🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
முதல் வாசகம்: எசாயா 6: 1-8
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 15: 1-11
நற்செய்தி: லூக்கா 5: 1-11
கிறிஸ்து இயேசுவில் அன்பார்ந்தவர்களே,
நாம் எல்லோரும் நன்கு அறிந்த புனிதர் ஜெரோம். இவர் ஒரு இறையியல், மெய்யியல் மற்றும் மொழிகளில் வல்லுனராக திகழ்ந்தவர். அதுமட்டுமல்லாது திருத்தந்தை தமாசின் செயலாளராக திகழ்ந்தவர். ஒருமுறை திருத்தந்தை தமாஸ் அவர்கள் ஜெரோமை அழைத்து அவரிடம் மிகப்பெரிய பொறுப்பு ஒன்றை ஒப்படைகின்றார். திருவிவிலியம் முழுவதையும் அதனுடைய மூல மொழிகளான எபிரேயம், கிரேக்கம் மற்றும் அரமாயிக் மொழிகளில் இருந்து லத்தீன் மொழிக்கு மொழி மாற்றம் செய்கின்ற பொறுப்பு அது. அதன் பிறகு அவர் பல ஆண்டுகளாக எருசலேமில் தங்கி இந்த பணியை செய்கின்றார். இவர் இதற்காக இருபத்தி மூன்று ஆண்டுகள் எடுத்ததாகவும், இன்னும் சிலரின் குறிப்புகள் படி நாற்பது ஆண்டுகள் இதற்காக எடுத்ததாகவும் கூறப்படுகின்றது. இவர் இந்த மொழிமாற்ற பணியை கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்னதாக முடிக்கின்றார். இந்த மகிழ்ச்சியை கொண்டாடுகின்ற வகையிலே பெத்தலகேமுக்கு செல்கின்றார். அப்பொழுது ஒரு நாள் இயேசு அவர் முன் தோன்றி என்னுடைய பிறந்தநாளுக்கு நீ என்ன பரிசு அளிக்க போகின்றாய்? என்று கேட்கின்றார். புனித ஜெரோம் மிகுந்த மகிழ்ச்சியோடு பல ஆண்டுகளாக நான் உழைத்து மொழிமாற்றம் செய்த உம்முடைய வார்த்தைகளை உமக்கு அன்பளிப்பாக கொடுக்கின்றேன் என்று புனித ஜெரோம் இயேசுவிடம் கூறுகின்றார். ஆனால், இறைமகன் இயேசு, இது எனக்கு தேவை இல்லை என்று கூற பின்பு புனித ஜெரோம் யோசித்து நான் என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டுமா? அல்லது நான் காடுகளுக்கு சென்று ஒரு சன்னியாச ஆசிரம வாழ்வை வாழ வேண்டுமா? எது உமக்கு தேவை என இயேசுவைப் பார்த்து கேட்கின்றார். அதற்கு இயேசு கிறிஸ்து எனக்கு மிகவும் பிடித்தது உன்னுடைய பாவங்கள். "உன்னுடைய பாவங்களை எனக்கு கொடு" என்று கூறுகின்றார்.
அன்பார்ந்தவர்களே, கிறிஸ்துவிற்கு மிகவும் பிடித்தது நம் பாவங்கள் தான், நம்முடைய பாவங்களிலிருந்து நாம் மனமாற்றம் பெற்று ஒரு கிறிஸ்தவ வாழ்வை வாழ வேண்டும் என்பதாகும். இதைத்தான் இன்று நாம் வாசிக்க கேட்ட மூன்று வாசகங்களும் நமக்கு கூறுகின்றது. இன்றைய இறைவார்த்தை நமக்கு கொடுக்கின்ற அழைப்பும் அதுதான். இன்றைய இறைவார்த்தையின் அடித்தளத்தில் நாம் மனமாற்றத்திற்கான மூன்று நிலைகளை பார்க்கின்றோம்.
1. இயேசுவின் அருகே செல்லுதல்
கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவின் அருகில் செல்ல வேண்டும். இது தான் இன்று நம் இறைவார்த்தை வழிபாடு நமக்கு கொடுக்கின்ற அழைப்பாக இருக்கின்றது. ஏன் நாம் அவர் அருகில் செல்ல வேண்டும்? இறைவன் அருகில் செல்கின்ற போது மனமாற்றம் பெற்றவர்களாக நாம் வாழ முடியும். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா இறைவன் அருகில் இருந்ததை நாம் பார்க்கின்றோம். இன்றைய இரண்டாவது வாசகத்தில் திருத்தூதர் பவுல் "இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால் தான். திருத்தூதர்கள் எல்லாரையும் விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடிருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது" (1 கொரிந்தியர் 15:10) இறைவனுடைய அருளை அவர் அருகிலிருந்து பெற்றவராக திருத்தூதர் பவுல் இதை அறிவிக்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் குறிப்பாக பேதுரு இயேசுவின் குரலை கேட்டு, அவருடைய வார்த்தைகளுக்கு செவி கொடுத்து, படகை ஆழத்திற்கு தள்ளி கொண்டு வலையை போடுகின்றார். அப்படியென்றால் இயேசுவின் வார்த்தையை கேட்டு அவர் அருகில் இருந்தார் என்பதை இது காட்டுகிறது. இயேசுவினுடைய அருகில் இருப்பவர்களாக இன்றைக்கு நாமும் மாற வேண்டும். அது தான் அடிப்படையான கிறிஸ்தவ வாழ்வு. கிறிஸ்துவின் அருகில் நாம் இருப்பதற்கு அவரில் நாம் நிலைத்து நிற்க வேண்டும். அவரது அருகிலிருந்து அவருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து அவரில் நிலைத்து இருப்பவர்களாக மாற வேண்டும்.
