🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 11-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(18 ஜூன் 2023, ஞாயிறு)
வழங்குபவர்
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை
முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 19: 2-6a
இரண்டாம் வாசகம்: உரோமையர் 5: 6-11
நற்செய்தி: மத்தேயு 9: 36- 10: 8
அழைப்பின் மேன்மை...
பட்டம் விட்டுக் கொண்டிருந்த தன் மகளைப் பார்த்து அப்பா, "இந்த நூலின் வேலை என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த மகளோ, "இந்த நூல்தான் இந்த பட்டத்தின் சுதந்திரத்தையே தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறது" என்று சொன்னாராம். அதற்கு அப்பா, "இல்லை இந்த நூல் தான் பட்டத்தை பறக்க வைத்துக் கொண்டிருக்கிறது" என்று சொல்லிவிட்டு ஒரு கத்தரிக்கோல் எடுத்து அந்த நூலை வெட்டி விட்டாராம். இங்கும் அங்குமாக மேலே பறந்த பட்டம், சிறிது நேரத்தில் கீழே விழுந்து விட்டதாம். இறைவனால் அழைக்கப்பட்டு இறைவனோடு இருக்கின்ற போதும் நாம் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருப்பது போலவும், திருப்பலிக்கும், திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கும் செல்ல கட்டாயப்படுத்தப்படுவது போலவும் நமக்கு தெரிந்தாலும், உண்மையாகவே நாம் வாழ்வது இறைவனின் அழைப்பிலும் அவ்வழைப்பு நமக்கு காட்டுகின்ற வழிகாட்டுதலிலும் தான் இருக்கிறது என்பதை உணர வைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. இன்று பொதுக்காலத்தின் பதினொன்றாவது ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடுகின்றோம்.
இன்றைய நற்செய்தி வாசகம்
1. பரிவு கொண்டார்.
2. அழைத்தார்
3. அதிகாரம் தந்தார்.
4. அனுப்பினார்
என்னும் இயேசுவின் நான்கு செயல்களை சுட்டிக்காட்டுகிறது. அச்செயல்பாடுகள் இயேசு தரும் அழைப்பின் மேன்மைகளை உணர்ந்திட நம்மை அழைக்கின்றது.
1. பரிவு கொண்டார் (இயேசு காட்டும் பரிவு)
வழிகாட்டியில்லாத அதாவது ஆயனில்லாத ஆடுகளைப் போல இருந்த மக்களை பார்த்து இயேசு பரிவு கொள்கிறார். இது ஒர் உள்ளார்ந்த இறை இரக்கமாகும். திருவிவிலியம் இறைவனை இரக்கம் மிகுந்தவராக அதாவது பரிவு கொள்பவராக சுட்டிக் காட்டுகிறது. பழைய ஏற்பாட்டில் எகிப்தில் மக்கள் படும் வேதனையை என் கண்களால் கண்டேன் (விப 3:7) என இறைவன் அவர்கள் மீது பரிவு கொண்டு மோசேயை அழைக்கிறார். எகிப்திய விடுதலைக்குப் பிறகும் பாலைவனத்தில் அவர்களுக்கு உணவும், தண்ணீரும் அளித்து, செங்கடலை இரண்டாகப் பிரித்து எகிப்திய படைகளிலிருந்து மீட்பது அவர் கொண்ட இரக்கத்தின் அடையாளமாகும். புதிய ஏற்பாட்டிலும் இயேசு பல இடங்களில் மக்கள் மீது பரிவு கொண்டு எண்ணற்ற புதுமைகளையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதை