Saturday, July 31, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 18-ஆம் வாரம் - ( ஆண்டு- B)- 01-08-2021- ஞாயிற்றுக்கிழமை

                             🌱விவிலிய விதைகள்🌱

பொதுக் காலம் 18-ஆம் வாரம்

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி:- யோவான் 6: 24-35


வாழ்வு தரும் உணவு
("பசியே இராது"-யோவான் 6:35)

    புனித லொயோலா இஞ்ஞாசியாரின் திருவிழாவை, தாயாம் திருஅவையோடு இணைந்து, அகில உலகமெங்கும் நேற்றைய தினம் (ஜூலை-31-ஆம் தேதி) கொண்டாடி மகிழ்ந்தோம். இவர் மிகப் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து, இராணுவத்தில் இணைந்து, படைவீரராக இருந்தவர். இவருக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்த பொழுது வாசிப்பதற்காக ஒரு போர் வீரனின் புத்தகம் வேண்டும் என்று அவர் கேட்ட பொழுது, அவருக்கு கிடைத்தது புனிதர்களின் வரலாற்று புத்தகம் தான். அவர் வாசித்த புனிதர்களின் வரலாறும் மற்றும் திருவிவிலியமும் அவரது வாழ்வில் ஒரு மாற்றத்தை கொடுத்தது. அவர் இலக்கில் ஒரு தெளிவு பிறந்தது. இவரது வாசிப்பு இவர் நிரந்தரமற்ற உலக மகிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றார், ஆனால் நிரந்தரமுள்ள இயேசுவின் மகிமைக்காக தான் வாழ வேண்டும் என்பதை உணர்த்தியது. எவ்வாறு புனித லொயோலா இஞ்ஞாசியார் தன்னுடைய வாசிப்பின் வழியாக நிரந்தரமற்ற உலக ஆசைகளுக்காக வாழாமல், நிலையான இயேசுவின் மகிமைக்காக வாழ வேண்டுமென்பதை உணர்ந்தாரோ, அதே போல இன்றைய இறைவார்த்தை வழிபாடு நாம் நிரந்தரமற்ற பசி போக்கும் உணவை தேடாமல், நிரந்தர பசி போக்கும் மற்றும் நிலையான வாழ்வு தரும் உணவாம் இயேசுவை நோக்கி நம்முடைய இலக்கை வைக்க வேண்டும் என்னும் அழைப்பை கொடுக்கின்றது.

பசி எனும் சொல்லானது பொதுவாகச் சமூகத்தில் தேவையான உணவில்லாதவரின் நிலையையும் அடிக்கடி அந்நிலைமையை உணர்பவரைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்கு உணவு தேவைப்படுகையில் பசி என்ற உணர்வு ஏற்படுகிறது. பல நேரம் பசி எடுக்காத நிலை பசியின்மை ஆகும். ஐப்போதாலமசு எனும் நாளமில்லாச் சுரப்பி நுரையீரலில் உள்ள அறிமானிகளைக் குறி வைத்துச் சுரப்பதாலேயே அடிக்கடி விரும்பத்தகாத பசி உணர்வு ஏற்படுகிறது. ஆரோக்கியமான ஒருவர் சில வாரங்களுக்கு உணவு எடுத்துக் கொள்ளாமலேயே உயிர்வாழ முடியும். சாப்பிடாமல் சில மணி நேரங்களுக்குப் பிறகு மிகவும் விரும்பத்தகாத ஒரு விதப் பசி உணர்வு ஏற்படுகிறது. பசி உணர்வு உணவு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே மட்டுப்படுத்தப்படுகிறது.

    விவிலியத்தில் மனித பசிக்கான முதல் பதில் அதிசயமானது. அது இறைவனால் பாலைவனத்தில் மன்னாவாக பொழியப்பட்டது. இன்றைய நற்செய்தியில் மக்கள் பசியின் நிமித்தமாக இயேசுவை தேடுகிறார்கள். இந்தத் தேடல் அடையாளங்களை கண்டதால் ஏற்பட்ட தேடல். இது நிலையானவற்றை நோக்கிய மற்றும் பசிக்கு நிரந்தரத் தீர்வு காணும் தேடல் அல்ல. மாறாக, அழிந்துபோகும் உணவுக்கான தேடல். அவர்களது தேடலும் இலக்கும் தவறானது என்பதை இயேசு உணர வைக்கின்றார். இன்றைய நற்செய்தி இயேசுவுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்படும் ஒரு நிகழ்வு. நிரந்தர பசி போக்கும் மருந்தாம், "வாழ்வின் உணவு நானே" என இயேசு தன்னையே அடையாளப்படுத்தி அவர்களின் இலக்கை தெளிவாக்குகிறார். இங்கு நான்கு நிலைகளை நாம் பார்க்கின்றோம்.

