Thursday, January 20, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) ----- 23-01-2022- ஞாயிற்றுக்கிழமை


🌱விவிலிய விதைகள்🌱

 பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

முதல் வாசகம்: நெகேமியா 8: 2-4a, 5-6, 8-10

இரண்டாம் வாசகம்: கொரிந்தியர் 12: 12-30

நற்செய்தி:  லூக்கா 1: 1-4; 4: 14-21


 தூய ஆவியில் வாழ்வு

 
                 விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் உருளைக்கிழங்கு பயிர் செய்து, அதை ஒவ்வொரு முறையும் தன்னுடைய மாட்டு வண்டியில் சந்தைக்கு எடுத்துச் சென்று வியாபாரம் செய்கிறார். திடீரென்று அவருடைய நிலத்தின் ஒரு பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதாக கண்டறிகிறார். எண்ணெய் கிணற்றின் மூலமாக அவர் மிகப் பெரிய பணக்காரராக மாறுகிறார். மிக ஆடம்பரமான சொகுசு கார் ஒன்றையும் வாங்குகிறார். மீதமுள்ள நிலத்தில் தொடர்ந்து அவர் உருளைக்கிழங்கு பயிர் செய்து அதை தன்னுடைய காரில் சந்தைக்கு எடுத்து செல்கிறார். ஆனால் அவர் தன்னுடைய காரை எடுத்து சென்ற விதம் கண்டு சந்தையில் மக்கள் அனைவரும் அவரைப் பார்த்து சிரித்தார்கள். ஏனென்றால் அவருடைய சொகுசு காரையும் அவரது மாட்டு வண்டியை இழுத்துச் சென்ற அதே மாடுகள் இழுத்துச் சென்றன. பணத்தால் தனது பழைய நிலையிலிருந்து மாறி கார் வாங்கிய அந்த மனிதனுக்கு பழைய மாடுகளை விடவும் தெரியவில்லை, புதிய காரை பயன்படுத்தவும் தெரியவில்லை. அதனால் தான் அவன் காரை இன்னும் மாடுகள் இழுத்து செல்கின்றன. கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, பல வேளைகளில் நமது கிறிஸ்தவ வாழ்வும் இந்த விவசாய பணக்காரன் போல தான் இருக்கிறது. "யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்".(1 கொரிந்தியர் 12:13) என்னும் இன்றைய இரண்டாம் வாசகத்தின் அடித்தளத்தில், நாம் தூய ஆவியால் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவின் உறுப்புகளாக இருக்கின்றோம் என்பதை மறந்து வாழ்கின்றோம். தூய ஆவியால் இயங்கும் கிறிஸ்து என்னும் புது கார் நமக்கு கிடைத்த பிறகும் கூட, நமது பழைய மனித பலவீனங்களை கொண்டே அந்த கிறிஸ்து என்னும் காரை இயக்க முற்படுகின்றோம். அர்த்தமற்ற வாழ்வை வாழுகின்றோம்.

"உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார்" (1 கொரிந்தியர் 12:12). என்பதை உணர்ந்து, "ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்" (1 கொரிந்தியர் 12:11). என நமது வாழ்வு தூய ஆவியில் ஆட்கொள்ளப்பட்ட வாழ்வாக அமைய வேண்டும். இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, பாலைவனத்தில் நாற்பது நாட்கள் நோன்பிருக்க மற்றும் சாத்தானால் சோதிக்கப்பட அழைத்து செல்லப்பட்டு அதில் வெற்றியும் பெற்று தூய ஆவியின் வல்லமை உடையவராக கலிலேயாவுக்கு திரும்பிப் போனார் (லூக்கா 4:14) என்னும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடித்தளத்தில் இயேசுவினுடைய பணி வாழ்வு முழுவதும் தூய ஆவி நிறைந்திருந்தார். நம் அனைவருக்கும் அவரே தூய ஆவியில் வாழ்வுக்கு முன் உதாரணமாக இருக்கிறார். ஆவியிலும் உண்மையிலும் வாழ ஒரு மனிதருக்கு இயேசுவே சிறந்த எடுத்துக்காட்டு.

1. தூய ஆவி அவரில் தங்கியிருக்கும் என்னும் வாக்குறுதி.