பார்க்கிறோம். லூக்கா 7:13-ல் கைம்பெண்ணின் ஒரே மகன் இறந்து பாடையில் தூக்கிக் கொண்டு வந்த போது இயேசு அப்பெண்ணின் மீது பரிவு கொண்டு அழாதே என்று கூறி இறந்தவனை உயிர் பெற செய்கிறார். மாற்கு 1:40-ல் இயேசுவிடம் தொழுநோயாளர் ஒருவர் வந்து நீ விரும்பினால் என் நோயை குணமாக்கும் என்று கேட்க, இயேசு அவர் மீது பரிவு கொண்டு அவரை தொட்டு அவரது தொழுநோயை குணமாக்குவதை பார்க்கின்றோம். மத்தேயு 20:34 -ல் பார்வையற்ற இருவர் இயேசுவை தேடி வந்த போது அவர்கள் மீதும் பரிவு கொண்டு இயேசு பார்வை தருகிறார். இவ்வாறு இயேசு காட்டிய இரக்கத்தை அதாவது பரிவை நாமும் ஒருவர் மற்றவர் மீது காட்ட அழைப்பு பெறுகின்றோம். நம்மோடு உடனிருக்கின்ற, உறவாடுகின்ற மற்றும் சமுதாயத்தில் நாம் காண்கின்ற ஏழைகள், எளியவர், ஆதரவற்றோர், ஒடுக்கப்பட்டோர் என யாவரிடத்திலும் சிறிது கருணை உள்ளத்தோடு பரிவு காட்டி வாழ்வோம். "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்." (மத்தேயு 5:7) என மலைப்பொழிவில் இயேசு எடுத்துரைப்பதற்கு ஏற்ப நாமும் இரக்கமுடையவர்களாக வாழ்வோம்.
2. அழைத்தார் (உடனிருக்க தந்த அழைப்பு)
இயேசுவின் இரண்டாவது செயலாக சீடர்களை அழைப்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. இயேசுவை பலர் பின்பற்றி இருந்தாலும் அவர் பன்னிருவருக்கு மட்டுமே அவரோடு இருக்க மற்றும் அவர் பணி செய்ய அழைப்பு கொடுப்பதை பார்க்கின்றோம். பன்னிரண்டு என்பது இஸ்ராயேல் மக்களின் பன்னிரு குலங்களை குறிக்கலாம். குலத்திற்கு ஒருவராக பன்னிருவரை அழைத்ததாலே வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள் என சீடர்களுக்கு கூறுகிறார். இயேசு அழைத்தது பணக்காரர்களையோ பதவியில் இருப்பவர்களையோ அல்ல, மாறாக சாதாரண மீனவர்களாக மற்றும் வரிதண்டுபவர்களாக இருந்த தகுதியற்ற எளிய மனிதர்களையே அழைத்தார். இயேசு தகுதியற்றவர்களை அழைத்து அவரோடு உடனிருக்க செய்து தகுதியுள்ளவர்களாக மாற்றினார். இயேசு செல்லுமிடமெல்லாம் சீடர்கள் உடன் பயணித்தது பொதுத்தயாரிப்பாக இருந்தாலும், அவரோடு உடனிருந்தது அதாவது அவரோடு தங்கி அவர் சொல்வதை கேட்டது தனித் தயாரிப்பாக அமைகிறது. இங்கு உடனிருப்பு தாயரிப்பின்றி தகுதியற்றவர்களை தகுதியுள்ளவர்களாக மாற்றியிருக்கிறது. இறைவன் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். திருமுழுக்கு மற்றும் ஒவ்வொரு திருவருட்சாதனத்தின் வழியாக அழைப்பு கொடுத்த இறைவன் நாம் அவரோடு உடனிருக்க ஆவல் கொள்கிறார். கிறிஸ்தவ வாழ்வே இறைவனோடு உடனிருத்தல் தான், அப்போதுதான் அது முழுமை பெறுகிறது. நமது கிறிஸ்தவ வாழ்வு அவரோடு உடனிருக்கின்ற வாழ்வாக அமைகின்றதா? சிந்திப்போம். திருஅவை காட்டும் இறைவழியில் வாழ இறையழைப்பை ஏற்று அவரில் உடன் வாழ்வோம்.
