Thursday, March 30, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு - (ஆண்டு- A) - 02-04-2023 - ஞாயிற்றுக்கிழமை



🌱விவிலிய விதைகள்🌱
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(02 ஏப்ரல் 2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: எசாயா 50: 4-7
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2: 6-11
நற்செய்தி:  மத்தேயு 26: 14- 27: 66

பயணமும் பாடுகளும்

        ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்வதற்காக ஒரு பேருந்தில் பலரும் பயணம் செய்தார்கள். அதில் ஊரில் நல்லவர்
என்று பெயர் பெற்ற ஒரு பெரியவரும், நன்மையே செய்யாத முரடன் ஒருவனும் இருந்தார்கள். பேருந்து நெடுந்தூரம் சென்றதும் திடீரென இடியிடித்து மழை பெய்யத் தொடங்கியது. மரமொன்று வீழ்ந்து முறிந்து பாதை தடைப்பட்டு விட்டது. மழையும் விடவில்லை, அப்போது ஊரில் நல்லவர் கூறினார். இங்கு யாரோ பாவம் செய்தவன் இருக்கிறான் அதனால் தான் இந்த துன்பங்கள் நேர்கின்றது. அதனால் எல்லோரும் அதோ தூரத்தில் இருக்கும் மரத்தை நோக்கி ஒவ்வொருவராக இறங்கிச் சென்று தொட்டுவிட்டு வாருங்கள். யார் பாவம் செய்தவனோ அவனை ஆண்டவன் தண்டிக்கட்டும் என்றார், எல்லோரும் சம்மதித்தனர். அவர்கள் எல்லோரும் அந்த முரடன் மீதுதான் சந்தேகம் கொண்டனர் ஒவ்வொருவராக வண்டியிலிருந்து இறங்கி மரத்தை தொட்டுவிட்டு வந்தனர், எதுவும் நடக்கவில்லை இறுதியாக மிஞ்சியது முரடனும் நல்லவருமே. இப்போது முரட்டு மனிதனின் முறை, நல்லவர்மீது யாரும் சந்தேகப்படவில்லை. அந்த ஏழைமுரடன் வண்டியைவிட்டு இறங்கிச் சென்று மரத்தை தொட்டபோது இடிஇடித்து வானத்திலிருந்து பெரும் மின்னலோடு அந்த இடம்நோக்கி விழுந்தது, அவன் திரும்பிப் பார்த்தான். பேருந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது அவன்மட்டும் உயிர்தப்பியிருந்தான். அப்படியென்றால் அவன்மட்டுமே நல்லவன். நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தல்லவா? இன்றைய இறைவார்த்தை வழிபாடும் நமக்கு இதைத்தான் உணர்த்துகிறது. இயேசு நமக்கு விடுதலை தர வந்த அரசர் என யூதர்கள் நினைத்து அவரோடு எருசலேமுக்குள் பயணித்தனர். ஆனால் அவரது பயணமோ மீட்பை தரும் பாடுகளுக்கானது. நம் வாழ்வின் பயணமும் பாடுகளுக்கானது அதுவே மீட்பு என்னும் புதுவாழ்வுக்கானது என்பதை உணர்ந்து வாழ இன்றைய வழிபாடு அழைப்பு தருகிறது. தொடக்கத்தில் தவக்காலத்தின் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமைதான் பாடுகளின் ஞாயிறாக நினைவு கூறப்பட்டது. ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு பின்பு தவக்காலத்தின் ஆறாவது ஞாயிற்றுக்கிழமை பாடுகளின் ஞாயிறாக நினைவு கூறப்படுகிறது. அதுவே இன்று குருத்து ஞாயிராகவும், புனித வாரத்தின் தொடக்கமாகவும் அமைகிறது. இன்றைய திருவழிபாடு இயேசுவின் பயணத்தையும் பாடுகளையும் தியானிக்க நமக்கு அழைப்பு தருகிறது. குருத்தோலை மந்திரித்தல், பவனி, 'ஓசன்னா' கீதம் என இவையனைத்தும் இயேசு கழுதை மீது உட்கார்ந்து எருசலேம் நகருக்குள் சென்ற பயணத்தையும், இன்றைய இறைவார்த்தை வழிபாடு குறிப்பாக நற்செய்தி வாசகம் அவரின் பாடுகளையும் நம் உள்ளங்களில் நினைவுபடுத்துகிறது.