1. பசியை உணர்தல்
2. இயேசுவே பசிக்கான பதில்
3. தவறான தேடல்
4. பசி இராத உணவு



1. பசியை உணர்தல்

இயேசு ஐயாயிரத்துக்கு மேற்பட்டோருக்கு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பலுகிப் பெருகி உணவளித்த பிறகு மக்கள் மீண்டுமாக இயேசுவை தேட ஆரம்பிக்கிறார்கள் மற்றும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில் இயேசு திபேரியாவில் இல்லை என தேடி கப்பர்நாகுமுக்கு மக்கள் வருவது அவர்களுடைய பசியின் நிலையை நமக்கு எடுத்துரைக்கிறது.

2. இயேசுவே பசிக்கான பதில்

மக்கள் உணவுக்காக வேறு யாரையும் தேடவில்லை, மாறாக இயேசுவைத் தேடினார்கள். ஏனென்றால் அவர்கள் பசியின் மருந்து இயேசு தருவார் என்பதை உணர்ந்திருந்தார்கள். மக்கள் இயேசுவிடம் உம்மை நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம் என்று கூறுவதும் இதையே நமக்கு வெளிப்படுத்துகிறது.

3. தவறான தேடல்

மக்களின் தேடல் இயேசுவில் அல்ல, மாறாக இயேசு தரும் உணவில் தான் என்பதை உணர்ந்த இயேசு, "அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்கிறார். (யோவான் 6:27) அழிந்துபோகும் உணவுக்காக தேடுகிறீர்கள் மற்றும் பசிக்கான நிரந்தரத் தீர்வைத் தேடவில்லை. என்பதை எடுத்துரைத்து அவர்களுடைய தேடல் தவறானது என்பதை உணர்த்துகிறார்.
4. பசி இராத உணவு

இயேசு மக்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. (யோவான் 6:35) என எடுத்துரைத்து தன்னை வெளிப்படுத்துகிறார்.

பசி எல்லோருக்கும் உண்டானது. பசி என்பது வெறும் உடல் சார்ந்தது அல்ல. பொதுவாக மனிதனுக்கு மூன்று வகையான பசி உண்டு.

1. உடல் பசி (Physical Hunger)
2. உணர்வு பசி (Psychological Hunger)
3. ஆன்மீக பசி (Spiritual Hunger)




1. உடல் பசி (Physical Hunger)

        மனிதன் அன்றாட உணவிற்காக அலைவது மற்றும் அதற்காகத் தன் உடல் உழைப்பைக் கொடுப்பது உடல் பசி ஆகும். வயிற்றுப் பசிக்காக நாம் தயாரிக்கும் மற்றும் உண்ணும் உணவு நிலையற்றது. அது பசிக்கு நிரந்தர தீர்வு கொடுக்காது.

2. உணர்வு பசி (Psychological Hunger)

        உணர்வு பசி என்பது நம் உணர்வு சார்ந்தது. நம்முடைய ஆசைகள் விருப்பங்கள் மற்றும் ஏக்கங்கள் இவற்றை நாம் நிறைவு செய்ய இயலாமல் தவிக்கும் ஒரு நிலை. குறிப்பாக உறவுகளுக்கும் அந்த உறவுகளின் அன்பிற்கும் ஏங்கும் ஒரு நிலையும் உணர்வு பசி என்று கூறலாம்.

3. ஆன்மீக பசி (Spiritual Hunger)

    இறைவழியின்றி, இறைவனை மறந்து, வாழ்வில் துன்பங்கள் அனுபவித்து, மீண்டுமாய் இறைவன் தான் எல்லாமே, அவரை நான் எப்படியாவது அடைந்து விடவேண்டும். இறைவனின் இறை மகிழ்ச்சியில் மற்றும் அவரது இறையரசில் நான் இணைந்து விட வேண்டும் என்று ஏங்குகின்ற ஒரு நிலை மற்றும் இந்த இறைவனின் அருளும் ஆசியும் என் வாழ்வில் கிடைத்துவிடாதா என்னும் ஒரு நிலையும் ஆன்மீக பசி ஆகும்.

        நமது வாழ்வில் இந்த மூன்று வகையான பசிக்கும் நிரந்தர தீர்வு நமக்கு கிடைப்பது அல்ல. அதனால் தான் நமது வாழ்வு பசி போக்கும் பதிலுக்கான தேடலாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. நமது தேடலில் நாம் வெற்றி காண்பதில்லை, ஏனென்றால் நமது தேடல் சரியானது மற்றும் நிரந்தரமானதல்ல. நிரந்தர பசி போக்கும் மருந்து இயேசுவே, அவரே நமக்கு வாழ்வு தருகின்ற உணவு. எனவே வாழ்வு தரும் உணவாம் இயேசுவில் நமது தேடலை வைப்போம். இந்த வாழ்வு தருகின்ற உணவை நமக்கு வழங்குகின்ற நற்கருணை எனும் திருவருட்சாதனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம். இயேசுவே நம் பசியைப் போக்கும் வாழ்வு தரும் உணவாக மாறட்டும். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


- அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF