Friday, November 19, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - கிறிஸ்து அரசர் பெருவிழா - ( ஆண்டு- B) ----- 21-11-2021- ஞாயிற்றுக்கிழமை

 

 

முதல் வாசகம் : 

                  தானியேல்  7: 13-14

இரண்டாம் வாசகம் : 

                  திருவெளிப்பாடு  1: 5-8

நற்செய்தி:-

      யோவான் 18: 33-37

விவிலிய விளக்கம்:-

            இயேசுவின் காலத்தில் யூதர்கள் உரோமையர்களுக்கு கீழ் இருந்தார்கள். யூதர்கள் தனியாக அரசமைக்க அதிகாரம் உரோமையர்களால் வழங்கப்பட்டிருந்தது, ஆனால் யாரையும் கொல்ல அவர்களுக்கு அதிகாரம் தரப்படவில்லை. எருசலேம் நகர் அழிவிற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த அதிகாரமானது இஸ்ராயேல் மக்களிடமிருந்து உரோமையர்களால் எடுக்கப்பட்டது. பாலஸ்தீன நாட்டின் முதல் ஆளுநராக இருந்த கோபோசுஸ் மற்றும் ஜோசபுஸ் கூற்றுப்படி எவரையும் மரண தண்டனைக்கு தீர்ப்பிட அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. யூதர்கள் எவரையாவது கொல்ல வேண்டுமென்றால் இறைவனின் பெயரை பழித்துரைத்தவரை மட்டுமே கல்லால் எறிந்து கொல்ல முடியும். (லேவியர் 24: 16) அதுவும் சாட்சி முதலில் கல் எரிய மற்றவர் அதன்பின் எறிவார்கள் (இனைச்சட்டம் 17:7). எனவே தான் யூதர்கள் இன்றைய நற்செய்தியில் இயேசுவை பிலாத்துவின் முன்பு கொண்டு வந்தார்கள் (யோவான் 18:31).

 மறையுரை:-
          இறைமைந்தன் இயேசு கிறிஸ்து அகில உலகத்திற்கும் அரசராக இருக்கின்றார் என்னும் சிந்தனையை தரும் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். கத்தோலிக்கத் திருஅவையில் 1925-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பத்திநாதர் அவர்களால் இத்திருவிழா அறிவிக்கப்பட்டது. 
இதன் வரலாறு பல ஆண்டுகள் முன்பே துவங்கி விட்டது எனலாம். திருத்தந்தை பதினொன்றாம் பத்திநாதர் 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி திருத்தந்தையாக அறிவிக்கப்படுகிறார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் திருத்தந்தை தன்னுடைய முதல் திருத்தூது மடலை திருஅவைக்கு தருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த முதல் உலகப்போரின் தாக்கம் இன்னும் இருப்பதாக இதில் குறிப்பிடுகின்றார். இத்தகைய சூழல் முழுவதும் மாற, இவ்வுலகில் அமைதி ஏற்பட அனைவரும் அமைதியின் அரசராம் கிறிஸ்துவை நாட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். அமைதியின் அரசராம் கிறிஸ்து மட்டுமே இந்த உலகிற்கு அமைதியை தர முடியும் என்று குறிப்பிடுகின்றார். 1914 முதல் 1918 வரை நிகழ்ந்த முதல் உலகப் போரின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. முதல் உலகப்போரின் தாக்கமாக இத்தாலி,ஜெர்மனி, ரஷ்யா மற்றும் பல நாடுகளில் பொதுவுடமை கொள்கையும் மற்றும் மதச்சார்பின்மை கொள்கையும் அதிகமாகி கொண்டே இருந்தது. அதன் விளைவாக கிறிஸ்துவையும், திருஅவையையும் நம்பாத ஒரு சூழல் மக்களிடையே உருவாகியது. இத்தகைய கொள்கையின் அடிப்படையிலேயே நாட்டு தலைவர்கள் இருந்தார்கள். மனித தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆட்சியை மட்டுமே நம்பி வாழும் சூழலில் மக்கள் மாறினார்கள். இத்தகைய கொள்கைகளோடு அறிவு சார்ந்த கொள்கைகளும் வளர்ச்சி பெற்றது. இதனால் கிறிஸ்துவின் மீதும், திருஅவையின் மீதும் நம்பிக்கையற்ற ஒரு சூழல் தொடர்ந்து நிலவியது. மேலும் பல கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள் கூட, கிறிஸ்துவின் அதிகாரத்தையும், திருச்சபையையும் சந்தேகித்தனர்,  கிறிஸ்துவையே சந்தேகித்த ஒரு சூழல் நிலவியது. இத்தருணத்தில் தான் திருத்தந்தை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1925-ஆம் ஆண்டு அவருடைய மற்றொரு திருத்தூது மடலான 
Quas Primas-ல் கிறிஸ்து நம் அனைவருக்கும் அரசர் என "கிறிஸ்து அரசர்" பெருவிழாவை கொண்டாட அழைப்பு தருகிறார். இத்திருவிழா திருஅவையில் மூன்று விதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என திருத்தந்தை பதினொன்றாம் பத்திநாதர் நம்பினார். 


  1. கிறிஸ்துவில் நம்பிக்கை
  2. நிரந்தரமற்ற உலக ஆட்சி
  3. நிலையான இறையாட்சி
 
         இவையே இன்றைய திருவிழாவும், இறைவார்த்தையும் நமக்குத் தருகின்ற அழைப்பாக அமைகின்றது.
 
 1. நம்பிக்கை:-

       முதல் உலகப் போரின் தாக்கமாக கிறிஸ்து மற்றும் திருஅவையின் மீது இருந்த விசுவாசம் குறைந்த தருணத்தில், முழுமையான விசுவாசத்தில் நாம் வளர்வதற்காக திருத்தந்தை இத்திருவிழாவை கொண்டாட அழைப்பு விடுத்தார். (Quas Primas- 31). இன்று இத்திருவிழாவை கொண்டாடும் நாமும் கிறிஸ்துவே நம் அரசர் என்பதை உணர்ந்து அவரில் நம்பிக்கை கொள்ள அழைப்பு பெறுகின்றோம். கிறிஸ்து என்னும் வார்த்தையானது கிறிஸ்துஸ் (Christus) என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. இது அருட்பொழிவு செய்யப்பட்டவர் மற்றும் மெசியா என்று பொருள்படுகிறது. பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்களின் முதல் அரசரான சவுலை சாமுவேல் திருப்பொழிவு செய்கின்றார்.( 1 சாமுவேல் 10:1) அவரை தொடர்ந்து வந்த தாவீதும் திருப்பொழிவு செய்யப்பட்டதை பார்க்கின்றோம்‌. ஆக தனது பெயரின் அர்த்ததிலேயே அருட்பொழிவு செய்யப்பட்டவர் என்பது, இறை மைந்தன் இயேசு கிறிஸ்து என்றும் நம் அரசராக இருக்கின்றார் என்பதை காட்டுகின்றது. அதனால் தான் மாட்டுக் கொட்டகையில் மனிதனாக மற்றும் எளிமையான அரசராக பிறந்தார். ஞானிகள் வந்து பொன், தூபம் மற்றும் வெள்ளைப்போளம் என்னும் அரச காணிக்கைகளை கொடுத்ததும், இவர் ஒரு அரசர் என்பதை நமக்குக் காட்டுகின்றது. ஆக, அரசராம் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

2. நிரந்தரமற்ற உலக ஆட்சி:-

       

 வரலாற்றில் எண்ணற்ற பேரரசுகளும் பேரரசர்களும் அவர்களின் ஆட்சிகளும் இருந்தபோதும் அனைத்தும் நிலையற்றதாக அழிந்து போய்விட்டது. இவ்வுலகில் அனைத்தும் அழிந்து போகக்கூடிய அரசும் அரசாட்சியுமாக இருக்கின்றது. அனைத்தும் குறிப்பிட்ட சில காலத்திற்கு மட்டுமே தான். அதனால் தான் இன்றைய நற்செய்தியில் இறை மைந்தன் இயேசு கிறிஸ்து பிலாத்துவின் முன்பு நிறுத்தப்பட்ட போது "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்று அல்ல" (யோவான் 18: 36) என்று குறிப்பிடுகின்றார். அன்று முதல் உலகப் போரின் தாக்கத்தால் அனைவரும் பொதுவுடமை, மதசார்பின்மை மற்றும் அறிவுச்சார்ந்த கொள்கைகளால் கிறிஸ்துவை விட்டு விலகி, இந்த உலகத்தின் மாயைகளுக்கு அடிமையான ஒரு சூழலில், இந்த மண்ணுலகின் ஆட்சி அனைத்தும் அழிந்து போகும் கிறிஸ்துவே என்றுமே நிலையான அரசர், அவரின் ஆட்சியே நிலையானது என திருத்தந்தை எடுத்துரைத்தது போல இன்று நாம் பார்க்கின்ற மற்றும் பயன்படுத்துகின்ற அனைத்து மின்னணு சாதனங்கள், பணம், பதவி மற்றும் பட்டம் என அனைத்தும் ஒரு நாள் அழிந்து போகும். இந்த உலகமும் இதில் உள்ள யாவும் நிலையற்றவை மற்றும் அழிந்து போக கூடியவை என உணர்ந்து வாழ்வோம்.

3. நிலையான இறையாட்சி:-

           கிறிஸ்து அரசர் நம் உள்ளத்திலும், உடலிலும், இதயங்களிலும், மனதிலும், மற்றும் வாழ்விலும் ஆட்சி செய்வதால் ஒவ்வொரு கிறஸ்தவரும் தங்கள் வாழ்வில் இறைவனது பாதுகாப்பையும், வலிமையையும், தைரியத்தையும் மற்றும் இறையாட்சியையும் உணர்தல் வேண்டும். (Quas Primas
 33) என்னும் திருத்தந்தையின் அழைப்பை ஏற்று நிலையான ஆட்சியாம் கிறிஸ்துவின் ஆட்சியில் நிலைத்திருப்போம். அதனால் தான் கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை கூற சென்றபொழுது "அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" (லூக்கா 1:33) என்றும் கூறுகிறார். இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு கிறிஸ்து தனது வார்த்தைகளால் இதைத்தான் வெளிப்படுத்துகின்றார். எனவே என்றுமே அழியாத மற்றும் நிலையான கிறிஸ்து அரசர் தருகின்ற இறை ஆட்சிக்குள் நாமும் வாழ்கின்றோம் என்பதை உணர்வோம். நாம் ஒவ்வொருவரும் நமது திருமுழுக்கின் வழியாக திருஅவையில் இணைந்ததன் வழியாக இறையாட்சியின் அங்கத்தினர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து வாழ்வோம்.
 
             ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 20- ஆம் தேதியிலிருந்து, 25ஆம் தேதிக்குள் கொண்டாடப்பட்டு வந்த கிறிஸ்து அரசர் பெருவிழா 1970ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்க திருஅவையில் பொதுக்காலத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. இது திருவருகைக் காலத்திற்கு முன்பாக, என்றும் நிலையான கிறிஸ்து அரசரை நாம் ஏற்று, அவர் வருகைக்காக நாம் நம்மை முழுமையாக தயாரிக்க  அழைக்கப்படுதாகும். சிந்திப்போம்!

இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


ஆடியோவாக கேட்க...

                                    https://youtu.be/56pTaWY1ggk

அன்புடன்,

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF