திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு
(ஆண்டு- B)
06-12-2020
ஞாயிற்றுக்கிழமை
ஆண்டவருக்காய் பாதையாக மாறுவோம்
ஒருமுறை அரசர் ஒருவர் நகர்வலம் செல்ல முடிவெடுத்தார். நகர் முழுவதும் நடந்து சென்ற அரசரின் பாதங்கள் காயங்களாகியது. நகர் முழுவதும் உள்ள சாலைகள் கரடு முரடாகவும், முள்களாகவும் இருந்ததால், என்னுடைய பாதங்கள் காயங்கள் ஆகின என்று அரசன் வேதனையுற்று, நகர் முழுவதும் இருக்கின்ற அனைத்து பாதைகளிலும் விலங்கின் தோல்களை விரியுங்கள் என்று ஆணையிட்டான். நகரின் பாதைகள் முழுவதும் விலங்கின் தோல்களை விரிக்க, எவ்வளவு விலங்குகளை கொல்ல வேண்டியிருக்கும், எவ்வளவு பணம் செலவாகும் என்று யோசித்தான் அரண்மணை பணியாளன். அவர் அரசரிடம் சென்று, அரசே நகரின் பாதை முழுவதும் விலங்குகளின் தோலை விரிப்பதற்கு பதிலாக, தங்களுடைய பாதங்களுக்கு ஒரே ஒரு விலங்கின் தோலால் காலணியை நீங்கள் செய்து கொள்ளலாமே என்று கூறினார். தனது ஆணைக்கு எதிராக பேசுகிறாயா! என்று அரசன் கோபம் கொண்டாலும், இறுதியில் அவரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு நகர் முழுவதும் விலங்கின் தோலை விரிப்பதற்கு பதிலாக ஒரே ஒரு விலங்கின் தோல் கொண்டு தனக்கென்று ஒரு காலணியை செய்து கொண்டான்.
கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இது வெறும் கதையல்ல நம் வாழ்க்கை. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவிற்காக நம்மை தயாரிக்கின்ற இந்த திருவருகைக் காலத்திலே, கிறிஸ்மஸ் திருவிழாவிற்காக பல வழிகளில், பல விதங்களில் நாம் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். வீடுகளில் வர்ணம் பூசுவது, அலங்காரம் செய்வது, மின்சார விளக்குகளால் அலங்கரிப்பது, வண்ண வண்ண நட்சத்திரங்களை கட்டுவது, மிகப் பெரிய மற்றும் அழகான குடில்களை தயாரிப்பது, எண்ணற்ற போட்டிகளை நடத்துவது என பல வழிகளில், பலவிதங்களில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக வழிவகை செய்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறு உலகின் எத்திசையிலும், நம்முடைய பங்குகளிலும், இல்லங்களிலும் நாம் ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்கிறோம். இன்று நாமே அவருக்காக, அவருடைய வருகைக்காக பாதையாக மாற இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகிறது.
பாதையின்றி பயணம் இல்லை, பயணமின்றி பாதை இல்லை. பாதையிருந்தால் தான் பயணிக்க முடியும். வெற்றி பெற பாதை மிகவும் அவசியம், பாதைகள் பலவிதம், பயணம் வெற்றி பெற நல்ல பாதையை தேர்ந்து எடுத்தல் மிகவும் அவசியம். இது வெறும் வெற்றிக்காக மட்டுமல்ல நம்முடைய வாழ்விற்காகவும் தான். நாம் பாதையாகின்ற போது நம்மிலே உண்மையான, முழுமையான தயாரிப்பு இருக்கும். "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்". என்னும் இன்றைய முதல் வாசகத்தின் அடித்தளத்தில் "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்" என்ற இன்றைய நற்செய்தியின் அழைப்பில் நம் ஆண்டவர் இயேசுவுக்காக அவருடைய வருகைக்காக நம்மையே நாம் பாதையாகிட அழைக்கப்படுகின்றோம். நாமே பாதையாக, வழியாக மாறும் போது நாம் எத்தகைய பாதையாக மாற வேண்டும். எத்தகைய பாதை ஆண்டவருடைய வருகைக்கு தேவை என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
1. கரடுமுரடற்ற பாதையாக.... (பாவமின்றி...)
