Friday, January 22, 2021

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 3-ஆம் வாரம்- ( ஆண்டு- B)- 24-01-2021- ஞாயிற்றுக்கிழமை

 விவிலிய விதைகள்

பொதுக்காலம் 3-ஆம் வாரம் ( ஆண்டு- B)

24-01-2021

ஞாயிற்றுக்கிழமை


அழைப்பு எதற்காக?



“பிறப்பு- வாழ்வதற்கு
வளர்ப்பு- உருவாக்குவதற்கு
படிப்பு -கற்பதற்கு
நட்பு- உரையாடுவதற்கு
உறவு- உறவாடுவதற்கு
வேலை- சம்பாதிப்பதற்கு
குடும்பம்- மகிழ்வதற்கு
சாவுநிறைவாழ்வுக்கு” 


                  என பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனுடைய வாழ்வின் ஒவ்வொரு நிலையும், செயல்பாடும் ஒரு காரணத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. மண்ணுலகில் மனிதன் எதற்கு அழைக்கப்பட்டாலும், எதனால் அழைக்கப்பட்டாலும், எவரால் அழைக்கப்பட்டாலும், அதற்கு ஒரு காரணமிருக்கும். திருவிவிலியம் நமக்கு எண்ணற்ற அழைப்புகளை தருகின்றது. பழைய ஏற்பாட்டிலே இறைவன் இறைவாக்கினர்களையும் மற்றும் அரசர்களையும் அழைப்பதும், புதிய ஏற்பாட்டில் இறைவன் அன்னை மரியாவையும், யோசேப்பையும், எலிசபெத்தையும்  மற்றும் யோவானையும் அழைப்பதை பார்க்கின்றோம், ஏன் இறைமகன் இயேசு கிறிஸ்துவே தன்னுடைய சீடர்களை அழைப்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கின்றோம். இறைவன் தருகின்ற அழைப்பிற்கு காரணம் உண்டு, அழைப்பு என்றாலே அது  ஒரு காரணத்திற்காக தான் இருக்கும்.   நம்மை அன்றாட வாழ்வில் பலர் அழைக்கலாம்அனைத்து  அழைப்பும் நம்மை எதை நோக்கி அழைத்துச் செல்கின்றது என சிந்திப்போம். இறைமகன் இயேசு கிறிஸ்து   சீடர்களை அழைப்பது எதற்காக? இறைமகன் இயேசு கிறிஸ்து தெள்ளத் தெளிவாக "என் பின்னே வாருங்கள், நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்கின்றார். இயேசுவினுடைய அழைப்புக்கு ஒரு காரணம் இருக்கின்றது, 'உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்று கூறுகின்ற போது அது இறைமகன் இயேசு கிறிஸ்துவினுடைய நான்கு விதமான அழைப்பின் காரணத்தை நமக்கு உணர்த்துகிறது.


1.      அழைப்பு மீட்கப்படுவதற்காய்...


"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்
தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்தேயு. 28:19-20

                          என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் இயேசு சீடர்கள் ஒவ்வொருவரையும் மனித குலம் மீட்புப் பெற தங்களது பணியாற்ற அழைப்பு விடுக்கின்றார். சீடர்கள்  தங்களையும், பிறரையும் மீட்க வேண்டும் என்பதற்காக  ஒரு புதிய வாழ்வுக்கு, இயேசுவின் சீடத்துவ வாழ்வுக்கு அழைக்கப்படுகின்றார்கள். எல்லா மனிதரும்  இயேசுவை நம்ப, மனம் மாறித் திருமுழுக்குப் பெற அழைக்கப்படுகின்றார்கள்அத்தகைய ஒரு அழைப்பை  மக்கள் அனைவரும் உணர்வதற்காக தான் இந்த சீடத்துவ வாழ்க்கை. தானும் இறைவனுடைய மீட்பை பெற்றுக் கொள்ளவேண்டும், பிறரையும் அந்த மீட்பை பெற வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இயேசு சீடர்களுக்கு இத்தகைய மாபெரும் அழைப்பை தருகிறார்இன்றைய முதல் வாசகத்தில் யோனாவின் அழைப்பும் நினிவே நகர் மக்கள் மீட்கப்படுவதற்காக தரப்படுகிறது. இறைவன் தருகின்ற அந்த மீட்பை ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்வதற்கு முதலில் நாம் முயலவேண்டும். அன்று, இறைவன் சீடர்களை அழைத்தது போல இன்று நம்மையும் அழைக்கின்றார்.

2. அழைப்பு புனிதப்படுத்துவதற்காய்..‌.

"தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை. உங்களுள் சிலர் இவ்வாறுதான் இருந்தீர்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள்; கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள்".  (1 கொரிந்தியர் 6:9-11)      