3. அதிகாரம் தந்தார். (இயேசு தந்த கொடைகள்)
இயேசு அழைத்த சீடர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார். இங்கு அதிகாரம் என்பது வாழ்வின் நெறிமுறைகளாகும், எனவே தான் எங்கு செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார். பொதுவாக எந்த ஒரு குருவும் தன்னுடைய சீடர்களுக்கு தன்னிடமிருந்த எல்லா அதிகாரங்களையும் கொடுப்பதில்லை. ஆனால் இறைமகன் இயேசு கிறிஸ்து தான் செய்த எல்லா அற்புதங்களையும் அதாவது நற்செய்தியை பறைசாற்றவும், நோயாளிகளை குணமாக்கவும், பேய்களை ஓட்டவும், தொழுநோயாளிகளை குணமாக்கவும் மற்றும் இறந்தோரை உயிர்ப்பெற்றெழச் செய்யவும் அதிகாரம் தருகிறார். மேலும் கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள் என்கின்றார். இயேசுவின் இந்த மூன்றாவது செயல் அவர் நமக்கு கொடுத்திருக்கின்ற கொடைகளைப் பற்றிய தியானிக்க அழைப்பு தருகிறது. இன்றைக்கு கிறிஸ்தவர்களாக நமக்கும் இயேசு பல அதிகாரங்களையும் திறமைகளையும் மற்றும் திறன் கையும் கொடுத்திருக்கிறார். இதை பிறரோடு பகிர்ந்து வாழ்வதற்கு அழைப்பு தருகிறார். நம் திறமைகள் நம்மை மட்டும் வளர்த்தெடுக்காமல் பிறரையும் வளர்ப்பவையாக அமையட்டும். ஒரு தாலந்து பெற்றவர் மண்ணிலே அதை புதைத்து வைத்தது போல நாமும் நம் திறமைகளையும் மற்றும் அன்போடு உறவாட கொடுத்த உறவுகளையும் மண்ணோடு மண்ணாக புதைக்காமல் இருப்போம். இறைவன் கொடுத்த அழகிய வாழ்வை முழுமையாக பயன்படுத்துவோம்.
4. அனுப்பினார் (அனுப்பப்படுவது சான்று பகர...)
அழைக்கப்படுவது அனுப்பப்படுவதற்காக... இறைவன் மோசேயை அழைத்தார், எகிப்தில் அவதியுறும் மக்களை மீட்க அனுப்பப்படுவதற்காக...இறைவாக்கினர்களை அழைத்தார் தன் மக்களை வழிநடத்த அனுப்புவதற்காக... ஆக சீடர்களை அழைத்த இயேசு அவர்களை தன் பணியை தொடர்ந்தாற்ற அனுப்புகிறார். கப்பலானது துறைமுகத்தில் இருப்பது பாதுகாப்பானது. ஆனால் அது அதற்காக கட்டப்பட்டது அல்ல மாறாக கடல் அலைகளை எதிர் கொண்டு பல்வேறு நாடுகளுக்கும் பயணிப்பதற்காக. இந்த அழகிய வாழ்வும் அழைப்பும் அவரோடு உடனிருப்பதற்காக மட்டுமல்ல அவர் பணியை தொடர்ந்தாற்றுவதற்கே ஆகும். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இவ்வாழ்விற்கு அழைக்கப்பட்டது இயேசுவுக்கு சான்று பகர அனுப்பப்படுவதற்காக. எனவே இயேசுவின் அழைப்பையும் அனுப்பப்படுதலையும் ஏற்று நம் வாழ்வு அவருக்கு சான்று பகரும் வாழ்வாக அமைய முயற்சிப்போம். சீடர்களுக்கு துணையாளராம் தூய ஆவியை தந்து வழிநடத்திய அதே இறைவன் நம்மையும் வழிநடத்துவார் மற்றும் ஆசீர்வதிப்பார்.