இன்று நமது ஊர் பாதைகள் அனைத்தும் கரடுமுரடான பாதைகளாக இருக்கின்றன. ஒரு மழைக்கு கூட தாங்காத பாதைகளாக இருக்கின்றன. எண்ணற்ற குழிகளும், கற்களும் மற்றும் முள்களும் என நடப்பதற்கு ஏதுவாக பாதைகள் இல்லை. இன்றைய சமுதாயத்தில் நாம் காணும் பாதைகள் கரடு முரடான பாதைகளாக இருக்கின்றன. நம் சமுதாயத்தில் நாம் காணும் இத்தகைய கரடு முரடான பாதைகளை போலத்தான் பல வேளைகளில் நம்முடைய வாழ்வும் அமைந்துவிடுகின்றது. நாமும் கரடு முரடான பாதைகளாக இருக்கின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இத்தகைய கரடுமுரடான பாதைகள் மாற வேண்டும். கரடுமுரடான கற்கள், முட்கள் என்பது நம்முடைய பாவச் செயல்கள், தீய செயல்கள். பாவம் எனும் கற்கள், முட்கள் மற்றும் பள்ளங்கள் நிரம்ப வேண்டும். இத்தகைய பாவம் என்னும் கற்களையும், முட்களையும், பள்ளங்களையும் மற்றும் குறைகளையும் நாம் நம்முடைய வாழ்க்கையிலிருந்து நீக்குகின்ற பொழுது, தூய்மையான, கரடுமுரடற்ற, அழகான மற்றும் தெளிவான பாதையாக நாம் மாறுவோம். கிறிஸ்து இயேசுவின் பிறப்பு விழாவிற்கு நாம் நல்லதொரு கரடுமுரடற்ற பாதைகளாக மாறுவோம்.
2. அகலமான பாதையாக....(உதவி செய்து...)
இன்றைய சமுதாயத்தில் நாம் காணும் மனிதர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். எல்லாமே தனக்கு என்று சேர்த்துக்கொள்ள நினைக்கின்ற மனிதர்கள். தான் என்னும் ஆணவத்திலும், அகந்தையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இத்தகைய மனிதர்கள் சுயநலவாதிகள். சுயநலத்தை விட்டு பொது நலத்திற்கு மாறுகின்ற ஒரு பாதை. குறுகிய மனப்பான்மையிலிருந்து தாராள மனம் கொள்கின்ற ஒரு பாதை. "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.மத்தேயு 25:40" என்னும் இறைமகன் இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தைக்கு ஏற்ப பிறருக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்யும் அகல பாதையாக நாம் மாற வேண்டும். குறுகிய மனப்பான்மையோடு, எவருக்கும் உதவாமல் வாழாது, தாராள குணத்தோடு பிறருக்கு உதவும் அகல பாதையாக நம்மை உருவாகுவோம்.
3. துண்டிக்கப்படாத பாதையாக....(முழு கிறிஸ்தவராக)
நாம் பயணிக்கின்ற பாதைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட பாதைகளாக இருக்கின்றது, ஒரு எல்லையோடு முடிந்து விடப்படுகின்ற பாதைகள். நடுவழியில் துண்டிக்கப்பட்டு அதோடு நிறைவு பெறுகின்ற பாதைகளாக இருக்கின்றன. நாமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக பாதையாக மாறுகின்ற தருணத்திலே துண்டிக்கப்படாத பாதையாக மாற வேண்டுமென்றால் என்றும் விசுவாசத்தோடு வாழுகின்றவர்களாக மாற வேண்டும் என்பது அர்த்தம். நம்முடைய வாழ்க்கையில் நாம் வெறும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக வாழுகின்ற திருவிழா கிறிஸ்தவர்களாக! அல்லது வெறும் இக்காலத்திற்கு மட்டும் விசுவாசம் கொண்டு வாழ்கின்ற இக்கால விசுவாச கிறிஸ்தவர்களாக! என்றுமே விசுவாசம் கொண்டு, பக்தியோடு வாழுகின்ற கிறிஸ்தவர்களாக நாம் மாறுவோம், அப்பொழுது நாமும் துண்டிக்கப்படாத பாதையாக இருப்போம். இறைவன் நம்மை நிறைவள்ளவர்களாக வாழ விரும்புகின்றார். எனவே நமது கிறிஸ்தவ வாழ்வு முழுமை அடையும் துண்டிக்கப்படாத பாதையாக நாம் மாறுவோம்.
“வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை." யோவான் 14:6 என்னும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, அவரே நமக்காக மனித சாயல் எடுத்து, இந்த மண்ணுலகிற்கு வந்தார். தன்னையே வழியாகவும், வாழ்வாகவும், உண்மையாகவும் மற்றும் உணவாகவும் நமக்குத் தந்தவர். அவருக்காக நாம் ஏன் பாதையாக மாறக்கூடாது? நம்முடைய வாழ்வு ஏன் மாறுபடக் கூடாது? நாம் ஏன் நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாது? ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக நம்முடைய சூழ்நிலையை மாற்ற முயலுகின்ற நாம், நம்மை மாற்றிக் கொள்ள முயலுவோம். நம் வாழ்வை, நம்முடைய பாவச் செயலை, மற்றும் குறுகிய மனப்பான்மையை மாற்றுவோம். புது வாழ்வை தொடங்குவோம். நாமும் பாதையாக இறைமகன் இயேசு கிறிஸ்து நம்மில் பயணிக்க, நம் வாழ்வில் நுழைய நம்மை முழுவதுமாக உட்படுத்துவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
கும்பகோணம். |