Thursday, October 8, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் -11-10-2020 - பொதுக்காலம் 28ஆம் வாரம் ( ஆண்டு- A)

பொதுக்காலம் 28ஆம் வாரம்
(
ஆண்டு- A)

11-10-2020

ஞாயிற்றுக்கிழமை

 

இயேசுவோடு வாழ ஒரு வாய்ப்பு

 


  சிறுவன் ஒருவன் தன் தந்தையிடம் சென்று வாழ்வை எப்படி வாழவேண்டும்? எங்கு வாழ வேண்டும்? என்று வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளை கேட்கின்றான். அப்பொழுது அவனுடைய தந்தை, எந்த  பதிலும் அளிக்காமல் அவன் கையிலே ஒரு கல்லை கொடுத்துநீ இதை அருகில் உள்ள சந்தைக்கு எடுத்து சென்று அதை  வைத்துக்கொள். ஏவராவது இந்தக் கல்லின் விலை என்னவென்று கேட்டால், உன்னுடைய இரண்டு விரலை மட்டும் காட்டு என்று கூறினாராம். அவனும் அவ்வாறே சந்தைக்கு சென்றான். ஒரு பெண்மணி அங்கு வந்துஇந்தக் கல் அழகாக இருக்கிறதே இதை என் வீட்டின் ஷோகேஸில் வைக்கலாம். இதனுடைய விலை என்ன? என்று அவனிடம் கேட்க அவனோ இரண்டு விரலைக் காட்டினான். உடனே அந்தப் பெண் இரண்டு டாலர்களா என்று கேட்டாள்உடனே அவன் வீட்டுக்கு வந்து தன் தந்தையிடம் கூறினான். தந்தை இதே கல்லை எடுத்துக் கொண்டு  ஒரு  அருங்காட்சியகத்திற்கு செல். அங்கே  யாராவது இதன் விலை கேட்டால் அதேபோல இரண்டு விரலை காட்டு என்று கூறினாராம். அவனும் ஒரு  அருங்காட்சியகத்திற்கு செல்ல  ஒரு மனிதன் வந்து இந்த கல்லின் விலை என்ன? என்று கேட்க, அவன் அதேபோல இரண்டு விரலை காட்டினான். அவனோ 2000 டாலர்களா என்று கேட்டான். உடனே சிறுவன் வந்து தன்னுடைய தந்தையிடம் நடந்ததை கூறினான். மீண்டுமாக தந்தை பலவிதமான அரிய கற்களை விற்பனை செய்கின்ற விற்பனை தளத்திற்கு சென்று அந்தக் கல்லைக் காட்டு என்று கூறினார். அவனும் அதே போல அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு சென்று, ஒரு விற்பனை தளத்திலே அந்தக் கல்லை காட்டினான். அவர்கள் இந்த கல் அரிய வகை கல்லாக இருக்கிறதேஇதனுடைய விலை என்ன? என்று கேட்கும் போது அவன் இரண்டு விரலை காட்டினான். அதற்கு அவர்கள்  2 லட்சம் டாலர்களா என்று கேட்டார்கள். உடனே அவன் தனது தந்தையிடம் யாவற்றையும் கூறினான்அவனுடைய தந்தையும் இது தான் வாழ்க்கை. வாழ்க்கையில் நாம் பெறுகின்ற வாய்ப்புகளை சரியான முறையில்  பயன்படுத்தும் போது, வாய்ப்பின் அழைப்புக் ஏற்றவாறு வாழ்கின்ற போது, நம் வாழ்வு  அர்த்தமுள்ள வாழ்வாக   மாறும்

 இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம்முடைய வாழ்வின்  வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ள அழைப்பு தருகின்றது. கிறிஸ்தவர்களாகிய நமக்கு அர்த்தமுள்ள மகிழ்வான வாழ்வு என்பது கிறிஸ்துவோடு இணைந்த வாழ்வு. கிறிஸ்துவில் நம் வாழ்வே அர்த்தமுள்ள வாழ்வு. கிறிஸ்துவில் நம் வாழ்வு அமைய நம்முடைய வாழ்க்கையில் நாம் பெறுகின்ற ஒவ்வொரு வாய்ப்புகளையும் நாம்   பயன்படுத்திக் கொள்ள இன்றைய நற்செய்தி வாசகம் அழைப்பு தருகிறது.

