Friday, December 10, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு - ( ஆண்டு- C) ----- 12-12-2021- ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம் : 

                 செப்பனியா  3: 14-17

இரண்டாம் வாசகம் : 

                 பிலிப்பியர் 4: 4-7

நற்செய்தி:-

      லூக்கா 3: 10-18

நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
(மகிழ்ச்சி தரும் மூன்று நற்செய்தியின் மதிப்பீடுகள்)


கிராமம் ஒன்றில் வயதான முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரை பார்த்தாலே எல்லோருக்கும் பயம், யாரும் அவர் அருகில் வரக் கூட மாட்டார்கள் ஏனென்றால் அவர் எப்பொழுதும் யாரையாவது மற்றும் எதையாவது குறை கூறிக் கொண்டே இருப்பார், அவர் வார்த்தைகள் எல்லாம் உள்ளத்தை பாதிக்கக் கூடியதாக இருக்கும். எனவே, அந்த ஊரில் யாருக்கும் அவரை பிடிக்காது இதனால் அவரைச் சார்ந்தவர்கள் அதிகமாக கஷ்டப்பட்டார்கள். ஒருநாள் அவர் தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடினார், அன்று ஊரெல்லாம் இவரைப் பற்றிய பேச்சு. இந்த முதியவர் இன்று யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் குறை கூறவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இதையறிந்த ஊர் மக்களுக்கு ஒரே ஆச்சரியம், யோசித்தார்கள், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அந்த முதியவரிடம் கேட்டார்கள். அதற்கு அந்த முதியவர் ஊர் மக்களிடம், "நான் கடந்த 80 ஆண்டுகளாக என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை தேடிக்கொண்டே இருந்தேன். அது கிடைக்கவில்லை, அதனால் இனி தேடுவதை நிறுத்தி விட வேண்டும் என்று நினைத்தேன், எனது மகிழ்ச்சிக்கான தேடலை நிறுத்தினேன், இன்று மகிழ்ச்சியாக இருக்கின்றேன்" என்றார். இந்த முதியவர் மகிழ்ச்சியை தன்னிலே தேடாமல், அவர் பார்க்கின்ற மனிதர்களிடத்திலும் மற்றும் சமுதாயத்திலும் தேடிக்கொண்டிருந்தார். ஒரு கால கட்டத்தில் அவர் அதை நிறுத்துகின்ற பொழுது தன்னிலே மகிழ்ச்சி இருப்பதை உணர்கின்றார். இது தான் உண்மை, இன்று நாம் எல்லோரும் மகிழ்ச்சியை வெளியே தேடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், மகிழ்ச்சி நம்மில் இருக்கிறது, நம்மோடு இருக்கின்றது, இதை நாம் தான் உருவாக்க வேண்டும். மகிழ்ச்சி என்பது கானல் நீரைப் போல அதைத்தேடி நாம் வெளியே சென்றோமென்றால் அது நம்மை விட்டு விலகி தான் செல்லும். கிறிஸ்தவர்களாகிய நம்மில் மகிழ்ச்சி இருக்கிறது, அது கிறிஸ்து தரும் மகிழ்ச்சி, அவரது பிறப்பு, வாழ்வு, இறப்பு மற்றும் உயிர்ப்பு தருகின்ற மகிழ்ச்சி. திருவருகைக் காலத்தில் கிறிஸ்தவத்தில் மற்றும் கிறிஸ்துவின் பிறப்பில் மகிழ்ச்சியை நாம் உணரவும், இந்த மகிழ்ச்சி என்றும் நிலையாய் இருக்க நம்மை நாமே தயாரிக்கவும் இன்றைய திருவழிபாட்டின் வழியாக அழைக்கப்படுகின்றோம்.

கத்தோலிக்கத் திருஅவை ஒவ்வொரு ஆண்டும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை மகிழ்ச்சியின் ஞாயிறாக கொண்டாடுகிறது. "Gaudete" ('Rejoice' in English) என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து மகிழ்ச்சி என்னும் வார்த்தை வருகின்றது. நவம்பர் மாதம் 11-ஆம் தேதி புனித மார்ட்டின் அவர்களின் திருவிழாவிலிருந்து சரியாக நாற்பது நாட்கள் திருவருகைக் கால நோன்பு கடைபிடித்ததின் நிறைவாக இந்த மகிழ்ச்சியின் ஞாயிறானது கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்தவத்தின் மற்றும் நமக்காக மீட்பர் ஒருவர் பிறக்கிறார் என்னும் கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சி. அதனால் தான் இயேசுவின் பிறப்பில் வானதூதர் இடையர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" (லூக்கா 2:10,11) என்றார்.

"மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி". (செப்பனியா 3: 14) என இன்றைய முதல் வாசகத்தில் செப்பனியா இறைவாக்கினர் இஸ்ரயேல் மக்களிடம் ஆண்டவராகிய இறைவன் நம் மத்தியிலே இருக்கின்றார். எனவே எதற்கும் அஞ்சாமல் மகிழ்வோடு இருங்கள் என்கின்றார். இது வரவிருக்கும் இறைவன் நமக்காக இருக்கின்றார் என்பதை நினைத்து நாம் மகிழ்வு கொள்ள வேண்டும் என்பதை காட்டுகின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார் பிலிப்பியருக்கு "ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்" (பிலிப்பியர் 4: 4)என்று கூறுகின்றார். எனவே "ஆர்ப்பரித்து அக்களியுங்கள்" என்னும் இன்றைய பதிலுரை பாடலுக்கு ஏற்றவாறு இயேசுவின் பிறப்பை மற்றும் அவர் நம்மில் வாழுகின்றார் என்னும் இந்த கிறிஸ்தவ வாழ்வை நினைத்து மகிழ்ந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

கிறிஸ்தவர்களிடத்தில் எதிர்நோக்கு மற்றும் தயாரிப்பை வலியுறுத்தும் இன்றைய திருவருகைக்காலத்தில் கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியில் நிலைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விகளுக்கு இன்றைய நற்செய்தி பதில் அளிக்கின்றது. இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானிடம் மூன்று விதமான மனிதர்கள் (மக்கள் கூட்டத்தினர், வரிதண்டுவோர் மற்றும் படைவீரர்) "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" (லூக்கா 3:10) என்னும் ஒரே கேள்வியைக் கேட்கின்றார்கள். இதற்கு அவர் மூன்று விதமான நற்செய்தியின் மதிப்பீடுகளை எடுத்துரைக்கின்றார்.
1. பகிர்வு

மக்கள் கூட்டத்தினர் கேட்ட பொழுது திருமுழுக்கு யோவான், “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” (லூக்கா 3:11) என்றார். இது பகிர்வு என்னும் நற்செய்தியின் மதிப்பீட்டை அவர் எடுத்துரைப்பதை காட்டுகிறது. நமது அன்றாட வாழ்விலும் நம்மால் முடிந்தவரை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்கின்ற பொழுது, நம்முடைய உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். இதை நாமும் நமது வாழ்க்கையில் உணர்ந்திருப்போம்.
2. நேர்மை

வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர். அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” (லூக்கா 3:12,13) என்றார். இது நேர்மையானவர்களாக வாழ்வதற்கு தருகின்ற அழைப்பாகும். நேர்மையும், உண்மையும் நம்மை கிறிஸ்துவின் வழியில் வாழ வைக்கும். கிறிஸ்துவின் வழி- மகிழ்வின் வழி. வரிதண்டுபவரான சக்கேயுவை இயேசு அழைத்த போதும், நேர்மையின் வழியில் வாழ்வதற்கு தான் அழைப்பு தருகின்றார். நேர்மையின் மகிழ்வில், தான் பெற்றதிலிருந்து பல மடங்காக திரும்ப கொடுக்கின்றார்.

3. நீதி

படைவீரரும் திருமுழுக்கு யோவானை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” (லூக்கா 3:14) என்றார். இது எவரையும் அநீதிக்கு உட்படுத்தாமல் நீதியின் பொருட்டு வாழ்வதற்கு அழைப்பு தருகின்றது. இதைத் தான் மலைப்பொழிவில், "நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர் (மத்தேயு 5:6) என்கிறார், இங்கு நிறைவு மகிழ்வாகும்.
               திருமுழுக்கு யோவான் தரும் இந்த மூன்று நற்செய்தியின் மதிப்பீடுகளும் கிறிஸ்தவ வாழ்வின் மகிழ்வை நமக்கு காட்டுபவை. கிறிஸ்தவ வாழ்வின் முழுமையான மகிழ்வை நம்முடைய உள்ளங்களில் பெறுவதற்கு, இன்று நாம் என்ன செய்ய வேண்டும்? என்னும் அதே கேள்வியை நம்மில் எழுப்புகின்ற போது, நாமும் நற்செய்தியின் மதிப்பிடுகளான பகிர்வு, நேர்மை மற்றும் நீதி இந்த மூன்றையும் நம்முடைய வாழ்க்கையில் வாழ வேண்டும். அப்போது கிறிஸ்துவின் பிறப்பு நமது வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சியை தரும்.

   இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

அன்புடன்,

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF

வீடியோவாக பார்க்க...

                           


https://youtu.be/BZnTwZLmwq4