                      என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் இயேசு சீடர்களை பாவத்திலிருந்து கழுவி தூய்மை வாழ்வு வாழ அழைப்பு தருகிறார். இந்த மானிட சமூகம் புனித வாழ்க்கையை வாழ்வதற்கு சீடர்கள் தங்களை முழுவதுமாக கையளிக்க வேண்டும் என இயேசு  அழைக்கின்றார். சீடர்கள் புனித வாழ்வு வாழ்ந்து, உலகெங்கும் சென்று  நற்செய்தியை அறிவிக்க வேண்டும் தங்களுடைய கரங்களால் நோயாளிகளை குணமாக்கி, மக்கள் இறைவனுடைய ஆவியைப் பெற்றுக்கொள்ள செய்ய வேண்டும் என்பதற்காக இறைவனுடைய அழைப்பு சீடருக்கு மட்டுமல்லாது நம் அனைவருக்கும் தரப்படுகிறதுஇன்றைய முதல் வாசகத்தில் யோனாவின் அழைப்பு யோனா புனித வாழ்வு வாழவும், நினிவே நகர் மக்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவனால் கழுவப்பட்டு, தூய்மையாக்கப்பட்டு புனித வாழ்வுக்கு அவரால் அழைத்துச் செல்ல தரப்படுகிறது. இறைவன் தூயதோர் உள்ளத்தை நேசிக்கின்றார் எனவே தான் தாவீது தமது திருப்பாடலில் "தூயதோர் உள்ளத்தை இறைவா என்னிலே படைத்தருளும்புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே தந்தருளும்" என்கின்றார். எனவே நம்முடைய இதயத்தை, உள்ளத்தை தூய்மையாக வைத்து இறைவனின்  அழைப்பில் வாழ்வோம்.

3. அழைப்பு பணி வாழ்வுக்காய்...


"ஆயினும், நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம். இறைவாக்குரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும். தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும்".(உரோமையர் 12:6-7)                              

              என்னும் இறை வார்த்தைக்கு ஏற்ப பணி வாழ்வுக்கு சீடர்கள் அழைக்கப்பெறுகிறார்கள். நமது பணியை நமக்காக  செய்யாமல் பிறருக்காக மற்றும் இறைமகன் இயேசு கிறிஸ்துவினுடைய பணியை தொடர்ந்து செய்வதற்காக சீடர்களுக்கு அழைப்பு தரப்படுகிறது.   யோனாவின் அழைப்பும்  இறைப்பணிக்காக, மனமாற்றத்திற்காக மற்றும் இறைவனுடைய வார்த்தையை அறிவிக்க என்பது இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்படுகிறதுஇறைவன் தருகின்ற அழைப்பு வெறும் மகிழ்வான வாழ்வுக்கு மட்டுமல்லாது, அவரது பணியை நாம் ஏற்று செய்வதற்கு என்பது அவருடைய அழைப்பு  நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

4. அழைப்பு துன்பப்படுவதற்காய்...


"கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு அறிகுறியாக அமைகின்றன. இவையனைத்தின் விளைவாக நீங்கள் இறையாட்சிக்குத் தகுதியுள்ளவர்களாவீர்கள். இந்த ஆட்சிக்காகவே நீங்கள் துன்புறுகிறீர்கள்".   (2 தெசலோனிக்கர். 1:5)
                                                                         என்னும்  வார்த்தையின் அடித்தளத்தில் சீடத்துவ வாழ்வு, இயேசு  சுமந்த சிலுவையை சுமக்க, அவர் குடித்த  கசப்பு காடியை குடிக்க   தம்முடைய சீடர்களுக்கு அழைப்பு கொடுக்கின்றார்இன்றைய முதல் வாசகத்தில் யோனாவின் அழைப்பிலும் அவர் எண்ணற்ற துன்பங்களை பெறுவதைப் பார்க்கின்றோம். இறை பணிக்காக நோன்பிருந்து, சாக்கு உடை உடுத்திமக்களின் ஏளன பேச்சுகளை ஏற்று, தன்னையே முழுவதுமாக அர்ப்பணிக்கின்ற, துன்பத்தை ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு வாழ்வாக அவரது வாழ்வு அமைவதை பார்க்கின்றோம். இந்த மாபெரும் அழைப்புக்கு ஏற்ப, பணி வாழ்வு எண்ணற்ற சாவால்களையும், சிக்கல்களையும், துன்பத்தையும் நமக்கு தர வல்லது என்பதை நாம் உணர இறைவன் நமக்கு இத்தகைய அழைப்பை தருகிறார்.

                              இறைவனுடைய அழைப்பு உயர்ந்த அழைப்பு இறைவன் சீயோன் மலையிலிருந்து சீடர்களாக ஒவ்வொருவரையும் அழைக்கின்றார்ஆயிரம் அழைப்புகள் இம்மண்ணில் இருந்தாலும் ஆண்டவரால் அழைக்கப்படும் அழைப்பு மீட்பை தர வல்லது, தூய்மையானது, பணி வாழ்வுக்கானது மற்றும் துன்பத்தை ஏற்கும் சக்தியை தரக் கூடியதுஇறைவன் நமக்கு கொடுக்கின்ற அழைப்பு மேலிருக்கும் நிறைவாழ்வை நாம் பெறுவதற்கான அழைப்புபாவியான நாம் கிறிஸ்துவில் இணைய புதுவாழ்வை மற்றும் புதுபிறப்பை நாம் பெற்றுக் கொள்ள நமக்கு வழிவகை செய்கிறதுநாம் நம் கண்களை கிறிஸ்துவில் பதிய வைக்க வேண்டும். இறைவன் தருகின்ற அந்த விண்ணக வாழ்வை, இறைவனோடு இணைக்கின்ற நிலையான வாழ்வை, விண்ணகத்தை நோக்கி செல்லக்கூடிய ஒரு வாழ்வை நாம் பெற்றுக்கொள்ள நமக்கு கொடுப்பதற்கான ஒரு அழைப்பாக இறைவனது அழைப்பு இருக்கிறது. அவ்வழைப்பை ஏற்று இறைவழியில் வாழ்வோம்.

                                           Fr. குழந்தை யேசு ராஜன் CMF

                                                       கும்பகோணம்.