 திருமணம்:

 திருமணம் என்பது ஒரு புது வாழ்வின் அடையாளம். உறவுகள் ஒன்று கூடி வந்து மகிழ்கின்ற தருணம் அதுதிருமணம் என்றாலே அங்கு மகிழ்ச்சி இருக்கும். ஒவ்வொரு திருமணத்திலும் உறவுகள் ஒன்று சேர்ந்து வருவதால், புதுவாழ்வு ஆரம்பமாவதால் அங்கு மகிழ்வு மட்டுமே காணப்படும். அதனால் தான், இயேசுவினுடைய காலத்தில் திருமணம் என்றாலே அது வெறும் ஒரு நாள் கொண்டாட்டமாக அல்லாது, பல நாள் கொண்டாட்டமாக, பல நாள் விருந்து வைத்து மகிழக் கூடிய ஒரு தருணமாக இருந்தது. மகிழ்வு என்பது வாழ்வின் அடித்தளமாக இருக்கின்றது. கானாவூர் திருமணத்திற்கு இயேசுவும் அன்னை மரியாவும் சென்றது  உறவுகளோடு மகிழ்வதன் அடையாளமாக இருக்கிறதுஇன்றைய நற்செய்தியில் திருமணத்திற்காக அழைக்கப்படுதல் என்பது நாம் வாழ்வதற்காக அழைக்கப்படுவது என்பது பொருள். இங்கு திருமணம் என்பது இறை ஆட்சியையும், திருமணத்தில் மணமகன் இறை மகனாகவும் கருதப்படுவதால், இந்த இறைமகன் இயேசு கிறிஸ்துவோடு நாம் வாழ இறையாட்சியில் நுழைய வாய்ப்பு பெறுகின்றோம் என்பதே இன்றைய நற்செய்தியின் திருமணம் சொல்லும் செய்தி.

 விருந்து:

 விருந்து என்பது உறவின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் விருந்து மற்றவர்க்கு அளிக்கப்படுதல் உறவை வலுப்படுத்துவதற்கான வழி. அதனால்தான் ஒவ்வொரு நிகழ்வின் போதும் உறவுகளை வலுப்படுத்த விருந்து அளிக்கப்படுகிறது. இது வெறும் மகிழ்வோடு மட்டுமல்லாது, மகிழ்வு எனும் உறவுகளால் நிறைந்திருக்கின்றது என்பதையும் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது. பழைய ஏற்பாட்டிலே இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு  பாலைவனத்தில் உணவளித்து தன்னுடைய பாதுகாப்பை, உறவை  வெளிப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம். இயேசு தன்னையே உணவாக, உறவாக  கொடுக்கின்றார் என்பது அவர்   குழந்தையாக  தீவனத் தொட்டியில் வைத்து இருந்த போதே நாம் உணர்கின்றோம். இறைமகன் இயேசு  ஐயாயிரம் பேருக்கு உணவளித்த போதுஅவர் அந்த மக்கள் மீது கொண்ட உறவு வெளிபடுத்தபடுகின்றதுஇன்றைய நற்செய்தியில்  விருந்துக்கு அழைக்கபடுதல் என்பது  மகிழ்வை ஒரு உறவாக பகிர்ந்து கொள்ளுதல் என்பதன் அர்த்தமாக அமைகின்றது. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் இந்த மகிழ்வான வாழ்வுக்கு அழைக்கப்படுகின்றார்கள். இங்கு இயேசுவினுடைய இறையாட்சி தான் இந்த திருமண விருந்து என்றால் இந்த இயேசு எனும் உறவில் நாம் மகிழ, இந்த இயேசு என்னும் உறவில் நாம் வாழ அழைக்கப்படுகிறோம் என்பதுதான் அர்த்தம்.

  உடை:

உடை அணிதல் மனிதருக்கே உரிய தனிச் சிறப்பு. உலகில் வாழும் ஏறத்தாழ எல்லா மனித சமுதாயங்களுமே உடைகளை உடுத்துகின்றனர் என்பதுடன், இன்று மனிதரின் மிகவும் அடிப்படையான மூன்று தேவைகளுள் உடையும் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. உடை உடுக்கப்படுவதற்கு தொழிற்பாட்டுக் காரணிகளும், சமூகக் காரணிகளும் உண்டு. உடை உடலை வெளிச் சூழலில் இருந்து பாதுகாக்கின்றது. வெளி மாசுகளில் இருந்தும், காலநிலைக் கூறுகளான குளிர், வெயில், மழை போன்றவற்றில் இருந்தும் உடலைக் காப்பாற்றுவதில் உடைக்கு முக்கிய பங்கு உண்டு. இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்படுகின்ற திருமண ஆடை என்பது  இறையாட்சி என்னும் திருமண விருந்தில், இறைமகன் இயேசுவோடு  வாழ்வதற்கு நாம் கொள்ளுகின்ற தயாரிப்பாக கருதப்படுகின்றது. இயேசுவோடு வாழ்வதற்கு நான் எண்ணில் எத்தகைய ஒரு தயாரிப்போடு இருக்கின்றேன் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

 ஆம் அன்பார்ந்தவர்களே, இறைவன் நம் ஒவ்வொருவருக்கும்  வாழ்வதற்கு வாய்ப்பு தருகின்றார். இயேசுவோடு என்னுடைய வாழ்வு அமைய, இறைவன் ஆடை என்னும் வாய்ப்பையும், திருமண விருந்து என்னும் அழைப்பையும் எனக்கு தருகின்றார். எனவே இறைமகன் என்னும் மணமகனோடு வாழ, இறையாட்சி என்னும் திருமண விருந்தில் நுழைய, ஆடை என்னும் தயாரிப்பு நமக்கு தேவை என்பதை உணர்ந்து ஜெபிப்போம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

 

 

 

 

 

 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.