 பழைய ஏற்பாட்டில் உங்களுக்காக மெசியா வருவார் என்னும் வாக்குறுதியில், மெசியாவில் தூய ஆவி நிறைந்திருப்பார் அதாவது அவர் மேல் இருப்பார் என்னும் வாக்குறுதியும் தரப்பட்டிருக்கிறது. "ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு — இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்." (எசாயா 11:2) ஆக மெசியாவின் வாழ்வு தூய ஆவியில் நிறைந்திருக்கும் என்பது பழைய ஏற்பாட்டிலே முன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 2. தூய ஆவியில் பிறப்பு
 
 இயேசுவின் பிறப்பும் தூய ஆவியால் நிகழ்வதை பார்க்கின்றோம். அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை கூறியபொழுது, “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்". (லூக்கா 1:35) 
 
3. பணிவாழ்வில் தூய ஆவி

இயேசுவின் பணி வாழ்வு முழுவதும் தூய ஆவியில் நிறைந்திருந்தார்.(யோவான் 3:34) தொடக்கத்தில் திருமுழுக்கு பெற்ற பொழுது தூய ஆவி இறங்கி வருவதும் (மத்தேயு 3:16), அதே ஆவி அவரை பாலைவனத்துக்கு அழைத்துச் செல்வதும் (லூக்கா 4:1), பாலைவன சோதனைக்குப் பிறகு அவர் தூய ஆவியின் வல்லமை உடையவராய் கலிலேயாவுக்கு திரும்பி செல்வதும் (லூக்கா 4:14) மற்றும் தொழுகைக் கூடத்தில் "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்" (லூக்கா 4:18) என பறைசாற்றுவதும் மற்றும் தூய ஆவியில் தீய ஆவிகளை விரட்டுவதும் ( மத்தேயு 12:22-32) இவருடைய பணி வாழ்வில் தூய ஆவி நிறைந்திருந்ததை எடுத்துரைக்கிறது. இன்னும் தனது பணி வாழ்வில் பல தருணங்களில் இயேசு தனக்கும் தூய ஆவியாருக்கும் உண்டான உறவைப் பற்றியும், உங்களுக்காக துணையாளராம் தூய ஆவியை அனுப்புவதாகவும் வாக்களித்திருக்கிறார் (யோவான் 14: 15-31).

4. இயேசுவின் றப்பில் - உயிர்ப்பில் தூய ஆவி

 இறைமகன் இயேசு கிறிஸ்து தான் இறக்கும் பொழுதும் மற்றும் அவரது உயிர்ப்பில் உம் தூய ஆவி நிறைந்திருந்திருக்கிறது. "கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே"(எபிரேயர் 9:14). ஆக இயேசு சிலுவையில் இருந்தபொழுதும் தூய ஆவி அவரோடு இருந்தது. இயேசுவின் உயிர்ப்பின் போதும் தூய ஆவி உடனிருந்ததை பார்க்கின்றோம்.(உரோமையர் 1:4, 8:11)

               இயேசுவின் வாழ்வு கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாழ்வு , ஏனெனில் அது தூய ஆவியால் நிறைந்திருந்தது. ஆவியின் வல்லமையில் ஜெபித்த வாழ்வு, தந்தையின் குரலுக்கு செவிகொடுத்து, எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, இறையாட்சியை அறிவித்தார். ஆவியில் நம் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர் இறைமகன் இயேசு. தூய ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு வாழப்படும் வாழ்வு தொடக்கம் முதல் இறுதி வரை கிறிஸ்துவில் இணைந்த வாழ்வாக அமைகிறது. அன்று நாம் குழந்தையாக இருந்தபோது திருமுழுக்கின் வழியாக தூய ஆவியில் பிறப்பெடுத்தோம். உறுதிப்பூசுதல் வழியாக தூய ஆவியில் உறுதிபடுத்தப்பட்டோம். இன்றும் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியின் ஆலயங்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் நாம் பாவத்திற்காக மன்னிப்பு கேட்கின்ற பொழுது பாவசங்கீர்த்தனத்தின் வழியாக மீண்டும் நாம் தூய ஆவியில் உறுதிபடுத்தப்படுகின்றோம். "இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்". (உரோமையர் 8:11) கிறிஸ்துவிலிருந்து இறைத்திட்டத்தை நிறைவேற்றிய தூய ஆவி நம் உள்ளும் இருக்கின்றார். உலக ஆசைகளுக்கு மற்றும் மாயைகளுக்கு அடிமை ஆகாமல், இறைவன் நமக்குக் கொடையாக கொடுத்திருக்கின்ற தூய ஆவியை உணர்ந்து, கிறிஸ்து என்னும் உடலின் உறுப்புகளாய் வாழ்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


அன்புடன்

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF