்கும் உதவாதவன் என்று கூறுகிறார்கள். எனக்கு வேலை இல்லை, எனக்கு திறமை இல்லை, என்னால் எதுவும் செய்ய இயலவில்லை, நான் என்ன செய்வது என்று வாழ்க்கையையே வெறுத்தவன் போல் பேசினான். குருவோ, அவன் அருகே சென்று கொண்டிருந்த எறும்பையும், தூரத்தில் இருந்த யானையையும் காட்டி இவற்றில் அதிகம் பலம் வாய்ந்தது எது? என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், உடனடியாக யானை தான் அதிகம் பலம் வாய்ந்தது என்று கூறினான். குருவோ சிரித்துக்கொண்டே, யானை உருவத்தில் தான் பெரியது ஆனால் அதன் எடையின் இரண்டு மடங்கு மேலான சுமையை கூட அதனால் சுமக்க மிகவும் கடினம், ஆனால் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் அதன் எடையை விட 50 மடங்கு பெரிய பொருளை எறும்பினால் சுமக்க முடியும்.
இப்பொழுது இவற்றில் எது பலம் வாய்ந்தது? என குரு கேட்க, இளைஞன் எனக்கு இப்பொழுது உண்மை தெரிகிறது, எறும்பு தான் அதிக பலம் வாய்ந்தது என்றான். நம்முள் பல வேளைகளில், பலவிதமான திறமைகள் இருக்கின்றது ஆனால் அவை நம்மிலே இருப்பதை அறிந்தும் அதை நாம் பயன்படுத்தாமல் இருக்கின்றோம். நம்முடைய வாழ்க்கையிலே திறமை எனும் விளக்கு இருந்தும், அதிலே நாம் தேவையான எண்ணெய் என்னும் உழைப்பை காட்டாமல் இருப்பதால் அது வாழ்க்கை என்ற ஒளியை பிரகாசிப்பதில்லை என்று குரு கூறினார்.
ஆம், கிறிஸ்து இயேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, பொதுக்காலத்தின் முப்பத்தி இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த நாளிலே, இன்றைய இறைவார்த்தை பகுதி, நாம் நம்முடைய வாழ்க்கையில் நம்மிடையே இருக்கும் விளக்குகளுக்கு தேவையான எண்ணெய் ஊற்றி, அது என்றும் ஒளிர தேவையான முயற்சி எடுக்க நமக்கு அழைப்பு தருகின்றது. பல வேளைகளில் நம்முடைய வாழ்க்கையில் விளக்கிருந்தும் அதில் ஒளியில்லாமல் இருக்கின்றது. ஏனெனில் அவ்விளக்குகளுக்கு ஏற்ற எண்ணெய் நாம் விடாமல் இருக்கின்றோம்.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு, நம் வாழ்க்கையிலே நாம் கொண்டிருக்கின்ற விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றி அதை ஒளிர வைக்க நமக்கு அழைப்பு தருகிறது. இன்றைய நற்செய்தியில் மணமக்களுக்காக காத்திருந்த மணமகளின் தோழியர் 10 பேரில், 5 பேர் மட்டுமே தங்களுடைய விளக்குகளோடு சேர்த்து எண்ணெய் கலன்களையும் எடுத்து வந்ததை பார்க்கின்றோம்.
மீதமுள்ள ஐந்து பேரும் விளக்குகள் எடுத்து வந்தார்களே தவிர, அந்த விளக்குகள் எப்பொழுதும் எரிவதற்கான எண்ணெயை எடுத்து வரவில்லை. அவர்களிடம் விளக்கு இருந்தது ஆனால் அந்த விளக்கு எப்பொழுதும் பிரகாசிக்க தேவையான எண்ணெய் இல்லை.
இன்று நம்முடைய வாழ்க்கையிலும் விளக்காக நம்முடைய திறமைகளும், வாய்ப்புகளும் மற்றும் அடிப்படையான தேவைகளும் நமக்கு தரப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பு, திறமை மற்றும் தேவை எனும் விளக்குகளுக்கு, உழைப்பு என்னும் எண்ணெய் ஊற்றும் பொழுது நம்முடைய வாழ்க்கையானது என்றும் பிரகாசிக்கும். இந்த ஐந்து அறிவிலிகளை போல, நாமும் நம்முடைய வாழ்க்கையிலே தகுந்த தயாரிப்பின்றி, உழைப்பின்றி ஒளியான வாழ்வை பெறாமலே இருக்கின்றோம்.
1.கலனில் எண்ணெய் இல்லை
2. உறக்கம்
3. மற்றவர்களிடம் இரவல் கேட்டல்
4.எண்ணெய் இல்லை என்பதை தாமதமாக உணர்தல்
5. நடு இரவில் வணிகரை தேடி செல்லுதல்
என்னும் மேற்காணும் காரணங்களே அறிவிலிகள் மணமகனை எதிர்கொள்ள முடியாமல் போனதற்கான காரணங்கள். இது போல நாமும் நம்முடைய வாழ்க்கையிலே, நமது சோம்பேறித்தனம், உழைப்பின்மை மற்றும் முன் தயாரிப்பின்மை எனும் எண்ணற்ற காரணங்களை சுமந்து கொண்டிருக்கின்றோம். அதுவே நாம் நம்முடைய வாழ்க்கையில் வெற்றி என்னும் ஒளியை பெறாததற்கு காரணம்.
வாய்ப்பிருந்தும் பயன்பாடில்லை...
