Thursday, February 23, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 1-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A) - 26-02-2023 - ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
தவக்காலத்தின் 1-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(26 பிப்ரவரி  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: தொநூ 2: 7-9; 3: 1-7
இரண்டாம் வாசகம்: உரோ  5: 12-19
நற்செய்தி: மத் 4: 1-11

சோதனைகளை சாதனைகளாக்க...
ஒரு கப்பலில் சிலர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கப்பலில் கோளாறு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்தவர்களில் ஒருவனை தவிர மற்ற அனைவரும் இறந்து போனார்கள். அவன் சில நாட்கள் நீந்தி ஒரு தீவை வந்தடைந்தான். ஆளே இல்லாத அந்த தீவில் இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன்னை அழைத்து செல்ல இந்த தீவிற்கு யாரையாவது அனுப்பி வைக்கும்படி இறைவனிடம் வேண்டினான். நாட்கள் கடந்தன ஆனால் அவனை தேடி யாரும் வரவில்லை. அந்த தீவில் இருந்த சிலவற்றை கொண்டு அவன் அங்கு ஒரு குடிசையை கட்டி அதில் தங்க ஆரம்பித்தான். உடைந்த கப்பலின் பாகங்கள் அவ்வப்போது கரை ஒதுங்க ஆரம்பித்தது அதோடு அவனது சில உடமைகளும் கரை ஒதுங்கியது. அதை வைத்துக்கொண்டு அங்கு அவன் வாழ தொடங்கினான். ஆனால் இறைவனிடம் வேண்டுவதை மட்டும் அவன் நிறுத்தவே இல்லை. என் மனைவி பிள்ளைகளை பிரிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. என்னை எப்படியாவது அவர்களோடு சேர்த்துவிடு, ஏன் இந்த சோதனை இறைவா? என மீண்டும் ஜெபித்தான். அவன் பிராத்தனையை இறைவன் செவி கொடுத்து கேட்டதாக தெரியவில்லை. ஒரு நாள் திடீரென அவன் கட்டிய குடிசை தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அவனால் அதை தடுக்க முடியவில்லை. அவன் அத்தனை நாள் சேர்த்த அனைத்தும் தீயில் கருகியது. என்ன செய்வதென்று தெரியாமல் அவன் கதறினான். சோதனைக்கு மேல் சோதனையா! என அவன் இறைவனிடம் மன்றாடினான். அழுதுகொண்டே அன்றிரவை அவன் கழித்தான். அடுத்தநாள் காலையில் அவன் வாழும் தீவை நோக்கி ஒரு கப்பல் வந்துகொண்டிருந்தது. அதை பார்த்து அவன் மகிழ்ச்சியில் குதித்தான். கப்பலில் இருந்தவர்கள் அவனை வந்து அழைத்து சென்றனர். அப்போது அவன், நான் இங்கு இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டான். இந்த பகுதில் ஏதோ தீப்பற்றி எரிந்து புகை மூட்டமாக இருந்தது. அதனால் இங்கு யாரேனும் உள்ளார்களா என்று பார்க்கவே வந்தோம் என்றார்கள். அவன் குடிசையை எறியச்செய்து சோதனைக்கு மேல் சோதனை கொடுத்த இறைவன் அதிலே புது வழியையும் காட்டினார் என்பதை அவன் உணர்ந்தான்.

தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் சோதனைகளை சாதனைகளாக மாற்ற அழைக்கப்படுகின்றோம். விவிலியத்தில் இரண்டு விதமான குழுக்களை பார்க்கிறோம். ஒரு குழுவினர் தங்கள் வாழ்வில் ஏற்ப்பட்ட எல்லா சோதனைகளையும் சாதனையாக்க தவறியவர்கள். மற்றொரு குழுவினர் சோதனைகளை எதிர் கொண்டு சாதனையாக்கி புது வாழ்வு பெற்றவர்கள்.

1. சாதனையாக்க தவறியவர்கள்:

நம் முதல் பெற்றோர்களான ஆதாமும் ஏவாளும் சோதனையை சாதனையாக்க தவறியவர்கள். (தொநூ. 3:1-13) இறைவன் பாலை நிலத்தில் இஸ்ராயேல் மக்களை சோதித்தார். உணவு மற்றும் தண்ணீரின்றி சோதனைக்கு உள்ளானார்கள். (விப 15: 22-26, 17: 1-7) ஆனால் அவர்கள் அதை சாதனையாக மாற்றவில்லை மற்றும் இறைவனிடம் மன்றாடவில்லை. ஒவ்வொரு முறையும் அவர்கள் சோதனைக்குள்ளாகும் போது சிலை வழிபாட்டை தொடங்கினார்கள், ஆண்டவரிடம் ஆற்றல் இல்லை என்று நினைத்தார்கள் மற்றும் இறைவனை விட்டு பிரிந்து சென்றார்கள். எனவே வாழ்க்கையில் தோல்வி அடைந்தார்கள்.

