🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலம் 28-ஆம் வாரம்
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
ஞாயிற்றுக்கிழமை
நற்செய்தி: - மாற்கு 10: 17-30
அவசர உலகம்
மனிதனின் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் தான் உணர்வுகளும் உணர்ச்சிகளும். இவை மனிதனை ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். அவசரத்தில் வாழ்பவர்கள் இத்தகைய நிலையில் தங்களை அறியாமலே நுழைந்து விடுகிறார்கள். நற்செய்தியில் வருகின்ற நபரின் மூன்று விதமான செயல்பாடுகள் அவரின் உணர்ச்சிவசப்படும் நிலையை எடுத்துரைக்கிறது.
1. ஓடி வருதல்
2. முழந்தாள்படியிடுதல்
3. 'நல்ல போதகரே' என்று கூறுதல்
இயேசுவைப் பின்பற்ற விரும்பும் நபர் ஏன்? ஓடி வர வேண்டும், முழந்தாளிட வேண்டும் மற்றும் இயேசுவை பற்றி பிறர் கூற கேட்டறிந்தவர் அவரை 'நல்ல போதகரே' என்று அழைக்க வேண்டும். (மாற்கு 10:17) இவை அனைத்தும் அவரின் உணர்ச்சிவசப்பட்ட நிலையை நமக்கு எடுத்துக்கூறுகிறது. உணர்ச்சிவசப்படுதல் அவசரத்தின் மிக முக்கியமான நிலை.
2. தன்னிலை அறியா நிலை
அவசரம் மனிதனை வெறுமையின் நிலைக்கு தள்ளி விடுகிறது. அந்நிலையில் அவன் அவனைப் பற்றி சிந்திப்பதும் இல்லை, தன்னிலையை அறிவதும் இல்லை. நற்செய்தியில் கட்டளைகளைக் கடைப்பிடி என இயேசு கூறியவுடன் சற்றும் யோசிக்காமல் “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்”(மாற்கு 10:20) என்று கூறியது அவரின் தன்னிலையை உணரா நிலையை காட்டுகிறது. அதனால் தான் இயேசு உன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்குக் கொடு என்று அவரின் நிலையை உணர வைக்கிறார்.
3. சிந்தனையற்ற நிலை
அவசரத்தில் மனிதன் சிந்திப்பதே இல்லை என்பது எவரும் மறுக்க இயலாத உண்மையாகும். இன்றைய நற்செய்தியில் இயேசுவை சந்திக்கும் பணக்கார இளைஞரின் சிந்தனையற்ற நிலையை பார்க்கின்றோம். தன்னால் எது செய்ய முடியும்? செய்ய இயலாது? தனது இலக்கு எப்பேற்பட்டது? எதனை நோக்கி எனது வாழ்வு சென்று கொண்டிருக்கின்றது? என எதையுமே சிந்திக்காமல் அவசரத்தோடு வேகமாக ஓடி வந்து இயேசுவிடம் நிலைவாழ்வை பெற நான் என்ன செய்ய வேண்டும்? என்று அந்த இளைஞன் கேட்பது சிந்தனையற்ற நிலை தான்.
நிலை வாழ்வு என்னும் நிரந்தரம்
இன்று நாம் உண்ணும் உணவிலிருந்து ஏற்படுத்தி கொள்ளும் நமது வாழ்க்கை வரை நாம் அவசர அவசரமாகவே முடிவு செய்து, உணர்ச்சிவசப்பட்டு யாவற்றையும் செய்கின்றோம். இத்தகைய ஒரு நிலையிலிருந்து வெளிவர தான் இறைமகன் இயேசு கிறிஸ்து நிலை வாழ்வை பற்றி தெளிவுபடுத்துகிறார்.
இன்று நாம் நிலையானவற்றை பற்றி வாழ அழைப்பு பெறுகின்றோம். ஒரு நிமிடத்தில் நாம் உணர்ச்சிவசப்பட்டு மற்றும் கோபப்பட்டு அவசர அவசரமாக எடுக்கின்ற பல முடிவுகள் தான் பலரை அவர்களது வாழ்வை இழக்க வைக்கின்றன. இதனால் பல தற்கொலைகளும் கொலைகளும் நடந்திருக்கின்றன. இங்கு கோபமும் மற்றும் உணர்ச்சிவசப்படுதலும் நிரந்தரம் இல்லை. அமைதியும், நிம்மதியும், சிந்திப்பதும் மற்றும் தன்னிலை அறிவதும் தான் நிரந்தரம். இன்று எதுவும் நினைத்தவுடனே கிடைத்துவிட வேண்டும் என்னும் அவசரம். அதனால் தான் துரித உணவு என்னும் Fast Food-க்கும், Online Food-க்கும், Hybrid காய் மற்றும் கனிகளுக்கும் அடிமையாகி கிடக்கின்றோம். எதையுமே வேகமாக செய்து பெற்று விட வேண்டும் என்ற அவசரத்தால் இத்தகைய உணவுகளை நாம் உண்டு, பல்வேறு நோய்களுக்கும் நாம் அடிமையாகி கிடக்கின்றோம். அவசரத்தால் நாம் பெற்றுக் கொள்ளுகின்ற இத்தகைய துரித உணவுகள் நிரந்தரமில்லை. இதற்கு மாறாக நிலைவாழ்வு தருகின்ற இயற்கை உணவுகளை நாம் பெறுவதற்கு முயற்சிப்போம். செல்வத்தை ஒதுக்கி நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்வோம் என்னும் நற்செய்தியின் சிந்தனையில் நம் வாழ்வின் அவசரங்களையும் ஆபத்துக்களையும் ஒதுக்கி இறைவனையும் இறைவன் தரும் நிலை வாழ்வையும் பெற்றுக் கொள்ள முயலுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.