மத்தேயு நற்செய்தியில் 21 அதிகாரம் 33 முதல் 46 வரை இறைவார்த்தை பகுதியிலுள்ள கொடிய குத்தகைக்காரர் உவமையில் குத்தகைகாரர் தன்னிடையே நிலம் என்னும் வாய்ப்பாக விளக்கு கிடைத்தும், அதை முழுமையாக பயன் படுத்தாமல், அதனையே அபகரிக்க நினைப்பதை பார்க்கின்றோம். இந்த வாய்ப்பு என்னும் விளக்கிற்கு, உழைப்பு மற்றும் நேர்மை என்னும் எண்ணெயை ஊற்றி இருந்தால், அது பல மடங்கு அவருக்கு ஒளியாக பலனை கொடுத்திருக்கும். நம் வாழ்விலும் எண்ணற்ற வாய்ப்புகள் நம்மைத் தேடி வருகிறது. நம்முடைய பயத்தால், என்னால் இது செய்ய முடியுமோ என்னும் எண்ணங்களால், நாம் அந்த வாய்ப்புகளை நழுவ விடுகிறோம். எண்ணற்ற வாய்ப்புகள் நம்மிடையே வந்தாலும், நம்முடைய சோம்பேறித்தனத்தால் மற்றும் பயத்தால் அந்த வாய்ப்புகளை நாம் தவற விடுகிறோம். இந்த வாய்ப்புகள் என்னும் விளக்கிற்கு, நேர்மை என்னும் எண்ணெய் ஊற்றுகின்ற பொழுது அது நிச்சயம் மகிழ்வு என்னும் ஒளியாக நம்முடைய வாழ்வில் பிரகாசிக்கும், வாழ்வை வளப்படுத்தும்.
திறமையிருந்தும் உழைப்பில்லை...
மத்தேயு நற்செய்தியில் 25- வது அதிகாரம் 14 முதல் 30 வரை உள்ள இறைவார்த்தை பகுதியிலுள்ள, தாலந்து உவமையில் வருகின்ற பணியாளர்களை போல, பல வேளைகளில் நாம் நமக்குக் கொடுத் திருக்கின்ற திறமைகளை பயன்படுத்தாமலே வாழ்கின்றோம். நம்மிடையே திறமை என்னும் விளக்கு இருந்தாலும், அதில் உழைப்பு என்னும் எண்ணெயை ஊற்றுவதே கிடையாது. இதனால் நம்மிடையே இருக்கின்ற திறமைகளும் அழிந்துபோகும். ஒரு போதும் வெற்றி என்னும் ஒளியை நாம் பெறாமலேயே போவோம். இறைவன் என்னில் எண்ணற்ற திறமைகளை கொடுத்திருந்தும், நாம் பார்ப்பதெல்லாம் நம்மிடம் இல்லாததை தான். நம்மில் இருக்கின்ற விளக்கு என்னும் நமது திறமைகளுக்கு தேவையான எண்ணெயை ஊற்றவும், அது பிரகாசித்து ஒளியாக நம் வாழ்வை வளப்படுத்தும்.
கிறிஸ்தவனாயிருந்தம் கிறிஸ்து இல்லை...
நமது கிறிஸ்தவ வாழ்விலும் திருவருட்சாதனங்கள், நற்கருணை, இறைவார்த்தை, ஜெபமாலை என்னும் எண்ணற்ற விளக்குகள் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த விளக்குகளை பயன்பாடு என்னும் எண்ணெயில் நாம் எரிய விடும் பொழுது தான் நம்முடைய வாழ்க்கை கிறிஸ்து எனும் ஒளியில் பிரகாசிக்கும். கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்து அவனாக இருக்க வேண்டும். கிறிஸ்தவள் என்றால் கிறிஸ்து அவளாக இருக்க வேண்டும். அதற்கு இந்த கிறிஸ்து என்னும் ஒளி நம்முடைய வாழ்க்கையிலே என்றும் பிரகாசிக்க வேண்டும். இந்த கிறிஸ்து என்னும் ஒளி என்றும் பிரகாசிக்க வேண்டுமென்றால், நம் திருஅவை, நம்முடைய பங்குத்தளம், நமக்குத் தருகின்ற ஆன்மீக வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கென்று ஒரு ஆன்மீக முயற்சி, நம் குடும்பங்களுக்கென்று ஒரு ஜெபமாலை, இறைவார்த்தை வாசித்தல் மற்றும் தினமும் திருப்பலிக்கு செல்லுதல் என்னும் எண்ணெயை நாம் நம்முடைய விளக்குகளில் ஊற்றுகின்ற போது கிறிஸ்து எனும் ஒளியை நாம் பெற்றுக் கொள்வோம். "கண்ணிருந்தும் காணாத, காதிருந்தும் கேளாத மதிகெட்ட, இதயமற்ற மக்களே, கேளுங்கள்" என எரேமியா 5-ஆம் அதிகாரம், 21-ஆம் வசனத்தில் காண்பதை போல எல்லாமிருந்தும் அதனை பயன்படுத்தாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஞானம் ஒளி மிக்கது, மங்காது அதன்பால் அன்பு கூறுவோர் அதை எளிதில் கண்டு கொள்வர் என்னும் இன்றைய முதல் வாசகத்தின் அடித்தளத்தில் கிறிஸ்து என்னும் ஒளியின் மீது அன்பு கூர்ந்து, அந்த ஒளியை பெற்றுக்கொள்ள, ஞானமிக்கவர்களாக வாழ்க்கையில் நாம் பெறுகின்ற விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
|
|
||||
|
|
|
|||
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம். |