முதல் வாசகம்: தொ.நூ. 18:20-32
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 2:12-14
நற்செய்தி: லூக்கா 11:1-13 ஜெப வாழ்வு
வயதான குரு ஒருவர் தன்னுடைய ஆசிரமத்தில் எலி தொல்லை அதிகம் இருப்பதாகவும் அதனால் தியானம் செய்ய இயலவில்லை எனவும் எண்ணி அதற்காக ஒரு பூனையை வளர்த்தார், அவர் ஒவ்வொரு முறையும் தியானம் செய்கின்ற பொழுது எலியின் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக அந்தக் பூனையை அருகில் கட்டி போடுவார். இது தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது, ஒருநாள் குரு இறந்துவிட்டார், சில நாட்களில் அந்த பூனையும் இறந்துவிட்டது மற்றும் ஆசிரமத்தில் எலி தொல்லையும் நீங்கி விட்டது. ஆனால், அதன்பின் வந்த குருவும் அவருடைய சீடர்களும் ஒவ்வொரு முறையும் தியானம் செய்வதற்கு முன்பு ஒரு பூனையை அவர்கள் அருகே கட்டி போட்டார்கள். நாம் அதிகம் கேட்ட ஒரு கதையாக இது இருந்தாலும் இதனுடைய ஆழமான கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். செய்கின்ற செயலை ஏன் செய்கின்றோம்? எதற்கு செய்கிறோம்? இதனுடைய உண்மையான அர்த்தம் என்ன? என்பதை அறியாமலே பல வேளைகளில் நம்முடைய செயல்கள் இருந்து கொண்டிருக்கின்றது. இது வெறும் அன்றாட செயலுக்கு மட்டுமல்லாது கிறிஸ்தவர்களாகிய நமது ஜெப வாழ்விற்கும் பொருந்தும் என்பதைத் தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு உணர்த்துகிறது. கிறிஸ்தவர்களாகிய நம்முடைய ஜெபம் அர்த்தம் வாய்ந்ததாக இருக்கின்றதா? நமது ஜெபமும் வாழ்வும் ஒன்றித்து அமைகின்றதா? ஜெபத்தை பற்றிய எனது புரிதல் என்ன? ஏன் நான் ஜெபிக்க வேண்டும்? எப்படி ஜெபிக்க வேண்டும்? என்னும் பல கேள்விகளுக்கு விடையளித்து நம்மை சிந்திக்க வைக்கின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
1. இறைவனோடு பேசுவது
2. அவர் சொல் கேட்பது
3. அவரோடு உறவாடுவது
என ஜெபத்தை பல்வேறு வகைகளில் வரையறுக்கலாம்.
1. ஆராதனை
2. மன்னிப்பு
3. நன்றி
4. புகழ்ச்சி
5. மன்றாட்டு
என ஐந்து வகையான ஜெபங்களை கத்தோலிக்கத் திருஅவை நமக்கு கொடுத்திருந்தாலும்,
1. அமைதி
2. அழுகை
3. பாடுதல்
4. தியானம்
5. உற்று நோக்குதல்
6. ஜெப வாசிப்பு
என பல்வேறு வகையான ஜெபங்களை மனிதர்கள் தங்களுடைய சூழ்நிலைக்கும் மற்றும் அனுபவத்திற்கும் ஏற்றவாறு அமைத்துக் கொள்கின்றனர். இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் ஜெபிக்க கற்றுத்தர கேட்கிறார்கள். அவர்கள் ஜெபிக்க கற்றுக்கொடும் என கேட்பதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இயேசுவோடு உடனிருந்து பயணித்த சீடர்கள் இயேசுவினுடைய ஜெப வாழ்வை பார்க்கிறார்கள். இயேசுவின் திருமுழுக்கு (லூக் 3:21), அவர் சோதிக்கப்படுதல் (லூக் 5:16), இரவு வேளை (லூக் 6:12), தனிமையான நேரம் (லூக் 9:18) மற்றும் மலைப்பகுதி (லூக் 9:28) என எல்லா நேரங்களிலும் அவர் ஜெபிப்பதை பார்க்கிறார்கள். குருவை பின்பற்றுகின்ற சீடர்களாக ஜெபத்தின் மகத்துவத்தையும் மற்றும் வல்லமையையும் உணர்ந்து, ஜெப வாழ்வில் நுழைய ஆசைப்படுகின்றனர். இயேசுவினுடைய சீடத்துவ வாழ்வை ஏற்று வாழும் நமது ஜெப வாழ்வு எப்படி இருக்கின்றது? இயேசு ஜெபித்தார், அவருடைய சீடர்களான நாம் ஜெபிக்கின்றோமா? சீடர்களை போல ஜெப வாழ்வில் நுழைய முயற்சி செய்கின்றோமா? சிந்திப்போம்.
இயேசுவின் ஜெபம் தந்தைக்கும் அவருக்கும் உறவு பாலமாக இருந்ததை அவருடைய சீடர்கள் கண்டுணர்ந்தார்கள். இயேசு ஒவ்வொரு முறையும் ஜெபத்தில் தான் தன்னுடைய தந்தையை சந்திக்கின்றார், அவரிடம் பேசுகின்றார் மற்றும் உறவு கொள்கின்றார். இதேபோல சீடர்கள் இயேசுவுக்கும் தங்களுக்கும் ஜெபம் ஒரு உறவுப்பாலமாக இருக்கும் என்பதை நம்பினார்கள். எனவே தான் இயேசுவை எங்களுக்கும் ஜெபிக்க கற்று தாரும் என கேட்கிறார்கள். சீடர்களுக்கு மட்டுமல்லாது கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் ஜெபம் ஒரு உறவுப்பாலம், நாம் இறைவனை சந்திப்பதற்கும், அவரோடு பேசி உறவாடுவதற்கும் ஜெபம் நமக்கு பாலமாக இருக்கின்றதை நாம் உணர்ந்திருக்கிறோமா? நாம் ஜெபம் செய்கின்ற பொழுதெல்லாம் இறைவனோடு பேசுகின்றோம் மற்றும் அவரோடு உறவாடுகின்றோம் என்பதை உணர்ந்து ஜெபிக்கின்றோமா? பல வேளைகளில் நமது ஜெபங்கள் வெறும் மன்றாட்டுகளாக மட்டும் தான் இருக்கின்றதே தவிர, ஜெபம் அதையும் தாண்டி இறைவனை புகழ்ந்து, ஆராதித்து மற்றும் அவரோடு உறவு கொள்வதற்கான ஒரு தளம் என்பதை மறந்து விடுகின்றோம். எனவே ஜெபம் என்னும் உறவு பாலத்தை நமது வாழ்வாக்க முயலுவோம்.
3. யோவான் தனது சீடர்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தது
(நற்குணங்களை எடுத்து கொள்வோம்)
பொதுவாக தங்களோடு தங்கியிருக்கின்ற சீடர்களுக்கு குருக்கள் கற்று கொடுப்பார்கள். யூதமுறைப்படி ரபிக்களும் சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பழக்கம் உண்டு. இன்றைய நற்செய்தியில் சீடர்கள் “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என கேட்கின்றார்கள். பொதுவாக மற்றவருடைய தவறுகளையும் மற்றும் குற்றங்களையும் சுட்டிக்காட்டி, அதைப் பற்றிப் பேசி கொண்டிருக்கின்ற வேளையில், இயேசுவினுடைய சீடர்கள் பிறரிடத்தில் விளங்கிய நற்குணத்தை கண்டுணர்ந்து (அதாவது யோவான் தன் சீடர்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்ததை அறிந்து) அதை தங்களது வாழ்வாக்குவதை பார்க்கின்றோம். பிறருடைய தவறுகளை சுட்டிக்காட்டி, எள்ளி நகையாடி சிரித்து மகிழும் மனிதர் வாழும் உலகில், பிறரிடத்தில் விளங்கிய நற்குணங்களைக் கண்டு பொறாமைப்படுகின்ற சூழலில், நாம் எப்படி இருக்கின்றோம்? மற்றவர்களின் குறையை சுட்டிக்காட்டி வாழாமல், அவர்களின் நற்குணங்களை நமதாக்கி வாழ்வோம். இன்றைக்கு நாமும் இறைமகன் இயேசுவை போல் நமது வாழ்வில் ஜெபிக்கும் போது, இறை மற்றும் மனித உறவில் வளர்வோம். எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து, நேர்மறையான எண்ணங்களில் வளர்வோம். இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாமின் விடாமுயற்சியோடு கூடிய செபத்தை போல, வாழ்வின் எத்தகைய சூழலிலும் விடாமுயற்சியோடு ஜெபவாழ்வில் இணைந்திருப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
அன்புடன்:-
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...(ஆங்கிலம்)