2. பாவி என உணர்தல்
இன்றைய இறைவார்த்தை காட்டும் இரண்டாவது நிலை நாம் பாவி என்பதை உணரும் நிலை. முதல் நிலையிலிருந்து தான் இரண்டாவது நிலை உருவாகும். அவர் அருகில் நாம் இருக்கின்ற பொழுது நாம் நம்மை உணர்வோம், நம்முடைய நிலையை உணர்வோம், நம்முடைய மனித பலவீனத்தை குறிப்பாக நாம் பாவி என்பதை உணர்வோம். அதனால் தான் இறைவாக்கினர் எசாயா இறைவன் அருகிலிருந்து தான் தூய்மையற்றவன் என்று குறிப்பிடுகின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் அவரின் அருகில் இருந்ததால் தான், அவர்கள் இயேசுவினுடைய வார்த்தைகளுக்கு செவி கொடுத்து, ஆழத்தில் வலைகளை போடுகிறார்கள். இன்று நாம் நம்முடைய நிலையை உணருகின்றோமா? என்று சிந்தித்து பார்ப்போம். பல நேரங்களில் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு எப்படி இருக்கின்றது? என்பதை நாம் உணர்வது கிடையாது. நம்முடைய நிலையை நாம் உணர வேண்டுமென்றால் நாம் இறைவன் அருகே செல்ல வேண்டும். இறைவன் அருகே சென்று, நம்முடைய நிலையை குறிப்பாக நம்முடைய பாவ வாழ்க்கையை, அதாவது மனித பலவீனத்தை உணருகின்ற பொழுது இறைவனுக்கு மிகவும் பிடித்த அந்த மனமாற்றத்தால் அவர் முன்னால் நம்மை அர்ப்பணிக்க முடியும்.
3. மனமாற்றம் பெற்று அழைப்புக்கு செவிகொடுத்தல்
மூன்றாவது நிலையாக மனமாற்றம் பெற்று இறைவனுடைய அழைப்பிற்கு செவி கொடுத்தல். இறைவனுடைய அருகே சென்ற நாம், நம்முடைய நிலையை உணர்ந்து குறிப்பாக பாவங்களை அவர் முன் அர்ப்பணமாக்கி மனமாற்றம் பெற்றவர்களாக வாழ்வோம். இறைவனுடைய அழைப்பிற்கு செவி கொடுத்து வாழ்வோம். இறைவனுடைய மதிப்பீடுகளுக்கு ஏற்றவாறு நாம் வாழ்வோம். எசாயா இறைவாக்கினர் நான் தூய்மையற்றவன் என்று கூறிய பொழுது அவருடைய உதட்டை தொட்டு ஆண்டவர் தூய்மைப்படுத்தினார். பின்பு அவர் "அடியேனை அனுப்பும், இதோ நான்" என்று கூறினார். திருத்தூதர் பவுல் இரண்டாவது வாசகத்தில் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவருடைய மனமாற்றத்தை நமக்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றது. அதனால் தான் "நம்முடைய பாவங்களுக்காக அவர் இறந்து உயிர்த்தெழுந்தார்" என்று கூறுகின்றார். இந்த உலகிலுள்ள அனைத்தையும் குப்பையென கருதுகிறேன் என்று கூறி, மனமாற்றம் பெற்று இறைவனுக்கு செவிகொடுத்து வாழ்ந்தார். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இறுதியாக பேதுரு "ஆண்டவரே, நான் பாவி என்னை விட்டு போய் விடும்" என்று கூறுவது மனமாற்றம் பெற்றதன் வெளிப்பாடு. பின்பு, இயேசு "நான் உன்னை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்று அழைக்கின்றார்.
கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, மேற்காணும் ஒவ்வொரு நிலையையும் நாம் நம்முடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள வேண்டும். இறைவன் அருகே இருக்கிற பொழுது தான், நாம் நம்முடைய நிலையை குறிப்பாக நமது பாவத்தை உணர முடியும். அப்போது மனமாற்றம் பெற்றவர்களாக, அவருடைய அழைப்பிற்கு ஏற்ற ஒரு வாழ்வை நாம் நிச்சயம் வாழ்வோம். இன்றைக்கு நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு இறைவனுக்கு ஏற்றவாறு அமைய அவர் அருகே செல்வோம். அவருக்கு பிடித்த நம் பாவங்களை அவர்முன் அர்ப்பணமாக்கி மனமாற்றம் பெறுவோம். அவர் அழைப்பிற்கு ஏற்றவாறு வாழ்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
அன்புடன்
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில்/ஆடியோவில் காண........................