இயேசுவின் பயணம்

இயேசுவின் பயணத்தை பற்றி நன்கு அறிந்து கொள்ள அவர் பயணத்தோடு தொடர்புடையவைகளை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

பெத்தானியா: இது இறைவனின் கொடையின் வீடு என்னும் பொருள்படும். இயேசு தன்னுடைய பணி வாழ்வின் இறுதி நாட்களில் இரவில் அதிகம் பெத்தானியாவில் தங்கியிருக்கிறார். இவ்விடம் ஆறுதலின் இடமாகவும் திகழ்கிறது. இயேசுவின் விண்ணேற்றமும் இறுதியில் இங்கு தான் நிகழ்ந்தது (லூக் 24:50). இங்கிருந்து தான் இயேசு தன்னுடைய பயணத்தை துவங்குகிறார்.

எருசலேம்: இது அமைதியின் நகர் என்று பொருள்படும். ஆனால் வரலாற்றில் அதிகமான வன்முறை இங்கு நடந்திருக்கிறது. இயேசுவின் காலத்திலும் இது ஒரு அமைதியற்ற நகராகவே இருந்தது. அதனால்தான் இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்தபோது அதை பார்த்து அழுதார். இயேசுவின் இந்தப் பயணம் அவர் முன்னறிவித்தவாறு (மாற்கு 10:33) எருசலேமில் மீட்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பாடுகளை ஏற்கப்போவதை நோக்கி அமைகிறது.

கழுதை: இயேசு கழுதைக் குட்டியின்மீது அமர்ந்து செல்லும் செயல் இயேசுவின் தாழ்மையைக் குறிக்கும் ஒரு செயல் அல்ல. கீழை நாடுகளில் கழுதை மதிப்பிற்குரிய ஒரு விலங்கு. யூதத் தலைவராகிய யாயிரின் புதல்வர்கள் கோவேறு கழுதைகளின் மேல் பயணம் செய்தனர் (நீத 10:4). அரசு ஆலோசகரான அரித்தோபலும் (2 சாமு 17:23) சவுல் அரசரின் பேரன் மெபிபோசேத்தும் கழுதையின் மீது ஏறிச் சென்றனர் (2 சாமு 19:26). அன்றைய நாளில் போருக்கு போகும் போது அரசர் குதிரை மீது ஏறி செல்வார் மாறாக அமைதி விரும்பி வரும் போது கழுதை மீது ஏறி வருவார். (ஏசா 3:1-3, 1 அரச 4:26). இவ்வாறு இயேசு இச்செயலின் வழியாக தாம் ஒரு நாட்டை விடுதலைக்காய் போரிடச் செல்லும் அரசர் அல்ல; மாறாக வெற்றி என்னும் மீட்பை அருள வந்திருக்கும் இறைமைந்தன் என்பதை காட்டுகின்றார்.