2. சாதனையாக்கி வாழ்ந்தவர்கள்:

"உன் மகனை எனக்கு பலியாக கொடு" என இறைவன் ஆபிரகாமிடம் கேட்டு அவருக்கு கொடுத்த சோதனையை அவர் சாதனையாக மாற்றினார். (தொநூ. 22:1) யோபுவும் சோதனையை சாதனையாக்க முயன்றார். (யோபு 1:12) ஆண்டவருக்காக தன்னுடைய உடமைகளை, உறவுகளை மற்றும் உடலை இழந்து சோதனையை சாதனையாக்கினார். இறைமகன் இயேசு தன்னுடைய மூன்று ஆண்டு பணி வாழ்வில் பலமுறை மற்றும் பல வகைகளில் சோதனைக்கு உட்பட்டிருக்கிறார். குறிப்பாக இன்றைய நற்செய்தியில் வாசிப்பது போல இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் நோன்பிருக்க சென்றபோது அலகையினால் மூன்று முறை சோதிக்கப்பட்டார். ஒவ்வொரு முறையும் இயேசு தனது சோதனையை சாதனையாக்கி அதிலே வெற்றி கொண்டார். இறைவனின் மீட்பு திட்டத்தில் தன் உயிரைத் தந்து நம் ஒவ்வொருவருக்கும் மீட்பை தந்தார்.

இயேசுவின் மூன்று சோதனைகள்

1. கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும். (மத் 4:3)

நாற்பது நாட்கள் உண்ணாமல் நோன்பிருந்த இயேசுவுக்கு முதல் சோதனை அடிப்படை தேவையான உணவு சார்ந்ததாகும். இது அவரின் மனிதச் சாயலில் உடல் சார்ந்த தேவையாகவும் மற்றும் பொருள் வகை சார்ந்த சோதனையாகவும் கருதப்படுகிறது. இச்சோதனை நாம் நம் உடல், உணவு மற்றும் உடமை சார்ந்தவற்றை எவ்வாறு சந்திக்கின்றோம் என சிந்திக்க அழைப்பு தருகிறது.

2. நீர் இறைமகன் என்றால் கீழே குதியும். (மத் 4:6)

இது இயேசுவின் இறைச்சாயலை கேள்விக்குறியாக்கும் சோதனையாகும். தன் சுயஅடையாளத்தை வெளிப்படுத்த மற்றும் புதுமைகள் செய்து மக்களை மயக்க எழும் சோதனையாகும். இச்சோதனை சுயநலத்தோடு சுயஅடையாளத்தை வெளிப்படுத்துகிறவர்களாக அல்லாது, பொதுநலத்தோடு வாழ்வதற்கும் மற்றும் நம்மில் எழும் சோதனைகளை சந்திக்க அழைப்பு தருகிறது.

3. என்னை வணங்கும் (மத் 4:9)

இயேசுவின் மூன்றாவது சோதனை பதவி ஆசையை தூண்டும் வகையில் அமைகின்றது. மேலும் இது ஒரு ஆன்மீக சோதனை அதாவது நம் நம்பிக்கைக்கு எதிராக சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள அழைப்பு தருகிறது.

புத்தர் சொல்வதைப் போல் நம்முடைய ஆசையே எல்லா துன்பத்திற்கும் அதாவது சோதனைக்கும் காரணம். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் ஊடகங்களின் வழியாக, குறிப்பாக இணைய வர்த்தகத்தின் வழியாக, காட்சிப்படுத்துதலின் வழியாக நம்மை கவர்ந்திழுத்து, ஆசைக்குள்ளாக்கி அதாவது சோதனைக்கு உட்படுத்தி கொண்டிருக்கிறது இன்றைய நவநாகரீக உலகம். வாங்கும் சம்பளம் அனைத்தும் நொடிப்பொழுதில் செலவு செய்ய வரும் அழைப்புகள், ஆசையான வார்த்தைகள், கவர்ச்சியான உடைகள், சொக்க வைத்து அடிமைப்படுத்தும் போதைப் பொருட்களும் மற்றும் மதுவும் என எல்லாமே நமக்கு சோதனைதான். நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சோதனைகள் நம்மை சுய ஆய்வுக்கு உட்படுத்த உதவுகிறது, அதாவது நம் நிலையை அறிய உதவுகிறது மற்றும் இறை நம்பிக்கையில் நம்மை வளர்க்கிறது என்பதை உணர்ந்து சோதனைகளை சாதனையாக்குவோம். இறைவன் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.