🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 7-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(19 பிப்ரவரி 2023, ஞாயிறு)
வழங்குபவர்
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை
முதல் வாசகம்: லேவியர் 19: 1-2, 17-18
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 3: 16-23
நற்செய்தி: மத்தேயு 5: 38-48
தீமைக்கு நன்மை...
1998- ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா இண்டிகா என்னும் தங்களுடைய முதல் பயணிகள் காரை அறிமுகம் செய்தார்கள். ஆனால் இதில் பல குறைபாடுகளை கண்டு பலரும் இந்த காருக்கு பெரும் வரவேற்பை தரவில்லை. இதனால் இந்த நிறுவனம் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தது ஒரு கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை விற்று விடலாம் என முடிவு செய்து, அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். ஆனால் அந்நிறுவனத்தின் தலைவர் பில்ஃபோர்டு 'ஒரு காரை முறையாக வடிவமைக்க தெரியாதவர்களுக்கெல்லாம் எதற்கு கார் தயாரிக்கும் நிறுவனம்' என்று அவர்களை அவமானப்படுத்தினார். அங்கிருந்த டாட்டா மோட்டார்ஸ் உரிமையாளர் ரத்தன் டாடா இதைத்தான் விற்கப்போவதில்லை என்று முடிவு எடுத்து அந்த காரில் இருந்த அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து சில ஆண்டுகளிலே மினி டாடா இண்டிகா என்னும் மற்றொரு காரை வடிவமைத்து வெளியிட்டார். இது இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. 2008 ஆம் ஆண்டு அமெரிக்க நாடுகள் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தபோது அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனமும் பாதிப்புக்குள்ளானது. எனவே அந்நிறுவனம் தங்களது விலை மதிப்புள்ள கார் நிறுவனங்களான Jaquar மற்றும் Lan Rover -யை விற்க முடிவு செய்தது. ஆனால் அதை யாருமே வாங்குவதற்கு முன் வரவில்லை. அச்சூழலில் அந்நிறுவனங்களை வாங்கி ஃபோர்டு நிறுவனத்திற்கு மாபெரும் உதவியாக இருந்தது டாடா மோட்டார்ஸ் உரிமையாளர் ரத்தன் டாடா. தன்னையும் தன்னுடைய நிறுவனத்தையும் அவமானப்படுத்தி தனக்கு தீமை செய்தவருக்கு நன்மை செய்த ரத்தன் டாடாவை போல நாமும் நம்முடைய வாழ்க்கையில் தீமை செய்தவருக்கு தீமையை அல்லாது நன்மையை செய்ய அழைப்பு கொடுக்கிறது என்று நாம் அடி எடுத்து வைத்துள்ள பொதுக்காலத்தின் ஏழாவது ஞாயிற்றுக்கிழமை திருவழிபாட்டு வாசகங்கள்.
1. தீமைக்கு தீமை:-
"முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்" என்னும் பழமொழிக்கு ஏற்ப பழைய ஏற்பாட்டில் 'கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்' என பல சட்டங்கள் இருந்தது. விவிலியம் இத்தகைய சட்டங்களை எடுத்துரைக்கலாமா? பழிவாங்குதல் சரியா? ஏன் மோசே இத்தகைய சட்டங்களை தர வேண்டும்? என நம்மில் பல கேள்விகள் எழலாம். மோசே வாழ்ந்த காலத்திலிருந்த மக்கள் கொடூரமான சட்டத்தினை செயல்படுத்தி வந்தனர். அதன்படி ஒருவர் மற்றொருவரின் கையை வெட்டினால் கூட பதிலுக்கு அவனுடைய உயிரை எடுக்கக்கூடிய பழக்கம் இருந்தது. இந்த பின்னணியில்தான் மோசே "உயிருக்கு உயிர்,கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்; கைக்குக் கை; காலுக்குக் கால்;சூட்டுக்குச் சூடு; காயத்துக்கு காயம்; கீறலுக்குக் கீறல் என நீ ஈடுகொடுப்பாய்."(விடுதலைப் பயணம் 21:23-25) மற்றும் (லேவியர் 24:20 & இணைச் சட்டம் 19:21) என்னும் சட்டத்தை தருகிறார். உண்மையில் இங்கு தீமைக்கு தீமை என்பது பழிவாங்குதலையும் வன்முறையையும் கட்டுப்படுத்துவதே ஆகும். இதைத்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு "‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்." (மத்தேயு 5:38) என சுட்டிக்காட்டி தீமைக்கு தீமை என்பதை மாற்றி தீமைக்கு நன்மை என்னும் அன்பின் கட்டளையை தருகிறார்.