குருத்தோலை: இது வெற்றியின் சின்னமாக கருதப்பட்டது. கி.மு. 164 ஆம் ஆண்டு யூதா மக்கபே எருசலேமை விடுவித்து ஆலயத்தைத் தூய்மைப்படுத்திய நேரத்தில் மக்கள் தழைகளால் அழகு செய்யப்பட்ட கழிகளையும் பசுங்கிளைகளையும் வெற்றியின் சின்னமாகிய குருத்தோலைகளையும் ஏந்திச் சென்றனர் (2 மக் 10:7). யூதாவின் உடன்பிறப்பான சீமோன் கி.மு. 142 இல் பகைவரை அழித்து, எருசலேமுக்கு விடுதலை வழங்கியபோது புகழ்ப்பாக்களையும் நன்றிப்பாக்களையும் பாடிக் கொண்டும் குருத்தோலைகளை பிடித்துக் கொண்டும் இசைக்கருவிகளான யாழ், கைத்தாளம், சுரமண்டலம் ஆகியவற்றை மீட்டிக் கொண்டும் கோட்டைக்குள் நுழைந்தார்கள் (1 மக் 13:51). இவ்வாறு இஸ்ரயேல் மக்களுக்குக் குருத்தோலை, விடுதலையின் வெற்றியின் சின்னமாய் இருந்தது. குருத்தோலைகளை பிடித்துக் கொண்டு இயேசுவை வரவேற்றபோது விடுதலை உணர்வுகள் அவர்களுக்குள் நிரம்பி நின்றன.

ஓசன்னா: எருசலேமில் இயேசுவின் வெற்றிப் பவனியின் போது மக்கள் 118 ஆம் திருப்பாடலை குறிப்பாக 25-26 வசனங்களை பாடினர். ஓசன்னா என்னும் சொல் இப்பாடலில் சிறப்பிடம் பெறுகிறது. ஓசன்னா என்னும் அரமேய-எபிரேயச் சொல்லுக்கு விடுதலை தாரும் - வெற்றி தாரும் என்பது பொருள். காலப்போக்கில் இச்சொல் ஒரு வாழ்த்து சொல்லாக பயன்படுத்தப்பட்டாலும் அதன் முதல் பொருள் விடுதலை தாரும் அல்லது எங்களுக்கு விடுதலை என்பதாகும்.

        உரோமை பேரரசின் கீழ் பல்வேறு வழிகளில் அடிமைப்பட்டு வந்த யூத மக்கள் உரோமை பேரரசை வீழ்த்தி தங்களை மீட்க ஓர் அரசர் வருவார் என்று எதிர்பார்த்து இருந்தனர் அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தி நோயாளிகளை குணமாக்கிய இயேசுதான் தாங்கள் எதிர்பார்த்த மெசியா என நம்பி அவரை கழுதையின் மீது உட்கார வைத்து விடுதலையை எடுத்துரைக்கும் ஓசன்னா கீதத்தை முழங்கி எருசலேமுக்குள் அழைத்து சென்றனர். ஆனால் இயேசுவின் கழுதை பயணம் சிலுவை பயணத்திற்கான அடித்தளம் என்பதை அவர்கள் உணரவில்லை. இயேசு எருசலேமில் நுழைவதற்கு முன்பு இலாசரை உயிர்ப்பிப்பதையும், அதை கண்ட பலரும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வதையும் வாசிக்கின்றோம். இது பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் அவரை கொல்ல முயற்சிகளை எடுத்தார்கள். இதை இயேசு நன்கு அறிந்திருந்தும் எருசலேமை நோக்கி பாடுகளுக்காக பயணத்தை துவங்கினார். இயேசுவின் இந்தப் பயணம் பாடுகளை ஏற்று மீட்பு என்னும் இலக்கை நிறைவேற்றுவதற்கு ஓர் ஆரம்ப புள்ளியாகும்.

இயேசுவின் பாடுகள்

        இன்றைய இறைவார்த்தை வழிபாடு இயேசுவின் பாடுகளை தியானிக்க அழைக்கிறது. நற்செய்தி வாசகம் அவரின் இரண்டு விதமான பாடுகளை எடுத்துரைக்கின்றது. இயேசுவின் அநியாய தீர்ப்பு, கனமான சிலுவை, கன்னத்தில் அறை, சாட்டையடி, முள்முடி, விலாவில் ஈட்டி, கீழே விழுதல் மற்றும் சிலுவையில் அறைந்த ஆணிகள் என்னும் உடல் துன்பங்கள் அதாவது பாடுகள். அதுமட்டுமல்லாது இயேசு உள்ளத்து பாடுகளையும் ஏற்றார், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்து பாடிய மக்கள் (மத் 21:9), பிலாத்திடம் "சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!" என்று கூறியதும் (மத் 27:22). மேலும் தன் நண்பர்களாக கருதிய சீடர்களுள் யூதாஸ் பணத்திற்காக முத்தமிட்டு காட்டிக் கொடுத்ததும் (மத் 27:48), பேதுரு மூன்று முறை அவரை மறுதலித்ததும் (மத் 26:70) இயேசு எண்ணற்ற உள்ளத்துப் பாடுகளையும் அனுபவித்தார் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.

பாடுகளுக்கான பயணம்

        இயேசு மகிழ்வோடு எருசலேம் நகருக்குள் பயணித்ததை போல நாமும் இன்று இந்த உலகில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த பயணத்தில் நமக்கு பாடுகளே வேண்டாம் என்னும் உணர்வை கொண்டிருக்கின்றோம். இயேசுவின் பயணமே பாடுகளுக்காகதான், அவரது பாடுகள் மக்களின் மீட்பிற்காக என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால்தான் பயணத்தையும் பாடுகளையும் இயேசு மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். ஆனால், இயேசுவைப் பின்பற்றிய மக்கள் அவரின் பயணத்தில் மட்டுமே நிலைத்திருக்க விரும்பினார்கள், பாடுகளுக்குள் செல்ல விரும்பவில்லை. இன்று நம்மில் பலரும் உலக ஆசைகளுக்குள் மூழ்கி பாடுகளை வெறுத்து பயணத்தில் மட்டுமே வாழ ஆசை கொள்கின்றோம். பயணம் நம்மை நேரடியாக மீட்பை நோக்கி அழைத்துச் செல்வதில்லை. பயணம் பாடுகளுக்காகவும் பாடுகள் மீட்பு என்னும் புது வாழ்விற்காகவும் என்பதை உணர்ந்து கொள்ள அழைப்பு பெறுகின்றோம். இயேசு நம்முடைய துன்பத்தை அழிப்பதற்காக பாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக நாம் துன்பத்தை வாழ்க்கையில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறியவும், அதுவே வாழ்வின் வெற்றிக்கான படிக்கல் என்பதை உணர வேண்டும் என்பதற்காகவே செய்தருளினார். அதனால்தான் “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத்தேயு 16:24) என்றார். துன்பத்தின் வழியே வெற்றி கிடைக்கும். பாடுகள் இயேசுவின் வாழ்வில் கடைசி வார்த்தைகள் அல்ல மாறாக அது புனித வாரத்தின் முதல் வார்த்தை அதனுடைய நிறைவு அவரின் உயிர்ப்பில் இருக்கிறது. நம்மில் பலரது வாழ்வும் பாடுகளை நோக்கி பயணிக்கலாம், ஆனால் அதன் நிறைவு நம் ஒவ்வொருவருக்கும் உயிர்ப்பு என்னும் புது வாழ்வை தரும். நாம் எவ்வளவு கீழே விழுகிறோம் என்பது முக்கியமல்ல அதன்பின் எப்படி மேலே எழுகிறோம் என்பதே முக்கியம். கிறிஸ்தவர்களின் பாடுகளுக்கு உயிர்ப்பு என்னும் புதுவாழ்வு நிச்சயம் உண்டு என்பதை இயேசுவின் உயிர்ப்பை நோக்கிய அவரின் பயணமும் பாடுகளும் எடுத்துரைக்கிறது. குருத்து ஞாயிறு என்னும் பாடுகளின் ஞாயிறு கிறிஸ்தவர்களின் பயணத்திற்கும் பாடுகளுக்கும் உயிர்ப்பு என்னும் நம்பிக்கையை தருகிறது என்பதை உணர்ந்து கொள்வோம். பாடுகளின் பயணத்திற்கு தயாராவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.