2. தீமைக்கு நன்மை:-
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அதாவது நமக்கு தீமை செய்தவர் வெட்கப்படும் அளவுக்கு நாம் அவருக்கு நன்மையைச் செய்வதுடன் அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலே தமக்குத் தீங்கு செய்தாரைத் தண்டிக்கும் சிறந்த முறை என்கிறது வள்ளுவரின் குறள். இன்றைய இறைவார்த்தை வழிபாடும் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தீமைக்கு நன்மை என்னும் அன்பின் கட்டளையை ஏற்று வாழ அழைப்பு தருகிறது. இன்றைய முதல் வாசகம் "பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! (லேவியர் 19:18) என்று கூறுகிறது. ஒரு யூதனுக்கு இன்னொரு யூதன்தான் அடுத்திருப்பவர், எனவே யூதர்களுக்கு மற்றொரு யூதனை அன்பு செய்தாலே போதும். அதனால்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு "தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்." (மத்தேயு 5:39a) மற்றும் "உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்." (மத்தேயு 5:44a) என தீமைக்கு தீமை என்னும் பழிவாங்குதல் குணத்தை மாற்றி தீமைக்கு நன்மை என அடுத்திருப்பவரை மட்டுமல்லாது பகைவரையும் அன்பு செய்கின்ற குணத்தை நம்மில் வளர்த்துக் கொள்ள அழைப்பு தருகிறார். இதைத்தான் திருத்தூதர் பவுல் "தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள்." (உரோமையர் 12:17) என்கிறார். பகைவரை அன்பு செய்ய இன்றைய நற்செய்தியில் இயேசு நான்கு செயல்பாடுகளை எடுத்துக்காட்டாக தருகிறார்.
a)- உடல் வலியை ஏற்றுக்கொள்ளுதல்
"உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்." (மத்தேயு 5:39b) இது நம் உடலுக்கு வலியை கொடுத்தவருக்கு பதிலுக்கு வலியை தராமல், அவருக்கு மறு கன்னத்தையும் காட்டி அதாவது உடல் வலியை ஏற்று பகைவரை அன்பு செய்து வாழ அழைப்பு பெறுவதாகும்.
b)- உடை இழப்பை ஏற்றுக்கொள்ளுதல்
"ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்." (மத்தேயு 5:40) இங்கு உங்கள் உடையை அபகரித்து தீங்கு செய்ய நினைப்பவரிடம் உடை இழப்பை ஏற்றுக்கொண்டு பகை நினைத்தவரை அன்பு செய்து வாழ அழைப்பு பெறுவதாகும்.
c)- கட்டாய வலியை ஏற்றுக்கொள்ளுதல்
"எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்." (மத்தேயு 5:41) இங்கு ஒரு கல் தொலைவு நடப்பதே நம்மை கட்டாயப்படுத்தி தருகின்ற வலியாகும். ஆனால் இறைமகன் இயேசு கிறிஸ்து அவ்வலியை ஏற்று அவரோடு இன்னொரு கல் தொலை நடந்து தீமைக்கு நன்மை செய்வதற்கு அழைப்பு தருகிறார்.
d)- இறைவனிடம் மன்றாடுங்கள்
தீமைக்கு நன்மை என்பதற்கு மற்றொரு செயல் வடிவமாக "உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்." (மத்தேயு 5:44b) என்னும் மிக உயர்ந்த செயல்பாட்டு அழைப்பை தருகிறார் இயேசு.
தீமைக்கு நன்மை என பகைவரை அன்பு செய்வதன் மூலம் நமது வாழ்வு மாறுபடுகிறது. இங்கு எண்ணற்ற நன்மைகளை கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் சுவைப்போம்.
i)- நல்ல ஆரோக்கியம்
முதலாவதாக நாம் நமக்கு தீங்கு செய்தவரை மன்னித்து அன்பு செய்வதன் மூலமாக நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறுகிறோம். இன்றைக்கு மனிதரின் அதிகமான நோய்களுக்கு 92% காரணமாக அமைவது Psychosomatic என்னும் அவர்களுடைய மனநலம் பாதிக்கப்படுவதே என்கின்றனர் உளவியலாளர்கள். பழிவாங்குதலும் பகையுணர்வும் நம் மன நலத்தை பாதித்து உடல் நலத்தையும் கெடுக்கும். எனவே இன்றைக்கு நம்முடைய வாழ்வில் நமக்கு தீங்கு செய்தவர்களை மன்னித்து அன்பு செய்வதன் மூலமாக நாம் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழலாம்.
ii)- இறைவனின் திருமுகம்
இரண்டாவதாக நாம் நம் பகைவர்களை மன்னித்து தீமைக்கு நன்மை என்னும் அன்பை காட்டுகின்ற போது இறைவனின் திருமுகத்தைப் பெறுகின்றோம். இங்கு இறைவனின் திருமுகம் என்பது அன்பையும் பாசத்தையும் இரக்கத்தையும் அமைதியையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற முகமாகும். பழைய ஏற்பாட்டில் தன் தந்தையிடமிருந்து ஆசீரை ஏமாற்றி வாங்கிய தன் சகோதரன் யாக்கோபுவை ஏசா மன்னித்து அன்பை காட்டினார். அதனால் தான் யாக்கோபு ஏசாவை பார்த்து, "உமது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பதுபோல் இருக்கிறது." (தொடக்க நூல் 33:10) என்கிறார். அதேபோல ஸ்தேவான் தான் இறக்கும் தருவாயிலும் முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார். (திருத்தூதர் பணிகள் 7:60) தன்னை கொன்றவர்களையும் மன்னித்து அவர்களுக்காக இறைவனிடம் வேண்டிய ஸ்தேவான் இறை முகத்தை கொண்டிருந்தார். அதனால் தான் "தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப் பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்." (திருத்தூதர் பணிகள் 6:15) இங்கு தீமைக்கு நன்மை என்னும் குணம் இறைவனின் திருமுகத்தை ஏசாவுக்கும் ஸ்தேவானுக்கும் தந்தது.
iii)- இறைவனின் பிள்ளை
"கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்." (தொடக்க நூல் 1:27) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் இறைச்சாயலாக படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இறைவனின் பிள்ளைகள் என்னும் முழுமையான உரிமையை பெற அவர் வழியில் நடக்க வேண்டும். இறைமகன் இயேசு, “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று சொன்னார். (லூக்கா 23:34) தீமைக்கு நன்மையை செய்தார், அவர் வழியில் வாழும் கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவின் பிள்ளைகளாக அவரைப் போல் பகைவரையும் அன்பு செய்து தீமைக்கு நன்மை செய்பவர்களாக மாறுவோம்.
"பழி வாங்கினால் எதிரிக்கு நிகராவோம். அலட்சியம் செய்தால் எதிரியைவிட உயர்ந்தவராவோம்." என தாமஸ் புல்லரும் "பழிவாங்குதல் என்பது மனிதப் பண்புக்கு விரோதமானதோர் மொழியாகும்." என ஸெனீக்காவும் எடுத்துரைத்த கூற்றுக்கு ஏற்ப இன்றைக்கு நமக்கு எதிராக தீமை செய்த ஒவ்வொருவரையும் குறிப்பாக நம் குடும்பத்தாரையும் மற்றும் உறவினர்களையும் எதிரிகளாக நினைக்காமல் யாவரையும் அன்பு செய்து அவர்களுக்காக ஜெபித்து தீமைக்கு நன்மை செய்யும் உயர்ந்த குணத்தில் வளர்வோம். இறைவன் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.